ஷாலுவை நான் சந்திப்பதற்கு ஆஞ்சநேயர் உதவினார் என்று சொன்னேன் அல்லவா? அது எப்படித் தெரியுமா?
ஷாலுவை நான் இன்டர்வியூ செய்த பிறகு அவளை ரெகமென்ட் செய்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும்படி ரிபோர்ட்டை மிஸ் ஒ எம் ஆருக்கு அனுப்பினேன். இன்னும் சிலநாட்களில் அவள் எங்கள் கம்பெனியில் சேர்ந்து விடுவாள். அதற்கப்புறம் .. என் கற்பனை .ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.
அதற்கு அடுத்த இரண்டு நாளும் தேசிய விடுமுறை. மகாபலிபுரத்துக்கு நானும் எங்கள் காலிக் கும்பல் ஐந்து பேரும் போவதாக முடிவு செய்திருந்தோம். ராம்ஸ் கார் எடுத்துக்கிட்டு வருவது மகாபலிபுரம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்குவது. லைட் ஹவுஸ் வரைக்கும் சைக்கிளில் போவது. அங்கே கொஞ்சம் வர்ற போற மக்களை வேடிக்கை பார்ப்பது – மத்தியானம் லைட்டா பீர் அடிப்பது சாயங்காலம் இரவில் மறுபடியும் தண்ணி அடிப்பது காலையில் பத்து கிலோமீட்டர் ஜாகிங் – சாயங்காலம் கிளம்பி ஈ சி ஆர் வழியாக வரும்போது திருவிடந்தை கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவது.சென்னை ரூமிற்கு வருவது – இது தான் எங்கள் பிளான்.
பசங்கள் எவனுக்கும் நல்ல கேர்ள் பிரண்டோ லவ்வோ செட் ஆகமாட்டேங்குது. அர்ச்சனை செஞ்சுவிட்டு மாலையோட ஒன்பது முறை சுத்தி வந்தா கல்யாணமே நடத்தி வைக்கிற திருவிடந்தை பெருமாள் இந்த சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய மாட்டாரா என்ன? அது மட்டுமல்லாமல் இப்போல்லாம் பொண்ணுகளைவிட பசங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தான் அவனுகளுக்கும் அவனைப் பெற்ற அப்பா அம்மாக்களுக்கும் அதிகமா இருக்கு. அமெரிக்காவில வேலை பார்க்கிற பசங்களுக்குக் கல்யாணம் ஈசியா இருபத்திரண்டு வயதிலேயே செட் ஆகி விடுகிறது. நம்ம ஊர் பசங்களுக்கு முப்பத்திரண்டுக்கு மேலே தான் குருபலன் வருது. ஏதோ கேர்ல்பிரண்ட் கிடைக்குதோ பசங்க சமாளித்துக் கொண்டு காலம் கழிக்கிறாங்க. அது கிடைக்காத எங்க மாதிரி மனிதப் பிறவிகளுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் நரகம் தான்.
எங்க செட்டில குமாரசாமின்னு ஒருத்தன் இருக்கான். அவன் வயசைப் பத்திப் பேசினா அவனுக்குக் கோபம் வர்ற அளவுக்கு வயசு. கல்யாணம் இன்னும் தகையல . தலை ஏற்கனவே கொஞ்சம் ஏறிப்போய் ‘பால்ட்’ ஆகிவிட்டது. இப்ப எல்லாம் பெரும்பாலான இடங்களிலே பொண்ணு பார்க்கிறது என்கிற சம்பிரதாயம் கிடையாது. அதிர்ஷ்டம் செஞ்ச சிலருக்குத் தான் அந்த மாதிரி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கிடைக்கும்.
இப்போ முதல்லே மீட்டிங் பாயிண்ட் தான். பையனும் பொண்ணும் அவங்க அவங்க சொந்தக்காரர் (அப்பா அம்மா கண்டிப்பாகக் கூடாது) ரெண்டு மூணு பேரோட ஒரு ஸ்டார் ஹோட்டல் லாபியில் சந்திக்கிறது. அரைமணிநேரம் நிலக்கரி ஊழல் முதல் அம்மா உப்பு வரை பேசிட்டு அந்த ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போயிடணம். கல்யாணத்தப் பத்தியோ பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் பத்தியோ அந்த முதல் மீட்டிங் பாயின்ட்டில் பேசினா அடுத்த மீட்டிங் கிடையாது. செலவெல்லாம் பையனோடது தான். அடுத்த மீட்டிங் காரில் நடக்கும். பையன் காரை ஓட்டிக் கொண்டு போய் பொண்ணு வீட்டுக்குப் போய் அவளை அழைத்துக் கொண்டு எங்கேயாவது பீச்சுக்கோ கோவிலுக்கோ ( சாய்ஸ் பொண்ணோடது) போய்விட்டு வரணும். அப்பப்போ ரெண்டு பேரும் தொட்டுக்கலாம். கன்னத்தில் முத்தமிடலாம். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாக் காரியம் கெட்டுவிடும். பொண்ணு உணர்ச்சிவசப்பட்டாக் கூட பையன் அடக்கி வாசிக்கணும். தப்பித் தவறிக்கூட கல்யாணம் எப்போன்னு கேக்கப்படாது. கேட்டா பிரேக் ஆயிடும்.
