சென்னை கதைசொல்லும் திருவிழா

CSF

 

சென்னையில் 5 நாட்களாக உலகக் கதை சொல்லும் திருவிழா நடைபெற்றது. ஒரு நாளில் 7 பேர். ஏழு விதமான கதை. அவர்களின் பேச்சும் சிரிப்பும் நடிப்பும் கதை சொல்லும் பாங்கும் அடேங்கப்பா!

என்ன திறமை.  என்ன லயிப்பு?

அப்படியே கதை கேட்பவர்களையும் கதையுடன் இணைந்து ஊம் கொட்ட வைத்துக், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வைத்து , தங்களுடன் பாட வைத்து, ஆட வைத்துத் ,துடிக்க வைத்து  நம்மைக் கதை நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்லும் அந்த அருமையான  திறமைக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுதல்கள்.

கதைகள் எல்லாம், நாம் கற்ற, கேட்ட கிராமிய மற்றும் கற்பனைச் சிறகு முளைத்த கதைகள் தான். ஆனால் அவற்றை அழகு ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எந்த விடத் தடங்கலுமின்றி ஒரு ஆற்றைப் போல,  ஒரு நீர்வீழ்ச்சியைப் போல , ஒரு மழையைப் போல,  ஒரு தென்றலைப் போல அவர்கள் நடித்து, நடந்து, பேசிச் செய்த விதம் இருக்கிறதே அதை எப்படிப் பாராட்டுவது.?

கதை சொல்வது எங்கள் இதயத்தின் உணர்வு என்று அவர்கள் சொல்லிக் கொள்வது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. அது அவர்கள் உள்ளத்திலிருந்து வரும் உணர்ச்சிக் காவியம்.  

  1. ஒரு துணிச்சலான எலி ,கரடி மேல் ஏறி ஆற்றைக் கடந்து  சிங்கத்தின் மேல் ஏறி மலையின் உச்சியில் நின்று பெருமிதப்படும் கதை ஒரு கவிதை.  
  2. ஒரு பெரிய மாளிகை முழுவதையும் ஒரு ரூபாய் காசில் வாங்கிய பொருளைக் கொண்டு நிரப்புபவனுக்கே அந்த மாளிகை உரியது என்று தந்தை கூற பஞ்சால் நிரப்பித்  தோல்வியுற்றான் முதல் மைந்தன். மெழுவர்த்தியின் ஒளியினால் நிரப்பிய இரண்டாம் மகனும் தோல்வியுற்றான். புல்லாங்குழலின்  இசையால் நிரப்பி அதன் மூலம் மகிழ்ச்சியை  நிரப்பி அதன் மூலம் அதில் வாழ்வை நிரப்பிய மகளே இறுதியில் வெற்றி பெறுகிறாள். 
  3. நாச்சியம்மை என்ற பசு தன் மகனுக்குப் பாலூட்டிவிட்டுப் புலிக்கு உணவாக வருகிறேன் என்று சொன்ன சத்திய வாக்கை நிலைநிறுத்தும் பசுவைப் பார்த்து, சத்தியத்தின் திருவுருவத்தைக் கொன்று  தன் பசி ஆற்றிக்கொள்ள வேண்டாம் என்று உண்ணாமல் செல்லும் புலி. ஆஹா தமிழ்ப் பாட்டுடன் கலந்து சொன்ன கதை கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் பெருமையான அருமை. 
  4. மனதளவில் சேவலாய் மாறிய இளவரசனைக்  குணப்படுத்தத் தானும் கோழியாக மாறி திருத்திய வைத்தியனின் கதை ! 
  5. சிவன் அருளால் பிறந்த மகனைக், காளி அருளால் பிறந்த கரடி தாக்க வரும் போது, சிவன் அருளால் பிறந்த ஒரு நாய்க்குட்டி எப்படிக் காப்பாற்றுகிறது என்று ஒரு கதை.  
  6. மனிதனை நம்பாதே என்று சொல்லும் புலி, குரங்கு, பாம்பு 
  7. பேசும் சேனைக்கிழங்கு, பனைமரம், மீன், ஆறு. அவற்றைப் பார்த்ததாகக் கூறும் மக்களைக் கோபிக்கும் மன்னன். அவர்கள் சென்ற பிறகு  அரசனின் அரியாசனமே அவனுடன் பேசுவதைக் கண்டு திகைக்கும் அரசன்.  
  8. தான் பிறந்த ஹீப்ரு மக்களுக்காகப் போராடும் மோஸசின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமும் கதையின் களமும் நம் கண் முன்னால்  பத்துக் கட்டளைப் படத்தை அப்படியே நிலை நிறுத்துகிறது.   

 

 கதை சொல்லும் கலை நமக்குப் புதியதல்லவே ! ஆனால் இவர்கள் காட்டும் உணர்ச்சி வெள்ளம் புதிது  – அதைப் பாராட்டுவோம் அதில் நாமும் பங்குபெறுவோம் .