இளையராஜா 1000

illayaraja_13012016_m

தமிழ்த் திரைப்பட உலகில் இளையராஜாவின் சாதனை மகத்தானது!

ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்!

எம் எஸ் விஸ்வநாதன்  1100 படங்களுக்கு இசை அமைத்து இவரை விட முன்னணியில்  இருந்தாலும் இளையராஜாவின் இமாலய சாதனை பாராட்டுதற்குரியது – போற்றுதற்குரியது.

இவரது இயற்பெயர் ஞான தேசிகன். பிறந்த வருடம் 1943 . 1976இல் அன்னக்கிளியாக வந்தவர் இன்று ஆல்  போல் தழைத்து வேரூன்றி நிற்கிறார்.

இவர் இசை அமைப்பாளர். இசைக்கருவிகள் வாசிப்பவர். பாடல் ஆசிரியர். பாடகர் இசை நடத்துபவர்.

வாழ்க நீ எம்மான் !!

இளையராஜாவின் ரேடியோ  – அவரது பாடல்களை ஒலி பரப்பி வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்தைச் சொடுக்குங்கள். அவரது பாடல்களைக் கேட்கலாம்.

http://tunein.com/embed/player/s166196/

 

 

 

மழையில் விரிந்த கொடைகள் – பத்மஜா ஸ்ரீராம்

 

chennai_flood_3_20151221.jpg

ஆனந்த் நகர் புத்தாண்டு விழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

 

பூமியில் மழை – இயற்கையின் அளப்பரிய வரம்

இதில் நாம் செய்யும்  பிழை –

மரம் வளர்ப்பு மறந்தோம்

மண்பாண்டங்கள் துறந்தோம்

நெகிழிகளோடு * நெருங்கினோம்

இயற்கையை நொறுக்கினோம்

வெல்லமென இனித்த  இயற்கை !

வெள்ளமென விரித்தது இறக்கை !

 

புரட்டிப் போட்டன  மழையும் வெள்ளமும் –

அதனால் விரிந்தது மனிதனின் உள்ளமும் !

 

கைபேசியே கதியெனக் கிடந்த இளைஞர் கரங்கள் –

கலங்கியோரின் கைதூக்கி விட்ட இம்மண்ணின் உரங்கள் !

கணவன் குழந்தை உலகமாய் இருந்த பெண்ணின் யதார்த்தம் –

தன்னையும் மறந்து பொருளிழந்தார்க்கு செய்தனுப்பிய பதார்த்தம் !

பள்ளிக்கூடம் பொம்மைப்படம் என்றிருந்த குழந்தை கூட

தாய் தந்த கைச்செலவு பணம் –

பத்து இருபதென வாரி வழங்கிய குணம் !

 

மூன்றாம் மனிதன் தவிக்கிறான்

முன்பின் தெரியாதவன் கலங்குகிறான்

முகமறியா குழந்தை துடிக்கிறது

முன்வந்து மறுவாழ்வு அளித்த மகத்துவம் !

மழையில் விரிந்த கொடையாய்

மனிதநேயமே நம் வாழ்க்கைக்கு விடையாய்

கை  கோர்ப்போம் !

கை கொடுப்போம் !!

 

 

 

வானியல் மூலம் வரலாறு – புதிய ஆராய்ச்சிப் புத்தகம்

இதிகாசத்திலிருந்து  வானியல் வழியாக வரலாற்றைக் ( Mythology to history through astronomy )  காட்டுகிறது   நா. பொ. ராமதுரை என்பவர் எழுதிய ‘வானியல் மூலம் வரலாறு காண்போம் ” என்ற ஆராய்ச்சிக் கட்டுரை .

இதில் பல புதிய கருத்துக்கள் உள்ளன.

மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு இது தளமாக  அமையும்.

இது என்னவென்று பார்ப்போம்.

