சந்திரகாசம் [ வரைகலை நாவல் சு வெங்கடேசன்

 

 

கிராபிக் நாவல் என்பது புத்தக வடிவில் ஒரு அமைப்பு.  படமும் கதையும் இணைந்த கலவை. அது கதையாக இருக்கலாம் . மற்றும் சரித்திரம், கற்பனை இரண்டும்  தனியாகவும்,  இணைந்தும் இருக்கலாம். அது முழு கதையாக இருக்கவேண்டும். அப்போது தான் அது கிராபிக் நாவல். மற்றபடி பத்திரிகைகளில் வரும் படக்கதைகளை  காமிக்ஸ் என்று சொல்லிவிடுவோம். அவற்றின் தொகுப்புகள் முழு நாவல் வடிவில் இருந்தால் அதுவும் கிராபிக் நாவல் என்ற தகுதியைப் பெறும். 

 

ஜப்பானில் மாங்கா என்றால் காமிக் என்று அர்த்தம் . இது மேலிருந்து கீழாகவும், வடமிருந்து இடமாகவும் படிக்கப்பட வேண்டும். ஆனால் தற்சமயம் மாங்கா என்பது காமிக்கின் ஒரு வகை என்றாகிவிட்டது. 

தலைப்புகள் : Death Note, Full Metal Alchemist

சூப்பர் ஹீரோ கிராபிக் நாவல்களும் உண்டு.

தலைப்புகள்:  Batman, Dark Knight Returns, League of Extraordinary Gentlemen, 

சுயசரிதை அல்லது கதையில்லா உரைநடை போன்றவற்றையும் கிராபிக் வடிவில் அமைக்கலாம்.  

தலைப்புகள் :  Fun Home, Blankets, Lucky, The Quitter.

கிராபிக் நாவல் எல்லா வயதினருக்கும் பொருந்தும்.

தமிழில்  முதன்முதலில் நந்தினி என்பவர் ‘ சிவப்புக் கல் மூக்குத்தி ‘ என்ற டிஜிட்டல் கிராபிக் நாவலை எழுதியிருக்கிறார். அது PDF வடிவிலும் FLIPBOOK வடிவிலும் இருக்கிறது.  அதன் டிரைலர் இதோ: 

தற்போது ‘சு. வெங்கடேசன்  எழுதிய சந்திரகாசம்’ என்ற சரித்திர கிராபிக் நாவல்  சமீபத்தி ல் வந்துள்ளது. அதன் டிரைலர் இதோ: 

 

 

சென்னைத் திரைப்பட விழா

 

cine1

 

13 வது  சென்னை உலகத் திரைப்பட விழா சென்னை உட்லெண்ட்ஸ் திரையரங்கில் ஜனவர் 6, 2016இல் மாலை 6.00 மணி அளவில் துவங்கப்பட்டது.

 இதில்cine2

தமிழ்ப்படங்கள் (போட்டிக்காக)  12

இந்தியப்  படவரிசையில் 10,

கே பாலசந்தருக்குக் காணிக்கையாக 8

பஸ்டர் கேடன்  பட வரிசையில் 6

ஜெர்மனி , டென்மார்க்,  வெனுஜுலா , சீனா, ஆகிய 50  உலக நாடுகளிலிருந்து மொத்தம் 183  படங்கள் திரையிடப்படுகின்றன. 

இவற்றுள் ,அகாதமிக்குப்  பரிந்துரைக்கப்பட்ட 16 படங்கள், பெர்லின் திரைப்படவிழா பரிசு பெற்ற 10 படங்கள், கேன்ஸ் பரிசு பெற்ற 6 படங்கள், மற்றும்  உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற 22 படங்கள் அடங்கும்.

சுகாசினி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, தாணு ராய்  உதவி இயக்குனர்,  இந்தியத் திரைப்பட பனோரமா  முன்னிலையில் டி தங்கராஜ் , சென்னை திரைப்பட விழாவின் இயக்குனர் வாழ்த்துரை கூற , நடிகர் சங்கம் நிர்வாகிகளில் ஒருவரான கார்த்தி கலந்துகொள்ள ,  ஹெல்முட் ஷிப்பர் , ஜெர்மானிய இயக்குனர் பகிர்ந்து கொள்ள விழா இனிது துவங்கப்பட்டது. 

 ஹெல்முட் ஷிப்பர்  இயக்கிப் பெர்லின் விழாவில் பரிசுபெற்ற விக்டோரியா திரைப்படம் துவக்கவிழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு வந்திருந்த 800 பிரதிநிதிகளுக்காகப் போட்டுக் காட்டப்பட்டது. 
 

இவற்றிலிருந்து  எத்தனை  படங்களை உள்வாங்கி வடை சுடப்போகிறோம் என்பது தெரியவில்லை. 

இது எப்படி இருக்கு ! – –கீதா சங்கர்

auto

 

அம்மனைக் கண் குளிரத் தரிசித்து விட்டுக் கோயிலிலிருந்து வெளியே வந்த பிரபுவும், மாதவனும் தங்கள் சக ஆட்டோ டிரைவர் மணியைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் நின்றனர்.

கோயிலின் வெளியே உள்ள கடையில், சில கடவுள் உருவங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்ஸை வாங்கிக் காசு கொடுத்துக் கொண்டிருந்தான் மணி.

“ அப்படிப் போடுடா அரிவாளை…. மகனே! நாங்க எவ்வளவு கூப்பிட்டோம்.  கோயிலுக்குள்ளே போய் இந்த சக்தி வாய்ந்த அம்மனைத் தரிசித்து விட்டு வரலாம்னு..  ‘ எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு’ ஒரேயடியா மறுத்து விட்டு இப்போ கடவுள் ஸ்டிக்கர்ஸ் வாங்கிட்டு இருக்கியா?” என்று எகத்தாளமாகக் கேட்டான் பிரபு.

“ மனசு சுத்தமா இருக்கணும்., நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும். சுயநலத்தை விட்டுப் பொது நலனை யோசித்து, நம்ம செய்கைகள் மத்தவங்களப் புண்படுத்தாம இருந்தா போதும். அப்போ நீ சொல்ற கடவுள் உன் மனதிலேயே இருப்பார். இப்படிக் கோயில் கோயிலாப் போய் தரிசனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  நமக்குக் கஷ்டம் வரும்போது கூட நெகடிவா இல்லாம, பாஸிட்டிவ்வாவே திங்க் பண்ணினா, ‘ நல்லதுதான் நடக்கும்னு’ நினைச்சா நல்லது தான் நடக்கும். ‘ நம்ம பூர்வ ஜன்ம பாவம், அதுதான் இப்படியெல்லாம் வாட்டுகிறது. கடவுளே ! பாவங்களை மன்னித்து என்னைக் காப்பாற்றுன்னு’ நினைக்கிற கடவுள்ங்கிற மீடியம் தேவையாயிருக்காது’ன்னு வாய் கிழிய வாக்குவாதம் செய்வியே… இப்போ உன் கையில் கடவுளின் ஸ்டிக்கர்ஸ்… என்ன நாத்திகத்திலேயிருந்து மாறி ஆத்திகனாயிட்டியா?” என்றான் மாதவன் சிறிது நக்கலாக.

