படைப்பாளி – மாலன் (எஸ்கே என் )

 

ஊடகவாதியாகத் தொலைக்காட்சி மூலம்  நன்கறியப்பட்ட திரு.மாலன்,  இதழியல் பணிகளாலும் படைப்புகளாலும்  கவனத்தை ஈர்த்தவர்.  எழுபதுகளில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள்:-  சுப்ரமணிய ராஜூ (இவர் இப்போது நம்மிடையே இல்லை), பாலகுமாரன் , இரவிச்சந்திரன் (இவரைப்பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை) மற்றும் மாலன். இன்னும் சிலர் விட்டுப்போயிருக்கலாம்.

இவரது படைப்புகளில்  சமூகப்  பொறுப்புணர்வைத் தட்டி எழுப்பும் முயற்சி  நன்கு புலப்படும். கதைகள் மூலமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாணி இவருடையது என்றும் சொல்வார்கள் .

யதார்த்தத்திற்கும், கொள்கைக்கும் ஒரு இழுபறி இவரது  இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ்     என்னும் கதையில்

*********************************************************************************

இளைஞர்களிடையில் அறிவுஜீவி அடையாளம் பெற்று, பேசுகின்ற கூட்டங்களில் அரங்கம் அதிரக் கைத்தட்டல்களும், தர்க, குதர்க்கங்களுடன் தனது கருத்தை நிறுவக்கூடியவன், இலக்கியக் கூட்டங்களில் பங்கு பெறும் இலக்கியவாதி; அடிக்கடி வேலை மாறும் இளைஞன். இது தான் இளஞ்செழியன்.

இவனது சூத்திரங்கள் சுலபமானவை. கல்யாணம் செய்து கொள்கிறவர்கள்  எல்லாம் கோழைகள், பணம் சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் …..

ஆனால் ரோகினி இவனது கருத்துக்களை ஏற்றுக்கொள்பவளில்லை. வெறும் கைத்தட்டலுக்கும் ஆட்டோக்ராபிற்கும் சில விசிறிகள் தவிர பயனேதும் இல்லை என்கிறாள். இவ்வாறு கருத்துக்களைப் பரப்பி மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் இருநூறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறாள்.

 “நீ சாம்ராஜ்யங்களை உருவாக்குவது இருக்கட்டும். முதலில் ஒரு ஸ்தாபனத்தை வெற்றிகரமாக நடத்திக் காண்பி பாப்போம்.”

“வியாபாரம் செய்து வெற்றி பெறுவது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை. அதை விடப் பெரிய….”

“அந்த அற்பமான காரியத்தைத்தான் செய்து காண்பியேன்.”

மூர்க்கத்தனமாக உசுப்பிவிட்டாள் ரோகினி.

ஜெராக்ஸ் கடை வைப்பதா, அச்சாபீஸ் வைப்பதா என்று யோசித்து, மெஸ் நடத்தலாம் என முடிவுக்கு வருகிறான். பெசன்ட் நகர், கோடம்பாக்கம்  என்றெல்லாம் யோசித்துக் கடைசியில் திருவல்லிக்கேணி.  இடம் கிடைத்தாலும் வாடகை, அட்வான்ஸ் என்று பேரம் பேசி .. உணவகம்   தொடங்கியே விடுகிறான்.

இலக்கியம் பேசும் நண்பர்களும் விமர்சகர்களும் இலவசமாகவே சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். ஆளுக்கு ஒரு இலவச ஐடியா வேறு. உணவகம் நடத்துவது பல படிப்பினைகளைக் கொடுக்கிறது. சாப்பிடுபவர்கள் கடன் கேட்கிறார்கள், வியாபாரிகள் ரொக்கம் கேட்கிறார்கள். பொருள் வாங்கிவரும் பையன் காசு திருடுகிறான். சமையல் செய்யும் பெண் ஓடிப்போகிறாள்.  போதுமடா  சாமி என்ற நிலையிலும் தாக்குப் பிடிக்கிறான்.

நல்ல காலமும் வருகிறது.

வியாபாரம் முனை திரும்பியது.  இரண்டு வருட அனுபவத்தில் வியாபார நுணுக்கங்கள்  புரிந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு காப்பாற்றி வந்த நாணயம் காரணமாகக் கடனுக்கு சரக்கு கிடைத்தது.

சாப்பிட வந்த ரோகினி, “யூ ஆர் ரியலி கிரேட். உன் சாம்ராஜ்யங்கள் இப்போது எழட்டும்”  என்று பாராட்டுகிறாள்.

ஆனால் இப்போது இளஞ்செழியனுக்கு அரசாங்கங்களை மாற்றுகிற அபிப்பிராயம் இல்லை. “புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமல்ல, வெற்றிகரமாகவும் இருப்பதுதான் வாழ்க்கை” என்பது அவன் புதிய சூத்திரம். ஆனால் கையில் காசு சேர்ந்ததும் அவன் குட்டி பூர்ஷ்வா ஆகிவிட்டான் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் .

  என்று கதை முடிகிறது.

*********************************************************************************

எழுபதுகளில் இருந்த சமூக நிலையினை அடிநாதமாகக் கொண்ட ‘ஆயுதம்’ , ‘ஈரம்’, ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ ஆகியவை உள்ளிட்ட சிறுகதைகள் மாலன் அவர்களின் வலைத்தளத்தில் ( இங்கே  ) கிடைக்கின்றன.