வடிகால் — நித்யா சங்கர்

 

       “ பிரியா! கதவைத் திற!  மனுஷன் எத்தனை நேரமா வெளியிலே நிற்கிறது?” என்று படபடவென்று வாசல் கதவைத் தட்டும் பக்கத்து வீட்டு மோகனின் குரல் கேட்டது.

தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவள் கடிகாரத்தைப் பார்த்தேன்.  இரவு மணி பதினொன்று. இன்னும் பத்து நிமிடத்தில் மோகனின் கச்சேரி ஆரம்பித்து விடும்.

“ வரேங்க! வரேங்க!”என்று கூவியபடியே அவசர அவசரமாகச் செல்லும் பிரியாவின் குரல் கேட்டது.

என் வீட்டு அறைகளையும், பிரியாவின் வீட்டு அறைகளையும் பிரிப்பது ஒரு கல் சுவர்தான்.  அதனால் அவர்கள் வீட்டில் சிறிது சத்தமாகப் பேசினால் எனக்குத் தெளிவாகக் கேட்கும்.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  மோகன் உள்ளே வந்து இருக்க வேண்டும்.

“ சனியனே! சனியனே! மணி என்ன பதினொண்ணு தானே ஆச்சு.. அதற்குள்ளே தூங்கிட்டியா? புருஷன் இன்னும் வரலியேன்னு ஒரு கவலையும், ஆதங்கமும் இருந்தால்தானே..” என்று கூச்சலிட்டான் மோகன்.

“ என்னங்க.. மெதுவாப் பேசுங்க. ராத்திரி நேரம். அக்கம் பக்கத்துலே எழுந்துரப் போறாங்க. அப்புறம் அசிங்கமாயிடும்.” என்றாள் பிரியா மெல்லிய குரலில்.  வெட்கமும், சங்கடமும் அவள் குரலில் தெரிந்தது.

“ ஏண்டி! எனக்கு உபதேசம் பண்ணறியா?  கேட்கட்டுமே.. எல்லோரும் கேட்கட்டும், நீ குடும்பம் நடத்துற லட்சணத்தை. ஒவ்வொரு வீட்டிலேயும் பார்! புருஷன் எப்ப வரார்னு வாசல் பக்கமா காத்து நின்னுட்டிருப்பாங்க. நீ மகாராணி, நல்லா தூக்கம் போட்டுட்டு மனுஷனை பைத்தியக்காரன் மாதிரி தெருவிலே நிற்க வெச்சுட்டே.”

“ இல்லீங்க! நான் தூங்கலீங்க. நம்ம குழந்தை ராமுவைத் தூங்கப் பண்ணிட்டிருந்தேன்.”

“ பெரிய குழந்தை! ஊரிலில்லாத குழந்தை! புருஷனுக்கு வாசக் கதவைக் கூட உடனே திறந்து விட முடியாம தூக்கம் பண்ணிட்டிருந்தாளாம். மனுஷன் ஆஞ்சு ஒஞ்சு களைச்சு வந்தா வீடும் ஒரு நரகமா இருக்கு. சே!” என்றபடியே அவனுடைய ரூமிற்குப் போயிருக்க வேண்டும்.

“ எங்கேடி சோப்? பாத்ரூமிலே சோப் வெச்சிருக்கணும்னு கூடவா உனக்குச் சொல்லித் தரணும்?” என்று அட்டாச்ட் பாத்ரூமிலிருந்து கத்தினான்.

“ ஸாரிங்க.. நீங்க நேத்து டைனிங் ஹாலில் உள்ள வாஷ் பேசினில் முகம் கழுவினதாலே சோப்பை அங்கே ரெடியா வெச்சிருந்தேன்.  ஒரு நிமிஷம்” என்றபடியே பிரியா டைனிங் ஹாலை நோக்கி ஓடும் சத்தம் கேட்டது.

“ யூ.. டாமிட்! நான் அங்கேதான் முகம் கழுவிக்கணும்னு  ரூல்ஸ் போட்டிருக்கியா? நான் எங்கே முகம் அலம்பிக்கிறேனோ அங்கே சோப் ரெடியா இருக்கணும்” என்று இரைந்தான்.

“ ஓகே! இனிமே தப்பு வராம பார்த்துக்கிறேன்.”