மெதுவாகச் சிரித்தான் மணி.

“ நான் மாறவில்லை பிரதர்….. நான் நாத்திகனும் இல்லை.. கோவிலுக்குப் போய் கும்பிடும் ஆத்திகர்களுக்கு எதிரியும் இல்லை.  நான் சொன்னபடியே இந்த ஸ்டிக்கர்ஸ் ஒரு பொது நல சேவைக்குத்தான்” என்றான் மணி.

“ என்ன விளையாடறியா?” என்றனர் பிரபுவும், மாதவனும் கோரஸாக.

“ இல்லைப்பா.. இப்போ இந்த ஸ்டிக்கர்ஸை நம்ம ஆட்டோவிலே, டிரைவர் ஸீட்டிற்குப் பின்னாலும், ஆட்டோவின் பின் புறத்திலும் ஓட்டப் போகிறேன்.  டிரைவர் ஸீட்டிற்குப் பின்புறம் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்ஸைப் பின்பக்க இருக்கையில் உட்கார்ந்திருக்கும் பாஸஞ்சர்ஸ் பார்க்க முடியும்.  ஏதோ முக்கியமான காரியத்திற்காகவோ, வேலைக்காகவோ, அல்லது ஆஸ்பத்திரியில் இருக்கும் உறவினரைப் பார்ப்பதற்காகவோ, பதட்டத்தோடும், அவசரத்தோடும் கடவுளை வேண்டிக்கொண்டே நம்ம ஆட்டோவில் ஏறும் பாஸஞ்சர்ஸ் கண்களில் இந்தக் கடவுள் ஸ்டிக்கர்ஸ் பட்டதும் ஒரு நிமிடம் நிம்மதி தோன்றிப் பதட்டமும் குறையும்.  அதே போல நமக்குப் பின்னால் வருகிற ஆட்டோவிலோ, டூ வீலரிலோ வருகிறவங்களுக்கு ஆட்டோவின் பின்புறம் ஒட்டப்பட்ட கடவுள் ஸ்டிக்கர்ஸ் கண்ணில் பட்டு, நிம்மதியைக் கொடுக்கும். பதட்டத்தையும் குறைக்கும்.  ஏதோ நம்மாலே ஆன உதவி..” என்றான் மணி.

அவனை அதியசத்தோடு பார்த்தனர் பிரபுவும், மாதவனும்.

விடவில்லை மாதவன்.

“ ஆமா.. இப்போ உன்னை மாதிரி கடவுள் பத்தி நினைக்காதவர் வந்து ஆட்டோவில் ஏறினால்..: என்றான்.

“ அதற்கும் வச்சிருக்கேனே.. காந்தி சொல்லிச் சென்ற  ‘தீயதைப் பார்க்காதே.. தீயதைக் கேட்காதே.. தீயதைச் சொல்லாதே’ என்று கூறும்.  அதாவது ‘ நல்லதையே நினை.. நல்லதையே சொல்.. நல்லதையே செய்’ என்று கூறும் குரங்குகள் ஸ்டிக்கர்ஸை.’ என்று அதை எடுத்துக் காட்டினான் மணி.

திகைத்து நின்றார்கள் பிரபுவும், மாதவனும் ஒரு நிமிடம்.  மறு நிமிடம் அவர்களும் அந்த ஸ்டிக்கர்ஸ் வாங்க ஓடினர்.

 

 

 

 

 

 

 

 

சென்னைப் புத்தக விழா -2016

 

மழையினால் வழக்கமாகச் சென்னையில் பொங்கல் சமயத்தில் நடைபெறும் மாபெரும் புத்தகக் கண்காட்சி ( புத்தக விற்பனையாளர்கள் சங்கமான ‘பபாசி’  The Book Sellers and Publishers Association of South India (BAPASI) நடத்துவது ) இந்தமுறை நடைபெறவில்லை.

(   அது தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது ) 

ஆனாலும் ராயப்பேட்டை  YMCA மைதானத்தில் பொங்கல் புத்தக விழா என்ற புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

ஜனவரி 13 முதல் 24 வரை இந்த விழா நடைபெறும். 

ஒரு கோடி புத்தகங்கள் இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

இருபது கோடி ரூபாய் விற்பனையாகும் என்று எதிபார்க்கப்படுகிறது. 

ரூபாய் ஐந்து  நுழைவுக் கட்டணம். அந்த வருமானம் வெள்ள  நிவாரண நிதியாக வழங்கப்படும். 

தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வாருங்கள் !  இந்தப் பொங்கல் திருநாளில் புத்தகம் படிப்போம். 

சித்தர் வரிசை – கொங்கணச் சித்தர்

Imagesகொங்கணவர்.jpg

கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.

கொங்கணரின் குரு போகர் ஆவார்.

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர்.அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

இவர் மருத்துவ நூல்களும், இரசவாத நூல்களும், யோக நூல்களும்,கொங்கணர் கடைகாண்டம்,திரி காண்டம், ஞானம் நூறு, குவிகை, கொங்கண தேவர் ஐந்நூற்றிரண்டு,கொங்கண தேவர் கலை, கொங்கண நாதர் சூத்திரம், கலைஞர் சூத்திரம், துருசுகுடு முப்பத்தொன்று, தலைக்காண்டம், நடுகாண்டம், முப்பூதிட்சை, கொங்கணர் வாக்கியம்,கொங்கணர் தியானம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது,மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது .

பிறகு,     நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வாசுகி அம்மையார் வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அந்த  அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை,சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா  என்று அமைதியாகப் பதில் அளித்தார். என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்என்றார் அவர்.

கொங்கணவர்,அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார்.    போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர்

அவரது பாடல்களில்  சில :

ஊத்தைச் சடலமென் றெண்ணா - தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றேண்ணாட்தே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற ணுடலுக்குள்ளே.
 
தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
 வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
 சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
 தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
 கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
 நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
 நேருட னாமடி வாலைப் பெண்ணே!

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
 காப்பது சேலைக்கு மேலுமில்லை;
 பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
 கும்மிக்கு மேலான பாடலில்லை.

 

பாசிடிவ் போர்ட் கபே

சென்னை அமெரிக்காவுக்குக் கொஞ்சம் கூட இளைத்ததில்லை என்பதை நிரூபிக்க,  இதோ ஒரு புதுமையான போர்ட் கஃபே  என்ற உடற்பயிற்சியும் உணவுவிடுதியும் சேர்ந்த அமைப்பு,  கோடம்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டுள்ளது.

 

port5

port4 
அப்படியே ஒரு துறைமுகக் கிடங்கில் இருப்பதைப் போன்ற ஸ்பெஷல் எபெக்ட்ஸ் . 

