ராமின் தாத்தா – கீதா

இலக்கிய வாசல் நிகழ்வில் படிக்கப்பெற்ற கதை

download (1)     

ரங்கா தாத்தாவிற்கு ராம், பிரேம் என இரு பேரன்கள் இருந்தார்கள்.  இப்ப நாம் இந்தத் தாத்தாவைப் பற்றித் தான் பேசப் போகிறோம்.

      இந்தத் தாத்தாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள்.  தாத்தா, பாட்டி இருவரும் சென்னையில் வசித்து வந்தார்கள்.  மகனை டாக்டருக்குப் படிக்க வைத்து, டாக்டர்  படித்த பெண்ணையே மணமுடித்து, மகன், மருமகள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  மகளையும் இஞ்சினியருக்குப்  படிக்க வைத்து அவளையும் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு மணமுடித்து வைத்தார்கள். 

மகனுக்கு ஒரு பையனும், பின் மகளுக்கு ஒரு பையனுமாக இரு பேரப் பிள்ளைகள் இருந்தார்கள்.  அவர்கள் தான் ராம், ப்ரேம் என்பவர்கள்.  இருவரும் சிறுவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு உதவியாகப் பாட்டியும், தாத்தாவும் வெளிநாட்டிற்குச் சென்று அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள்.  வெளிநாட்டில் அவர்களை  பார்க் மற்றும்  சொந்தக்காரர்கள்  வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுடன் மிகவும் சந்தோஷமாக இருந்து விட்டு வந்தார்கள். 

சிறிது காலத்திற்குப் பின், பாட்டி, தாத்தாவிற்கு வயதாகி விட்டபடியாலும், பேரன்களும் ஓரளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டதாலும், தாத்தா,. “இனிமேல் விடுமுறை விட்டவுடன் இருவரும் அம்மா, அப்பாவுடன்  இந்தத் தாத்தா, பாட்டியை நீங்கள் தான் சென்னைக்கு வந்து கவனித்துக் கொள்ள வேண்டும்”  எனக் கூறினார்.  உடனே ராம், ப்ரேம் இருவரும், “ சரி தாத்தா! என சந்தோஷமாகக் கூறினார்கள்.  அவர்கள் இருவருமே வெளிநாட்டை விட சென்னையில் தாத்தா, பாட்டியுடன் இருப்பதையே மிகவும் விரும்பினார்கள்.  அதுமட்டுமல்லாமல் இருவருக்கும் ஒன்றாக ஒரே வீட்டில் தாத்தாவுடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு விடுமுறைக்கும் வருவார்கள்.

      தாத்தா, பாட்டி இருவருக்கும் தன்னுடைய மகன், மகளை வளர்க்கும்போது இருந்ததை விட கூட பாசமும், அதிகமான பொறுப்பும் கலந்து இருந்தது.  ஆனால் என்னவோ தெரியவில்லை, பேரன்கள்   ராம், ப்ரேம் மீது உயிரையே வைத்திருந்தார்கள்.  அந்த அளவுக்கு, ராமும், ப்ரேமும் பாட்டி, தாத்தா மீது பாசமாக இருந்தார்கள்.  விடுமுறை எப்ப வரும், பேரன்கள் எப்ப வருவார்கள் என வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள்.  இப்போது உள்ள கைபேசி எல்லாம் அப்போது கிடையாது. ஒரே ஒரு தொலைபேசி மட்டும் தான் கடைத்தெருவில் ஒன்று இருக்கும். மாதம் ஒருமுறை பேசிக் கொள்வார்கள்.  மற்றபடி, கடிதம் மூலம் தான் தொடர்பு கொள்வார்கள்.

      அந்த நேரத்தில் தான் தாத்தா, பாட்டிக்கு அறுபதாம் கல்யாணம் என இருவரின் அம்மா, அப்பா, ராம், ப்ரேம் அனைவரும் வந்து சிறப்பாகக் கொண்டாடி விட்டு , ஜாலியாகக் கொண்டாடி விட்டு ப்ரேம், ராம் இருவரும் தாத்தா, பாட்டிக்குத் தாங்களாகவே வாழ்த்து  அட்டை  பண்ணிப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.  பாட்டியும், தாத்தாவிற்கு ஒரு கைக்கடிகாரம் பரிசளித்தார்.  ராம், ப்ரேம் இருவரும் ‘இன்னும் ஒரு மாதத்திற்குப் பின் விடுமுறை வந்துவிடும் தாத்தா, அப்போ வருகிறோம் ‘ என கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றிருந்தார்கள்.

      பாட்டி தாத்தாவிடம், பேரன்கள் கொஞ்சம் வளர்ந்து விட்டதால் இனி அவர்களுக்கு கேரம் , செஸ்  என விளையாட்டு சாமான்கள்   எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து ஸ்டோர் ரூமில் வைக்கச் சொன்னாள்.  அந்த விடுமுறையும் விட்டு ராம், ப்ரேம் இருவரும் சென்னையில் தாத்தா வீட்டிற்கு சந்தோஷமாக வந்தார்கள்.  இருவரையும் பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் கிரிக்கெட் விளையாட வைப்பதும் தினமும் இரவு  விளையாடி,  பாட்டி கதை சொல்லி, இருவருக்கும் சாதம் ஊட்டி விட்டு மிகவும் ஜாலி ஆக இருந்தார்கள்.