அனைத்துக் கோள்களும் ஆரம்பமாகும் அதே நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தும் காலம்  ஒரு மகாயுகம் என்று அழைக்கப்படும். கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்லும் இந்த மகாயுகம் மொத்தம் 12160 ஆண்டுகள். இதுதான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று  நான்கு யுகங்களாக 4:3:2:1 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டிருக்க  வேண்டும்.

அதைப்போல் திதி, நட்சத்திரம்,யோகம் ஆகிய மூன்றும் ஆரம்பமாகும் நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்கும் காலம் ஒரு மாகசைக்கிள்  என்று அழைக்கப்படும்.  மேலும். அந்த ஆரம்ப நிலை என்பது சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில்,  அவிட்டம் நட்சத்திரத்தில்  , மகாசுக்லா பிரதமை திதியில் துவங்குகிறது. திரும்ப இதே நிலைக்கு வருவதற்கு 160 ஆண்டுகள் ஆகும். இது தான் ஒரு மாக சைக்கிள் என்பது.

இவற்றைப்போல் 76 மாகசைக்கிள்கள் முடியும் போது ஒரு மகாயுகமும் முடிவடைகிறது.

நமது  சூரிய வருடத்திற்கு 12 மாதங்கள். ஆனால் சாந்திரமான வருடத்திற்கு 13 மாதங்கள்.

5  சாந்திரமான ஆண்டுகள் ஒரு வேதாங்க சோதிஷா யுகா ஆகும்.

32 வேதாந்த சோதிஷா யுகா ஒரு மாகசைக்கிள்  ( 32 x 5  = 160 ) ஆகும். அதாவது 160 ஆண்டுகள்.

76 மாகசைக்கிள்கள் ஒரு மகா யுகமாகும். ( 76  x 160 = 12160) 12160 ஆண்டுகள் ஆகின்றன.

2  மாகசைக்கிள்கள் பிரும்மாவிற்கு ஒரு நாள்.

36 பிரும்மா நாட்கள் ( 72 மாகசைக்கிள்கள்  ) ஒரு மன்வந்தரம்.

14 மன்வந்தரங்கள்  ஒரு கல்பம்.

6 கல்பங்கள் ஒரு பிரளயம்.

3 பிரளயங்கள் ஒரு மகா பிரளயம்.

27 மகா பிரளயங்கள்  பிரும்மா / பூமியின் வயது

இதன்படி பிரும்மாவின் /பூமியின்  வயது 595  கோடியே 70 லட்சத்து 36 ஆயிரத்து, 80 ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.

மேலும் ஸப்தரிஷி மண்டலம் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 81 ஆண்டுகள் இருந்து  பின்னோக்கி நகர்ந்து அடுத்த நட்சத்திரத்தில் பிரவேசித்து,. இது போன்று  27 நட்சத்திரங்களையும் சுற்றி முடிக்க ( 27 x 81 = 2187) 2187 ஆண்டுகள் ஆகின்றன.

இதன்படி வைவஸ்வதமனுவால்  தொடங்கப்பட்ட ஸப்தரிஷி ஆண்டுத் தொடக்கம் தான் கிருதயுகத்தின் துவக்கம். அது கிமு 13.10.15261 வெள்ளிக்கிழமை .அந்த சம்வத்சரா ஆண்டில் கும்பமாசி முதல் நாளில்,  அவிட்டம் நட்சத்திரத்தில்  , மகாசுக்லா பிரதமை திதியில் பிரும்மாவின் இராப்பொழுதில் 28வது மகாயுகத்தில் தான் கிருதயுகம் தொடங்கியுள்ளது.  ( இந்த யுகத்தில் தான் மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம் போன்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன)

பிறகு வந்த திரேதா யுகம், துவாபரயுகமும் முடிந்து , கிமு 20.12.4317 வெள்ளிக்கிழமை   கலியுகம் ஆரம்பமாயிற்று.

மேலும் இதன் படி ,

திரேதாயுகத்தில் , கிமு 17.01.10205 திங்கள்கிழமை நள ஆண்டு மேஷ சித்திரை 6ம்  நாள் புனர்பூச நட்சத்திரமும் நவமி திதியும் கூடிய தினத்தில்  ராமர் அவதரித்தார்.