IMG_0512

கப்பலில்  உபயோகிக்கப்படும் கன்டைனர் சிலவற்றை வாங்கி அவற்றையே இன்டீரியராக – சுவர்களாக ,மாற்றியிருப்பது இதன் இன்னொரு தனித்துவம்.

IMG_0517

IMG_0521

முயற்சி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !! 

மரணத்திற்கு அப்பால்

 

இ ந்த உடம்பில் இருவர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒன்று ஜீவன் உயிர் என்று அழைக்கப்படுவது.

மற்றது ஆன்மா என்று அறியப் படுவது.

நிழலும் வெயிலும் போல  ஒருவருக்கொருவர் மாறுபட்டவர். ஒருவர் செயல்களின் பலன்களை அனுபவிக்கிறார். மற்றவர் எதிலும் பங்கெடுக்காமல் சாட்சியாக விளங்குகிறார்.

ஒரே மரத்தில் வாழும் இரு பறவை போல. ஒன்று இனிப்பும் புளிப்பும் கசப்பும் நிறைந்த பல்வேறு பழங்களை உண்ணுகிறது. மற்றது எதையுமே உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நமது

உடம்பு தேர்

புத்தி தேரோட்டி

புலன்கள் குதிரைகள்

மனம் கடிவாளம்

உலகப் பொருட்கள்  பாதை

ஆன்மா பயணம் செய்பவன்

 

நமது தேர் உலகப்பாதையில் தான் போகவேண்டும். வேறு வழியில்லை. பயணத்தின் வெற்றி குதிரைகளின்  வேகத்தைப் பொறுத்திருக்கிறது. மனம் கட்டவிழ்ந்து போகாமல் இருந்தால் தான் குதிரைகள் நேர் வழியில் செல்ல முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேரோட்டி திறமைசாலியாக இருக்கவேண்டும். அது புத்தியை எழுப்புவதில் தான் இருக்கிறது.

சாதாரணமாக புத்தி மூன்று நிலையில் செயல்படுகிறது

இயல்புணர்ச்சி ( INSTINCT). மனிதனின் இயல்பான குணங்கள். அவனுடைய ஆழ் மனத்திலிருந்து வருவது. பொதுவாகத் தவறுவதில்லை. ஆனால் அவனுடைய ஆதிக்கத்தில் இல்லை.

அறிவு ( INTELLECT ). புற  உலகிலிருந்து பெரும் அறிவு.  இது தவறாகவும் இருக்கக்கூடும்.  இதை முழுதும் நம்ப முடியாது.

உள்ளுணர்வு  (INTUITION ). கற்றறிவு ,  கேட்டறிவு போன்று எந்த வித உபகரணங்களின் துணையும் இன்றி  உணர்வின் ஆழங்களிலிருந்து எழுகின்ற அறிவு இது. கலை ,  விஞ்ஞானம் , கல்வி என்று எந்தத்  துறையை எடுத்தாலும் அவற்றின் உன்னத சிகரங்களுக்கு வாசலாகத் திகழ்வது,  இந்த உள்ளுணர்வே. இது விழிப்பதே புத்தி  விழிப்பதாகும். இடையே கீதை,  புத்தியோகம் என்று சொல்கிறது. இதயத் தூய்மையாலும், பிரார்த்தனையாலும், ஜபங்களாலும் புத்தி விழிப்படைகிறது.

புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை

பொருட்களைவிட மனம் வலிமை மிகுந்தது.

மனத்தைவிட புத்தி வலிமை வாய்ந்தது.

புத்தியைவிட ஆன்மா வலிமை மிகுந்தது.

ஆன்மாவைவிட இறைவனின் ஆற்றல் வலிமையானது.

இறையாற்றலைவிட  ஏன் எல்லாவற்றையும்விட இறைவன் உயர்ந்தவன்.

 

புத்தி விழிப்புற

அகத்தை , பேச்சை , புலன்களை மனத்தில் ஒடுக்கவேண்டும்.

மனத்தை புத்தியில் ஒடுக்க வேண்டும்.

புத்தியை ஆன்மாவில் ஒடுக்கவேண்டும்.

ஆன்மாவை இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.

இதற்கு ஒரு குரு வேண்டும். அவர் தான் நம்மை எழுப்பிப்பார், விழிக்கச்செய்வார், அவர் நம்மை

உண்மையற்ற நிலையிலிருந்து உண்மை  நிலைக்கும்

அறியாமை இருளிலிருந்து அறிவுப் பேரொளிக்கும்

மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கும்

அழைத்துச்செல்வார்.

Mathomathis

அது தான் அப்யாரோஹ மந்திரம்.

 

ஓம்

அஸதோமா  ஸத் கமய

தமாஸோமா ஜ்யோதிர்‌ கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

குருவின் மூலம் நமக்கு இறையாற்றல் கிட்டும்.

இறைவனின் ஆற்றலை உணருபவன் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறான்.

 

இது தான் கட  உபநிஷத்தின் தத்துவம் .

சுஜாதா ரசித்த கவிதைகள்

 

ராபர்ட் பிராஸ்டின் கவிதை வரிகளை சுஜாதா தமிழ்ப்படுத்தியிருக்கிறார். 

ஆம் . நேருவிற்குப் பிடித்த   Miles to go before I sleep  என்ற வரிகளை எழுதியவர்  தான்  ராபர்ட் பிராஸ்ட் .

The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep. - Robert Frost

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன் 
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன் 
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன் 

 

தக்ஷிணாமூர்தியின் கவிதைகளில்   இரண்டு :

 

கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்.

 

தனக்குரிமை இல்லாதாள்  தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்ற லரிது 

 சுஜாதாவே எழுதிய நேரிசை வெண்பா !

 

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார் 

மெல்ல நடக்கின்றார் ஏனென்றால் –  உள்ளே 

திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்  போது

குறுக்கிட்டால் கோபம் வரும்.  

 

மீசா மறைந்து எமர்ஜென்சி விட்டுப் போய் 

தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல் 

பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லோரும் 

……………. குடிக்க வாரும். .

 

இன்னும் வரலாம்

கருணை மனு

 

ஒரு எழுத்தாளனை அடக்கம்

செய்கிறார்கள் ? 

 

 

pic3

அன்புள்ள திரு…………………………………………………….. அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர்…………………………………. தமிழ் எழுத்தாளன். இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிச்சயமான பெயர். தமிழில் நல்ல சிறுகதைகளும், நாவல்களும் எழுதி என் தனித்துவத்தை நிரூபணம் செய்திருக்கிறேன். இந்தக் கடிதம் என் வாழ்க்கையைப் பற்றியது. என்னை அறிந்தவர்கள் ஆயிரம் பேர் இந்தக் கதைக்கு சாட்சியாய் இருக்கிறார்கள். உண்மையில் நடந்த கதை. தன் திறமை மூலம் உலக அளவில் சாதிக்கப் புறப்பட்ட ஒரு கோமாளியின் சோகக்கதை.

