அலாரம் – அழகியசிங்கர்

அழகியசிங்கர் நவீன விருட்சம் என்ற சிற்றிதழை கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகத் தொடர்ந்து  நடத்தி வருபவர். சிறந்த கதாசிரியர் – பதிப்பாளர் -மேடைப் பேச்சாளர். அவரது நவீன விருட்சத்தின் 100 வது இதழ் விரைவில் வெளிவரப் போகிறது. அவர் குவிகத்திற்கு மாதம் ஒரு கதை எழுத ஒப்புக் கொண்டது குவிகத்தின் அதிர்ஷ்டம் . 
 
                             
வந்து இறங்கியபோது மணி எட்டாகிவிட்டது.  குருமூர்த்தி அலுத்துக்கொண்டான்.  வண்டியை வாசலில் வைத்தான்.  மாடிக்குப் போய் அறைக் கதவைத் திறந்தான்.  ஃபேனைப் போட்டு சேரில் காலை நீட்டியபடி உட்கார்ந்து கொண்டான்.  பின் ச்சூ..கொட்டினான். அலுப்பாக இருந்தது.  தினமும் அவனால் எப்படி இவ்வளவு தூரம் வண்டியில் சென்று திரும்பி வந்து இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனால் அவனை நம்ப முடியவில்லை.  கடந்த சில மாதங்களாக அவன் இப்படித்தான் வந்து கொண்டிருக்கிறான்.ART 8
 
சட்டையைக் கழட்டினான்.  பின் லுங்கியைக் கட்டிக்கொண்டு பேண்டை மாட்டினான்.  பாத்ரூம் சென்று முகத்தை தண்ணீர் விட்டு அலம்பிக்கொண்டான். குளிர் தண்ணீர் பளிச்சென்று முகத்தில் பட்டவுடன் ஆரோக்கியமாக இருந்தது.  பவீத்திரா மெஸ்ஸிற்கு போன் செய்தான்.
 
என்ன டிபன்?” என்று கேட்டான்.
 
ரவா உப்புமா..” என்று பதில் வந்தது.
 
அலுப்பாக இருந்தது குரூமூர்த்திக்கு…ஏன் பேசாமல் அர்ச்சனா ஓட்டலுக்குப் போகலாமா என்று யோசித்தான். அப்படித்தான் முடிவு செய்தான்.
அப்போதுதான் அந்தப் போன் வந்தது.
 
சார்,  நீங்கள் ஏஎம் மா?”
 
ஆமாம்.  ஆமாம்.”
 
“உடனே வாங்க…உங்கள் பாங்கிலிருந்து பர்கலரி அலார்ம் சத்தம் போடுகிறது..திருடர்கள் வந்திருப்பார்கள்..”
 
சொன்னது பந்தநல்லூரிலுள்ள சப் இன்ஸ்பெக்டர்.  ஒரு லேடி.
குருமூர்த்தி யோசித்தான்.  பின் சொன்னான் :
 
திருடர்கள் வர வாய்ப்பே இல்லே..”
 
சீக்கிரம் வாங்க…உங்க பாங்க் முன்னாடி ஒரே கூட்டம்..”
 
கூட்டமா…இதோ வர்ரேன்..”
 
திரும்பவும் பந்தநல்லூருக்குப் போக வேண்டுமென்பதை நினைத்தபோது குரூமூர்த்திக்கு அலுப்பாக இருந்தது.  ஏன்டா இதுமாதிரி அவஸ்தையில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்தான்.
 
ராஜேந்திரனுக்குப் போன் செய்தான்.  “ஏன் சார்?”
 
ராஜேந்திரன் வாங்க..பர்கலரி அலாரம் கத்தறது…பாங்க் முன்னாடி கூட்டம்..”
 
வாங்க வாங்க..நான் ரெடியா இருக்கேன்..”
 
ராஜேந்திரன் பந்தநல்லூரில் குரூமூர்த்தியுடன் பணிபுரிபவர்.  க்ளார்க். அவருக்கு குரூமூர்த்தி மாதிரி ஆக வேண்டுமென்ற ஆசை..
 
