கம்ப ராமாயணத்தில் பால காண்டத்தில் 18வது படலம் உண்டாட்டுப்படலம்.
சீதை – ராமர் திருமணத்திற்காக மிதிலைக்கு வந்த தசரதனது படை வீரர்கள் தங்களோடு தங்கள் மனைவிகளையும் அழைத்து வந்தனர். மாட மாளிகையில் மலர்ச் சோலையில் அவர்கள் மதுவருந்தி மயங்கித் திளைத்தனர். சீதை – ராமன் திருமண விழாவைக் கொண்டாட மதுவை அவர்கள் உண்டாடுகின்றனர். அந்த மது மயக்கத்தைக் கம்பர் எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா? அவையே கண்ணதாசன் தான் மிகவும் ரசித்த வர்ணனைகளாகத் தெரிவிக்கிறார்.
இதே வர்ணனைகளை அண்ணாவும் பார்த்துவிட்டு ஆபாசத்தின் சிகரம் என்று தனது கம்பரசம் என்ற புத்தகத்தில் விளாசித் தள்ளியுள்ளார்.
கம்பனை – ராமாயணத்தை – ஆத்திகத்தைச் சாட அண்ணாவுக்கு இவை வசைகள்.
ஆனால் கவிஞனுக்கோ அவை இலக்கியச் சாரல். இன்பத்தேன்
கண்ணதாசன் கண்ணசைவில் கம்பனின் காமத்துப்பாலைக் காணலாமா?
அது என்ன ?
- வெள்ளைவெளேர் என்று கள்வெள்ளம் உலகமெல்லாம் பரவி ஓடுகிறதா?
- சங்கீதத்திற்கு உயிர் வந்து உலகமெலாம் பரவி நிற்கிறதா?
- மனதிலே காமவெறி ஊறி பெருக்கெடுத்து ஓடி உலகமெலாம் பரவி விட்டதா?
- ஆம். அன்று மிதிலையில் தோன்றிய வெண்ணிலவின் ஒளி வெள்ளம் உலகமெலாம் பரவி நிற்கிறது.
- கட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அது கள்ளைப்போல் இனித்தது.
- விட்டுப் பிரிந்த காதலனுக்கு அது விஷம் போல் இருந்தது.
- ஊடல் செய்துகொண்டிருந்த காதல்களுக்கு அது தூது போனது
- மன்மதனின் வேண்டுகோளின்படி அது இதையெல்லாம் செய்தது.
அது எது? நிலவு
ஒரு பாடல் :
கணவனோடு கலவி செய்து களிக்க வேண்டும் என்ற ஆசையில் பெண்கள் கள் அருந்துகிறார்கள்.ஒரு பெண் ஒரு கிண்ணத்தை எடுக்கிறாள். அது சந்திரனின் ஒளி பட்டு வெள்ளையாகக் காட்சியளிக்கிறது. அவள் தன் சிவந்த கையால் கிண்ணத்தை எடுக்கிறாள். கிண்ணம் சிவப்பாகிறது. இப்போது அவள் அந்த மதுவைத் தன் வாயிலே ஊற்றிக்கொள்கிறாள். அவள் விழியும் சிவப்பாகிவிட்டது.
இன்னொரு பாடல்
அற்புதமான பெண் அவள். மதுவை அருந்திவிட்டாள். வந்தது வம்பு. அக்னிக் குண்டத்தில் நெய் ஆகுதி செய்தது போலாகிவிட்டது . நெஞ்சில் எரிந்த காம நெருப்பில் மது என்னும் நெய் விழுந்து காமத்தைப் பன்மடங்கு எரியச் செய்துவிட்டதாம்.
இன்னொருத்தி வெள்ளி மதுக்கிண்ணத்தில் தன் முகத்தைப் பார்க்கிறாள். போதையில் தடுமாறித் தன் பிம்பத்தைத் தோழி என்று எண்ணி , ‘அடி தோழி!, நீயும் என்னுடன் மது அருந்த வா’ என்று அழைக்கிறாளாம்.
இன்னொரு இளம் பெண் சிவந்த இதழில் சிரித்த முகத்துடன் மதுக் கோப்பையைக் கையில் எடுக்கிறாள். அதிலும் அவள் முகம் தெரிகிறது. ‘ நான் அருந்தும் மதுவை யார் அருந்த வந்தது என்று, தன் பிம்பத்தின் மீதே கோபம் கொள்கிறாளாம். பின்னர் தன் நிழலைப் பார்த்து ‘ அடி பைத்தியக்காரி ஜாடியில் வேண்டும் மட்டும் கள் இருக்கிறது. அதைக் குடிக்காமல் நான் குடித்த எச்சலை ஏன் குடிக்க வருகிறாய்? என்று கேட்டாளாம்.
மற்றொருத்தி கிண்ணம் ஒன்றைக் கையில் ஏந்தி நிற்கிறாள் கள் ஊற்றுவார் என்று எதிர்பார்த்து. நிலவின் பால் ஒளி கிண்ணத்தில் பாய்கிறது. ‘அடடா, கிண்ணம் நிரம்பிவிட்டதே’ என்று அவளும் கிண்ணத்தை வாயில் வைத்துக் குடிக்கிறாளாம்.
