அந்த இரண்டு நிமிடங்கள் ….! ——- நித்யா சங்கர்

                                –

      என்ன ஆயிற்று..? எல்லாம் சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தது..!

      ‘ மாங்கல்யம் தந்துணானேனா..’ என்று மாங்கல்யச் சரடை மாப்பிள்ளையிடம் நீட்டிக் கொண்டு,  ஆள்காட்டி விரலை உயரே தூக்கி,  ‘ கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..’ என்று கூறப் புறப்பட்ட புரோகிதரின் விரலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கடுகடுத்த முகத்தோடு சிடுசிடுவென புரோகிதரின் காதில் ஏதோ முணுமுணுத்தான் மாப்பிள்ளை முகுந்தன்.  அவரும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடியே என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

      கெட்டிமேளம் கொட்டுவதற்கான சைகையை எதிர்பார்த்திருந்த நாதஸ்வர வித்வான்கள், அச் சைகை வராதது கண்டு குழப்பத்தோடு ஏதேதோ பாட்டுக்களை வாசித்துக் கொண்டிருந்தனர்.

      மாப்பிள்ளை முகுந்தன் வாட்சைப் பார்த்துக் கொண்டு அருகிலிருந்த அவன் தந்தையிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தான்.  மேடையில் நிலவிய திடீர் நிசப்தத்தால், மாங்கலய தாரணத்தை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருந்த, அத் திருமண மண்டபத்தில் இருந்த சுற்றமும், உறவினரும் குழப்பத்தோடும், சிறிது கவலையோடும் நிசப்தமாக உட்கார்ந்திருந்தனர்.  திடீர் நிசப்தத்தைக் கவனித்த பெண்ணின் தகப்பனார் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மேடையில் அவர்கள் மிகவும் சன்னமாகப் பேசும் பேச்சு மண்டபத்திலுள்ளோர் காதுகளில் தெளிவாக விழவில்லை. 

      ‘ இல்லைடா..  தேர் ஈஸ் சம்திங் ராங்…  மாப்பிள்ளையைப் பார்.. வாட்சை வாட்சைப் பார்க்கிறார்.  ரொம்ப சீப்பான வாட்சை வாங்கிக் கொடுத்திட்டாங்களோ..? அதனாலே மாப்பிள்ளை கோவிச்சிட்டிருக்காரோ..? என்றார் என் பின் வரிசையில் உட்கார்ந்து இருந்த ஒருவர்.

      அதற்குள் மாப்பிள்ளையிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் பெண்ணின் தந்தை.  மாப்பிள்ளை முகுந்தன் மணப்பெண் ரதியின் கழுத்தைக் காட்டிக் காட்டி என்னவோ சன்னமான குரலில் பெண்ணின் தந்தையிடம் கூறிக் கொண்டிருந்தான்.

      ‘ நோ வே.. இது வரதட்சணைப் பிரச்னைதான்.  அங்கே பார்.. மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தைக் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்கிறார்.  பெண் வீட்டார் சொன்னபடி கரெக்டாக நகைகளைப் போடவில்லையோ..? என்றார் மற்றொருவர்.

      மேடையில் என் நண்பன் இதையெல்லாம் பார்த்தபடி நின்றிருந்தான். ‘ என்னதான் நடக்கிறது..? இங்கே வந்து சொல்லேன்’ என்று அவனை சைகையால் அழைத்தேன்.

      ‘ கொஞ்சம் பொறு வருகிறேன்..’ என்று அவனும் பதிலுக்கு சைகை செய்தான். ‘ என்ன நடக்கிறது?’ என்ற சஸ்பென்ஸ்தான் நீடித்தது.

      பெண்ணின் தகப்பனார் குழப்பத்தோடும், கவலையோடும் மாப்பிள்ளையின் தந்தையின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்,

      மாப்பிள்ளையின் தந்தையும் தன் மகனிடம் ஏதோ மன்றாடினார்.  முகுந்தன் அதே கடுகடுப்பான முகத்துடன் மணப் பெண்ணின் கழுத்தைக் காட்டிக் காட்டி ஏதேதோ தன் தந்தையிடம் சொன்னான்.

