இது எப்படி இருக்கு ! – –கீதா சங்கர்

auto

 

அம்மனைக் கண் குளிரத் தரிசித்து விட்டுக் கோயிலிலிருந்து வெளியே வந்த பிரபுவும், மாதவனும் தங்கள் சக ஆட்டோ டிரைவர் மணியைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் நின்றனர்.

கோயிலின் வெளியே உள்ள கடையில், சில கடவுள் உருவங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்ஸை வாங்கிக் காசு கொடுத்துக் கொண்டிருந்தான் மணி.

“ அப்படிப் போடுடா அரிவாளை…. மகனே! நாங்க எவ்வளவு கூப்பிட்டோம்.  கோயிலுக்குள்ளே போய் இந்த சக்தி வாய்ந்த அம்மனைத் தரிசித்து விட்டு வரலாம்னு..  ‘ எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு’ ஒரேயடியா மறுத்து விட்டு இப்போ கடவுள் ஸ்டிக்கர்ஸ் வாங்கிட்டு இருக்கியா?” என்று எகத்தாளமாகக் கேட்டான் பிரபு.

“ மனசு சுத்தமா இருக்கணும்., நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும். சுயநலத்தை விட்டுப் பொது நலனை யோசித்து, நம்ம செய்கைகள் மத்தவங்களப் புண்படுத்தாம இருந்தா போதும். அப்போ நீ சொல்ற கடவுள் உன் மனதிலேயே இருப்பார். இப்படிக் கோயில் கோயிலாப் போய் தரிசனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  நமக்குக் கஷ்டம் வரும்போது கூட நெகடிவா இல்லாம, பாஸிட்டிவ்வாவே திங்க் பண்ணினா, ‘ நல்லதுதான் நடக்கும்னு’ நினைச்சா நல்லது தான் நடக்கும். ‘ நம்ம பூர்வ ஜன்ம பாவம், அதுதான் இப்படியெல்லாம் வாட்டுகிறது. கடவுளே ! பாவங்களை மன்னித்து என்னைக் காப்பாற்றுன்னு’ நினைக்கிற கடவுள்ங்கிற மீடியம் தேவையாயிருக்காது’ன்னு வாய் கிழிய வாக்குவாதம் செய்வியே… இப்போ உன் கையில் கடவுளின் ஸ்டிக்கர்ஸ்… என்ன நாத்திகத்திலேயிருந்து மாறி ஆத்திகனாயிட்டியா?” என்றான் மாதவன் சிறிது நக்கலாக.

மெதுவாகச் சிரித்தான் மணி.

“ நான் மாறவில்லை பிரதர்….. நான் நாத்திகனும் இல்லை.. கோவிலுக்குப் போய் கும்பிடும் ஆத்திகர்களுக்கு எதிரியும் இல்லை.  நான் சொன்னபடியே இந்த ஸ்டிக்கர்ஸ் ஒரு பொது நல சேவைக்குத்தான்” என்றான் மணி.

“ என்ன விளையாடறியா?” என்றனர் பிரபுவும், மாதவனும் கோரஸாக.

“ இல்லைப்பா.. இப்போ இந்த ஸ்டிக்கர்ஸை நம்ம ஆட்டோவிலே, டிரைவர் ஸீட்டிற்குப் பின்னாலும், ஆட்டோவின் பின் புறத்திலும் ஓட்டப் போகிறேன்.  டிரைவர் ஸீட்டிற்குப் பின்புறம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்ஸைப் பின்பக்க இருக்கையில் உட்கார்ந்திருக்கும் பாஸஞ்சர்ஸ் பார்க்க முடியும்.  ஏதோ முக்கியமான காரியத்திற்காகவோ, வேலைக்காகவோ, அல்லது ஆஸ்பத்திரியில் இருக்கும் உறவினரைப் பார்ப்பதற்காகவோ, பதட்டத்தோடும், அவசரத்தோடும் கடவுளை வேண்டிக்கொண்டே நம்ம ஆட்டோவில் ஏறும் பாஸஞ்சர்ஸ் கண்களில் இந்தக் கடவுள் ஸ்டிக்கர்ஸ் பட்டதும் ஒரு நிமிடம் நிம்மதி தோன்றிப் பதட்டமும் குறையும்.  அதே போல நமக்குப் பின்னால் வருகிற ஆட்டோவிலோ, டூ வீலரிலோ வருகிறவங்களுக்கு ஆட்டோவின் பின்புறம் ஒட்டப்பட்ட கடவுள் ஸ்டிக்கர்ஸ் கண்ணில் பட்டு, நிம்மதியைக் கொடுக்கும். பதட்டத்தையும் குறைக்கும்.  ஏதோ நம்மாலே ஆன உதவி..” என்றான் மணி.

அவனை அதியசத்தோடு பார்த்தனர் பிரபுவும், மாதவனும்.

விடவில்லை மாதவன்.

“ ஆமா.. இப்போ உன்னை மாதிரி கடவுள் பத்தி நினைக்காதவர் வந்து ஆட்டோவில் ஏறினால்..: என்றான்.

“ அதற்கும் வச்சிருக்கேனே.. காந்தி சொல்லிச் சென்ற  ‘தீயதைப் பார்க்காதே.. தீயதைக் கேட்காதே.. தீயதைச் சொல்லாதே’ என்று கூறும்.  அதாவது ‘ நல்லதையே நினை.. நல்லதையே சொல்.. நல்லதையே செய்’ என்று கூறும் குரங்குகள் ஸ்டிக்கர்ஸை.’ என்று அதை எடுத்துக் காட்டினான் மணி.

திகைத்து நின்றார்கள் பிரபுவும், மாதவனும் ஒரு நிமிடம்.  மறு நிமிடம் அவர்களும் அந்த ஸ்டிக்கர்ஸ் வாங்க ஓடினர்.

 

 

 

 

 

 

 

 

Advertisements