சித்தர் வரிசை – கொங்கணச் சித்தர்

Imagesகொங்கணவர்.jpg

கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.

கொங்கணரின் குரு போகர் ஆவார்.

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர்.அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

இவர் மருத்துவ நூல்களும், இரசவாத நூல்களும், யோக நூல்களும்,கொங்கணர் கடைகாண்டம்,திரி காண்டம், ஞானம் நூறு, குவிகை, கொங்கண தேவர் ஐந்நூற்றிரண்டு,கொங்கண தேவர் கலை, கொங்கண நாதர் சூத்திரம், கலைஞர் சூத்திரம், துருசுகுடு முப்பத்தொன்று, தலைக்காண்டம், நடுகாண்டம், முப்பூதிட்சை, கொங்கணர் வாக்கியம்,கொங்கணர் தியானம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது,மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது .

பிறகு,     நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வாசுகி அம்மையார் வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அந்த  அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை,சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா  என்று அமைதியாகப் பதில் அளித்தார். என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்என்றார் அவர்.

கொங்கணவர்,அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார்.    போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர்

அவரது பாடல்களில்  சில :

ஊத்தைச் சடலமென் றெண்ணா - தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றேண்ணாட்தே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற ணுடலுக்குள்ளே.
 
தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
 வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
 சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
 தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
 கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
 நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
 நேருட னாமடி வாலைப் பெண்ணே!

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
 காப்பது சேலைக்கு மேலுமில்லை;
 பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
 கும்மிக்கு மேலான பாடலில்லை.

 

Advertisements