“ என்ன குடும்பம் நடத்தறியோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்ற மோகனின் குரல் சிறிது தணிந்து இருந்தது.

“ வாங்க! சாப்பிட வாங்க” என்று பிரியா உணவு பரிமாறும் பாத்திரங்களின் ஓசை கேட்டது.

“ என்ன சமையல்டி  பண்ணறே.. எனக்கு வெண்டைக்காய் கறி பிடிக்காதுன்னு தெரியுமில்லே. பசித்து வந்தவனுக்கு நல்ல சாப்பாடும் கிடையாது” என்று மோகன் நாற்காலியைப் பின்னே தள்ளி எழுந்திருக்கும் ஓசை கேட்டது.

“ ஒரு நிமிஷம். கத்தரிக்காய் கறியும் பண்ணியிருக்கேன்.  இதோ போடறேன்.”

“ ஏன்? முதல்லே அதைப் போட்டிருக்கக் கூடாதா?”

“ இல்லே. அன்னிக்கு வெண்டைக்காய் கறியை ரசிச்சுச் சாப்பிட்டீங்க.. அதான்.”

“ என்னவோ அன்னிக்குப் பிடிச்சிருக்கலாம். இன்னிக்குப் பிடிக்கலே. ஏன்? ஒரே காய்கறியையே எப்பவும் சாப்பிடணுமா?”

ஏதோ முணுமுணுத்தவாறு மோகன் சாப்பிட்டு முடிக்கும் சத்தம் கேட்டது.

“ என்னங்க! ஆபீசிலே ரொம்ப வேலையா? ஜெனரல் மானேஜர் ஏதாவது சொன்னாரா” என்று ஆதரவோடு மெதுவாகக் கேட்டாள் பிரியா.

“ பிரியா! நம்ம மாதிரி சின்சியர் பீபிள் இதுமாதிரி கம்பெனியில் வேலையே செய்யக் கூடாது.  என்ன பண்ணிக் கொடுத்தாலும் திருப்தியே இல்லே.  நீயும் பார்க்கறியே! காலையிலே ஒன்பது மணியிலிருந்து ராத்திரி ஒன்பது மணி வரை நான்-ஸ்டாப்பா மாடா உழைக்கிறேன்.  நான் திறமையா வேலை பண்ணிக் காட்டிட்டேன் இல்லே. மேலே மேலே மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் என் மேலே போட்டு, ‘ஆச்சா! ஆச்சா!’ ன்னு ஒரே டார்ச்சர்”

“ கவலைப்படாதீங்க! உங்க சின்சியாரிடிக்கு நிச்சயமா தகுந்த ரிவார்டு கிடைக்கும்.  ஜெனரல் மானேஜர், ஆபீஸ் எல்லாத்தையும் மறந்துடுங்க.  வாங்க! நிம்மதியா தூங்குங்க!”

“ ஒரு பக்கம் ஜெனரல் மானேஜர், அப்படீன்னா இன்னொரு பக்கம் நம்ம அஸிஸ்டண்டுங்க.. கொஞ்சம் அசந்தா தப்பும் தவறுமா எல்லாத்தையும் பண்ணிக் கொடுத்து என்னுடைய வேலைக்கே உலை வைக்கப் பார்க்கறாங்க.”

“ நீங்க உங்க ஜெனரல் மானேஜர் கிட்ட அவங்களைப் பத்தி கம்ப்ளெய்ன் பண்ணறதுதானே?”

“ கம்ப்ளெய்ண்டா.. அவங்களை ஒரு வார்த்தை கேட்க மாட்டார் ஜெனரல்  மானேஜர். கேட்டால் அவர் பெயர் கெட்டுப் போயிடும் பார்.  அதென்ன லைன் ஆஃப் கன்ட்ரோல்.  அவர்  என்னைத்தான் கேட்பாராம்.  நான்தான் அவர்களை டாக்ட்புல்லா டீல் பண்ணணுமாம்.  பிராபரா வேலை வாங்கணுமாம்.  அதையேன் கேட்கறே..? ஒரே டார்ச்சர்.. நிம்மதிங்கறதே கிடையாது “ என்ற மோகனின் குரல் நன்றாகவே தணிந்திருந்தது.