திரும்பவும் பாண்டை மாட்டிக்கொண்டு, ஜோல்னா பையில் இருக்கும் ஆபீஸ் கீயை பாண்டில் வைத்துக்கொண்டு. வாசலில் வீற்றிருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு, கீழே குடியிருக்கும் மாமியிடம் வாசல் கேட்டைப் பூட்ட வேண்டாமென்று சொல்லி அவர்கள் வீட்டின் உள்ளே நோட்டம் விட்டான். ரம்யா கண்ணில் தட்டுப்படவில்லை.
 
பின் அர்ச்சனா ஓட்டலுக்குச் சென்று இட்டிலியும் காப்பியையும்   உண்டு அவசரம் அவசரமாக பந்தநல்லூருக்குக் கிளம்பினான்.
 
அதற்குள் இன்னொரு போன் வந்துவிட்டது.  “இதோ வர்ரேன்..”என்றான்
 
குரூமூர்த்தி.  அவசரத்தில் ஆபிஸ் சாவியை எடுத்துக்கொண்டு வந்தோமா என்று யோசித்தான்.  இப்படி அடிக்கடி அவனுக்கு சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். பின் பேன்ட் பையில் கையை வைத்து சோதித்துக்கொண்டான்.  சரி..எல்லாம் இருக்கு..
 
பாதி தூரம் டூவீலரில் பறந்து சென்று கொண்டிருந்தபோது,
ஸ்ரீனிவாசனிடமிருந்து போன் வந்தது.  “நான் கும்பகோணம் வந்து விட்டேன்..நீ போய்ப் பாக்கறியா?” என்றான் சீனிவாசன்.
 
நான் பாத்துக்கறேன்..நீ கவலைப்படாதே..” என்றான் குரூமூர்த்தி.
 
சீனிவாசனும் அவனைப்போல ஒரு ஏஎம்.  நடிகர் நீலூ ஜாடையில் இருப்பான்.  காலை ஆபீஸ் நேரத்தில் பக்கத்திலிருக்கும் டீ கடையில் போய் போண்டா சாப்பிடுவான். போண்டா சீனு என்று செல்லமாகக் கூப்பிடுவான்.
 
மானேஜர் பழனிச்சாமியும் போன் செய்தார்.  அவர் அன்று லீவு.  திருச்சியில் இருந்தார்.  “என்னப்பா பர்கலரி அலாரம் கத்தறதாமே..போய்ப் பாருங்க…எனக்குப் போன் பண்ணுங்க்..”
 
சரி சார்..”என்றான் குரூமூர்த்தி.
 
மயிலாடுதுறை மேம்பாலத்தைத் தாண்டி வரும்போது.  எதிரில் வண்டிகள் ஒளிக் கற்றைகளை குரூமூர்த்தி மீது வாரி இறைத்தன.   தடுமாறியபடி வண்டியை ஓட்டினான்.
 
முதலில் ராஜேந்திரனைப் போய்ப் பார்க்க வேண்டும்.  அங்கு டூவீலரை வைத்துவிட்டு பின் ஒரு வாடகைக் காரை எடுத்துக்கொண்டு பந்தநல்லூருக்குப் போக வேண்டும்.  இருட்டில் ஹோன்னு இருக்கும் பந்தநல்லூருக்கு டூவீலரை எடுத்துக்கொண்டு ஓட்ட முடியாது.
 
ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தவுடன், ராஜேந்திரன் ரெடியாக இருந்தார்.
உடனே இருவரும் கிளம்பினார்கள்.
 
ஏன் இப்படி ஆயிற்று என்று தெரியவில்லை,”என்றான் குரூமூர்த்தி.
 
எனக்கு அந்த ஊர்ல இருக்கிற அக்பர் பாய் போன் பண்ணினார்..பாங்க் முன்னாடி ஒரே கூட்டமாம்…”
 
இதெல்லாம் தலையெழுத்து ராஜேந்திரன்…நிம்மதியா ஹெட் ஆபிஸிலே இருந்தேன்.  ஒருத்தன் கேள்வி கேட்கமாட்டான்…ஏன் பிரமோஷன்னு மாட்டிக்கொண்டேன் தெரியலை..”
 
