கணையாழி குறுநாவல் போட்டிகளால் பெரும்பாலோர் கவனத்திற்கு வந்த எஸ்.சங்கர நாராயணன், அழகிய சிங்கர், சமீபத்தில் மறைந்த ம.வே. சிவக்குமார் போன்று மற்றுமொரு படைப்பாளி நாகூர் ரூமி. ஆம்பூர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவரான திரு ஏ எஸ் முகம்மது ரபி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களுக்கான இவரது சுய முன்னேற்ற நூல்களும், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளும் மிகப் பிரசித்தம்.
சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் ‘கதைகள் கவிதைகள்’ மஸ்னவி காவியத்திலிருந்து ‘சூஃபி கவிதைகள்’ , ஹோமரின் ‘இலியட்’ , பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான ‘உடல் மண்ணுக்கு’, பாரக் ஒபாமாவின் ‘நம்மால் முடியும்’ ஆகியவை இவரது தமிழாக்கங்களில் சில
இவரது வலைத்தளம் பறவையின் தடங்கள்
இவரது பிருந்தாவனில் வந்த கடவுள் என்னும் கதை
ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.
என்று தொடங்குகிறது.
தூண்களைச் சுற்றிய சிமென்ட் தளத்தில் அமர்ந்து, சூட்டையும் பொருட்படுத்தாமல், அரட்டை அடிக்கும் பெண்கள், இருபது வருடங்களாக பிச்சை எடுக்கும் கையிழந்த பிச்சைக்காரன் ஆகியோரை கவனித்தபடியே தனது எஸ். 6 கோச்சில் 72 வது இருக்கையை அடைகிறான் அமீர். ஆனால், அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது. இவன் டிக்கெட்டைக் காண்பித்ததும் எதிரில் உட்கார்ந்து இருந்த அவள் குடும்பத்தினர் ஏதோ சொல்ல வேறு இருக்கைக்குப் போய்விட்டாள்.
அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.
சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஜே.கிருஷ்னமூர்த்தியின் ‘தெரிந்ததிலிருந்து விடுதலை’ புத்தகத்தை வெளியில் எடுத்தான்.
எதிரிலிருந்தவர், அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் ஜே கே வின் முப்பது புத்தகங்கள் வாசித்துள்ள ரசிகன் என்று கூறி ‘ நீங்க ஜே.கே. விரும்பி படிப்பீங்களா சார்?’ என்று கேட்கிறார். இவனோ , “நானும் படிச்சிருக்கேன்” என்கிறான் பட்டும்படாமல்.
அவரோ விடாப்பிடியாக இருவரும் சந்தித்தது இறைவனின் அருள் என்கிறார், இவன் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறான்.
பின் ஏன் ஜே கே படிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் அழகாக இருக்கிறார் என்பதால் என்று பதிலளிக்கிறான்.
அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில் ‘சார்’ போட்டுப் போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.
சென்ட்ரல் வரப் பத்துநிமிடம் இருக்கும் வரை வாதம் தொடர்கிறது. அப்போது ஊனமுற்ற ஒரு ஐந்தாறு வயது சின்னப் பையன் தனியாக பிச்சை கேட்டு வருகிறான். சிலர் சில்லரை போட்டனர். சிலர் பார்க்காத மாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத் தேடியபோது ……..
யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தைத் தான் பெற்ற பிள்ளையின் முகத்தைத் துடைப்பதைப் போலத் துடைத்தாள்.
முகம் சுத்தமான பிறகு ஒரு ‘யூஸ்–அன்–த்ரோ’ தட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.
எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.
கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் இறங்கிச் செல்ல, இதுதான் சமயம் என ஜே கே ரசிகரிடமிருந்து தப்பிக்கிறான் அமர்.
ஆனால் பட்டுப்புடவை கட்டி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.
என்று கதை முடிகிறது.
===================================================
இவரது குறுநாவல் குட்டியாப்பா கட்டாயம் படிக்கப்படவேண்டிய படைப்பு. இணையத்தில் கிடைக்கும் இன்னும் சில கதைகள்