கலியுகத்தில்  கிமு 23.07.3185 புதன்கிழமை தமிழ் நள ஆண்டில் ஆவணித் திங்கள் 24 ஆம் நாள் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தார். ( கிருஷ்ணன் கலியுகத்தில் பிறந்திருப்பதாக இவர் கூறுகிறார்)

மேலும், மகாபாரதப் போர் துவங்கியது கிமு 29.10.3139 வெள்ளிக்கிழமை மார்கழி முதல் நாள் அன்று. 18 நாட்கள் தொடர்ந்து நடந்தது அந்தப்போர்.

கிமு 03.01.3138 திங்கள் கிழமை உத்தராயண புண்யகாலத்தில் பீஷ்மர் மோட்சமடைந்தார்.

கிமு 06.02.3101 வியாழன் அன்று கிருஷ்ணன் தனது 84 ஆவது வயதில் பரமபதம் அடைந்தார்.

பிறகு கிமு 27.12.3101 ஆண்டில் கலியுகம் முடிவுற்றது.

இவ்வாறு கிமு 13.10.15261 துவங்கிய மகாயுகம் , 4 யுகங்களை  12160 வருடத்தில்  4:3:2:1  என்ற விகிதத்தில் முறையே கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகியற்றை முடித்துவிட்டது.

கிமு 28.12.3101  ஞாயிற்றுக்கிழமை  அன்று  அடுத்த மகாயுகத்தின் கிருதயுகம் துவங்கியுள்ளது. 

மேலும் கிமு 15261 முன்னாள் அதற்கு முந்திய மகாயுகத்தின்  (27) கலியுகத்தில் தான் முதல் தமிழ்ச்சங்கம் தொடங்கியது.  அங்கு தான் முருகன் அவதரித்து தமிழை வளர்த்தார்.

நாம் இப்போது இருப்பது சுவேதவராக கல்பத்தில் 8 வது  மன்வந்தரமான வைவஸ்வத  மன்வந்தரத்தில்  பிரும்மாவின் பகல் பொழுதும் பிரதமே பார்த்தேயுமான 29 வது மகாயுகத்தில் 2 வது யுகமான  திரேதாயுகத்தில் இருக்கிறோம். இந்த யுகம் கிபி 21.02.2677 புதனன்று முடிவுறும் . பிறகு துவாபரயுகம் துவங்கும் .

தலை சுற்றுகிறதா? 

 

 

சரித்திரம் பேசுகிறது – வேதம் பழையது – (யாரோ)

 

his1

ஹாரப்பாக்கள்  மறைந்து போயின. புது யுகம் பிறந்தது.  கிமு 1700 லிருந்து கிமு 900 வரை வேத கால நாகரிகம் தழைத்தது. இக்காலத்தில் தான் வேதங்கள் தொகுக்குக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. இதை  நிகழ்த்திப் பரவச் செய்தவர்கள் ‘ஆரியர்கள்’  என்ற இனத்தவர் என்றும் கூறப்படுகிறது.

யார் இந்த ஆரியர்?  இவர்கள் நிஜமா அல்லது வரலாற்றுப் பதிவாளர்களின் கட்டுக்கதையா?  சமஸ்கிருத மொழியில்   ஆரியர் என்பது ஓர் அடைமொழியாகத்தான் காணப்படுகிறது.  ஒருவேளை இவர்கள் ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்போ என்றும் ஐயுற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

பொதுவான கருத்து என்னவென்றால் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்து , இங்கிருந்த உள்ளூர் வாசிகளை ( திராவிடர் மற்றும் மற்றவர் ) போரில் வென்று இங்கே குடியேறியவர்கள் என்பது தான்.

குதிரைகள் பூட்டிய ரதங்களுடன் ,அக்னி, இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபட்டு சமஸ்கிருத மொழி பேசி அதைப் பரப்பிய பெருவாரியான மக்கள்  இவர்கள்.