இது சகஜம்..இதுக்கெல்லாம் ஏன் அலுத்துக்கிறீங்க…நல்ல காலம் நீங்க சாவியை வைச்சிருக்கீங்க..”
 
சீனிவாசன்கிட்டேயும் சாவி இருக்கு..”
 
அவர் வேஸ்ட்…அவர் எங்க கும்பகோணத்திலிருந்து வர்றப் போறாரு..”
 
ராஜேந்திரன் நீங்க இந்த ஊர்க்காரரு..தவறிப்போய்க் கூட பிரமோஷன்ல போயிடாதீங்க…”
 
அதான் கிடைக்க மாட்டேங்கறதே….நானும் பரீட்சை எழுதறேன்.  தேறவே முடியலை..”
 
கவலைப்படாதீங்க..ஆனா எழுதாதீங்க…எழுதினாலே புடிச்சுப் போடுவாங்க..”
 
அப்படியா?”
 
காலம் மாறிப்போயிடுத்து..எங்கும் ஆள் இல்லை..எழுதினாப் போதும் கொடுத்துடுவாங்க..”
 
“இந்த ஒரு தடவ மட்டும் எழுதுவேன்…அப்புறம் எழுத மாட்டேன்..”
 
“ராஜேந்திரன் ஒவ்வொருத்தர் தலையெழுத்தை மாத்த முடியாது…என்ன செய்யறது..என்னை நீங்க பாக்கலை..நான் சந்தோஷமாவா இருக்கேன்..முழுக்க முழுக்க ஆபீஸ்ன்னு ஆயிடுத்து..வேற சிந்தனை இருக்கா..விலங்கை மாட்டறாப்பலே சாவியை வேற கொடுத்துட்டாங்க..சரி ஆபிஸ விட்டு சீக்கிரமா கிளம்ப முடியறதா…அப்படியே கிளம்பினாலும் பழனிச்சாமிக்குப் பிடிக்கலை..அவர் இன்னும் ஆபிஸிலேயே உட்கார்ந்திருக்காரு..”
 
“நீங்களும் சீனிவாசனும் வீட்டுக்குக் கிளம்ப போட்டிப் போடறா மாதிரி தெரியுதே…”
 
“அவன் என்ன கஸ்டமரைப் பார்த்து சத்தம் போடறான்…யாராவது மொட்டை எழுதினா…அவனைத் தூக்கிடுவாங்க…இன்னும் மோசமான இடத்துலப் போடுவாங்க..”
 
“அவர் எதுக்கும் கவலைப்பட மாட்டார்…”
 
“அவன் 6மணிக்கெல்லாம் கிளம்பிடறான்…இப்பப் போனாதான் பஸ் பிடித்துப் போக ஏழரை ஆகும்னு சொல்றான்…பழனிச்சாமி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு…நானும் சொல்லிட்டேன்…சீனு கிளம்பினா நானும் கிளம்பிடுவேன்னு..”
 
“பழனிச்சாமி பாவம் சார்…உங்க இரண்டுபேர்க்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறாரு…”
 
“நான் பாவம்பா…சென்னையிலிருந்து இங்க வந்து எல்லார்கிட்டேயும் மாட்டிண்டு முழிக்கிறேன்..”
 
கார் அந்த இருட்டில் போய்க்கொண்டிருந்தது.  ராஜேந்திரன் பேசவில்லை.  அவருக்கு எப்படியும் ஆபிஸராக வேண்டுமென்ற வெறி இருந்துகொண்டு இருக்கிறது.  சிலருக்கு இப்படித்தான்.  ஆபீஸ். பின் அதைப் பற்றிய சிந்தனை இருக்கும்.  பழனிச்சாமிக்குக் கூட மேலும் மேலும் பதவி உயர்வு பெற்றுக்கொண்டே போக வேண்டுமென்ற வெறி.
 
