வானியல் மூலம் வரலாறு – புதிய ஆராய்ச்சிப் புத்தகம்

இதிகாசத்திலிருந்து  வானியல் வழியாக வரலாற்றைக் ( Mythology to history through astronomy )  காட்டுகிறது   நா. பொ. ராமதுரை என்பவர் எழுதிய ‘வானியல் மூலம் வரலாறு காண்போம் ” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை .

இதில் பல புதிய கருத்துக்கள் உள்ளன.

மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தளமாக  அமையும்.

இது என்னவென்று பார்ப்போம்.

அனைத்துக் கோள்களும் ஆரம்பமாகும் அதே நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் காலம்  ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்லும் இந்த மகாயுகம் மொத்தம் 12160 ஆண்டுகள். இதுதான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று  நான்கு யுகங்களாக 4:3:2:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டிருக்க  வேண்டும்.

அதைப்போல் திதி, நட்சத்திரம்,யோகம் ஆகிய மூன்றும் ஆரம்பமாகும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் காலம் ஒரு மாகசைக்கிள்  என்று அழைக்கப்படும்.  மேலும். அந்த ஆரம்ப நிலை என்பது சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில்,  அவிட்டம் நட்சத்திரத்தில்  , மகாசுக்லா பிரதமை திதியில் துவங்குகிறது. திரும்ப இதே நிலைக்கு வருவதற்கு 160 ஆண்டுகள் ஆகும். இது தான் ஒரு மாக சைக்கிள் என்பது.

இவற்றைப்போல் 76 மாகசைக்கிள்கள் முடியும் போது ஒரு மகாயுகமும் முடிவடைகிறது.

நமது  சூரிய வருடத்திற்கு 12 மாதங்கள். ஆனால் சாந்திரமான வருடத்திற்கு 13 மாதங்கள்.

5  சாந்திரமான ஆண்டுகள் ஒரு வேதாங்க சோதிஷா யுகா ஆகும்.

32 வேதாந்த சோதிஷா யுகா ஒரு மாகசைக்கிள்  ( 32 x 5  = 160 ) ஆகும். அதாவது 160 ஆண்டுகள்.

76 மாகசைக்கிள்கள் ஒரு மகா யுகமாகும். ( 76  x 160 = 12160) 12160 ஆண்டுகள் ஆகின்றன.

2  மாகசைக்கிள்கள் பிரும்மாவிற்கு ஒரு நாள்.

36 பிரும்மா நாட்கள் ( 72 மாகசைக்கிள்கள்  ) ஒரு மன்வந்தரம்.

14 மன்வந்தரங்கள்  ஒரு கல்பம்.

6 கல்பங்கள் ஒரு பிரளயம்.

3 பிரளயங்கள் ஒரு மகா பிரளயம்.

27 மகா பிரளயங்கள்  பிரும்மா / பூமியின் வயது

இதன்படி பிரும்மாவின் /பூமியின்  வயது 595  கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து, 80 ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.

மேலும் ஸப்தரிஷி மண்டலம் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 81 ஆண்டுகள் இருந்து  பின்னோக்கி நகர்ந்து அடுத்த நட்சத்திரத்தில் பிரவேசித்து,. இது போன்று  27 நட்சத்திரங்களையும் சுற்றி முடிக்க ( 27 x 81 = 2187) 2187 ஆண்டுகள் ஆகின்றன.

இதன்படி வைவஸ்வதமனுவால்  தொடங்கப்பட்ட ஸப்தரிஷி ஆண்டுத் தொடக்கம் தான் கிருதயுகத்தின் துவக்கம். அது கிமு 13.10.15261 வெள்ளிக்கிழமை .அந்த சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில்,  அவிட்டம் நட்சத்திரத்தில்  , மகாசுக்லா பிரதமை திதியில் பிரும்மாவின் இராப்பொழுதில் 28வது மகாயுகத்தில் தான் கிருதயுகம் தொடங்கியுள்ளது.  ( இந்த யுகத்தில் தான் மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம் போன்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன)

பிறகு வந்த திரேதா யுகம், துவாபரயுகமும் முடிந்து , கிமு 20.12.4317 வெள்ளிக்கிழமை   கலியுகம் ஆரம்பமாயிற்று.

மேலும் இதன் படி ,

திரேதாயுகத்தில் , கிமு 17.01.10205 திங்கள்கிழமை நள ஆண்டு மேஷ சித்திரை 6ம்  நாள் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் கூடிய தினத்தில்  ராமர் அவதரித்தார்.

கலியுகத்தில்  கிமு 23.07.3185 புதன்கிழமை தமிழ் நள ஆண்டில் ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தார். ( கிருஷ்ணன் கலியுகத்தில் பிறந்திருப்பதாக இவர் கூறுகிறார்)

மேலும், மகாபாரதப் போர் துவங்கியது கிமு 29.10.3139 வெள்ளிக்கிழமை மார்கழி முதல் நாள் அன்று. 18 நாட்கள் தொடர்ந்து நடந்தது அந்தப்போர்.

கிமு 03.01.3138 திங்கள் கிழமை உத்தராயண புண்யகாலத்தில் பீஷ்மர் மோட்சமடைந்தார்.

கிமு 06.02.3101 வியாழன் அன்று கிருஷ்ணன் தனது 84 ஆவது வயதில் பரமபதம் அடைந்தார்.

பிறகு கிமு 27.12.3101 ஆண்டில் கலியுகம் முடிவுற்றது.

இவ்வாறு கிமு 13.10.15261 துவங்கிய மகாயுகம் , 4 யுகங்களை  12160 வருடத்தில்  4:3:2:1  என்ற விகிதத்தில் முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகியற்றை முடித்துவிட்டது.

கிமு 28.12.3101  ஞாயிற்றுக்கிழமை  அன்று  அடுத்த மகாயுகத்தின் கிருதயுகம் துவங்கியுள்ளது. 

மேலும் கிமு 15261 முன்னாள் அதற்கு முந்திய மகாயுகத்தின்  (27) கலியுகத்தில் தான் முதல் தமிழ்ச்சங்கம் தொடங்கியது.  அங்கு தான் முருகன் அவதரித்து தமிழை வளர்த்தார்.

நாம் இப்போது இருப்பது சுவேதவராக கல்பத்தில் 8 வது  மன்வந்தரமான வைவஸ்வத  மன்வந்தரத்தில்  பிரும்மாவின் பகல் பொழுதும் பிரதமே பார்த்தேயுமான 29 வது மகாயுகத்தில் 2 வது யுகமான  திரேதாயுகத்தில் இருக்கிறோம். இந்த யுகம் கிபி 21.02.2677 புதனன்று முடிவுறும் . பிறகு துவாபரயுகம் துவங்கும் .

தலை சுற்றுகிறதா?