குட்டீஸ்  லூட்டீஸ் —– சிவமால்

மாற்றி யோசி..!

‘ அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்ங்க.. ‘ உன் கழுத்திலே தாலி ஏறினதும் நான் கண்ணை மூடிடுவேன்;னு உடம்பு முடியாம படுத்துட்டிருக்கிற அவளைப் பெத்த அம்மா கதறி அழுதபடியே சொல்லியும் மசியறதாகவே தெரியவில்லையே…  வருகிற வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிட்டே இருக்காளே” என்றாள் என் மனைவி, டி.வி.யில் வந்து கொண்டிருந்த சீரியலைப் பார்த்தபடியே.

நானும், என் மனைவியும், என் பத்து வயது பெண்ணும் சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சிறிது மௌனமாக இருந்த என் பெண் மிதிலா, “ அம்மா! அந்த அக்கா கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுக்குக் காரணம் அவங்க அம்மாதான்.  ‘ உன் கழுத்திலே தாலி ஏறினதும் நான் கண்ணை மூடிடுவேன்னு’ சொன்னா பாசமுள்ள எந்தப் பெண்ணுக்கும்மா கல்யாணம் பண்ணிக்கத் தைரியம் வரும்? அதையே, அந்த ஆன்டி, ‘ உன் கழுத்திலே தாலி ஏறினா, நானும் டென்ஷன் குறைஞ்சு மகிழ்ச்சியால் உடம்பு தேறி இன்னும் நூறு வருஷம் இருப்பேன்னு சொல்லட்டும். அந்த அக்கா வர வரன்கள்ளே ஒண்ண தேர்ந்தெடுத்து சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்குவா” என்றாளே பார்க்கலாம்.

பிரமித்து நின்றோம் நாங்கள்.  என்ன ஒரு அனாலிஸிஸ் . இதுதான் பாசிடிவ் திங்கிங் என்பதா?