நான்கு வேதங்கள் மட்டுமல்ல , நான்கு வகுப்புகளும் இவர்கள் துவங்கியது தான். கல்வி அறிவு பிராமணருக்கும் ஷத்ரியருக்கும்  மட்டும் அளிக்கப்பட்டது.

his3his3 his4his2

இப்படிச் சில நூற்றாண்டு காலங்களாக இந்த வேத கால நாகரிகம் சிந்து, கங்கை சமவெளிகளுக்குப் பரவியது.

விவசாயம் வளர்ந்தது.

காடுகள் அழிக்கப்பட்டன.  நாடுகள் உருவாகின.

மன்னராட்சி தொடங்கியது.  அரசர்கள் ஆளத்தொடங்கினர். அவர்கள் அஸ்வமேத யாகங்களும் செய்தனர். ஒரு ராஜ குதிரையை நாடுகளில் உலவவிட்டு அது சென்ற இடங்களில் எல்லாம் கப்பம் வசூலித்து ( கொடுக்காவிட்டால் சண்டை தான் )  வருட முடிவில் அந்தக் குதிரையைத் தியாகம் செய்து முடிப்பார்கள்.

பழமையான ரிக் வேதம் தொகுக்கப்பட்டது.  வேதம் என்றால் அறிவு என்று பொருள். அது தொழுகை, பாடல்கள், சமயச் சடங்குகள்  என்று பல அம்சங்கள் கொண்டது.  ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்கள் விரிவாகத்  தொகுக்கப்பட்டன.

சாம வேதத்திலிருந்து இசை பிறந்தது.

வேதங்கள் விளக்கத்திற்காக உபநிஷத்துக்கள் அமைக்கப்பட்டன.

இந்தப் பழைய வேத காலத்திலிருந்து நமது சரித்திரம் பேசுகிறது.

( சரித்திரம் மேலும்  பேசும்)

2015 இல் கலக்கிய பத்துக் குத்துப் பாடல்களும் எட்டு மெட்டுப் பாடல்களும் (அநு)

பத்துக் குத்துக்கள் 

ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்தவில்லை.  பாடல்களைக் கேட்க மியூசிக் இணைய தளத்துக்குப்  போங்கள் !

 1. மன மன மெண்டல்  – ஒகே காதல் கண்மணி
 2. தங்கமே – நானும் ரௌடி தான்
 3. டோனு டோனுடோனு – மாரி
 4. மெரசலாயிட்டேன் – ஐ
 5. அதாரு  இதாரு  – என்னை அறிந்தால்
 6. டங்கா  மாறி ஊதாரி – அனேகன்
 7. டாலி டம்பக்கு – மான் கராத்தே
 8. ஆளுமா டோலுமா  – வேதாளம்
 9. டண்டணக்கா – ரோமியோ ஜூலியட்
 10. தாறு மாறு  – வாலு

 

எட்டு மெட்டுகள் 

 1.  பூக்களே சற்று   – ஐ
 2. என்ன சொல்ல – தங்க மகன்
 3. செல் செல்  – காக்கா முட்டை
 4. நீயும்‌ நானும் – நானும் ரௌடி தான்
 5. காதலும் கடவுள் முன் – உத்தம வில்லன்
 6. மலர்கள் கேட்டேன் – ஒகே காதல் கண்மணி
 7. உனக்கென்ன வேணும் சொல்லு  – என்னை அறிந்தால்
 8. எதை விதைத்தோம் – காக்கா முட்டை

