சில்லு – நாடக விமர்சனம்

image1

2065 இல் நடப்பதாக ஒரு கதையை  1965 பாணியில்  எடுத்தால் எப்படியிருக்கும் என்பதற்கு  சில்லு ஒரு நல்ல உதாரணம். 

இதன் கதையைப்  பார்ப்போம் : 

2065 இல் ஒரு தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கிறது.  அந்த சமயத்தில் தான் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘சில்லு’ பொருத்தப்படும் என்கிற அரசாங்க அறிவிப்பு.  இது மக்களை  அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான ஏற்பாடு. அந்தத் தம்பதியரின் ஆண் குழந்தையான சான்டா என்கிற சந்தானகிருஷ்ணனுக்கு தவறுதலாகப் பெண் குழந்தை என்று சில்லுவில் பதித்துவிட தொடர்கிறது நகைச்சுவையான சீரியஸ் விவாதம்.. சில்லு பதிப்பது மனிதருக்குச் செய்யும் துரோகம் என்று ஒரு குழு அதை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது .

சான்டா காதலித்த பெண்ணுடன் திருமணம் செய்யும் போது  அவனது உடலில் பொருத்தப்பட்ட சில்லில் பக் இருப்பதினால் திருமண தேதியன்றே உயிர் இழப்பான் என்ற உண்மை தெரியவருகிறது. செய்தியைக் கேட்டுத் துடிதுடிக்கிறான் சான்டா !.

சான்டா பிறந்தது முதல் அவன் வளர்ந்து இளைஞனாகும் வரை அவனுடைய பெற்றோர்களை விட அதிக பாசத்துடன் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருப்பது அடிப்பொடி என்ற ,மனித  இயந்திரம்.   அடிப்பொடியின் மனத்தில் இருக்கும் பாசம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதிக் காட்சியில் தான் வளர்த்த ஒரு மனிதக் குழந்தைக்காக அடிப்பொடி செய்யும் தியாகம் மகத்தானது. மனிதரில் கூட யாரும் செய்ய முன்வராதது.

கடைசியில்  சான்டாவும் சில்லுக்கு  எதிரான போராட்டத்தில் இணைகிறான். 

கதையில் ஓட்டை என்று தனியாக இல்லை. கதையே ஓட்டை தான். மனித இயந்திரத்தைப் பெருமைப் படுத்துகிறார்கள். சில்லுவை எதிர்க்கிறார்கள். முரண்பாடு தூக்கலாக நிற்கிறது. 

சில்லு என்று ஒரு வார்த்தை இல்லையென்றால் ராஜா – ராணி உண்மையான சேவகன் கொடுங்கோலுக்கு எதிரான  போராட்டம் . என்று 40 களில் வந்த ராஜா ராணி – பட வரிசையில் சேர்ந்திருக்கும். 

இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் முருகன் சார்!