நடுத்தர வர்க்கம். பாங்க் ஆப் பரோடாவில் கேஷியர் வேலை. அளவான சிறிய குடும்பம். ஆதரவாய் ஒரு மனைவி. வங்கிக் கடனில் சொந்த வீடு. இறைவன் நான் கேளாமலேயே எல்லா நலன்களையும் வாரி வழங்கினான்.

எனது முதல் சிறுகதை 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘கணையாழி” இலக்கிய இதழில் பிரசுரமானது. சீக்கிரமே கல்கி, விகடன் உள்ளிட்ட எல்லா தமிழ் இதழ்களுமே என் சிறுகதைகளைப் பிரசுரிக்கத் தொடங்கின. எழுத்தில் ஆபாசத்தை தவிர்த்தேன். பணம் அல்ல, திறமை மூலம் நல்ல பெயர் சம்பாதிப்பதே என் நோக்கமாய் இருந்தது.

திரு.கஸ்து}ரி ரங்கன், திரு.ஜெயகாந்தன், திரு.அசோகமித்திரன், திரு.ஆதவன், திரு.சுப்ரமண்ய ராஜீ போன்ற தேர்ந்த இலக்கிய ரசிகர்களால் நான் கவனமாய் வார்க்கப்பட்டேன். நுழைந்த வேகத்திலேயே ஒரு தேர்ந்த எழுத்தாளனாய் பரவலாய் அங்கீகாரம் பெற்றேன்.

என் தேடலின் தொடர்ச்சியாக ‘பதேர் பாஞ்சாலி” உள்ளிட்ட வங்காள இயக்குனர் சத்யஜித்ரேயின் சில திரைப்படங்கள் காணக்கிடைத்தது. சாருலதா, ஜல்சாகர் போன்ற படங்கள் என்னுள் சினிமா ரசனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. தமிழில் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன். தொடர்வதாக மிருணாள் சென், ஷியாம் பெனேகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன். நிர்மால்யம், எலிப் பத்தாயம், முகா முகம் சோமன துடி, சம்ஸ்காரா போன்ற கலைப்படைப்புகளைப் பார்த்தபோது ஒரு இளம் படைப்பாளியாக களத்தில் குதித்து ஆட்டத்தில் நானும் பங்கேற்க விரும்பினேன்.

ஹிந்தியில் அமோல் பலேகர் போல் தமிழில் ஒரு பேரலல் சினிமாவுக்கு முயற்சி செய்ய தீர்மானித்தேன்.

கல்கத்தா அல்ல, சென்னையே இந்தியாவின் கலாச்சார தலைநகரமாய் திகழ வேண்டும். வங்காளிகளை விட தமிழனின் அலைவரிசை சிறந்து உயர வேண்டும். இதற்கு நான் உழைக்க வேண்டும். அடிப்படையில் சத்யஜித்ரே ஒரு சிறுகதை ஆசிரியர்தான். முயற்சி செய்தால் என் படைப்புகள் மூலம் குறைந்தபட்சம் நான் தமிழ்நாட்டின் கிரீஷ் கர்னாட் ஆக ஆகிவிடமுடியும் என்று என் உள்குரல் சொல்லிக் கொண்டேயிருந்தது.

இதே நேரத்தில் தொலைக்காட்சியில் தேசீய ஒளிபரப்பில் தொடர்களாய் வந்த ஏக் கஹானி, சந்தீப் ரே பிரஸெண்ட்ஸ், நுக்கட், மால்குடி டேஸ், தமஸ் போன்ற படைப்புகள் எனக்குள் உயர்ந்த இரசனையை தோற்றுவித்தன. தமிழில் இதுபோல் விதவிதமான தரமான படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஆவல் என் ஆழ்மனதில் வலுப்பெற்றது.

என் முதல் முயற்சியாய் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சில னுகுவு நண்பர்கள் துணை சேர்ந்து சென்னை தொலைக்காட்சியில் நான் சமர்ப்பித்த கணையாழியில் பரிசு பெற்ற எனது கடைசங்கம் குறுநாவல் தேர்வு செய்யாமல் நிராகரிக்கப்பட்டது (1986).

இதற்கிடையே தினமணிக்கதிரில் ‘வேடந்தாங்கல்” என்ற நாவலைத் தொடராக எழுதி அநேக இளம் வாசகர்களை என்பால் ஈர்த்தேன். (1983).

எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘அப்பாவும், இரண்டு ரிக்ஷாக்காரர்களும்” 1986-ம் ஆண்டு திரு.கி. கஸ்து}ரி ரங்கன் முன்னிலையில் திரு.த. ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

வங்கி வேலையுடன் கூடுதலாய் நான் விரும்பிய படைப்புத் துறையில் ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்ததில் என் நடையில் கம்பீரம் கூடியது.

குமுதம் அரசு பதிலில் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு வாசகர் கேள்விக்கு அமரர் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள் தன் பதிலில் என் பெயரை மட்டுமே குறிப்பிட்டு எனது சிறுகதைகளை வாசகர்களுக்கு சிபாரிசு செய்தார். 

தொடர்வதாக ‘நாயகன்” என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி வெளியானது (1987).

என் சம கால எழுத்தாளர்கள் நடுவே எழுத்தில் சிறந்த Craftsman என்று நிரூபணம் செய்திருக்கிறேன். எனது இந்த திறமையை நம்பி தமிழ் திரையுலகில் ஒரு மறுமலர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். எனது கதைகளை நானே இயக்கினால் மட்டுமே எனக்கு முழு திருப்தி கிடைக்கும் என உணர்ந்து ஒரு நல்ல இயக்குனரிடம் பயிற்சி பெற விரும்பினேன். அவ்விதமே இயக்குனர் சிகரம் திரு.கே.. பாலசந்தரை சந்தித்தேன் (1987).

திரு.K.B.. என்னிடம் உடனடியாக ஒரு 13 வாரத் தொடருக்கான கதை சொல்லும்படி கேட்டார். ஒரு படைப்பாளியாக அவரை நான் வெகுவாக வசீகரித்தேன். ‘உன் observation-ம், Humour-ம், visual media-வுக்கு வந்தா நீ எங்கியோ போயிடுவே” என்று என்னைப் பற்றிய என் சுய கணிப்பை ஊர்ஜிதம் செய்தார். நான் சொன்ன ‘இரண்டாம் அத்தியாயம்” என்ற கதை அவருக்குப் பிடித்துவிட்டது. எனினும் பரஸ்பரம் வேறு காரணங்களால் அதற்கு மேல் எதுவும் அப்போது நடக்கவில்லை.

ஒரு அரசு நிறுவனத்தில் என் கதையை திரு.பாலசந்தர் சமர்ப்பித்தால் அது அங்கீகாரம் பெறும். அதே கதையை நான் என் பெயரில் சமர்ப்பித்தால் அது நிராகரிக்கப்படும். அன்றும், இன்றும் சென்னை தொலைக்காட்சியின் நிலை இதுதான். ‘‘Script approval” என்ற பெயரில் நடப்பதென்னவோ ‘producer approval” தான். இதைத்தான் ஒரு வாழ்நாள் காலமாக எதிர்த்து வந்திருக்கிறேன்.