      ‘ ஏம்பா! எனக்கென்ன தோணரதுன்னா.. மணப் பெண்ணுக்கு ஒரு தங்கச்சி இருக்காள் இல்லையா..? அவள் யாரோடவாவது ஓடிப் போயிட்டாளா.. அதுதான் இவ்வளவு சீரியஸா விவாதிக்கிறாங்களா..? மானம் போயிடுமேன்னு இந்தக் கல்யாணத்தை அரேஞ்ச் பண்ணின பெண்ணின் தகப்பனாரும், பையனின் தகப்பனாரும் ‘ ஏதோ நடந்தது நடந்து போச்சு.. அதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்.  இப்போ தாலியைக் கட்டு’ என்று சொல்கிறார்களோ.. என்ன கொடுமைடா இது?’ என்றார் மூன்றாமவர்.

      எனக்கு எழுந்து அந்த மூன்றாமவரை ஒரு சாத்து சாத்தலாம் என்று தோன்றியது.  அவர்கள் பேச்சு மண்டபத்தில் யாருக்குமே கேட்கவில்லை.  என்னவென்றே புரியவில்லை.  அதற்குள் இப்படி அபத்தமான அதீத கற்பனையா..? கடவுளே…!

      அதற்குள் மேடையில் சலசலப்பு அடங்க, மாப்பிள்ளை புரோகிதரின் விரலை ரிலீஸ் செய்ய,  புரோகிதரும் தனது ஆள்காட்டி விரலை உயர்த்தி, ‘ கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கணீரென்று முழங்கினார்.

      அவர்களும் இந்தக் குழப்பத்தில் – கற்பனையில் – இருந்தார்களோ என்னவோ, நாதஸ்வர, தவில் வித்வான்கள் சில வினாடிகள் நிதானித்துக் கெட்டி மேளம்- சகல வாத்தியம் – முழங்கினர்.  மாப்பிள்ளையும் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடக் கல்யாணம் இனிதாக முடிந்தது.  

      மாங்கல்ய தாரணம் முடிந்ததும் என் நண்பன் என்னை நோக்கி ஒரு புன்முறுவலுடன் வந்தான்.

      “ என்னடா… என்ன ஆச்சு? என்ன கன்ப்யூஷன்?”

      “ ஒன்றுமில்லேப்பா.. முகூர்த்த நேரம் ஒன்பதிலிருந்து பத்து மணி வரைன்னு போட்டிருந்தாங்க..  ஆனா மாப்பிள்ளைக்குத் தெரிஞ்ச ஜோசியர், ‘ ஒன்பது நாற்பதிற்குத் தாலி கட்டினா ரொம்ப விசேஷம்னு’ சொல்லி இருந்தாராம்.  மாப்பிள்ளை இதை முன்கூட்டியே புரோகிதரிடம் சொல்லியிருந்தும், அவர் ஏதோ நெனப்பில் ஒன்பது முப்பத்தெட்டிற்கே தாலியை எடுத்துக் கொடுத்துட்டார். பட், மாப்பிள்ளை ‘ இது எங்க லைஃப் பிரச்சினை.  அவ கழுத்திலே மாங்கல்யம் ஒன்பது நாப்பதுக்குத்தான் ஏற வேண்டும்’ என்று பிடிவாதமாக சாதித்து ஒன்பது நாப்பதுக்குத் தாலியைக் காட்டினார்..” என்றான் சிரித்தபடி.

      நான் மெதுவாக என் பின் வரிசையைப் பார்த்தேன்.  கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்ட மகான்கள் யாரையுமே அங்கே காணவில்லை.  எங்கோ ஓடி ஒளிந்து விட்டார்கள் போலும்.

      ‘ஒன்பதிலிருந்து பத்து மணி வரை நல்ல முகூர்த்த நேரமாக இருக்க ஒரு இரண்டு நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ இருந்தால் என்னா..? அதற்காக இப்படியா..?’

      எனிவே.. ஆல் ஈஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல்…