ஈஸ்வர் அல்லா தேரே நாம் – நித்யா சங்கர்

02_YT_GANDHI_1224211f

1993 ஆம் வருடம்

‘ அயோத்தியா ராமர் பிறந்த இடம்.  அங்கே ராமர் கோவில் முதல்லே இருந்தது.  அதை இடிச்சு மசூதி கட்டியிருக்காங்க.  ராமர் பிறந்த இடத்துலே ராமர் கோயில் இருக்கணும்னு  நாங்க கேட்கறதுலே என்ன தப்பு?  எங்க ரிலீஜியஸ் ஸென்டிமெண்ட்ஸை மதிச்சு நீங்க ஏன் விட்டுக் கொடுக்கக் கூடாது?  நாங்கதான் உங்க மசூதியைக் கொஞ்ச தூரத்துலே ஒரு இடத்திலே கட்டித் தரோம்னு சொல்றோமே!’ என்றான் குமார் காட்டமாக.

‘ நாங்க இங்கே மைனாரிட்டி.. அதனாலே என்ன வேணும்னாலும் சொல்லலாம், செய்யலாம்னு பார்க்கறீங்களா? ராமாயணமே நடந்ததோ என்னவோ? அதைப் பற்றியே பெரிய சர்ச்சைகள் நடந்துட்டிருக்கு….. அப்படி இருக்கும்போது எங்க மசூதி உள்ள இடத்தை, ‘ இது தான் ராமர் பிறந்த இடம்… இந்த மசூதியை இடித்துக் கோயில் கட்டப் போறோம்னு சொன்னா என்ன நியாயம்?  எங்க மசூதியை இடிச்சா எங்க ஸென்டிமென்ட்ஸ் பாதிக்காதா?  ஏன் நீங்கதான் அதன் பக்கத்திலேயே கொஞ்ச தூரம் தள்ளிக் கோயில் கட்டிக்கிறது ! நீங்க ஏன் மசூதியை இடிச்சு அங்கே இன்னொரு கோயிலைக் கட்டிக்கணும்! என்று கத்தினான் அப்துல்.

அவர்கள் வாக்குவாதத்தை வேடிக்கை பார்க்கக் கூட்டம் சேரலாயிற்று.

‘ க்வஸ்சன் ஆஃப் ஸென்டிமெண்ட்ஸ்… இந்தியா பூராவும் உங்க மசூதிகள் இருக்கு.  நாங்க அதன் பக்கம் வரலையே…. ராமாயணம் நடந்ததோ இல்லையோ என்பது வேறு விஷயம். ஆனா இது ராமர் பிறந்த இடம்னு நாங்க நம்பறோம்.  அவர் பிறந்த இடத்துலே ஒரு கோவில் வேணும்னு விரும்பறோம்.  அதை நீங்கள் ஏன் மதிக்கக் கூடாது?’

‘ ஆமாமா… இந்த ஒரு இடத்துலே ஒத்துகிட்டா எங்களுடைய ஒவ்வொரு மசூதியா கை வைப்பீங்க ..’

‘ என்ன சொன்னே.. பேசுவீங்க .. பேசுவீங்க..   எப்போ பாகிஸ்தானைப் பிரிச்சுட்டாங்களோ.. அப்பவே நீங்க எல்லாம் அங்கே போயிருக்கணும்.    எங்க  ராமர் பிறந்த இடத்திலே நாங்க கோயில் கட்டத்தான் போறோம்.  யார் தடுக்கறாங்கன்னு பார்த்துடுவோம்?’ என்று இடி போல முழங்கினான் சுடலை, அந்தக் கூட்டத்திலிருந்து மெதுவாகத் தலை நீட்டி.  அந்த வட்டார இந்துக்களின் ‘தாதா’ அவன்.

‘  சுடலை!.. என்ன பேசறேங்கறதை யோசிச்சுப் பேசு.. என்ன! எங்க மசூதியை இடித்துக் கோயில் கட்டிடுவியா? நாங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு இருப்போம்னு நினைச்சுட்டியா..’ என்று கர்ஜித்தான் சுலைமான்,. அப்துல் பக்கம் நின்று கொண்டு – முஸ்லீம்களின் ‘தாதா’ அவன்.

நடு நடுங்கினார்கள் குமாரும், அப்துலும்’.

கூடி நின்ற இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவரை யொருவர் நோக்கிக் கத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.  வாய்ச் சண்டை முற்றி, கைகலப்பாக மாறி, கற்களும் பாட்டில்களும் பறக்க ஆரம்பித்தன.  சுடலை, சுலைமானின் தோழர்கள் கத்திகளை எடுத்து விளையாட ஆரம்பித்தனர், வட இந்தியாவில் ஏதோ ஒரு ஊரில் கட்டலாமா கூடாதா என்ற வாக்குவாதத்தில் இருக்கும் கோயிலுக்காக.