‘நான் இல்லேன்னா வந்துடுவியா? கவிதாலயா பேனர் இல்லேன்னா வந்துடுவியா?” என்று திரு.மு.டீ. என்னிடம் ஆவேசமாய் மார் தட்டியபோது என் வாழ்நாளில் ஒரு இயக்குனராக அவர் முன்னால் வந்து காட்ட வேண்டும் எனத் தீர்மானித்தேன் (1988).

சென்னை தொலைக்காட்சி நிலையம் மீண்டும் 13 வாரத் தொடருக்கான கதைகளை வரவேற்றது. நான் திரு.பாலசந்தருக்காக யோசித்திருந்த ‘இரண்டாம் அத்தியாயம்” கதையை சமர்ப்பித்தேன். திரு.K.B.-யின் ‘இரயில் சினேஹம்” என்ற தொடர் அங்கீகாரம் பெற்றது. எனது ‘இரண்டாம் அத்தியாயம்” தொடர் நிராகரிக்கப்பட்டு இந்த நிமிடம் வரை என் தலையில் ஒரு பாரமாகவே இருக்கிறது.

திரு.முக்தா சீனிவாசன் அவர்களை சந்தித்து அவருடைய படக்கம்பெனியில் இயக்குனர் துறையில் ஒரு பயிற்சியாளனாய் பணியாற்ற அவருடைய சம்மதம் பெற்றேன்.

அவ்விதமே திரு.பாண்டியராஜன் நடித்த இரண்டு படங்களுக்கு பலவித கஷ்டங்களுக்கு நடுவே என் வங்கி வேலைக்கு விடுமுறை அறிவித்தும், சம்பளமே இல்லாத விடுப்பிலும் ஒரு சம்சாரியாக எனக்கு கடமைகள் இருந்தும் நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் என்னை தயார் செய்து கொண்டேன் (1988 – 1990).

நடுவே எங்கள் வங்கியின் சார்பாக ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு மாநிலத்தில் நடத்தப்படும் அகில இந்திய நாடகப்போட்டிகளில் யு.பு.’ள ஆபீஸில் திரு.மு.டீ. போலவே தொடர்ந்து நான் பெற்ற வெற்றிகளும், பரிசுகளும் ஒரு படைப்பாளியாய் என் உத்வேகத்தை அதிகரித்தன.

இவ்வாறு பல முறை என் திறமையை எனக்கு நானே நிரூபணம் செய்து கொண்டேன்.

1990-ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தியைத் தோற்கடித்து திரு.வி.பி. சிங் பிரதமரானார். தகவல், ஒலிபரப்பு அமைச்சர் திரு.P. உபேந்திரா. வி.பி.சிங் அரசு பதவியேற்றதும் முந்தைய ஆட்சியில் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்க அங்கீகாரம் வழங்குவதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், அவ்வாறு ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரங்களை புதிய அரசு மறு பரிசீலனை செய்யும் என்றும் அறிவிப்பு செய்தது.

இதை நம்பி என் தகுதிகளை வரிசைப்படுத்தி எனக்கு நியாயமாய் ஒரு வாய்ப்பு கேட்டு திரு.P. உபேந்திராவுக்கு 26.01.1990-ல் நான் எழுதிய கடிதமும், அதற்கு அவரிடமிருந்து வந்த வாழைப்பழ பதிலும் என் விரக்தியை மேலும் அதிகரிக்கச் செய்வதாய் இருந்தன.

ஆனால் அதே வருடம் என் கதைகளைப் படித்த திரு.கிரேஸி மோகன் மூலம் திரு.கமல்ஹாசன் என்னைப் பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் திரையுலகில் சேர்ந்து பணியாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். எனது ‘வேடந்தாங்கல்” நாவல் திரு.கமல்ஹாசன் முன்னுரையுடன் வெளியானது (1991). என் ‘நவீன சிறுகதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை அவரே தலைமை தாங்கி வெளியிட்டார் (1992). ஒரு வார இதழின் கேள்வி பதிலில் படித்ததில் பிடித்தது ஆங்கிலத்தில் Jurasic Park. தமிழில் திரு.ம.வே. சிவகுமாரின் வேடந்தாங்கல் நாவல் என திரு.கமல்ஹாசன் பதில் எழுதியிருந்தார். அவர் விடுத்த அழைப்பை ஏற்று 1992-ல் வெளியான ‘தேவர் மகன்” திரைப்படத்தில் ஒரு உதவி இயக்குனராய் பங்கேற்றேன். மீண்டும் வங்கியில் சம்பளமில்லா விடுமுறை. மனதில் இலட்சிய வெறி உந்த கஷ்டங்களை கடன் வாங்கித் தாண்டினேன். எனினும் சோலையை நோக்கிய என் பாலைவனப்பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

‘தேவர் மகன்” வெளிவந்த அதே தீபாவளி நாளில் கல்கி சிறப்பிதழில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” என்ற நாவல் தொடராக வெளிவரத் தொடங்கியது. வாசகர்களின் பரவலான பாராட்டையும் பெற்றது (1992).

அதில் வரும் லஷ்மி நாராயணன் கதாபாத்திரம் நான்தான். எனக்குள் ஒரு இயக்குனரும், ஒரு நடிகனும், ஒரு எழுத்தாளனும் புகுந்துகொண்டு ஒட்டு மொத்தமாய் வெளிப்பட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நினைத்த விதம் நான் வெளிப்பட்டால் நிச்சய வெற்றி. எதிலும், எப்போதும் நான் தோற்கிறவன் கிடையாது. இது நான் வாழ்ந்த சரித்திரம்.

எங்கேயோ நெய்வேலியில் பிறந்த நான் என் எண்ண வேகத்தாலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற இலட்சிய புருஷர்களிடையே சொற்ப காலம் ஒரு கோட்டில் இணைந்திருந்தேன். மறக்க முடியாத பல்வேறு அனுபவங்களை பொக்கிஷமாய் சேர்த்தேன். சிவாஜியிடம் பராசக்தி வசனம் பேசிக் காட்டினேன். ‘வாடா ஜீனியர்” என்று அனைவரின் முன் ஒரு முறை சிவாஜி அழைத்தார். அதையே ஆசியாகக் கொண்டு பெற்ற பயிற்சியையும், திறமையையும் நம்பி பண விஷயத்தில் நிராயுதபாணியாய் நண்பர்களின் வாக்குறுதிகளை நம்பி கலைஞர்களுக்கே உரிய முட்டாள் தைரியத்தில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவலை ‘உங்கள் ஜுனியர்” என்ற பெயரில் திரைப்படமாய் எடுக்கப் போவதாய் அறிவித்தேன்.

The beginning of my end. 

