ஷாலு மை வைஃப்

ஷாலு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகிறாள். எனக்கே ரொம்ப சந்தோஷமாயிருக்கு. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? அவர்களையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு வந்தேன்.

pic8

சிங்கப்பூரிலிருந்து கிளம்பறதுக்கு முன்னாடி  ஷாலு போன் பண்ணி ச்  சொன்னாள் – சிங்கப்பூர் ஏர்போர்ட்டில  ஒரு வி‌ஐ‌பி இருக்காராம். குருஜினியும் அவளும் அவரைப்பார்த்துப் பேசிவிட்டுக் கிளம்பி வருவோம் என்று சொன்னாள்.

“யார் அந்த வி‌ஐ‌பி ” என்று கேட்டதுக்கு “அதை யார் கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு  சொல்லியிருக்காங்க ” என்றாள்.

“சரி யார் கிட்டேயும் சொல்லல , நீ சொல்லு”  என்றேன்.

“அட, குறிப்பா உங்க கிட்டேயும் குழந்தைகள் கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க” என்றாள்.

” சரி, ஷிவானி கிட்டே கொடுக்கறேன். அவ தான் லாயக்கு. உங்கிட்டேயிருந்து உண்மையை வரவழைக்க” என்றேன்.

” ப்ளீஸ் அவ கிட்டே இதை சொல்லிடாதீங்கோ , அவ ஏதாவது கேட்டா நான் உளறிடுவேன் அப்பறம் பிரச்சினையா போயிடும்.”

“ஓகே , சொல்லல, ஒரு சின்ன க்ளூ கொடேன். “

” ப்ளீஸ், நான் நேரில வந்து எல்லாத்தையும் சொல்றேன். அப்புறம் சிங்கப்பூரிலிருந்து உங்களுக்குப் பிடிச்ச சென்ட் வாங்கி வைச்சிருக்கேன்”

” நீ போட்டுக்கற சென்ட் தானே? உனக்குப் பிடிச்ச சென்ட்டுன்னு  சொல்லு”

” நீங்க தானே அதையே போட்டுக்கோன்னு சொல்வீங்க! அப்பறம் பசங்களுக்குக் கேட்டதெல்லாம் வாங்கிட்டேன்.”

“எனக்கு என்ன வாங்கிட்டு வர்ரே? “

” நீங்க தான் ஒண்ணும் வேணாம். எல்லாம் சென்னையிலேயே கிடைக்குதுன்னு சொன்னீங்களே?”

“அடிப்பாவி, எங்க மேனேஜர் ஒரு லேப்டாப் கேட்டாரே வாங்கிட்டியா ?  “

“சாரி, எலெக்ட்ரானிக்ஸ் சாமான் எல்லாம்  வாங்கிட்டு வந்தா சிக்கல் வருமுன்னு குருஜினி சொன்னாங்க. அதனால் அதை வாங்கலை . அதுக்குப் பதிலா எனக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கிக்கிட்டேன். பின்னாடி ஷிவானி கல்யாணத்துக்கு உதவும்”  .

” நல்லதாப் போச்சு, நானே வேண்டாமுன்னு சொல்லலாம்னு நினைச்சேன். மறந்து போயிட்டேன். அந்த மேனேஜர் சாவு கிராக்கி போன வாரம்  வேலையை ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான்.”

” அடப் பாவமே! என்ன பண்ணப்போறார்? “

” புதுசா ஒரு ஸ்டார்டப் ஆரம்பிக்கப் போறாராம். காபி கிளப்!  கும்பகோணம் டிகிரி காபி !  வேணுமுன்னா சிங்கப்பூரிலிருந்து அவருக்கு ஒரு காபி பில்டர் வாங்கிக் கொடுக்கலாம்”

” அவர் காபிக் கடை  வைச்சா என்ன ? டீ கடை  வைச்சா என்னா?  நான் மோடியைப் பாக்கப் போறேன்னு யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க! ஐயையோ ! உங்க கிட்டே சொல்லிட்டேனே!”

“அடடா, பேரு சரியா காதிலே விழலையே ! எந்த லேடியப் பாக்கப் போறே?”