மற்றொரு கூடல் பாடல்.
வீட்டுக்கு வந்த நாயகன் நாயகி படுத்திருந்த பஞ்சணையைப் பார்க்கிறான். அதில் இருந்த மலர்க்கூட்டம் அத்தனையும் கருகி இருக்கிறது. நாயகியின் காம வெப்பத்தால் உடல் சூடேறி அந்தச் சூட்டில் மலர்கள் கருகி விட்டனவாம்.
வீடு திரும்பிய கணவனை மனைவியும் அவளுடைய சாந்து தடவிய தனங்களும் வரவேற்றனவாம். அவளின் உடல் சூட்டில் சாந்து உலர்ந்து போய் விட்டதாம். பட்டாபிஷேகக் கலசங்கள் போல் அவை அவனுக்கு ஆசி கூறுகிறதாம்.
கணவனைப் பிரிந்து காமத்தில் துடிக்கும் பெண் ஒருத்தி தாங்க முடியாத நிலையில் அவனுடன் பள்ளி கொள்ள அவனைத் தேடி வருகிறாள். சத்தம் கேட்கக்கூடாது என்று மேகலை, சிலம்பு எல்லாவற்றையும் கழற்றிவிட்டு ரகசியமாக வருகிறாள். அப்படியும் அவளை ஒருவன் பார்த்து விடுகிறான்.
அவன் .. சந்திரன்
இன்னொருத்தி வெகு நாட்கள் கழித்து வந்த கணவன் மார்பில் மாலைகளைப் போட்டு இறுக்கக் கட்டினாளாம். ‘என் மார்பைத் தழுவாத தோளுக்கு இது தண்டனை ‘ என்றாளாம்.
இன்னொரு பாடல்
காதலர்கள் இருவரும் முன்பு உடம்பு இரண்டாய் ஒரே உயிராய் இருந்தார்களாம். இன்றோ இரண்டு உடம்பும் ஒரே உடம்பாய் மாறி இரண்டறக் கலந்துவிட்டார்கள். என்கிறாராம்.
இன்னொரு பேதைக்கு மன்மதனின் அம்பு பட்டு அவள் மார்பு புண்ணாகி விட்டதாம்.அந்தக் காயத்துக்கு ஒத்தடம் கொடுப்பது போலத் தன் இரு கைகளையும் மார்பில் வைத்துக் கொள்கிறாளாம் . பிறகு அழுகிறாள் , சிரிக்கிறாள், தோழியின் காலில் விழுந்து காதலனிடம் தூது செல்லடி என்று கெஞ்சுகிறாளாம்.
கலவி விளையாட்டு நடக்கிறது. மேகலையை எடுத்து எறிந்தார்களாம். ஏன் தெரியுமா? ரகசியங்கள் நடக்கிற இடத்தில் சத்தம் போடுபவர்கள் இருக்கலாமோ ? என்று தான்.
அவன் குமரன். அவள் குமரி. இருவருக்கும் காதல் போர் . நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்று கலவிப்போர் நடக்கிறது. சம அளவு சக்தி கொண்டவர்கள் போரில் இறங்கிய பிறகு யார் முதலில் வெற்றி பெறுவார்கள்?
ஆனந்தம் தாங்காமல் அவள் தன் கணவனின் மார்பைக் காலால் உதைக்கப் போகிறாள். அவனோ , தான் அணிந்திருக்கும் மலர் மாலை அவள் காலில் குத்திவிடக் கூடாதே என்று தன் மார்பைக் கையால் மூடிக் கொள்கிறானாம். அதைப் பார்த்த அவளுக்கு மேலும் கோபம். ‘ நீ உன் மார்பில் வேறொரு காதலியை ஒளித்து வைத்திருக்கிறாய்! நான் உதைத்தால் அவளுக்கு நோகும் என்று தானே உன் மார்பை மூடிக் கொள்கிறாய் ? என்று சினந்தாளாம்.
இன்னொருத்தி , தன் மார்பில் சாய்ந்திருக்கும் கணவனைக் கட்டித் தழுவி ஆனந்த மயக்கத்தில் எங்கே தன்னுடைய தனங்கள் அவனுடைய மார்பில் குத்தி முதுகு வழியாக வெளியே வந்திருக்குமோ என்று தடவிப்பார்த்தாளாம்.
ராமனின் புகழ் பாடும் புனித நூலில் இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் தேவை தானா? என்று சிலர் கேட்கிறார்கள். பௌத்தம், சமணம் போன்றவற்றிலிருந்து மக்களை இழுக்கவே இந்த யுக்தி என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் காப்பியம் என்றால் இந்த மாதிரி கொஞ்சம் இருக்கவேண்டும் என்கிறார்கள். ( நம்ம சினிமாவில் குத்துப் பாட்டு மாதிரி )
இலக்கியத்தில் இது காதல் இலக்கியம்.