ஷாலு மை வைஃப்

 

ஆஞ்சநேயர் ஜோதிடத்துக்கு டோக்கன் வாங்கும் இடத்தில் ஷாலுவைப் பார்ப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கும் அவள் ரெட் கலர் தான். ஆனால் சிவப்புக் கலர் சல்வார்  துப்பட்டா அணிந்திருந்தாள்.  அவள் என்னைப் பார்த்துவிட்டு ஆச்சரியப் படுவாள் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அவள் கைவளையல் என் கையில் பட்டுக் கீறி இரத்தம் வரவழைத்தற்காக வருந்துவாள் என்றும் எதிபார்த்தேன்.

ஆனால் அவள் முகத்தில் என்னைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வளையல் உடைந்ததுக்காக சென்டிமெட்டலா கோபித்துக் கொண்டாள் என்று தான் முதலில் நினைத்தேன் . அவள் காசு கொடுத்து வாங்கின பேப்பர் டோக்கனை கிழித்து எறிந்துவிட்டு என்னைப் பார்த்து ‘ஹும்’ என்று உறுமிவிட்டு மேலே நடக்க முற்பட்டாள்.

“ஷாலு என்னைத்  தெரியலையா ? நான் தான் நேற்று உன்னை இன்டர்வியூ பண்ணினேனே , ஞாபகம் இல்லையா ?” என்று  பழைய ஸ்ரீதர் படம் ஜெமினிகணேசன்  மாதிரி கேட்டேன்.

” உங்க கம்பெனிக்கு மட்டும்   இவ்வளவு பாஸ்ட்டான கூரியர் எப்படிக் கிடைச்சான். நேத்திக்கு சாயங்காலம் தான் இன்டர்வியூ    நடந்தது. இன்னிக்குக் காலையிலேயே  ரிசல்ட் வந்து நிக்கறது”

” அதுக்கு நீ எனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் தான் உன்னை ஸ்ட்ராங்கா ரெகமென்ட் பண்ணினேன்.” என்றேன்.

” அப்படியா ! உங்களுக்கு உங்க கம்பெனியில அவ்வளவு தான் மதிப்போ? ” என்று கேட்டாள்.

” நீ என்ன சொல்லற?”

” இங்கே பாருங்கோ” என்று சொல்லி அவளுடைய ஹேன்ட் பேகிலிருந்து லெட்டரை எடுத்து என் மூஞ்சிக்கு நேரே நீட்டினாள். படித்தேன். பக் என்றிருந்தது. ‘உங்களுக்கு இந்த வேலையைத் தர இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்று எழுதியிருந்தது.  கீழே மிஸ்.  ஓ எம் ஆர் கையெழுத்துப் போட்டிருந்தாள்.                          ‘ பழிவாங்கி விட்டாளே ‘ என்று நொந்துகொண்டு, ‘ சாரி, ஷாலு, எங்கேயோ தப்பு நடந்திருக்கு.  நாளான்னக்கி ஆபீஸில்  இதை சரி  பண்ணிடறேன்.”

வேண்டாம் சார். நீங்க இன்டர்வியூ முடிஞ்சதும்  ‘ நீ செலக்டட்’ என்று சொன்னதை நம்பி நேத்து என் பிரண்ட்ஸ்களுக்கெல்லாம்  பார்ட்டி வேறே கொடுத்திட்டேன். இன்னிக்கு காலைல இந்த மாதிரி லட்டர் வருது. எனக்கு உங்க கம்பெனியே வேண்டாம்  “

அப்படிச் சொல்லிவிட்டு ” வாடி போகலாம்” என்று பக்கத்தில் இருந்த ஒரு குட்டிப் பொண்ணை இழுத்துக் கொண்டு போகப் புறப்பட்டாள்.  ஷாலுவின் ஜாடை அப்படியே இருந்தது.  என் பிற்கால மச்சினியாக இருக்கக்கூடும்.

” ஒரு நிமிஷம்.  நான் சொன்னதை நீ நம்பலை இல்லையா ? இதோ இந்த ராம்ஸ் கிட்டே கேட்டுக்கோ”  என்று  சொல்லித் திரும்பிப் பார்த்தா ராம்ஸைக் காணோம்.

குரங்கு ஒரு கையில்  கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இன்னொரு கையில் ஒவ்வொரு கடலையை  ஸ்டைலா எடுத்து வாயிலே போட்டுக் கொள்ளும் அழகை ராம்ஸ் ரொம்பப் பக்கத்தில் நின்று  ரசித்துக் கொண்டிருந்தான்.  ” ராம்ஸ், இங்கே வாயேன்” என்று நான் கத்தியதைக் கேட்டு அவசர அவசரமாகத் திரும்பியவன் குரங்குக்குப் பக்கத்தில் வைத்திருந்த கடலையைத் தட்டிவிட்டான். குரங்குக்கு வந்ததே கோபம். கம்புட்டரை விட்டுவிட்டு  அவனைத்  துரத்த ஆரம்பித்தது. அவன் ஓடி வந்து எனக்கும் ஷாலுவுக்கும் நடுவில்  நின்றான். கிட்டே வந்த குரங்கு ஷாலுவின் துப்பட்டாவைப் பறித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மரத்தின் மேலே ஏறியது. துப்பட்டாவைத் தனது கைகளில் சுற்றிச் சுற்றி விளையாட ஆரம்பித்தது. ஷாலு  திக்பிரமையில் அப்படியே சிலை மாதிரி நின்றுவிட்டாள். ரொம்ப கஷ்டமாப்  போச்சு.