” சும்மா நடிக்காதீங்கோ, உங்களுக்குப் பாம்புச்செவின்னு எனக்கு நல்லாவே தெரியும்! “

“பாம்புக்குக் காதே  இல்லையாம்”

” சரி சரி,  உங்க கிட்டே சொல்லவும் முடியலை சொல்லாம இருக்கவும் முடியலை”

“சரி, சொல்ல வந்ததை முழுசா சொல்லிடு, இல்லாட்டி உனக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. அப்புறம் சென்னை பிளைட்டுக்குப் பதிலா டெல்லி பிளைட் பிடிச்சுப் போயிடுவே”

” சரி, மனசில வைச்சுக்குங்கோ, யாரு கிட்டேயும் சொல்லக்கூடாது “

“பைத்தியமே, மனசில வைச்சுக்குங்கோன்னு  மனசுக்குள்ளேயே பேசினா எனக்கு எப்படிக் கேட்கும்? சொல்லறதுன்னா சொல்லு,  இல்லாட்டி விட்டுடு. “

“அட, நீங்க வேற,  யாரோ நான் பேசறதை ஒட்டுக்  கேட்கிற மாதிரி இருந்தது. “

” .ஓகே ஷாலு, ஒரு விஐபின்னு நீ சொன்னதும், ரஜினிகாந்த் தான் கபாலி ஷூட்டிங் முடிச்சு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு வறார்னு நினைச்சேன். நீ சொல்றதைப் பார்த்தா இது ரொம்ப ரகசிய மிஷன் மாதிரி இருக்கு. நேரில வந்தப்பறமே சொல்லு”

” சொல்றதை முழுசாக் கேளுங்கோ!  நானும் குருஜியும் சென்னை ஏர்போர்ட்டில செஞ்ச யோகா பயிற்சியைப் பாராட்டி வி ஐ பி லவுஞ்சில எங்களுக்கு டீ கொடுக்கப் போறார். “

” ஹை ! அவர் கையாலே டீயா? நீ ரொம்ப லக்கி கேர்ள். அவரும் உங்க கூட தான் சென்னைக்கு வர்ராரா? வந்தா  இவர் தான் என் ஹஸ்பெண்டுன்னு அறிமுகப் படுத்துவியா? “”

” அவர் வேற பிளைட் பிடிச்சு டெல்லி போறாராம்”

” அவ்வளவு தானா? வெறும் டீ யோட மீட்டிங் ஓவரா? “

இன்னொரு சமாசாரமும் இருக்கு , அதை சென்னை வந்த பிறகு சொல்றேன்”

” ஷாலு, உனக்கும் சஸ்பென்சுக்கும் ஆகாதுன்னு உனக்குத் தெரியுமில்லே? பின்னே ஏன் முயற்சி பண்றே? “”

” அப்படியா சொல்றீங்க? மற்றவை நேரில் தான் ” அப்படின்னு  போனை வைத்து விட்டாள்.

என்னவா இருந்தாலும் சரி, நேரிலேயே சொல்லட்டும். இன்னும் விலாவாரியா சொல்லுவா! அவ கதை சொல்றதைக்  கேட்கிறது ரொம்ப நல்லா இருக்கும். நடுவில நான் ஏதாவது ஏடா கூடமா பேசினா  அவளுக்கு வருமே ஒரு கோபம். காது சிவந்து போய், கண் பெரிசா விரிஞ்சு உதடு துடிக்கும்.இந்த ஷிவானியும் அப்படியே அவ அம்மா  தான். அவளுக்கும் ஷாலு மாதிரியே கோபம் வரும். அப்படியே பிஞ்சுக் கையாலே நெஞ்சிலே  குத்துவா.

pic6

“அப்பா , நாங்க ரெடின்னு ”  ஷியாமும், ஷிவானியும் வந்தார்கள். கார் ஏர்போர்ட்டை நோக்கிப் பறந்தது. பார்க் செய்யும் போதே  மொபைல் அடித்தது. “

” நீங்க தானே ஷாலு மேடத்தின் ஹஸ்பெண்ட்? ” என்ற அதிகாரக் குரல் கேட்டது.

“ஆமாம், நீங்க யாரு ? ‘  என்று கேட்டேன்.

” நான் டெல்லி பஜ்ரங்க்பலி சேனா தலைவர் ! உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்”

” என்  கூட என் குழந்தைகள் வந்திருக்காங்க. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும் ? “

pic7

” பயப்படாதீங்க !  நீங்க ஏர்போர்ட்டுக்கு உள்ளே போக டிக்கட் எடுக்க வேண்டாம்.  உங்க கூட  உங்க குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாங்க . ஷாலு மேடம் வர்ற வரைக்கும் வி ஐ பி லவுஞ்சில் உட்கார்ந்து பேசலாம் . நான் ரெண்டாம் நம்பர் கேட் வாசலில் சிவப்பு குர்தா போட்டுக்கொண்டு உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் ”  என்றார்.

எனக்குக் கொஞ்சம் தலை சுற்றியது.

மற்றவை பிறகு