துவக்க விழா தந்தி பேப்பர் விளம்பரம் பாடல் பதிவுடன் யுஏஆ ‘ஊ’ தியேட்டரில் நடந்தது. ரூ.10 இலட்சம் தருவதாகச் சொன்ன தொழிலதிபர் வாக்கு தவறினார். அரைகுறையாய் பாடல்கள் பதிவு செய்த காஸெட் ஒன்றும், சுமார் மூன்று லட்சம் கடனும்தான் மிஞ்சியது (1993).

எழுத்துலக தேடல்கள்;, அடிமாட்டு விலையில் பிரசுரம், சொந்தமாய் புத்தக பதிப்பு. தேர்ந்த தலைமையில் நானே நடத்திய வெளியீட்டு விழாக்கள், இலட்சியம் என்ற பெயரில் ஒரு இயக்குனராக வேண்டி அலுவலகத்தில் சம்பளமில்லாமல் நான் எடுத்த விடுப்புகள், பெரும் செலவை விழுங்கிய மேடை நாடகங்கள், தவிரவும் கூடுதலாய் ஒரு சராசரி குடும்பத் தலைவனின் சுமைகள். ஒரு மத்திய தர வர்க்கத்து இளைஞனால் எத்தனை பாரம் சுமக்க முடியும்?

கடன், வட்டி, மேலும் கடன், மேலும் வட்டி என்ற விஷ வட்டத்தில் ஒரு அசடனாக நானே வலியப்போய் சிக்கிக் கொண்டேன். பலு}ன் பெரிதாகிக் கொண்டிருந்தது. பாதியில் நிறுத்த முடியாமல் நான் ஊதிக்கொண்டே இருந்தேன். என்னை வைத்து கந்து வட்டிக்காரர்கள் சம்பாதித்தார்கள். ஒரு வங்கி ஊழியனாய் என் கௌரவத்தைக் காப்பாற்ற பணத்தைக் கொடுத்து பணத்தை வாங்கினேன். இறைவன் எனக்கான புதைகுழியை என் கையாலேயே தயார் செய்து கொண்டிருந்தான்.

நான் அணுகிய படாதிபதிகள் ராமராஜனுக்கு கதை கேட்டார்கள். பைனான்ஷியர்கள் நான் சொன்ன கதையைக் கேட்டு எதுவும் பிடிபடாமல் ஏற இறங்கப் பார்த்தார்கள். வெறும் வர்த்தக சூழலில் தக்க பிடி கிடைக்காமல் நான் போராடிக் கொண்டிருந்தேன்.

1994-ஆம் வருடம் சென்னை தொலைக்காட்சி நிலையம் மீண்டும் 13 வாரத் தொடர்களுக்கான கதைகளை வரவேற்றது. இந்த முறை நான் பரிசீலனைக்காக எனது இரண்டு நாவல்களை சமர்ப்பித்தேன்.

அ) கமல்ஹாசன் முன்னுரையுடன் கூடிய எனது வேடந்தாங்கல் நாவல்.

அ) ஒரு திரைப்படமாய் நான் திட்டமிட்டு துவங்கி முடிக்க முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்த எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவல்.

இரண்டில் ஒன்று அங்கீகாரம் பெற்றாலும் கிளைமாக்ஸில் நான் ஜெயித்து விடுவேன் என்கிற நிலை. எங்கே என் படைப்புகள் இந்த முறையும் வழக்கம் போல் உரிய கவனம் பெறாமல் போய் விடுமோ என்ற பயத்தில் தக்க போலீஸ் முன் அனுமதி பெற்று என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்து திறமைகளை கழித்துக் கட்ட து}ர்தர்ஷன் கடைசி நேரத்தில் Just before approval stage-ல் இரண்டு எபிசோடுகள் ஷீட் செய்து இணைக்கப்பட வேண்டும் என்று விதித்த புதிய நிபந்தனைக்கு எதிராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தேன். ( )

விகடன் இதழில் ‘அனு, அக்கா, ஆண்ட்டி” பகுதியில் சிறிய புகைப்படத்துடன் என் உண்ணாவிரத செய்தியை வெளியிட்டார்கள்.

மொத்த மீடியாவிலும் ஒரு எழுத்தாளனின் நியாயமான போராட்டத்துக்கு கிடைத்த அற்ப இட ஒதுக்கீடு இவ்வளவுதான்.

உண்ணாவிரதம் இனிதே முடிந்தது. இந்த முறையும் நான் சமர்ப்பித்த தொடர்களை சர்வ அலட்சியமாய் சென்னை தொலைக்காட்சி நிலையம் நிராகரித்தது.

1995-ஆம் வருடம் திரு.பூர்ணம் விஸ்வநாதன் முன்னிலையில், குருகுலம் நண்பர்கள் ஆதரவில் எனது ‘பாப்கார்ன் கனவுகள்” நாவல் வெற்றிகரமாய் மேடையேறியது. என் 40-வது வயதில் ஒரு நடிகனாக ‘லஷ்மி நாராயணன்” கதாபாத்திரத்தில் முதன் முறையாய் மேடையேறி என் திறமையை உலகுக்கு மீண்டும் ஒரு முறை கோடி காட்டினேன்.

உலகத்தின் உதாசீனம் தொடர்ந்தது.

எனினும் என் விடா முயற்சிகளின் விளைவாக சென்னை தொலைக்காட்சி நிலையம் நான் எழுதி திரு.பூர்ணம் விஸ்வநாதன் நடித்த ஒரு அரைமணி நேர நாடகத்தை சொந்தமாய் தயாரித்து என் வாயை அடைத்தது. ஒளிபரப்பப்பட்ட நாள் முதலாய் இதுவரை நு}று முறைகளாவது மறு ஒளிபரப்பு செய்து நிலையம் என்னை வெறுப்பேற்றுகிறது.

1997-ஆம் வருடம் மூன்றே நாட்களில் ஒத்திகையேயில்லாமல், நான் ஜெய்ப்பூரில் அரங்கேற்றிய ‘விமோசனம்” நாடகம் அகில இந்திய அளவில் நடந்த வங்கி நாடகப்போட்டியில் எனக்கு சிறந்த கதை, சிறந்த நாடகம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என வெற்றிக் கோப்பைகளை அள்ளிக் கொடுத்தது.

கடவுள் என்னிடமிருந்த தங்கத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு பதிலுக்கு பித்தளை கோப்பைகளை எனக்கு பரிசாக அளித்தான்.

1999-ஆம் வருடம் ஹன்ஸாவிஷன் தயாரிப்பில் சன் டிவியில் என் கதை ‘ஆலயம்” யாரோ திரைக்கதை எழுதி, வேறு யாரோ வசனம் எழுதியும் வெற்றி பெற்றது.

அடுத்த வருடம் அரங்கேறிய எனது ‘ரங்கோலி” நாடகத்திற்காக மைலாப்பூர் அகாடமி வழங்கிய சிறந்த நடிகருக்கான பரிசும், கேடயமும் எனக்கு வழங்கப்பட்டது (2000).