யாரோ அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லிப் போலீஸ் வருவதற்குள் பல உயிர்கள் உடலை விட்டுப் பிரிந்து விட்டன.  குமார், அப்துலின் உடல்கள் அடுத்தடுத்துக் கேட்பாரற்றுக் கிடந்தன.

‘ ராமா! உனக்கு வேண்டிப் பேச ஆரம்பித்த என் கதியைப் பார்த்தாயா? எங்கே நீ ! எங்கே உன்னைப் பார்ப்பது? ‘ என்று தேவலோகத்துக்குச் சென்ற குமாரின் உயிர் ராமரைத் தேடிக் கொண்டு இருந்தது.

பக்தனே.. இப்படியே நேராக ஒரு காத தூரம் போனேயானால் அங்கே ஒரு சுனை இருக்கும். அங்கே நான் இருப்பேன்’ என்றது ஒரு குரல்.

அந்த சுனையை நோக்கி ஓடியது குமாரின் உயிர்.

‘ அல்லா எங்கே நீங்கள்..? உங்களை நான் எப்படி வந்தடைவது?’ என்று அப்துல் உயிர் அல்லாவைத் தேடியது.

‘ அப்துல்! நேராக சிறிது தூரம் போனால் அங்கே ஒரு சுனை இருக்கும். அங்கே நான் இருப்பேன்’ என்றது ஒரு குரல்

சுனையை அடைந்த குமாரின் உயிர் அங்கே அப்துலின் உயிரும் நின்றிருப்பதைப் பார்த்தான்.

‘ அடப் பாவி இங்கே நீயும் வந்திட்டியா..? அங்கேதான் தகராறு பண்ணி, அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஒரேயடியா சொர்க்க லோகத்துக்கு அனுப்பிட்டாங்க.. இங்கே என் ராமரைப் பார்க்க வந்த இடத்திலேயும் தகராறு பண்ண வந்துட்டியா..?’

‘ இல்லே.. குமார்.. நான் அல்லாவைத் தேடித்தான் இங்கே வந்தேன். எங்கே என் அல்லா?’

அவர்கள் அருகிலிருந்து ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது.

‘ குமார்! அப்துல்! ராமரும் நானே, அல்லாவும் நானே.. ஏசுவும் நானே, ஈஸ்வரனும் நானே.. திருமகளும் நானே.. துர்க்கையும் நானே.. எனக்கு உருவமே கிடையாது.  தேவையானபோது ஒவ்வொரு உருவில் உலகத்தில் அவதரித்தேன்.  எல்லா தெய்வங்களும் என்னுள் ஐக்கியம்..’

‘ ஏன் ஸ்வாமி? அப்படீன்னா எதுக்கு எல்லோரும் இப்படி அடிச்சுக்கணும்? நாங்க பார்த்ததை உலகத்துக்கு மறுபடி போய் சொல்லணும்னா முடியாது.  அட நீங்கதான் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டான் குமார்.

‘ சொல்லாமல் என்ன?  எல்லா மதத் தலைவர்கள் மூலமும் சொல்லத்தானே செய்கிறேன்.  யார் கேட்கிறார்கள்?  இந்தக் கிழங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு அல்லவா இந்தக் கால உலகத்து  ஜனங்க நினைக்கிறாங்க!’

‘ என்ன ஒரு தப்பு செஞ்சோம். இந்த ராமர் கோயில், பாபர் மசூதியினால் இந்தியா பூராவும் அடிதடி நடந்துட்டிருக்கே’ என்றான் அப்துல்.

‘ அடிதடி மட்டுமா? எவ்வளவு உயிர் சேதம்.. பொருள் சேதம், கலவரத்தும்போது  அரசாங்கத்துக்கு உடமையான பொருள்களையெல்லாம் சேதம் பண்ணிடறோம்.  அதையெல்லாம் பழுது பார்க்க அரசாங்கத்துக்குப் பணம் தேவைப்படும்.  தேவைப்பட்ட பணத்தை ஈட்டுவதற்கு வரிகள் போடறாங்க.  மன வலி, உடல் வலியோடு இந்தப் புது வரிகளும் சேர்ந்து மக்களை வாட்டப் போகுது.

“கலிகாலம்பா.. இது கலிகாலம்.. சொன்னால் புரியாது. இந்த ஜனங்களுக்கு.. புரிஞ்சுக்காம அடிச்சுண்டு சாகப் போறாங்க..” என்றார் கடவுள் மெதுவாக சிரித்தபடி.