  ராம், ப்ரேம் இருவரும், ‘சிட்னியில் அக்கம் பக்கம் யாரும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். இங்கு எவ்வளவு ஜாலியாக இருக்கிறோம்’ என்று பேசிக் கொள்வார்கள்.  அதுவும் ராம் விளையாடும்போது எல்லாவற்றிலும் கொஞ்சம் துறுதுறுவென அவசரமாகச் செய்வான்.  தாத்தா அவனுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டே இருப்பார். “ நீ கொஞ்சம் நிதானமாக யோசித்து விளையாடணும். எதிலும் அவசரமாக இருக்கக் கூடாது” என்றார்.  அவனும் “ ஆமாம் தாத்தா! நான் பரீட்சையில்  வீட்டுக்குச் சீக்கிரமாகப் போகணும் என அவசர அவசரமாக கேள்வித் தாளில் பின் பக்கம் உள்ள கேள்விகளைப் பார்க்காமல் அதற்கு விடை  பண்ணாமல் விட்டு விட்டேன்.  20 மதிப்பெண்கள் அப்படியே விட்டு விட்டேன்.  ஆனால் எனக்கு அந்த விடை முழுவதும் தெரியும்.  அதான் அம்மாவும் நீ பதட்டப்படாமல் நிதானமாகச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள்” என்றான்.

இப்படி அப்படியாக விளையாடி ஒரு வாரம் ஓடி விட்டது.  அன்று  காலை இருவரும்  கிரிக்கெட் விளையாடுவதற்காகத் தாத்தாவுடன் வீட்டின் முன்பு இருக்கும் இடத்திற்கு வரும்போது, பாட்டி, ராம்! ப்ரேம்! எனச் சத்தமாகக் கத்தினார். உடனே தாத்தாவுடன் ஓடிச் சென்று பார்த்ததில், ‘ எனக்கு நெஞ்சு வலிக்கிறது’ என்று சொன்னாள்.  தாத்தாவும், ப்ரேமும் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு மாமாவிடம் மருத்துவரைக் கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள்.  ஆனால் பாட்டி சொன்னாள், “ எனக்குத் தெரியும், நான் இறந்து விடுவேன் போல் இருக்கிறது’’. ஆகையால் ராமிடம், “நான் தாத்தாவிற்கு ஒரு கைக் கடிகாரம் பரிசளித்தேன் அல்லவா? அது அந்த அலமாரியில் உள்ளது. அதை எடுத்து வா!” என்று சொன்னாள்.  தாத்தா உடனே, “ நான் பாட்டிக்குத் தைலம் தேய்க்கிறேன், நீங்கள் அவள் கேட்கும் கைக்கடிகாரத்தை எடுத்து வாருங்கள்” என்றார்.  ராம், ப்ரேம் இருவரும் ஓடிப்போய் அந்தக் கடிகாரத்தை எடுத்து வந்து பாட்டியிடம் கொடுத்தார்கள்.  அந்தக் கடிகாரத்தைப் பாட்டி தாத்தாவிடம் கொடுத்து, “ இதை எப்பவும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த டிக், டிக் என்ற சத்தம் உங்களுடனேயே நான் இருப்பதை உங்களுக்கு உணர்த்தும்” எனக் கூறி விட்டு இறந்து விட்டாள். 

      ராமும், ப்ரேமும் தாத்தாவுடன் கூடவே இருந்து பாட்டியின் பிரிவு தாத்தாவுக்குச் சோகத்தைத் தராமல் பார்த்துக் கொண்டார்கள்.  தாத்தாவும் ஒரு வழியாக மனைவியின் பிரிவை மறந்து ராம், ப்ரேம் இருவரையும், ‘ உங்கள் படிப்பு வீணாகி விடும், அதனால் உங்க அம்மா, அப்பாவுடன் சிட்னி சென்று படிப்பைத் தொடருங்கள். எனக்குப் பாட்டி இருந்த இந்த வீட்டை விட்டு வெளியே வர இஷ்டமில்லை. என் கூடத்தான் பாட்டியின்  ஞாபகமாக இந்தக் கைக்கடிகாரம் இருக்கிறதே, கவலைப்படாதீர்கள்” என்றார்.  ராம், ப்ரேம் இருவரும், ‘ சரி தாத்தா! நாங்க இப்ப செல்கிறோம்.  அடுத்த 3 மாதம் கழித்து விடுமுறை 10 நாட்களில் நாங்க இங்கு வருகிறோம்’ எனக் கூறி விட்டுச் செல்ல மனமில்லாமல் தனியாகத் தாத்தாவை விட்டு விட்டுச் சென்றார்கள். 