இந்த ஆண்டுகளில் என் கடன் என்னும் விஷச்சுழல் வேகம் எடுத்து வங்கியில் செக்குகளுக்குப் பணம் புரட்டி கட்டுவது தவிர வேறு எதையும் நான் யோசிக்க முடியாத அளவுக்கு பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்தன.

நடுவே சென்னையில் அனைத்து வங்கிகளின் சார்பாக நடந்த போட்டியிலும் வெற்றிகள் தொடர்ந்தன.

ஒரு எரி நட்சத்திரத்தைப் போல நான் எரிந்து கொண்டே விழுந்து கொண்டிருந்தேன்.

ஒரு நு}ற்றாண்டு காலம் வெறும் முயற்சிகளில் முடிந்தே போனது.

27.03.2000 அன்று அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு என் நிலையை விளக்கி எழுதி, திறமைகள் இருந்தும் சமூக அதர்மங்களால் வெளிப்பட முடியாத, வேறு வழியில்லாத நிலையில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் தொடர் அலட்சியப்போக்கை கண்டித்து 13.04.2000 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நிலையத்தின் முன் தீக்குளிக்கப் போவதாய் அறிவிப்பு செய்தேன்.

மத்தியில் வாஜ்பாய், மாநிலத்தில் கலைஞர். இப்போது போல் அப்போதும் கூட்டணி.

கலைஞர் நினைத்திருந்தால் ஒரு தொலைபேசியில் என் பிரச்சனையை சரி செய்திருக்கலாம்.

மாறன் இளவல் என்றால் தமிழினத் தலைவர் துடிதுடித்து ஏதேனும் செய்திருப்பார். கொண்ட கொள்கைக்காக தண்டவாளத்தில் படுத்தவருக்கு என் தாபம் புரியாதா என்ன? நான் கேவலம் தமிழ் எழுத்தாளன் தானே? எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார். ஒரு சக எழுத்தாளர் என்ற முறையில் டாக்டர் கலைஞரிடம் நான் கேட்ட நியாயம் இவ்விதமாய் எனக்கு கிடைக்காமலே போனது.

எனினும் சென்னை தொலைக்காட்சி நிலையம் மேற்படி கடிதம் பற்றி அறிந்து என்னை தந்தியடித்து வரவழைத்தது. போலியான குறைந்தபட்ச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றை நம்பி நிலையத்தின் முன் தீக்குளிக்கும் முடிவை நான் கைவிட்ட அதே நேரத்தில் நிலையத்தாரும் தங்கள் போலி வாக்குறுதிகளைக் காற்றில் கரைய விட்டார்கள்.

ஜுனியர் விகடன் இதழில் ‘ஒரு எழுத்தாளனின் நெருப்புப் போராட்டம்” என்ற தலைப்பில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளனாய் இருந்தும் எனக்கு து}ர்தர்ஷனில் இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்து இரண்டு பக்கங்களுக்கு என் புகைப்படத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டது.

திருமதி.இந்திரா காந்தி பிரதமாய் இருந்த காலம் தொடங்கி இன்று வரை நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் மாறியும் அரசு நிறுவனங்களில் நடைமுறைகள் மாறாததால் அவற்றின் மூலம் வெளிப்படும் என் முயற்சி கானல் நீராகவே இருக்கிறது.

நம் சமூகத்தைப் பீடித்திருப்பது வெறும் லஞ்ச லாவண்யம் மட்டுமல்ல – வெகு ஜன ரசனைக் குறைவு என்பது அதைக் காட்டிலும் மோசமான வியாதியாகும்.

தமிழ் வளர்ச்சி என்பது அசட்டு பட்டி மன்றங்களின் வளர்ச்சியில் இல்லை.

தமிழில் எழுத பேனாவைத் தொட்ட பாவத்துக்காக அடிப்படையில் ஒரு வங்கி ஊழியனாய் இருந்தும் என் தேடல்களிலும், முயற்சிகளிலும் அகாலமாய் தெருவுக்கு வந்தேன்.

தெருவுக்கு வந்தது நான் அல்ல.

தமிழ் எழுத்து.

நான் ஆசையாய் கட்டிய என் சொந்த வீட்டை கடன் விழுங்கியது (2000).

இறைவனின் துலாபாரம் மேலும் பலி கேட்டது.

மார்ச் 31, 2001.

பாங்க் ஆப் பரோடாவில் இருந்து விருப்பமில்லாமல் விருப்ப ஓய்வு திட்டத்தில் நான் வெளிவந்த நாள். கூடுதலாய் கிடைக்கும் என்ற ஆசையில் பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றை நானே கிழித்தேன். பென்ஷனும் கிடையாது. VRS சமயம் இன்னொரு Option வரும் என்று யூனியன்களால் ஏமாற்றப்பட்டு தொப்புள் கொடியை நாங்களே அறுத்துக் கொண்டோம். வங்கித் துறையில் நடந்த இந்த அநியாயங்களுக்கே தனியே ஒரு முறை தீக்குளிக்க வேண்டும்.

நான் தற்சமயம் ஒரு காசில்லா பக்கிரி. என் கவலை அது குறித்து இல்லை.

இந்த தேசத்தில் திறமைசாலி என்று தேர்ந்த இரசனையாளர்களால் தன் இளம் வயதிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒருவன், ஒரு அரசு நிறுவனத்தின் நெளிவு, சுளிவுகள் தெரியாத காரணத்தால் நியாயமாய் பெற வேண்டிய ஒரு வாய்ப்பை – ஒரு வாழ்நாள் காலம் போராடியும், உண்ணாவிரதம் இருந்தும், தீக்குளிப்பேன் என்று தன் அறிவுக்கும், முதிர்ச்சிக்கும் மாறாக அறிவிப்பு செய்தும் பெறவில்லை என்றால் அது நியாயம் தானா?

Funded programme-களில் இது வரை து}ர்தர்ஷன் எத்தனை கோடிகளை இரைத்திருக்கும்?

எல்லாவற்றையும் இழந்தவன் இந்த தேசத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டுமா?

இத்தனைக்கு பிறகும் ஜெயா டிவியில் அதே KB-யின் சார்பாக ‘வீட்டுக்கு வீடு லு}ட்டி” என்ற காமெடி மெகா தொடரின் பிரதான எழுத்தாளனாக 500 எபிசோடுகள் வரை சளைக்காமல் எழுதித் தள்ளினேன் (2002 – 2004).

எனது சிறுகதைத் தொகுப்பு ‘வாத்தியார்” கிழக்குப் பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டது (2005).

