நகைச்சுவை நாவல்கள் – நாடகங்கள் -கதைகள் – பாரதியார்

 

தமிழில் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் , நாடக ஆசிரியர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் நமது சிரிப்பு எலும்பை மீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ! மிகவும் ஆழமாக, தீவிரமாகக் கதை சொல்லும் எழுத்தாளர்களும் இடை இடையே  நகைச்சுவையைக் கலக்கத் தவறுவதில்லை.

ஆனால் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்  துமிலன்,  நாடோடி, எஸ் வி வி,  தேவன் , வடுவூரார்,  கல்கி,  சாவி , கடுகு , பாக்கியம் ராமசாமி, ஞானசம்பந்தன்,  தேனி எஸ். மாரியப்பன், கிரிஜா  மணாளன்,  சோ,  கிரேஸி மோகன்,  ஒய் .ஜி.மகேந்திரன், மெரினா போன்ற எண்ணற்றவர்கள்.

நாம் தமிழ் எழுத்தாளர்களின் நகைச்சுவை உணர்வுகளை இந்தக் கட்டுரைகளின் மூலம் பார்ப்போம்.

 

இந்த மாதம் நாம் பாரதியாரின் சிரிப்பு அலை தெறிக்கும் கதை கவிதைகளைப் பார்ப்போம்.

சுப்பிரமணியன் ( பாரதி )  சிறு வயதில் பள்ளீயில் சுமாராகத் தான் படித்து வந்தார். கவிதைகள்  மட்டும் மழை போலப் பொழிவார். ஆசிரியர் ஒரு முறை ” மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டார்

“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சையில் தோல்வியைத் தழுவினார்.

சுப்பிரமணியன்  ஒருமுறை எல்லோரும் ஆச்சரியப்படுகிற மாதிரி அற்புதமாக வாதம் செய்து பேசினார். அவருடைய பேச்சுத் திறமை எதிராளியையும் வசப்படுத்தியது.  அந்த விவாதம் முடிந்ததும் , ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து  “நீ உன் வயதை மீறின புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)” என்று பட்டம் சூட்டினார்.

காந்திமதிநாதன் என்ற ஒரு பெரியவருக்குப் பாரதியைப் பிடிப்பதில்லை. ஒரு நாள் பாரதியிடமே ” பாரதி சின்னப் பயல்” என்று கவிதை பாடும்படிக் கூறினார். பாரதியாரும் சளைக்காமல் , காந்திமதிநாதனைப் பார் – அதி (பாரதி) சின்னப்பயல்” என்றதாக ஒரு கதை உள்ளது.

இன்னொரு  கதையின் ஒரு பகுதி:

முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார், அவருக்குப் பகல் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம் உடம்பிலே கோபிமண்முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலே ஒருபசுமாடு. அத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்ராயருக்குக் காச நோயாதலால்அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி ஒன்றுஅழுது கொண்டேயிருக்கும் கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ,அல்லது ராயரைத்தானே, கன்னட பாஷையிலே திட்டி விட்டு மறுபடியும் உறங்கி விடுகிறாள்.”

வரும் வழியிலே ஜட்காவண்டிகள், துரைகள் போகும் கோச்சுகள். புழுதி, இரைச்சல், துர்நாற்றம் இவற்றையெல்லாம் கடந்துமுன்பகுதியிலே, பசுமாடு, ராயர் வீட்டம்மாள் குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துக்கெல்லாம் தப்பிப் பின்புறத்திலே மெத்தைக்கு வந்துசேர்ந்தேன்.”

ஆறில் ஒரு பங்கு என்னும் சிறு கதையில், ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்திற்கொருமுறை ஆபீஸீல் பத்து ரூபாயும், வீட்டில் ஒருகுழந்தையும் பிரமோஷன்என்னும், வாக்கியத்தைப் படிக்கும்போது குலுங்கச் சிரிக்காத மனிதர்களை ஏதேனுமொரு கண்காட்சிசாலைக்குத்தான் அனுப்ப வேண்டுமென்று சிபாரிசு செய்வேன்.

உதாரணத்துக்கு இங்கே கொஞ்சம், சின்னச் சங்கரன் கதையிலிருந்து:

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்துகொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும் ‘நக்ஷத்திர மஹாத்மியமும்’ வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் ‘வாங்கா’ ஊதுவார்கள். இந்த வாங்கா என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். சிலர்  இதனை ஊதிக்கொண்டு ஜமீந்தாரவர்களின் வண்டி முன்னே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்கு சவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ஆட்டுவண்டி சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக்கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தினால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறைகொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு, தாமே பயமில்லாமல் ஓட்டுவார். குதிரைகள் துஷ்டஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்த சந்தேகம் இல்லையல்லவா?

இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் – ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது – தயார் செய்துகொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடன் அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்றுபோகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிச்சமிருக்கும். எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்து முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒருகையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்.

பாரதியார் , குயில் பாட்டில்  குரங்கு ஜாதி மனிதனை விடச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லும் போது ‘வாலுக்குப் போவதெங்கே ‘ மற்றும் ‘திருவால்’ என்ற அவர் வரிகள்  நகைச்சுவையின் சிகரம்

வானரர் தஞ் சாதிக்கு மாந்தர் நிகரா வாரோ?
ஆனவரையு மவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்,
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத்
தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெதைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ?
பாகெயிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்
வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ
சைவசுத்த போஜனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

 

 

Advertisements