தலையங்கம் – ஜல்லிக்கட்டு – கொம்பு சீவும் விளையாட்டு

 

Bull tamers try to control a bull during the bull-taming sport called Jallikattu, in Alanganallur. Jallikattu is an ancient heroic sporting event of the Tamils played during the harvest festival of Pongal.

கடைசியில் பூனைக்கு மணி கட்டிவிட்டார்கள் ! மன்னிக்கவும் காளைக்குக் கொம்பு சீவி விட்டார்கள்!

தமிழக மக்கள்  ஏழுகோடிபேரின் ஒருமித்த விருப்பத்தைச் செவிமடுத்த மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டுக் காளையை மிருகவதைப் பட்டியலிலிருந்து எடுத்து விட்டது  !

தமிழக அரசு, மக்களுக்காகப் போராடிப் பெற்றுத்தந்த மாபெரும் பொங்கல் பரிசு இது !

இந்தப் பொங்கலில் தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு மீண்டும் வரப் போகிறது !

அஞ்சாத சிங்கமடி என் காளை  

இது பஞ்சாப் பறக்க  விடும் ஆளை 

என்று வீரப் பாடல் பாடிக்  காளையை  அடக்கும் வீரனுக்கே  தன்னை அடக்கும் பெருமையைக்  கொடுப்பார்கள் மறத் தமிழ்க் கன்னிப்பெண்கள்! 

காளையரும் காளையின்  வாலை  முறுக்க அதன் திமிளைத் தனது பிடியில் அடக்க மீசையை  முறுக்கிக் கொண்டு வருவார்கள் !

தமிழக அரசியலில் ஒருவருக்கொருவர்  கொம்புக்கு வர்ணம் அடித்தவர்கள் இப்போது குளம்புகள் மிதிபடத் துள்ளிக் குதித்து ஓடுகிறார்கள் !

இது போதும் எங்களுக்கு ! இனி தமிழகத்தில் தேனும் பாலும் ஓடப்போகிறது ! 

தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க எங்களிடம் ஒரு கல் தயார் ! 

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் கோழை நாய்களின் குடலை உருவி மாலை போட காளையைக் கொம்பு சீவிக் களத்தில் இறக்கிவிட்டோம் !

தத்தித் தகிடக தத்தோம் !

தத்தித் தகிடக தத்தோம் !

பி.கு : கடைசியாகத் தெரிந்த தகவல்படி உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாம். 

இந்த ஜல்லிக்கட்டு இருக்காதாம் –  தேர்தல் மல்லுக்கட்டு தான்