      தாத்தாவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.  தினமும் சாயந்திரம் சென்று கடைத் தெருவில் இருக்கும் போன்  மூலமாக ராமிடமும், ப்ரேமிடமும் பேசி விடுவார்.  தனியாக இருப்பதாக ஞாபகம் வரும்போதெல்லாம் அந்தக் கடிகாரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்.  ப்ரேம், ராம் இருவருமே தொலைபேசியில் கூடப் பாட்டியாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் தாத்தா, நாங்கள் விடுமுறை விட்டதும் வந்து விடுவோம்’ எனக் கூறுவார்கள். 

அந்த விடுமுறை நாட்களும் வந்தது.  தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம்.  அடிக்கடி அந்தக் கைக்கடிகாரம், டிக், டிக் என அடிப்பதை பாட்டி என்னோடயே ஓடிக் கொண்டு இருக்கிறாள் என ராம், பிரேமிடம் சொல்லிச் சிரித்துக் கொஞ்சம் பழைய நிலைமைக்குத் திரும்பி இருந்தார்.  எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. 

அந்தத் தருணத்தில், “ தாத்தா! நாங்க நாளைக்கு ஊருக்குப் பத்து மணிக்குக் கிளம்ப வேண்டும். அதனால் இந்த விளையாட்டு சாமான்கள் எல்லாத்தையும்   அடுக்கி வைத்து விடுவோம் எனச் சொல்லி எல்லா அறைகளையும் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.  நாங்க போனதும் நீங்க தனியாக சுத்தம்  பண்ணக் கஷ்டப்பட வேண்டாம்” என்று எல்லா வேலையையும் முடித்து இரவு தூங்கப் போகும்போதுதான் தாத்தா கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.  அது கையில் இல்லை.  ராமும், ப்ரேமும் ‘ என்ன தாத்தா! கதை சொல்லித் தூங்கலாம் என்று சொன்னீங்க, ஏன் வரவில்லை?’ எனக் கேட்டார்கள்.  உடனே தாத்தா, ‘ என் கையில் பாட்டியாகிய வாட்சை எங்கேயோ வைத்து விட்டேனே’ எனக் கொஞ்சம் சோர்வாகப் பேசினார். 

ராமும், ப்ரேமும் வீடு முழுவதுமாக அலமாரி, மேஜை, கட்டிலுக்கு அடியில் என எங்கு தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் நாளைக் காலை பத்து மணிக்கு ஊருக்குக் கிளம்பி விடுவார்கள் என்ற எண்ணத்திலேயே ராம், ப்ரேம் இருவரும் பேசிக் கொண்டார்கள்.  “ தாத்தா அந்த வாட்சைத்தானே பாட்டியாக நினைத்து உற்சாகமாக இருப்பதாகக் கூறினார், இப்ப என்ன பண்ணறது?’ என யோசித்துக் கொண்டே இருந்தார்கள். அதற்குள் இரவு 11 மணி ஆகி விட்டது. தாத்தா சொன்னார், ‘ நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீங்கள் இருவரும் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று. ஆனால் அவருக்கு என்னவோ தூக்கமே வரவில்லை. 

காலையில் ராம் வெகு சீக்கிரமாக எழுந்து கொண்டு தாத்தாவிடம் சென்று, “ நான் அந்த ரூமில் தனியாகச் சென்று தேடி விட்டு வருகிறேன். ஒருவரும் அங்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான்.  ஒரு 20 நிமிடத்திற்குப் பின் ராம் அந்த அறையிலிருந்து வந்து, ‘ தாத்தா! இதோ பாட்டி’ என்று கைக்கடிகாரத்தைத் தாத்தா கையில் கொடுத்தான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.  தாத்தாவின் முகமும் சந்தோஷத்தில் மிகவும் தெளிவாக இருந்தது. 

pic12

ராமிடம் அவன் அப்பா, அம்மா, ப்ரேம் அனைவரும் கேட்டனர். “ எப்படிடா கிடைத்தது?” என்று.  உடனே அவன் சொன்னான். “ தாத்தாதான் பதறுகிற நேரத்தில் பொறுமையாக யோசித்து செயல்படணும் என்று அடிக்கடி சொல்வாரே, அதே மாதிரி  நான் இரவெல்லாம் யோசித்தேன்.  அந்த அறையின் கதவை எல்லாம் சாத்தி விட்டு அமைதியாக அங்கு 15 நிமிடம் அமர்ந்தேன்.  அந்த வாட்ச், அதாவது பாட்டி டிக், டிக் என அடிக்கும் சத்தம் கேட்டு அதைக் கண்டு பிடித்தேன்.  தாத்தா சொன்ன மாதிரி பொறுமையாக யோசித்தால் எல்லாமே நமக்கு வெற்றி தான் என்று அனைவரிடமும் கூறினான்.  அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடன் ஊருக்குக் கிளம்பினார்கள். தாத்தாவும் தனியாக இல்லாமல் பாட்டியுடன் இருப்பது போல் சந்தோஷமாக வழி அனுப்பினார். 

      இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் ?  பதறிய காரியம் சிதறி விடும்.  எனவே ராமின் தாத்தா கூறியபடி சிந்தித்து செயல்பட்டு வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவோம்.