 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று – குண்டலகேசி

 pic4

தமிழ்த்தாயின்  
கால் சிலம்பு – சிலப்பதிகாரம் 
இடை ஒட்டியாணம் – மணிமேகலை
கழுத்து மாலை – சீவக சிந்தாமணி 
கை வளையல் – வளையாபதி
காதுத் தோடு   – குண்டலகேசி 
இதில் குண்டலகேசியைப்பற்றிப் பார்ப்போம் 
குண்டலகேசியை எழுதியவர் நாதகுத்தனார் என்பவர். 
மொத்தம் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் கதையும் கருத்தும் மற்ற பாடல்களிலிருந்து  தெரியவருகிறது. 
கதை என்ன? 
புத்தர் காலத்தில் இருந்தவள் குண்டலகேசி.  இராசக்கிருகத்தில் செட்டிக்குலத்தில் தலமை வணிகனுக்கு மகளாகப் பிறந்தவள். அவள் இயற்பெயர் பத்ரதீசா. 
அவள் ஒருநாள் ஒரு புரோகிதரின் மகன் சத்துவன் என்பவனைக் கொள்ளை அடித்ததற்காகக் கொலைக் களத்துக்கு அழைத்துச் செல்லும் போது அவனைப் பார்த்து அவன் மீது தீராத காதல் கொண்டாள். 
kun1
மகளின்  ஆசையை நிறைவேற்றிவைக்க அவளது தந்தை நிறையப் பொன்னை ஊட்டாகக் கொடுத்து  சத்துவனை மீட்டான்.  பத்ராவும் மனமகிழ்ந்து அவனைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியில் இருந்தாள். 
ஆனால் சத்துவனுக்கோ  அவளைவிட அவள் அணிந்திருந்த நகைகள் மீதே நாட்டமாயிருந்தது. அதனால் அவளை அழைத்துக் கொண்டு மலை  உச்சியில் உள்ள தேவதைக்  கோவிலுக்குச் சென்றான். பத்ராவும் அவன் மீது மிகுந்த நம்பிக்கையுடன் தனியே எல்லா ஆபரணங்களையும் அணிந்துகொண்டு சென்றாள்.
மலை  உச்சிக்குச் சென்றதும் அவன் சொரூபம் காட்டினான்.
” உன் மேலாடையைக் கழற்றி அதில் உன் நகைகளையெல்லாம் சுற்றிக் கொடு” என்று அவளை மிரட்டினான். 
பத்ராவும் அவன் மீதிருந்த தீராக் காதலைச் சொல்லி அவனை ஆசைதீரத் தழுவிய பின்னர் ஆபரணங்களைக் கழற்றித் தருவதாகக் கூறினாள்.  அவனை கட்டித் தழுவிவிட்டு மலைஉச்சியிலிருந்து அவள் ஆசை நாயகனை – கயவனைக் கீழே தள்ளிவிட்டாள். அவன் உடல் சிதறி மாண்டான்.
 kundalakesi
அதன் பிறகு அவள் துறவியாவதே நல்லது என்று கருதி சமண மத நிகண்டத் துறவியிடம் தனக்குத் துறவறம் தருமாறு வேண்டிக்கொண்டாள்.  அவரும் பனங்கருக்கு மட்டையால் அவள் தலை மயிற்றை  வற்றிப் பிடுங்கிப்  பிறகு அவளுக்குச் சன்னியாசம் கொடுத்தார். 
பத்ரா , பல ஆசிரியர்களிடம் வாதம் செய்யும் முறையைக் கற்றாள். பிறகு வாதப் போரில் தலை சிறந்து விளங்கினாள்.
ஒவ்வொரு  ஊரின் வாயிலிலும் மணலைக்  குவித்து  அதில் நாவல் கிளையை நட்டு வாதப் போருக்குத் தான் தயார் என்று அறிவிப்பாள். சிறுவர்களைப் பார்த்துக் கொள்ளச்  சொல்லி அருகில் உள்ள கோவிலில் போய் அமர்வாள்.  அவளுடன் வாதம் செய்யும் திறமையுள்ளவர் அந்த நாவல் கிளையை காலால் மிதித்து உழக்குதல் செய்யவேண்டும். என்று சொல்லிவிட்டுச் செல்வாள் பத்ரா.   யாரும்  வரவில்லையென்றால் ஒரு வாரம் கழித்து  அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வாள் பத்ரா. 
சாவந்தி நகரில் ஒரு சிற்றூர் வாசலில் நாவல் கிளை நட்டுவிட்டுக் காத்திருந்தாள். அவளை நல்வழிப் படுத்த புத்த சன்யாசி தேரர்   என்பவர் முடிவு செய்து அந்த நாவல் கிளையைக் காலால் உழக்கினார். 
வாதம் நடைபெற்றது. 
பத்ரா எழுப்பிய ஆயிரம் வினக்காகளுக்கும் தேரர் பதில் கூறினார்.
பிறகு தன்னுடைய  ஒரே வினாவிற்கு பதிலளிக்குமாறு கேட்டார். 
“ஒன்றே உனது . அது என்ன ? ”
அதுவே அவர் கேட்ட கேள்வி.  
பத்ராவுக்குப் பதில் தெரியவில்லை. 
தேரர் பத்ராவிற்குத் தரும உபதேசம் செய்து பகவான் புத்த பெருமானைச் சரணடை என்று பணித்து அருளினார்.
பத்ராவும் புத்த பெருமான் முன் பணிந்து வணங்கி நின்றாள்.  அவரும் அவளுடைய ஞான பரிபக்குவ நிலையை அறிந்து அவள் கேட்டுக் கொண்டபடி அவளை பிக்ஷுணி ஆக்கினார். அவளும் தான் பெற்ற பேற்றை எண்ணிப் பாடல்கள் பாடினாள்.  
பத்ராவின்  தலைமுடி மழித்து காதில் சுற்றிக் கொண்டிருந்தமையால் அவள் குண்டலகேசி என்று அறியப்பட்டாள். 
சமணத் துறவியாயிருந்து  பின் தெளிந்து புத்தத் துறவியாக மாறியவளின் கதை இது. 
மணிமேகலை போன்று,  இதுவும் ஒரு மத வாதக் கதை. 
இதன் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பர். 
1960 களில் கலைஞர் கருணாநிதி எழுதி  எம்.ஜி‌.ஆர் நடித்த மந்திரிகுமாரி கதை இதிலிருந்து தழுவியது தான்.
 பத்ராவை மலையுச்சிக்கு சத்துவன் அழைத்துப் போகும் காட்சியில்  திருச்சி லோகநாதனின் அருமையான பாடல் ஒன்று பிறக்கிறது. 
“வாராய் நீ வாராய்  போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் ”
என்ற பாடலின்  வரிகள். 
அதன் வீடியோவைப் பாருங்கள்
https://youtu.be/T32rZg8M4xs