எதை செய்தாலும் சரியாக செய்கிறவன் நான். பகைவர்களே பாராட்டும் திறமை கொண்டவன். என் வாழ்வின் கடைசி முயற்சியாக NFDC மூலம் ஒரு திரைப்படம் தயாரிக்க இந்த தேசம் எனக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு யாசகம் எதுவும் தேவையில்லை. சாவதற்கு முன் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்ற வேண்டுகோளை முன் வைத்து ‘கருணை மனு” என்று தலைப்பிட்டு இந்தக் கடிதம் போலவே விரிவான ஒரு கடிதத்தை எழுதி, எனது புத்தகங்களை மாதிரிக்கு ஒன்றாய் இணைத்து நம் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் அவர்களுக்கு 05.09.2005-ல் ஒரு கடிதம் அனுப்பித்து என் திறமைக்கு NFDC மூலம் ஒரு நியாயம் கேட்டு இத்தனை நாட்கள் பதிலுக்கு காத்திருந்தேன்.

Speed Post-ல் ரூ.85ஃ-க்கு தபால்தலை செலவில் அனுப்பப்பட்ட என் பார்சலுக்கு ஜனாதிபதி மாளிகையிலிருந்து கடந்த வருடத்தில் ஒரு அக்னாலெட்ஜ்மென்ட் கார்ட் கூட வரவில்லை. சுருக்கமாய் என் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

27.12.2006

தற்சமயம் என் குடும்பத்துக்கான கடமைகளை அநேகமாய் முடித்துவிட்டேன். மகன் ஆட்சிக்கு வந்துவிட்டான். ஒரே மகளின் திருமணமும் நல்லவிதம் முடித்துவிட்டேன்.

15.12.2006

என் வயது ஐம்பத்தி ஒன்று. முதல் மாரடைப்பு 02.12.2006-ல் மறவாமல் என் கதவைத் தட்டியது. நினைத்ததை சாதிப்பேன் என்ற நம்பிக்கையில்லாமல் இனி மேலும் ஒரே ஒரு நாள் கூட நான் வாழத் தயாராய் இல்லை.

என் தோல்வி எனக்கு ஏற்படுத்தக்கூடிய தனிப்பட்ட நஷ்டங்களை விட, நான் வெளிப்படாவிட்டால் இந்த சமுதாயம் அடையக்கூடிய நஷ்டம் அதிகமாய் இருக்கும் என்று நினைப்பதாலேயே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் என்னை இந்த சமூகம் சகலவிதத்திலும் சீண்டி கூர் பார்த்திருக்கிறது.

தமிழில் நல்ல கதைகளைப் பிரசுரிக்க பத்திரிக்கைகள் இல்லை. என்னைப் போன்ற எழுத்தாளர்களைக் கொன்றுவிட்டு சிறுகதை செத்துவிட்டதாய் பிலாக்கணம் வைத்து அரைப்பத்தியில் அச்சு பிச்சு கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை வருடங்களில் எனக்கு இதுவரை ஒரு சரியான பதிப்பாளர் அமையவில்லை. என் முந்தைய புத்தகங்கள் மறுபதிப்பு காணுமா? என்பது கேள்விக்குறி.

கோடிக்கணக்கில் சினிமாவுக்கு வரி விலக்கு கொடுக்கும் தமிழக அரசு நு}லகத்துறைக்கு எதுவும் செய்யாது. அதைவிட தமிழில் வாசகர்களே கிடையாது. ஆயிரம் புத்தகம் விற்க பதிப்பாளர் ஐந்து வருடம் தேவுடு காக்க வேண்டும். வீணாய் போன சினிமாவுக்கு கூட ஒன்றரை பக்கம் விமர்சனம் எழுதும் வார இதழ்களிலே என் சமீபத்திய ‘வாத்தியார்” புத்தகம் பற்றி நேர்மையாய் ஒரு வரி கூட விமர்சனம் கிடையாது. ஒரு வேளை அடுத்த மாரடைப்பில் நான் வீழ்ந்துவிட்டால் இப்படி ஒரு எழுத்தாளன் இருந்தான் என்று உரத்துச் சொல்லக்கூட ஒரு நாதி கிடையாது.

செம்மொழி செம்மொழி என்று கதைக்கிறீர்களே, இது தானடா உங்கள் செத்த மொழியின் அவலட்சணம்.

என்னை மதியாத சமுதாயத்தில் வெறுமனே உயிரோடிருப்பதில் எனக்கு சம்மதமில்லை. என் கடைசி காலத்தில் Nகுனுஊ மூலம் என் திறமையை நான் நிரூபிக்க ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை இறுதியாக உங்கள் முன் வைக்கிறேன்.

கோப்பெருஞ்சோழன் போல வடக்கிருந்து உயிர்நீக்க சித்தமாகிவிட்டேன்.

நான் சர்க்கரை நோயாளி. இந்தச் சமூகத்தில் வாழ்வதால் இரத்தக் கொதிப்பும் உண்டு. அல்சர் இருக்கிறது. வால்வுகளில் 63% அடைப்பு என டாக்டர்கள் உதடு பிதுக்கிய கேஸ். Chronic Smoker. அனைத்தையும்விட நினைத்ததை முடிக்காமல் வாழ விரும்பாதவன்.

‘ஆக்ரி ஜிஹாத்” என்று பெயரிடப்பட்ட எனது இந்த வடக்கிருந்து உயிர் நீக்கும் போராட்டத்தில் வரும் 26, ஜனவரி 2007 குடியரசு தினம் காலை பத்து மணியிலிருந்து அன்ன ஆகாரமின்றி வடக்கு திசை நோக்கி அமர்ந்து இறை சிந்தனையில் என் கடைசி நாட்களை கழிக்க முடிவு செய்துள்ளேன். என்னை உயிருடன் சந்தித்து அளவளாவ விரும்பும் ஃ ஆதரவு தெரிவிக்கும் பிசிராந்தையர்கள் (அப்படி எவரேனும் இருந்தால்) கீழ்க்கண்ட முகவரியில் என்னை சந்திக்கலாம். 

எனக்கு நேரக்கூடிய மரணம் உள்ளிட்ட எந்த முடிவுக்கும் நம் குடியரசுத்தலைவர் திரு.அப்துல் கலாமும், என் கடிதத்தை ஏற்கனவே அலட்சியம் செய்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரும்தான் பொறுப்பு.

சென்று வருகிறேன். ஜெய் பராசக்தி.

அன்புடன்,

ம.வே. சிவகுமார்

எங்களுடன் வங்கியில் பணி புரிந்து 9  ஜனவரி 2016  அன்று உலகுக்கும் தன் பாப்கார்ன் கனவுகளுக்கும் விடை கூறிய நண்பர் ம.வே.சிவகுமாரின்  அவரே எழுதிய வாழ்க்கைக் கதை இது. கதை அல்ல இது. உண்மை. சுடும். 

இவை அவருக்குக் கிடைத்த அடிகள் என்பதை விட அதிகார வர்க்கத்துக்கு அவர் கொடுத்த சவுக்கடிகள் என்பதே பொருத்தமானது. அந்த வகையில் இவர் ஒரு மினி பாரதியார் என்றால் மிகையில்லை. 

அவர் பிரிவால் வருந்தும் உற்றார் – உறவினர் –  நண்பர்களுக்கு  குவிகம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.