சித்தர் கருவூரார்

இராசராச சோழனின் குரு கருவூர்த் தேவர் ஆவார். இவருக்கு மரியாதை செய்யும் பொருட்டுத் தஞ்சை பெரிய கோயிலின் இராச கோபுரத்திற்கு நேர் பின்புறம் கருவூர்த்தேவருக்குச் சிறிய கோயிலை எழுப்பியுள்ளார் இராசராச சோழன்

karuvurar.

சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். போகர் உபதேசப்படி,கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார்.  கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

சோழ மன்னன் இரணிய வர்மனுக்காகத் தில்லையில் நடராசப் பெருமானின் சிலையை வடித்தவர் இவரே என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும்.  மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்பதையும் கருவூரார் தெளிவித்தார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டுப் பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாபிசேகமும் செய்து வைத்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தர், அபரங்சி என்ற தாசிக்கு  ஞான சாதனையில் அவளுக்கிருந்த ஆர்வத்தைப் பாராட்டி திருவரங்கனிடமிருந்தே ஒரு  நவரத்ன மாலையை வாங்கி அதை அவளிடம் தந்தார். மன்னனும் மற்றவரும் அவளை நிந்திக்க அரங்கனே வந்து அசரீரியாகச் சொன்னதாகவும் ஒரு கதை நிலவுகிறது.

முடிவில் “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூவியழைத்துக் கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவி இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார், இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

 

கருவூரார் செய்த நூல்கள்:

கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500

கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 30
கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). – ஆகியவைகள் ஆகும்.

தியானச் செய்யுள்:

கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே !
வாரி வழங்கி அருள் கொடுத்தாய் !
மாறாத சித்துடையாய் !
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு !