படைப்பாளி – சா. கந்தசாமி (எஸ் கே என் )

download

மயிலாடுதுறையைச் சேர்ந்த, சென்னையில் வசிக்கும் இவரது முதல் நாவல் ‘சாயாவனம்‘. சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித இயல்புகள் இரண்டும் ஊடோடும் இந்த நாவல், நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாகத் தேசிய புத்தக அறக்கட்டளையால்  அறிவிக்கப்பட்டது.     

பாலிய நண்பர்களைத் தேடிச் சந்திக்கும் ஒருவரின் அனுபவங்களும், பழைய நினைவுகளும் கொண்ட மிகச் சிறந்த படைப்பான ‘தொலைந்து போனவர்கள்’ , தொலைக்காட்சியில் , மிகவும் பாராட்டப்பட்ட டெலி பிலிமாக வந்தது.

‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக 1988 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 

தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளும், தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் பற்றிய இவரது ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ‘காவல் தெய்வங்கள்’ என்னும் ஆவணப்படமும்   குறிப்பிடத்தக்கன.

இவரது ‘பாண்டிச்சேரி’ என்னும் கதை இப்படிப் போகிறது

கப்பலில் வேலை செய்யும் மரைன் என்ஜினீயர் கோபால்,  வேறொரு  கம்பனிக்கு வேலைக்குச் சேரும்முன், ஒருமாத இடைவெளியில் சொந்த ஊர் பாண்டிச்சேரிக்குக் காலையில் வந்திருக்கிறான். நண்பbar-fight-14708149ர்களைப் பார்க்கச் சென்ற அவனுக்காக அவனது அண்ணன் சுந்தரமும் தங்கை சரஸ்வதியும் காத்திருக்கிறார்கள். வயதாகி முடியாமல் வீட்டோடு  இருக்கும்  தந்தை மகனைப் பார்த்ததில் கொஞ்சம் தெம்பாகத் தென்படுகிறார்.

சுந்தரத்தை விட இரண்டு வயது சிறியவனான கோபால், படிக்கும்போதே கெட்டிக்காரன் என்று பெயரெடுத்தவன். விளையாட்டிலும் அவன் முதல். கடைசி வருடம் படிக்கும்போது அம்மாவிற்குத் தொண்டையில் கேன்சர் முற்றி அடையார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்தான் சுந்தரம். கோபாலால் நான்கு நாட்கள் கழித்துதான் வர முடிந்தது.  அவனது கையை அம்மா விடவே இல்லை.

அவனுக்கு அம்மா மீது பிரியமா? அம்மாவுக்குத்தான் அவன் மீது பிரியமா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா அவன் கையைப் பிடித்தபடியே கண்ணை மூடினாள்.          

நண்பர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த கோபாலும் சுந்தரமும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்படுகிறார்கள்.

“சின்ன அண்ணே, உனக்காக நண்டு குழம்பு ஸ்பெஷலா வச்சியிருக்கேன்” என்றாள் சரஸ்வதி.

“நாங்க சாப்பாட்டுக்கு வந்துடுவோம்” சுந்தரம்.

“நீ இப்படித்தான் சொல்லுவ. ஆன வர மாட்ட”

“இன்னிக்குப் பாரு.. கண்டிப்பா வந்து நண்டு கறி சாப்பிடுவோம்”

“நாளைக்குப் போனா என்ன அண்ணே”

சுந்தரம் சரஸ்வதியின் கையைப் பிடித்துகொண்டு ” இதோ.. பாரு சரசு.. உங்க சின்ன அண்ணன் இன்னைக்குத்தான் ஊர்ல இருந்து வந்து இருக்கார். அதுக்காக ஒரு சின்ன பார்ட்டி..” என்றான்

“நீ பார்ட்டின்னு போனா ரெண்டு மணிக்குத்தான் வருவே” என்ற சரஸ்வதி, இவன் கையைப் பிடித்துக்கொண்டு, “சின்ன அண்ணே.. நீ சீக்கிரமா வந்துடனும்.. பத்து மணி ஆயிட்டா நான் படுத்துத் தூங்கிடுவேன். அப்பறம் கதவைத் திறக்க மாட்டேன்” என்றாள்.

“நாங்க ஒன்பது மணிக்கே வந்துடுவோம், சரசு” என்றான் சுந்தரம்.

“நீ ஒண்ணும் சொல்லாதே”

“சரசு, ஒன்பதரைக் கெல்லாம்நான் வந்து உன் பக்கத்துல நிக்கறேன்”

“இது போதும்” சரஸ்வதி ஒரு சிரிப்பு சிரித்தாள்.

 

தங்கை காத்துக்கொண்டிருப்பாள். சீக்கிரமாய் வந்து விடவேண்டும் என்ற   முடிவோடு புறப்படுகிறார்கள்.

