படைப்பாளி – மா அரங்கநாதன் ( எஸ் கே என்)

 

நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த, புதுச்சேரியில் வாழ்ந்து வந்து, பிறகு சென்னையில் குடியேறிய  மா. அரங்கநாதன் என்னும் படைப்பாளியின் கதைகளை ஒரு முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தபோது சற்று வித்தியாசமான கதைகளும், அவற்றைச்  சொல்லும் முறையும் கவனத்தை ஈர்த்தது. 2009 ல் வெளிவந்துள்ள  அவரது அறுபதிற்கும் மேற்பட்ட  சிறுகதைகள் தொகுப்பு  நல்ல வாசிப்பு அனுபவமாக இருந்தது.   ஐம்பதுகளில் தொடங்கி  பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை போன்ற இதழ்களில் எழுதத் தொடங்கி உள்ளார்.. சாகித்ய அகாதமிக்காக மொழி பெயர்ப்புகள் செய்துள்ளார். பல பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடப் புத்தகங்களாக   இடம் பெற்றுள்ளன. ‘பரளியாற்று மாந்தர்’ என்னும் நாவல் தவிர பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். ‘மூன்றில்’ இலக்கிய அமைப்பை நடத்தி வந்திருக்கிறார். அதே பெயரில் வந்த சிற்றிதழ் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஒரு சில கதைகள் தவிர மற்றவற்றில் முத்துக்கறுப்பன் என்னும் பெயரில்தான் இவரது கதாநாயகன் இருப்பான்.  நிகழ்வுகளை மட்டுமே சார்ந்த கதைகளாக இல்லாமல் வாழ்வின் புதிர்களைக் காண்பிக்கும் கதைகள்

***   ***  ***

“தேங்காய்” என்னும் இவரது கதை

அசலூரில் அரசாங்க வேலை பார்க்கும் முத்துக்கறுப்பனின் தந்தை, சிவசங்கரன் இறந்து போகிறார். . மூத்த மகனான வேலுவிற்கு உள்ளூரிலேயே வேலை. வருமானமும் குறைவு.  சற்றுப் பேச்சுத் தடுமாற்றமும் உண்டு. பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் பிள்ளை தான் பெண்வீட்டாரிடம் பேசி வேலுவிற்கு மணமுடித்து வைத்தார். அந்தத் திருமணத்தை முன்னின்றும் நடத்தி வைத்தார்.

சிதம்பரம் பிள்ளைக்கு வேலுவிடம் இருந்த நெருக்கம் முத்துக்கறுப்பனிடம் கிடையாது. முத்துக்கறுப்பனுக்கும் அவரிடம் ஒரு பயம். என்னவென்று சொல்லவியலாத பயம். இவனது திருமணத்தில் பக்கத்து வீட்டுகாரராகவே பங்கெடுத்துக்கொண்டார்.

“அவன் ரொம்ப பெரியவன் மாதிரி ஆயிட்டான் – நம்மையெல்லாம் எங்க மதிக்கிறான்” என்று சௌகர்யமாக ஒதுங்கிக்கொள்வார்.

சிவசங்கரனின் காரியங்கள் மளமளவென்று நடந்துகொண்டிருந்தது. சிதம்பரம் பிள்ளைதான் முன்னேயிருந்து காரியங்களைக் கவனித்தார். அவர் குரல்தான் தூக்கியடித்துக்கொண்டிருந்தது. செத்தவரின் விருப்பப்படி அவருக்கு செல்லமான ஆத்தங்கரைத் தென்னந்தோப்பில் தான் அடக்கம் செய்ய முடிவாகியது.       

ஊருக்குப் பெரியவர் என்பதால் மட்டுமல்ல, அங்குள்ள எல்லாருடனும் ஒரு விதத்தில் தொடர்புடையவரது கடைசி ஊர்வலமாதலால், அது சுவாமி புறப்பாடு மாதிரி  தோன்றியது, வீட்டு வாசலிலும் தெருவிலும் நின்ற பெண்கள் கும்பிட்டுக்கொண்டனர். இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த குழந்தைகளின் கைகளைச் சேர்த்து வைத்து கும்பிடச் செய்தவர்களும் உண்டு. ஊர்கிழங்கள் தங்களுடையதை ஒத்திகை பார்த்தன.

காடேற்று, தேங்காய்க் கிழமை, பயிற்றுக் கிழமை, பதினாறாம் நாள் சடங்கு என்று காரியங்கள் நடந்தன.

இரவு,  பெண்டுகள் அழுவதற்காக அழைக்கப்பட்டார்கள். முறைப்படி ஒப்பாரி வைத்தார்கள்.

“கத்திரிக்காய் எங்களுக்கு

கைலாயம் உங்களுக்கு    .  

வாழைக்காய் எங்களுக்கு

வைகுண்டம் உங்களுக்கு”

என்று பாடி பரலோக பதவி அளித்தார்கள்

பெரிய மனிதர்கள் மற்றுமுள்ள காரியங்களைக் குடும்பத்தினரை வைத்துப் பேசலானார்கள். அதை அந்த வீட்டில் பேசவேண்டாமென்று, சிதம்பரம் பிள்ளை தன்வீட்டிற்கு எல்லோரையும் அழைத்தார்.

