மரணத்திற்கு அப்பால்

 

இ ந்த உடம்பில் இருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒன்று ஜீவன் உயிர் என்று அழைக்கப்படுவது.

மற்றது ஆன்மா என்று அறியப் படுவது.

நிழலும் வெயிலும் போல  ஒருவருக்கொருவர் மாறுபட்டவர். ஒருவர் செயல்களின் பலன்களை அனுபவிக்கிறார். மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக விளங்குகிறார்.

ஒரே மரத்தில் வாழும் இரு பறவை போல. ஒன்று இனிப்பும் புளிப்பும் கசப்பும் நிறைந்த பல்வேறு பழங்களை உண்ணுகிறது. மற்றது எதையுமே உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நமது

உடம்பு தேர்

புத்தி தேரோட்டி

புலன்கள் குதிரைகள்

மனம் கடிவாளம்

உலகப் பொருட்கள்  பாதை

ஆன்மா பயணம் செய்பவன்

 

நமது தேர் உலகப்பாதையில் தான் போகவேண்டும். வேறு வழியில்லை. பயணத்தின் வெற்றி குதிரைகளின்  வேகத்தைப் பொறுத்திருக்கிறது. மனம் கட்டவிழ்ந்து போகாமல் இருந்தால் தான் குதிரைகள் நேர் வழியில் செல்ல முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேரோட்டி திறமைசாலியாக இருக்கவேண்டும். அது புத்தியை எழுப்புவதில் தான் இருக்கிறது.

சாதாரணமாக புத்தி மூன்று நிலையில் செயல்படுகிறது

இயல்புணர்ச்சி ( INSTINCT). மனிதனின் இயல்பான குணங்கள். அவனுடைய ஆழ் மனத்திலிருந்து வருவது. பொதுவாகத் தவறுவதில்லை. ஆனால் அவனுடைய ஆதிக்கத்தில் இல்லை.

அறிவு ( INTELLECT ). புற  உலகிலிருந்து பெரும் அறிவு.  இது தவறாகவும் இருக்கக்கூடும்.  இதை முழுதும் நம்ப முடியாது.

உள்ளுணர்வு  (INTUITION ). கற்றறிவு ,  கேட்டறிவு போன்று எந்த வித உபகரணங்களின் துணையும் இன்றி  உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. கலை ,  விஞ்ஞானம் , கல்வி என்று எந்தத்  துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கு வாசலாகத் திகழ்வது,  இந்த உள்ளுணர்வே. இது விழிப்பதே புத்தி  விழிப்பதாகும். இடையே கீதை,  புத்தியோகம் என்று சொல்கிறது. இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை

பொருட்களைவிட மனம் வலிமை மிகுந்தது.

மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது.

புத்தியைவிட ஆன்மா வலிமை மிகுந்தது.

ஆன்மாவைவிட இறைவனின் ஆற்றல் வலிமையானது.

இறையாற்றலைவிட  ஏன் எல்லாவற்றையும்விட இறைவன் உயர்ந்தவன்.

 

புத்தி விழிப்புற

அகத்தை , பேச்சை , புலன்களை மனத்தில் ஒடுக்கவேண்டும்.

மனத்தை புத்தியில் ஒடுக்க வேண்டும்.

புத்தியை ஆன்மாவில் ஒடுக்கவேண்டும்.

ஆன்மாவை இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.

இதற்கு ஒரு குரு வேண்டும். அவர் தான் நம்மை எழுப்பிப்பார், விழிக்கச்செய்வார், அவர் நம்மை

உண்மையற்ற நிலையிலிருந்து உண்மை  நிலைக்கும்

அறியாமை இருளிலிருந்து அறிவுப் பேரொளிக்கும்

மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கும்

அழைத்துச்செல்வார்.

Mathomathis

அது தான் அப்யாரோஹ மந்திரம்.

 

ஓம்

அஸதோமா  ஸத் கமய

தமாஸோமா ஜ்யோதிர்‌ கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

குருவின் மூலம் நமக்கு இறையாற்றல் கிட்டும்.

இறைவனின் ஆற்றலை உணருபவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

 

இது தான் கட  உபநிஷத்தின் தத்துவம் .

Advertisements