பொங்கி எழு முருகா -கோவை சங்கர்

 

கருப்புச் சந்தையில் பணம் புரட்டும் மாந்தரில்

   கனல்கக்கி யுனையெதிர்த்த கயவரைத் தெரியலையா ?

நேர்மையே தர்மமென நேர்வழியில் சென்றுவிட்டு

  அவதியுறும் நன்மக்கள் கூக்குரல் கேட்கலையா ?

 

லஞ்சப்பேய் அவனன்றி ஓரணுவும் அசையாது

   பஞ்சத்தின் கொடுமைகள் சொல்லிசொல்லி மாளாது 

தஞ்சமென்று உன்முன்னே நிற்கின்றோம் இப்போது 

   அறம்வாழ மறம்வீழ  நீ எழுவது எப்போது ?

 

காசேதான்  கடவுளெனும் தாரக மந்திரம் – நாம் 

   சுயநலக் கூட்டத்தின் சொடுக்கிவிட்ட பம்பரம் 

அச்சமோடு ஜடமாக ஆகிவிட்டோம் யந்திரம் 

   நேர்மையின் வழிபோக எப்போது சுதந்திரம் ?

 

புன்னகை போதும் பொங்கியெழு முருகா 

   மேன்மையது போதாது வடிவேல் மருகா 

நடத்திக் காட்டிடு இன்னுமொரு ஸம்ஹாரம் 

   பாடுபடும் எங்களுக்கு அதுவே ஆதாரம் !