ஹோசசிகுரு

 
விவசாயத்தில் முதலீடு செய்து லாபமும் காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
 
அது எப்படி முடியும் ?  என்று கேட்பவர்களுக்கு அசோக் ஜெயந்தி, ஸ்ரீராம் சிட்லூர், ஸ்ரீநாத் ஷெட்டி என்ற மூன்று இளைஞர்கள் பதில்  அளிக்கிறார்கள் என்று பெட்டர் இந்தியா இணைய தளம் கூறுகிறது.  
 
இவர்கள் மூவரும் தங்கள் பொறியியல் துறையை விட்டுவிட்டு விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்வது எப்படி என்று செய்து காட்டி மற்றவர்களையும் வழிப் படுத்துகிறார்கள்.
 
தற்போது இவர்கள் விவசாயத்தில் மக்கள் முதலீடு செய்யும் வகையில்  ஒரு நிறுவனத்தை நிறுவியிருக்கிறார்கள். இதற்குக் கன்னடத்தில் ஹோசசிகுரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இளந்தளிர் என்று அதற்குப் பொருள். இவர்கள் கோடான கோடி பெறுமான  விவசாய நிலத்தை நிர்வகித்து  விவசாய விளை பொருட்கள், தோட்டப் பயிர்கள், மரங்கள், நாற்றுப் பண்ணை என்று பல வகைகளில் அவற்றை மேம்படையச் செய்திருக்கின்றனர்.
 
தரிசாக உபயோகமில்லாமல் இருக்கும் நிலங்களில்  விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்து அவற்றில் லாபமும் அடையச் செய்வது இந்த நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது.
 
இந்த விவசாய முதலீட்டுத் திட்டத்தில்,
 
முதல் படி,  முதலீட்டுக்குத்  தக்க விவசாய நிலத்தைத்  தேர்ந்தெடுப்பது  
 
இரண்டாவது படி, தேந்தெடுக்கப்பட்ட பயிருக்குத் தக்கவாறு நிலம் , சொட்டு நீர்ப் பாசனம், மண் செறியூட்டல், ஆழ் நிலக் குழாய்கள் , வேலை செய்ய உதவியாளர்கள்  போன்றவற்றைத் தயார் செய்தல்
 
மூன்றாவது படி,  இந்த விளை நிலங்களையும், மற்ற பயிர் வளர்ப்பு – பாதுகாப்பு செய்கைகளை இந்த நிறுவனமே முதல் மூன்று மாதங்களுக்கு நிர்வாகித்தல். அதற்குப் பிறகு முதலீட்டார்கள் தாங்களாகவே விவசாயத்தைத் தொடராலாம் அல்லது இந்த நிறுவனத்திடமே நில நிர்வாகத்தை ஒப்படைக்கலாம்.
 
இந்த நிறுவனம் நவீன விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தி குறைவான செலவில் நிறைய மகசூல் பெறும் பயிர்களை  விளைவிப்பதில் வெற்றி கண்டு அவற்றைச்  செயல் படுத்தி வருகிறார்கள்.
 
குறைந்த முதலீடு செய்பவர்களுக்கு குறுகிய காலப் பயிர்களான வாழை, தர்பூசணி, இஞ்சி, பப்பாளி போன்றவற்றை விளைவிக்கச் செய்கிறார்கள்.
 
பெரும் முதலீட்டார்களுக்குப் பண்ணை நிலங்கள் வாங்கி அவற்றில் தேக்கு, சந்தனம் போன்ற மரங்களைப் பயிர் செய்கிறார்கள்.
 
இவர்கள் விவசாய அறிஞர்களையும்  விஞ்ஞானி களையும் கலந்து ஆலோசித்தே  திட்டங்களைத் தயார் செய்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் தங்கள் நிலங்கள், பயிர் பற்றிய விவரங்களை  உடனுக்குடன் இணைய தளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள்.
 
தற்போது இந்த இளந்தளிர் நிறுவனம் பங்களுருக்கு வெளிப்  புறத்திலும் ,  ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்திலும்   2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயப் பண்ணை அமைத்திருக்கிறார்கள்.
 
நிலத்தை அதன் தன்மை கெடாதவாறு செய்து விவசாயத்தை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது தான் இத் திட்டத்தின் முக்கிய அம்சம்.
 
இதில்  வரும் வருமானத்திற்கு வருமான வரி  கிடையாது என்பது இதன் சிறப்பு அம்சம்.
 The Better India (94)