மழையில் விரிந்த கொடைகள் – பத்மஜா ஸ்ரீராம்

 

chennai_flood_3_20151221.jpg

ஆனந்த் நகர் புத்தாண்டு விழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

 

பூமியில் மழை – இயற்கையின் அளப்பரிய வரம்

இதில் நாம் செய்யும்  பிழை –

மரம் வளர்ப்பு மறந்தோம்

மண்பாண்டங்கள் துறந்தோம்

நெகிழிகளோடு * நெருங்கினோம்

இயற்கையை நொறுக்கினோம்

வெல்லமென இனித்த  இயற்கை !

வெள்ளமென விரித்தது இறக்கை !

 

புரட்டிப் போட்டன  மழையும் வெள்ளமும் –

அதனால் விரிந்தது மனிதனின் உள்ளமும் !

 

கைபேசியே கதியெனக் கிடந்த இளைஞர் கரங்கள் –

கலங்கியோரின் கைதூக்கி விட்ட இம்மண்ணின் உரங்கள் !

கணவன் குழந்தை உலகமாய் இருந்த பெண்ணின் யதார்த்தம் –

தன்னையும் மறந்து பொருளிழந்தார்க்கு செய்தனுப்பிய பதார்த்தம் !

பள்ளிக்கூடம் பொம்மைப்படம் என்றிருந்த குழந்தை கூட

தாய் தந்த கைச்செலவு பணம் –

பத்து இருபதென வாரி வழங்கிய குணம் !

 

மூன்றாம் மனிதன் தவிக்கிறான்

முன்பின் தெரியாதவன் கலங்குகிறான்

முகமறியா குழந்தை துடிக்கிறது

முன்வந்து மறுவாழ்வு அளித்த மகத்துவம் !

மழையில் விரிந்த கொடையாய்

மனிதநேயமே நம் வாழ்க்கைக்கு விடையாய்

கை  கோர்ப்போம் !

கை கொடுப்போம் !!