“அவன் வாயில்லாப் பூச்சி- சர்க்கார் வேலையும் இல்லே- நமக்கு இரண்டு பேரும் ஒண்ணுதான் .ஆனா மேற்கொண்டு பார்த்தா, வேலுதான் கஷ்டப்பட்டிருக்கான்” என்று தொடங்கினார் சிதம்பரம் பிள்ளை.. ” ஆனா இந்த விஷயத்தில முத்து ஏதாவது நினைச்சுக்கக் கூடாது. அவனையும் ஒரு வார்த்தை கேட்டுடணும்”

முத்துக்கறுப்பனின் மனைவியோ, வாயைப் பொத்திக்கொண்டு “இந்த மனிதருக்கு என்ன கெடுதல் செய்தீங்க- இப்படி ஈரல் குலையைப் பிடுங்கறாப்பில கேக்காரே ” என்று முணுமுணுத்தாள்.

ஆனால், முத்துக்கறுப்பனோ “எல்லாம் மாமா சொல்றாப்பிலேயே வைச்சுகிடுவோம்- நான் மாட்டேன்னா சொல்லப்போறேன்” என்றான்.

தென்னந்தோப்பின் மீதான பாகத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம்  முத்துக்கறுப்பன் தனக்கு ஒரு பாரம் இறங்கிவிட்டது போலத் தென்பட்டான். சாவுச் செலவு பூராவும் மூத்தவன்தான் ஏற்றுக்கொண்டான் என்று நம்பிவிடுவது எளிதான விஷயம்.

வயல் வெளிகள் மேலுள்ள உரிமையும் அப்படித்தான் என்ற எண்ணமும் ஏற்பட்டது.

திடீரென வெளியில் ஏதோ அமளி.

இன்று அதிகாலை தேங்காய் திருடும்போது ஒருவன் அகப்பட்டானாம். அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

கருக்கலிலேயே மரத்தில் ஏறி, அங்கிருந்தபடியே ஒரு கயிறு மூலம் கீழே மெதுவாக இறக்கிவிடுவானம். இறங்கி வந்து வயல் வரப்பு வழியாக அவன் ஊர் சென்று விடுவானாம்.

“என்ன முத்து! நீதான் டவுன்லே இருக்கியே. இது மாதிரி பார்த்திருக்கியா?” என்று ஊர் மூத்தவர் கேட்கிறார்.

முத்துக்கறுப்பன் அசட்டுச் சிரிப்போடு பார்க்கையில் சிறிது வியர்த்தது. ஆற்றங்கரை காற்று நன்கு வீசிக்கொண்டிருந்தது. தேங்காய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த நார் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது. நீண்டு…

நீண்டு சென்றது அது- அவனது பயம் துளித் துளியாகக் கண்ணாடியில் படிந்த பனியாகத் துடைக்கப்படுகிறது. வெள்ளை வெளேரென ஓர் ஏழு வயதுப் பையன் துள்ளி அந்த ஆற்றங்கரைப் பகுதியில் செல்வது மங்கலாகிறது. அது அற்புதமான ஓர் அதிகாலைப் பொழுது.

பலூன் போல ஒரு குலை மரத்திலிருந்து இறங்குகிறது. இரண்டு கால்கள் இறங்கி வருவது தெரிகிறது. அந்த நடை இவனுக்குப் பரிச்சயமாகத் தோன்றுகிறது. மேட்டில் ஏறித்தான் வரவேண்டும். பக்கத்தில் வந்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த ஆள் வேறுபுறம் திரும்பிப் போய்விடுகிறார்.

முத்துவிற்கு நடுக்கம். அவரை

வீட்டில் பார்த்தால் எப்படிப் பேசுவது என்ற எண்ணம் தோன்றி நடுக்கம் அதிகமாகிறது. ஆனால் ஏழு வயது சிறுவன் வீடு போகாமலிருக்க முடியாது.

றுநாள் வீடு திரும்பும் போது தென்னந்தோப்பைக் கடந்து போகிறார்கள், முத்துக்கறுப்பனும் அவன் மனைவியும்.

“உங்க பேரில என்னதான் அப்படியொரு ஆங்காரமோ தெரியலை அந்தப் பாவி மனிசனுக்கு” என்று திரும்பவும் ஆரம்பித்தாள் மனைவி

“அது அப்படியில்லே- நாந்தான் பதினஞ்சு வருஷமா பயந்துகிட்டிருந்தேன்னு நினைச்சேன். அப்படியில்லே. அவர்தான் அதிகமா நடுங்கிக்கிட்டு இருந்திருக்காரு” என்று சொல்ல நினைத்தான் முத்துக்கறுப்பன்.

என்று முடிகிறது.

படிக்கவேண்டிய இவரது பல கதைகளில் இணையத்தில் கிடைப்பவற்றில் சில  

மூன்றில்      ஞானக்கூத்து