குருமூர்த்தி ஏன் இதில் மாட்டிக்கொண்டோம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
 
சாலையோரங்களில் இருந்த பனை மரங்கள் காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தன.
 
“ராஜேந்திரன், இந்தப் பனை மரங்கள் இருட்டில் பேய்கள் டான்ஸ் ஆடுவதுபோல் ஆடுகின்றன.”என்றான் குருமூர்த்தி.
 
ராஜேந்திரன் சிரித்துக்கொண்டே,”உங்க கற்பனையே வித்தியாசமாக இருக்கிறது, சார்..”என்றார்.
 
குரூமூர்த்தி இப்படித்தான் எதாவது சொல்லிக் கொண்டிருப்பான்.  பின் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறோம் என்று யோசித்துக் கொண்டிருப்பான்.  பேசி முடித்தவுடன் அவனிடம் தென்படும் அமைதி அளவுக்கு அதிகமானது.
 
கார் வங்கி வாசலில் போய் நின்றது.  வங்கி முன் பெரிய கூட்டம் கூடியிருந்தது.  குருமூர்த்திக்கு திகைப்பாக இருந்தது.  காரை விட்டு அவனும் ராஜேந்திரனும் இறங்கியதைப் பார்த்தவுடன் எல்லோரும் சத்தம் போட்டார்கள்.
 
“வர்றாங்க…….பாரு,,,பாங்கா நடத்தறாங்க…”என்று.
 
குருமூர்த்தி காதில் வாங்காமல் பெண் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். வங்கியின் கட்டடத்திலிருந்து ஊன்னு ஊளையிடுவதுபோல் சத்தம் காதைத் துளைத்தது.  முன்னால் கூடியிருந்த கூட்டம் சத்தம்போட்டபடி ஆவலாக இருந்தது.
 
வங்கிக் கதவைத் திறந்தவுடன், உள்ளே போய் உடனே சுவீட்டை ஆப் செய்தான்.  சத்தம் நின்று விட்டது.  பின் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு வங்கியின் உள்ளே போய் பெண் இன்ஸ்பெக்டரும் அவனும் போய்ப் பார்த்தார்கள்.  ஒன்றுமில்லை.  அன்று முழுவதும் மின்சாரம் இல்லை. திடீரென்று மின்சாரம் வந்தவுடன் பர்கலரி அலாரம் தானகவே அடித்திருக்கும். வாசலில் கூட்டம் கலைந்து போயிற்று.  யாராவது திருடன் உள்ளே புகுந்திருப்பான் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.  அவர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.  எல்லோரும் போய் விட்டார்கள்.  அந்த ஊரில் வங்கி இருக்குமிடத்தில் எல்லாக் கூட்டமும் கூடும்.  பஸ் ஸ்டாப் அங்குதான் இருக்கும். கும்பகோணம், மயிலாடுதுறைக்கு அங்கிருந்துதான் போக வேண்டியிருக்கும். டீ கடை சிறிய ஓட்டல் என்றெல்லாம் இருக்கும்.
 
வங்கியில் எப்போதும் கூட்டம் கசகசவென்று இருக்கும்.  சமாளிக்கவே முடியாது.  நகைகளை அடகு வைப்பார்கள்.  பின் திருப்புவார்கள்.  பென்சன் வருகிறதா என்று கேட்பார்கள்.  பயிர் கடன் வாங்குவார்கள்.  ஒரு குழுவிற்கு தரவில்லை என்றால் சண்டை போடுவார்கள்.  பின் அந்த வங்கி இருக்கும் தெருவிலேயே கூட்டம் போட்டு வங்கி மேனேஜர் ஒழிக என்று கோஷம் போடுவார்கள்.  அங்கு இரண்டு ஜாதிகள்தான் பிரதானம்.  அந்த ஜாதிக்குள் நடக்கும் கலவரத்தைத் தீர்க்கவே முடியாது.  பிரதான ஜாதியில் உள்ள ஒருவரைத்தான் வங்கியில் மானேஜராகப் போடுவார்கள்.  இல்லாவிட்டால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
 
பழனிச்சாமியால் வங்கியை நடத்திக்கொண்டே போகமுடியவில்லை. சீனிவாசனையும், குரூமூர்த்தியையும் அவர் திட்டுவார் சீக்கிரம் வீட்டிற்கு ஓடி விடுகிறார்கள் என்று.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்தில் இருக்கவே முடியாது.
 