‘ நீங்களே சொல்லுங்க.. ராமர் பிறந்த இடத்துலே, ராமர் கோயில் கட்டணும்னு ஒரு சென்டிமென்ட் இந்துக்களுக்கு.. ஏன் இந்த முஸ்லீம்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்றான் குமார்.

‘ நீங்க வெறும் வெற்று நிலத்திலேயா கட்டறேன்னு சொல்றீங்க விட்டுக் கொடுக்கறதுக்கு?  எங்க மசூதியை இடிச்சிட்டு அங்கே அல்லவா கட்டறேன்னு சொல்றீங்க? அப்ப எங்க ஸென்டிமென்ட்ஸுக்கு நீங்க மதிப்புக் கொடுக்கறீங்களா?’ என்று திருப்பினான் அப்துல்.

‘ அமைதி! அமைதி! இங்கே சொர்க்க லோகத்துக்கு வந்துமா சண்டை.  இது ஒரு நம்பிக்கையையும், ஸென்டிமென்டையும் பொறுத்து இருக்கிறதுனாலே பலாத்காரத்தினாலேயோ, சட்டங்களாலேயோ முடிவு செய்ய முடியாது.  அரசியல்வாதிகள் விலகிக் கொண்டு,  இந்து மத, இஸ்லாம் மத குருமார்கள் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம்.  இல்லேன்னா மனஸ்தாபங்களும், அதிருப்தியும் தான் மிஞ்சும்” என்றார் கடவுள் முடிவாக.

‘ அப்துல்! நம்ம பிரச்சினைக்கு முடிவை அவர் கிட்டேயே கேட்டுட்டா என்ன?’

‘ சரி நீ கேள்!’

‘ மகனே! என்ன முணுமுணுக்கிறாய்?’

‘ இல்லே.. நீங்கதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லணும் . ராமர் கோயிலை அயோத்தியில் கட்டலாமா?’

‘ பரவாயில்லையே நீங்க,  அங்கே உங்க கவர்ன்மெண்ட் தலையைப் பிச்சுக்கிறது போதாதா?  மெதுவா என்னை வம்பிலே மாட்டி விடப் பார்க்கறீங்களே?  இனி ஒரு நிமிஷம் இங்கே இருந்தாலும் ஆபத்துதான் போலிருக்கு.  நான் கிளம்பறேன்’ என்ற குரல் மெதுவாக மெதுவாகக் குறைந்து கொண்டே நின்று விட்டது.

திகைத்து நின்றிருந்தார்கள் குமாரும், அப்துலும்.

‘ தம்பி ‘ என்ற குரல் கேட்டுத் திரும்பினார்கள்.

காந்தியடிகள் நின்றிருந்தார்.

‘ தம்பி இப்படி நீங்கள் எல்லாம் அடித்துக் கொள்வதற்கா நாங்க கஷ்டப்பட்டுச் சுதந்திரம் வாங்கினோம்?  இந்தியா, ‘எம்மதமும் சம்மதம்’னு முழங்க வேண்டும் என்றல்லவா ஆசைப் பட்டோம்.  குமார், அப்துல் நீங்க ஒண்ணைப் புரிஞ்சுக்கணும்.  நீங்க ரெண்டு பேருமே இந்தியர்கள்.  அப்துல் ஒன்றும் அரேபியாவில் இருந்து வரவில்லை.  குமார் நீ இந்து மதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கிறே.. அப்துல் நீ அல்லாவை வணங்கறே.. அவ்வளவுதான்.  உங்களுக்குள் ஏன் இந்தச் சண்டை?  பாபர் மஸ்ஜீத் இருந்த இடத்திலே, கவர்ன்மென்ட் முன் வந்து நான்கு வாயில்கள் கொண்ட பெரிய கட்டடத்தை எழுப்பட்டும்.  கிழக்கு வாயில் உள்ளே நுழைந்தால் ராமர் கோயில் இருக்கட்டும்.  மேற்கு வாயில் உள்ளே நுழைந்தால் முகமதியரின் தொழுகை இடமாக இருக்கட்டும்.  வடக்கு, தெற்கு வாயில்களை, கிறிஸ்துவர்களோ, புத்த மதத்தினரோ அல்லது வேறு இரு மதத்தினர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். மதத்தின் பெயரால் சண்டை போடும் உலகத்தினருக்கு ‘ எல்லா மதமும் ஒரே தத்துவத்தைத்தான் எடுத்துச் சொல்கிறது’ என்று பறைசாற்றும் ஒரு முன்னோடியாக இந்த அயோத்தியா திகழட்டும்’ என்று கூறி மறைந்தார்.