கும்பல் எல்லாம் அந்த மரத்தைச் சுற்றி வந்தது. கம்ப்யுட்டர் ஜோசியக்காரனுக்குக் கெட்ட கோபம். பின்னே,  அது அவன் வருமானப்   பிரச்சினை இல்லையா?

அப்போ நான் என் பாக்கெட்டில இருந்த கடலைப் பொட்டலத்தைக் குரங்குக்குத் தூக்கிப் போட்டேன். அது மறுபடியும் ஸ்டைலா கடலைப் பாக்கெட்டை ஒரு கையால் பிடித்து இன்னொரு கையிலிருந்த  துப்பட்டாவைத் தூக்கிப் போட்டது. அது நேரா  என் கழுத்தில் மாலையா விழுந்தது. ஆஹா என்ன சுகம் என்று சில வினாடி அதன் வாசனையை அனுபவித்து உடனே சுய நினைவு வந்து அதை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் திக்பிரமையில் இருந்ததால் நானே அவளுக்கு அதை மாலையா மாட்டிவிட்டேன்.

பாரதிராஜா பக்கத்தில் இருந்திருந்தா உடனே ஏழு குட்டிப்  பொண்ணுகளுக்கு தேவதை டிரஸ் போட்டு எனக்குப் பின்னாடி ஆட விட்டிருப்பார்.

கூட்டத்தில் இருந்த மக்கள் எல்லோரும்  கை தட்டி விசில் அடித்தார்கள்.

ஷாலுவும் நினைவுக்கு வந்தாள். வெட்கத்தில் நெளிந்தாள். என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

குரங்குக்காரனும் ” வா ராஜா வா” என்று கெஞ்ச அதுவும் கடலையை அப்படியே ஒரே வாயில் போட்டுக் கொண்டு தாவிக் குதித்து கம்ப்யூட்டர் முன்னால்  வந்து பழையபடி தொழிலைப் பார்க்க ஆரம்பித்தது.

“முதல்ல இந்த அம்மாவுக்கும் சாருக்கும் ஜோசியம் பாத்துட்டுத் தான் மத்தவங்களுக்கெல்லாம் ” என்று ஜோசியக்காரன் சொல்லக் கூட்டம் ஆமோதித் துக் கையைத் தட்டியது.

ஷாலு வெட்கத்தோட என் கூட வந்தாள். ” கண்ணா இந்த அம்மாவுக்கு என்ன வேணும் ?  இந்த ஐயா ஆசைப்பட்டது கிடைக்குமா ?  என்று சொல்லிக் குரங்கை டியூன் பண்ணினான் அந்த ஜோசியக்காரன். குரங்கு எங்கள் இருவர் முகத்தையும் சில வினாடிகள் மாறி மாறிப் பார்த்தது.  நானும் என் பாக்கெட்டிலிருந்த இன்னொரு கடலைப் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். “லஞ்சம்” லஞ்சம்” என்று பின் பக்கத்திலிருந்து ஒரு பொடியன்  வாய்ஸ்   கொடுத்தான்.

குரங்கு எதையுமே லட்சியம் பண்ணாம கொடுத்த கடலையை வாங்கி  சாப்பிடாமல் அப்படியே அருகிலிருந்த டேபிளில் வைத்துவிட்டு கீ போர்டில் ஏதோ அடித்தது. கம்யூட்டர்  கருப்பு ஸ்கிரீன் எங்களைப் பார்த்து இருந்தது. திடீரென்று அதில் நானும் ஷாலுவும் தெரிந்தோம். கூட்டத்தில் விசில் பறந்தது. குரங்கு வெப்கேமை  ஆன் செய்திருக்கு. மறுபடியும் கி போர்டில் குரங்கு கட கட . இப்போது ஸ்கிரீனில் ராமர் சீதைக்கு மாலை போடும் காட்சி  தெரிந்தது.  அந்த மாலை சிவப்பு கலரில்   இருந்தது. சீதையும் சிவப்பு கலரில் புடவை உடுத்தியிருந்தாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

இதுக்கு மேல நான் விளக்கம் ஏதாவது சொல்லவேண்டுமா? என்று கேட்டான் ஜோசியக்காரன். கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது. ஷாலுவின் முகம் வெட்கத்தில் அவள் சல்வார் கலரில் மாறியது. அவள் சட்டென்று எழுந்து போக ஆரம்பித்தாள். நான் ஒரு நூறு ரூபாயை ஜோசியக்காரனுக்குக் கொடுத்து விட்டு  அவள் பின்னால் நடந்தேன். ராம்ஸும் என் பிற்கால மச்சினியும் கூட வந்தார்கள்.

அடுத்த வாரம் ஷாலுவும்  ஸ்டெல்லாவும் எங்கள் கம்பெனியில்  சேர்ந்தார்கள்.  எங்களை மாதிரியே ராம்ஸுக்கும் ஸ்டெல்லாவுக்கும் செட் ஆகியது. அது ஒரு தனிக் கதை !

 

(அப்புறம்?)