மூன்றாவது , இரண்டு பேரும் ரெண்டு நாளைக்கு மகாபலிபுரம், ஏற்காடு ,ஊட்டி, அப்படி போய்ட்டு வரணும். ஹோட்டல்ல தங்கணும். அங்கே என்ன நடந்ததுன்னு யாரும் கேட்கக் கூடாது. டூர் போயிட்டு வந்த உடனே பொண்ணு அவ அப்பா அம்மா கிட்டே ஓகேன்னு சொல்லிட்டா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடின்னு அர்த்தம். எப்போ வைச்சுக்கலாம் என்கிறதை பொண்ணும் பையனும் ஹோட்டல் ரூமில் முடிவு எடுத்திருப்பாங்க . அதுக்கு ஏத்த மாதிரி பெரியவங்களுக்கு ஆசையாயிருந்தா பஜ்ஜி சொஜ்ஜி பண்ணலாம். நிச்சயதார்த்தம் பண்ணலாம்.
இன்னொரு முக்கியமான தேவை என்னன்னா இந்த மூன்று பேஸ் நடக்கும் போது குறைந்தது ஆயிரம் மெஸ்ஸெஜ் இரண்டு பேருக்கும் இடையே நடந்திருக்கவேண்டும். பகலில் போனில் பேசக்கூடாது. ராத்திரி பன்னிரண்டு மணி சுமாருக்கு ஒருமணி நேரம் பேசணும். அவள் அவனை வாடா போடா என்று தான் கூப்பிடுவாள். அவன் தவறிக்கூட வாடி என்று சொல்லக்கூடாது.
இது தான் இந்தியன் டேட்டிங்.
இந்தக் குமாரசாமி ஃபர்ஸ்ட் பேஸில் பாஸ் செய்துவிடுவான். இரண்டாவது பேஸில் ஓலா கேப் எடுத்துகிட்டுப் போனதால ஃபெயில் ஆகிவிடுவான். ஏன்னா அவனுக்குக் கார் ஓட்டத் தெரியாது.
எனக்கு இந்த சமாசாரம் எல்லாம் சரிப்பட்டு வராது. நேற்றைக்கு இண்டர்வியூ விற்கு வந்த ஷாலு என்னை ரொம்ப இம்பிரஸ் செய்துவிட்டாள் . அவள் எப்போது எங்கள் ஆபீஸில் சேருவாள் என்று மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.
அதற்காகத் தான் பசங்களுடன் மகாபலிபுரம் போகவும் திருவிடந்தை போகவும் முடிவு செய்தேன். நான் தண்ணி அடிக்கிற கேஸ் இல்லை. இருந்தாலும் எங்க கும்பலுடன் போய் அவர்கள் தண்ணி அடிக்கும் போது அரட்டை அடிக்கப் பிடிக்கும். கடைசியிலே ‘”மாப்பிளே! நீயும் அடி மச்சி!” நாங்க தண்ணி அடிக்கிறதனால எங்களுக்கு ஒண்ணும் அமைய மாட்டேங்குது. நீ தண்ணி அடிக்காததால உனக்கும் ஒண்ணும் அமைய மாட்டேங்குது” என்று புலம்பல் எல்லாம் வரும்.
இந்த ராம்ஸ் கடைசி நிமிடத்தில் இப்படிக் காலை வாருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . கார் இல்லையாம். ஓசி கார் இல்லை என்றதும் காலிக் கும்பல் ஜகா வாங்கிவிட்டது. அங்கே போய் பீர் அடிக்கறதுக்கு இங்கேயே பாருக்குப் போய் ஹேப்பி அவரில் சீப்பா அடிக்கலாம் என்று தீர்மானித்து விட்டார்கள். எனக்கு பயங்கர கடுப்பு. ‘போங்கடா நீங்களும் உங்க பாருமாச்சு பீருமாச்சு ” என்று கத்திவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ராம்ஸ் வந்து தொத்திக்கொண்டு “வா மச்சி, நானும் வர்றேன். நம்ம ரெண்டு பெரும் திருவிடந்தை போயிட்டு அப்படியே மகாபலிபுரம் போகலாம் வா” என்றான்.
பைக்கைக் கிளப்பிவிட்டு இருவரும் புறப்பட்டோம்.
திருவிடந்தை பெருமாள் நல்ல சக்திவாய்ந்தவராக இருக்கவேண்டும். ஷாலு எனக்குக் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மகாபலிபுரம் லைட் ஹவுஸ் பக்கம் போனோம். அங்கே புதுமையா ஒரு குரங்காட்டி குரங்கு கிட்டே லேப்டாப்பைக் கொடுத்து ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தான். கிளி, முயல், அணில் எல்லாம் போய் இப்போ ஹை டெக்கா குரங்கு வந்திருக்கு. அதைச் சுற்றி பயங்கர கூட்டம். ஒவ்வொருவரா குரங்காட்டி கிட்டே ஏதாவது கேள்வி கேட்கிறாங்க அவன் அதே கேள்வியை குரங்கு கிட்டே கேட்கிறான். குரங்கு கீ போர்டில ஏதாவது விளையாடும் . சற்று நேரத்தில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஏதாவது படம் வரும். அதைப் பார்த்து ஜோசியம் சொல்லுவான்.
அவன் கிட்டே டோக்கன் வாங்க செம கூட்டம் . ராம்ஸ் ” மாப்பிளே ! நமக்கு ரெண்டு பேருக்கும் டோக்கன் போடு ! குரங்கு ஜோஷியமாவது பலிக்குதான்னு பாப்போம்” என்று கெஞ்சினான். சரி அவனைக் கலாய்க்காலாம் என்று யோசித்துக்கொண்டே டோக்கன் வாங்க அதற்கான கவுண்டரில் கையைவிட்டேன். என்கூட ஒரு பெண்ணின் கையும் உள்ளே நுழைந்தது. அதன் வளையல் ஒடிந்து என் கையைக் கீறி ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. யாரது என்று கோபத்துடன் பார்த்தால் ரெட் வளையளுடன் ரெட்கலர் சாரியுடன் ஷாலு ! என் ஷாலு !!
(மற்றவை பிறகு )