“ வாங்க! நிம்மதியாப் படுங்க!  தூங்குங்க! என்றப்டியே பிரியா லைட்டுகளை அணைக்கும் சத்தம் கேட்டது.  அதற்குப் பிறகு அவர்களது மெலிதான பேச்சொலியும், சிரிப்பொலியும் கேட்டுக் கொண்டிருந்தது.

எனக்குக் கோபம் கோபமாக வந்தது.  பிரியாவுக்கும், மோகனுக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருக்கும்.  அதற்குள் என் கணக்குப்படி முப்பது வருட வாழ்க்கைத் துன்பங்களை அனுபவித்து விட்டாள்.  எதற்கெடுத்தாலும் கோபம், இரைச்சல், திட்டு.  மோகன் அவளைத் திட்டுவதற்காகவே வீட்டிற்கு வருகிறானோ என்று கூடத் தோன்றும் எனக்கு.  அந்தச் சின்னக் குழந்தை படுத்தும் பாடுகளை நாளெல்லாம் சகித்துக் கொண்டு ராத்திரி அவனுடனும் போராட வேண்டியிருக்கு.  என்ன வாழ்க்கை இது?  நாளை அவளிடம் கேட்டு விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

முந்தைய நாள் இரவில் ஒன்றுமே நடக்காதது போல் மோகன் ஆபீஸிற்குக் கிளம்ப, பிரியா அவனுக்குப் புன்முறுவலோடு, ‘ டாடா’ காட்டிக் கொண்டிருந்தாள்.  மோகன் கிளம்பிப் போனதும் வீட்டிற்கு உள்ளே போகக் கிளம்பியவள் என்னைப் பார்த்ததும் தயங்கிப் புன்முறுவலோடு நின்றாள்.

“ ஏண்டி பிரியா! உன்னாலே எப்படி சிரிக்க முடிகிறது? நேத்து ராத்திரி என்ன கத்துக் கத்தினான் அவன்? இப்போ ஒன்றுமே நடக்காத மாதிரி அவனுக்கு ‘டாடா’ சொல்லிக் கொண்டிருக்கிறாயே ! நானா இருந்தா ஒண்ணுக்கு ஒண்ணா நின்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டிருப்பேன்.”

“ மாமி! அங்கேதான் நாம தப்பு பண்ணறோம். ஆபீஸிலே ஏகப்பட்ட பிரஷர்.  டென்ஷன்.. மானேஜரின் ஏச்சுக்கள் வேறே.  இதையெல்லாம் கொட்டித் தீர்க்க ஒரு வடிகால் வேண்டாமா?  அதுதான் நம்மைப் போல உள்ள மனைவிகள். நானும் முரண்டு பிடிச்சிட்டு கத்திட்டிருந்தா என்ன ஆகும்?  அவருடைய டென்ஷன் ஜாஸ்தியாயிடும்.  டென்ஷனைக் குறைக்க வேறு என்னடா வழி என்று தேடத் தோன்றும்.  இதனாலேதான் பாதிப்பேர் குடிப் பழக்கத்திற்கும், வேறே கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகறாங்க.  இப்போ என்ன, புருஷன்தானே திட்டறார். அதுவும் நம்மைத் திட்டலே. ஆபீஸிலே கொட்டித் தீர்க்க முடியாததை இங்கே வந்து கொட்டறார்.  இல்லாமே, என் மேலே அன்பு இல்லாமலோ, கோபத்தாலோ திட்டலே.  இந்த விஷயத்தை நாம புரிஞ்சிக்கிட்டோம்னா அவருக்கு நாமும் வீட்டிலே டென்ஷன் கொடுக்காம இருந்தோம்னா ஒரு பிராப்ளமும் இல்லே.  நேத்து அப்படிச் சத்தம் போட்டவர் அதுக்கப்புறம் எவ்வளவு ஃபீல் பண்ணினார் தெரியுமா மாமி” என்று வெட்கத்துடன் புன்னகைத்தாள் பிரியா.

‘ தெரியும்டி! உங்கள் வீட்டிலே நீங்க பேசற பேச்சுக்கள், அசைவுகள் அத்தனையும் எனக்குத் துல்லியமாகக் கேட்கிறதே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு நானும் அவளைப் பார்த்துப் புன்முறுவலித்தேன்.

**************************