ஒருவழியாக வங்கிக் கதவுகளை பூட்டிக்கொண்டு திரும்பவும் காரில் ஏறி வீட்டிற்குக் கிளம்பினார்கள்.  பழனிச்சாமியிடம் போன் பண்ணி குரூமூர்த்தி என்ன நடந்தது என்று சொன்னான்.  பழனிச்சாமி வித்தியாசமானவர்.  அவர் மானேஜர் என்ற கோதாவில் அவனுக்குப் போன் பண்ணவே மாட்டார்.  ஆனால் அவன் போன் பண்ணி அவரிடம் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீனிவாசனும் போன் பண்ணிக் கேட்டான்.
 
இந்த அலாரம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல் யோசிக்கத் தொடங்கினான் குரூமூர்த்தி.  ஒவ்வொரு ஞாயிறு இரவும் சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு அவனும், அவனுடைய சகலையும் ஒரே ரயில் வண்டியில் வருவார்கள்.  காலையில் நாலுக்கெல்லாம் மயிலாடுதுறைக்கு வண்டி வந்துவிடும்.  சகலை செல்போனில் அலாரம் வைத்துவிடுவார்.  சரியாக 4 அடிப்பதற்கு முன் அலாரம் அடிக்கும்.  சகலையும் குருமூர்த்தியும் உடனே இறங்க தயாராக இருப்பார்கள்.  அந்த நேரத்தில் அலாரம் அடிக்கவில்லை என்றால் கும்பகோணம் தாண்டித்தான் போக வேண்டியிருக்கும்.
 
சகலைதான் அவனுக்கும் சேர்த்து டிக்கட் ரிசர்வ் செய்வார்.  சில சமயம் சனிக்கிழமை அவருடன் குருமூர்த்தி செல்வான்.  பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வரும்போது இரண்டு பேர்களும் ஒன்றாகத்தான் வருவார்கள். ஒவ்வொருமுறை ஞாயிறு செல்போனிலிருந்து அலாரம் அடிக்கும் சப்தத்தைக் கேட்காமல் தப்பிக்க முடியாது.
 
“என்ன சார் எதாவது யோசனையா?”
 
“இல்லை…இல்லை..இதுமாதிரி அலாரம் அடிக்கிறதைப் பற்றி யோசனை.  சென்னையில்  மாதாகோயில் பக்கத்தில் எங்கள் வீடு..ஒவ்வொரு முறையும் நேரத்தை குறித்து சர்ச் பெல் முழங்கும்..”
 
“இப்போதெல்லாம் சேவல் எல்லாம் நேரம் கெட்ட நேரத்திலதான் கூவறது.”என்றார் ராஜேந்திரன்.
 
ராஜேந்திரனை இறக்கிவிட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறைக்குப் போனபோது மணி 11 ஆகிவிட்டது.  வள்ளலார் கோயிலைப் பூட்டி விட்டார்கள்.  தெருவில் சில நாய்கள்.  ஆனால் குருமூர்த்தியைப் பார்த்து ஒன்று குலைக்கவில்லை.
 
கேட் கதவைத் திறந்து வண்டியை உள்ளே வைத்து கேட்டை மூடிக்கொண்டு உள்ளே நீளமான பாதையைக் கடந்து மேலே உள்ள தன் அறைக்கு குருமூர்த்தி சென்றான்.
 
திரும்பவும் நாற்காலியில் தொப்பென்று விழுந்தான்.  அப்படியே சாய்ந்தபடி யோசித்தான்.  மின்சார விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின் விசிறி எல்லாம் சுற்றிக்கொண்டிருந்தது.
 
நாற்காலியில் அப்படியே அசந்து தூங்கி விட்டான் குருமூர்த்தி.