பாண்டிச்சேரி பீச்சைப் பார்த்து இரண்டு வருஷம் ஆகிவிட்டது என்று முதலில் கடற்கரைக்கு அழைத்துப்போகிறான் கோபால். அவன் பாண்டிச்சேரி கடற்கரையைப் பற்றி அறுபது கவிதை எழுதி உள்ளதாகவும், பஸிஃபிக் சமுத்திரத்தில் கப்பல் போய்க்கொண்டிருக்கையில் மேல்தளத்தில் அமர்ந்து வெறி  பிடித்தது போல் எழுதியதாகவும் சரியாக வந்திருப்பதாகத் தோன்றுவதாகவும் சொல்கிறான்.

அண்ணனுக்குச் சந்தேகம், பிரெஞ்சிலா, தமிழிலா என்று. தமிழ் என்று அறிந்து “நிஜமாவா” என்று கேட்கிறான். ஹாலந்தில் ஒரு இலங்கைத் தமிழரிடம் காண்பித்த போது, புத்தகமாகப் போடலாம் என்றாராம். கானடாவில் ஒரு தமிழர், கவிதை என்பதே அறிவிற்கு எதிர் என்றாராம்.

சரசு காத்துக்கொண்டிருப்பாள் என்பதால் மீண்டும் சீக்கிரம் வீடு திரும்பும் தீர்மானத்தோடு தாய்லாந்து பார் செல்கிறார்கள். தென்னந்தோப்பில் கொரியன் புல் வளர்த்து, வண்ணக்குடைகள் கீழ் மேஜை நாற்காலிகளைப் போட்டு இருந்தார்கள்.     அரவிந்த், நாராயணன் ஆகியோர் இவர்களுக்காக அங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கோபால் கவிதை எழுதுவது அரவிந்திற்கு ஆச்சரியம். பாண்டிச்சேரி மண்ணுக்கே கவிதை ராசி உண்டு. அரவிந்தர், பாரதி, பாரதிதாசன் என்று நிறையப்பேர் பாண்டிச்சேரியில் இருந்துதான் கவிதை எழுதியிருக்கிறார்கள் என்கிறான்.

விஸ்கி ஆர்டர் செய்யப்படுகிறது

கிளாஸ் கிளாஸாக விஸ்கி ஆரம்பித்தது. அப்புறம் சிக்கன், டபுள் ஆம்லெட்.. சிப்ஸ்…கோபால் மற்றவர்களைவிட வேகமாகத்தான் குடித்தான். ஆனால் குடிக்கக் குடிக்க அமைதியானான். மெதுவாக சுண்டுவிரலால் மேசையைத் தட்டி அடிக்கடி விசில் அடித்துக்கொண்டிருந்தான். சுந்தரம் மேசையத்தட்டிச் சப்தமாகப் பேச ஆரம்பித்துவிட்டான்.

சுந்தரம் கோபாலிடம் கவிதை புத்தகம் நான்தான் போடுவேன். என்ன செலவானாலும் பரவாயில்லை என்கிறான். அரவிந்த் அவன் கையைப்பிடித்து நாற்காலியில் உட்கார வைக்கிறான். அவன் கையைத் தட்டிவிட்டு “தம்பி, தமிழில் கவிதை எழுதியிருக்கு. அதைப் புத்தகமா போடப்போறேன்” என்கிறான்.

எட்டே முக்காலுக்கு, கோபால் மணியாகுது என்கிறான்.

“பார்க்கு வந்துட்டா நேரம், காலம் எல்லாம்  பார்க்கக் கூடாது” என்கிறான் நாராயணன்.

கோபால் பாத்ரூம் போக எழுகிறான். பாருக்கு வெளியே தென்னந்தோப்பில் அளவிற்கு மீறி குடித்த ஒருவன் கோபால் மீது விழ, இவன் அவனைத் தள்ள, “என்னடா என் தம்பியை அடிக்கிற” என்று சுந்தரம் அவனைக் காலால் உதைக்கிறான். அவன் பெரிதாகக் கத்தியபடி கீழே விழுகிறான்.

அவர்களில் ஒருவன் மேசை மீதிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து மேடை மீது தட்டி உடைத்து முன்னே பாய்கிறான். அண்ணனைக் காப்பாற்ற குறுக்கில் பாயும் கோபாலின் அடி வயிற்றில் பாட்டில் குத்தி ரத்தம் பீறிட கீழே சாய்கிறான்.

ஒரு ஆள் பீர் பாட்டிலை தூக்கிக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தான். பார்வை ட்யூப் லைட் மீது நிலை கொண்டது. பாட்டிலை தூக்கி அடித்தான். ட்யூப் லைட் உடைந்து சிதற எங்கும் இருள் பரவியது.

அவர்கள் இருளில் ஓடி மறைந்தார்கள்.

மணி ஒன்பது அடித்தது. சரஸ்வதி வாசல் பக்கம் வந்து சாலையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.    

என்று கதை முடிகிறது.

எளிய அன்றாட  மனிதர்களும் இயல்பான நிகழ்வுகளும் கொண்ட இவரது கதைகள் சொல்லப்படும் விதத்தால் நம் மனதில் நீங்காத இடத்தைப் பெறுகின்றன.

இணையத்தில் கிடைக்கும் இவரது இரு கதைகள்

தக்கையின் மீது நான்கு கண்கள்        அவள்