கடல் புறா -நாடக விமர்சனம்

கடல் புறா [Kadal Pura]

குமுதத்தில் கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடர் கதையாக வந்து மாபெரும் வெற்றி  பெற்ற சாண்டில்யனின் காவியப் புறா அது. இளைய பல்லவன் என்ற கதாநாயகனை எம்.ஜி.ஆர். பாணியில் ஏன் அதற்கும் மேலாகப் படைத்திருப்பார் சாண்டில்யன்.

அவனுடைய புத்திசாலித்தனம், எந்த சூழ் நிலையிலும் தன் அறிவு மீது அபார நம்பிக்கை வைக்கும் திறமை,  பெண்களைக் கவரும் கவர்ச்சி, வீரம், துணிச்சல், விவேகம் எல்லாம் கலந்த கலவை அவன்.

கருணாகர பல்லவன் என்ற இளைய பல்லவன் உண்மையில் சரித்திரத்தில் சோழன் குலோத்துங்கனுக்கு சேனாதிபதியாக இருந்தவன். பிற்காலத்தில் கலிங்கத்துடன் போரிட்டு கலிங்கத்தையே எரித்தவன் என்று கலிங்கப்பரணி என்ற காவியத்தைப் படைத்த  ஜெயங்கொண்டார்  என்ற புலவர் கூறுகிறார்.

குலோத்துங்கன் இளவரசனாக இருந்த போது  அதாவது – கலிங்க யுத்தத்திற்கு முன் – ஸ்ரீவிஜயம் – கடாரம் என்ற இரு நாடுகளுக்கிடையே இருந்த அரசுரிமைப் போர்களில் கலந்து கொண்டு தீர்த்து  வைத்தான் என்பது வரலாறு. குலோத்துங்கன் சீனாவிற்கும் சோழப் பிரதிநிதியாகச் சென்றான் என்றும் வரலாறு கூறுகிறது.

இதையும் கருணாகர பல்லவன் என்ற நம் இளைய பல்லவனே செய்து முடித்தான் என்பது  தான் சாண்டில்யனின் கற்பனை.

சரி, இனி நாடகத்திற்கு வருவோம்.

கதையைச் சொல்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். செட்டிங் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உடைகள் பள பளவென்று நாம் கற்பனை செய்து வைத்திருந்த அரச காலத்தை அப்படியே  காட்டுகிறது. கடல் போரும் அதற்கு முக்கியத் தேவையான கடல்புறா என்ற கப்பலும் தான் கதையின் நங்கூரங்கள். அவற்றைத் திரையில் காட்டுவது கடினம் தான் என்றாலும்  அதில் அவர்கள் அதிகம் மெனக்கிடவில்லை என்பது சுத்தமாகத் தெரிந்தது.

கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வசனத்தைத் தங்கள் போக்கில் அந்தக் காலத்து ராஜா – ராணி சினிமா  பாணியில் எழுதியிருப்பது கதையின் உயிரோட்டத்தைப் பாதிக்கிறது.

சாண்டில்யனின் கதையில் சோகம் என்பது இலேசாக இழையோடியிருக்கும் அவ்வளவு தான். ஆனால் இதில் எல்லா பாத்திரங்களும் சோகத்தைப் பிழிந்து சிவாஜி, பத்மினி போன்று  அழுது நடிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. அதுவும் கொடூரமாவன் என்று பெயர் பெற்ற  அகூதாவை ஒரு குணசித்திர நடிகர் போல் குலுங்கிக் குலுங்கி ஆழ வைத்திருப்பது தாங்க முடியவில்லை சாமி.

கதாநாயகிகள் காஞ்சனா தேவி மற்றும் மஞ்சளழகி இருவரும் கவர்ச்சிகரமாக உடையணிந்து வருகிறார்கள். மஞ்சளழகியாக நடித்தவரின் குரல் முதல் வரிசைக்கே கேட்டிருக்குமோ என்பது சந்தேகம். ஆனால் அபாரமாக ஆடுகிறார்  அதுவும் தலையில் விளக்கை வைத்துக் கொண்டு.

கதையைப் படித்தவர்களுக்கு அதன் போக்கு புரியும் . மற்றவர்களுக்கு ரொம்பவே சிரமம் தான்.

தேவையில்லாமல் பாத்திரங்கள் வள வள வென்று பேசுகிறார்கள். மேடைக்கதையை இன்னும் கச்சிதமாகச் சொல்லியிருக்க வேண்டும். கதையின் சில பகுதிகளை விட்டால் தவறு ஒன்றும் இல்லை. ( உதாரணம்: பாலிக் குள்ளன்). பலவர்மனை, சேந்தனை முழுக் காமெடியனாகப் போட்டிருப்பதில் நயம் இல்லை.

கலிங்க மன்னர்கள், அநபாயன் ,ஜெயவர்மன் ,அமீர், கண்டியத்தேவன் எல்லாரும் நன்றாக நடித்தார்கள்.

இளையபல்லவனாக நடித்தவர் நன்றாக நிற்கிறார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு உயிர் தரவில்லை. ஒரு ஜோஷ் இல்லை.

நாலேகால் மணி நேரம் நடக்கிறது. திரை மாறும் நேரத்தைக் குறைத்திருந்தாலே நாடகம் ஒரு மணி நேரம் குறைந்திருக்கும்.

சிறப்பான மேடைக் கதையும், இன்னும் நிறைய பணபலமும் இருந்திருந்தால் இந்த நாடகம் பெரும் வெற்றி அடைய வாய்ப்பு இருந்திருக்கும்.

( இரண்டு காட்சிகள் என்று சொல்லி கடைசி நாளில் இரண்டையும்  ஒன்றாக மாற்றி அப்படியும் பாதி அரங்கு தான் நிறைந்தது என்றால் என்ன வென்று சொல்ல?)

சில்லறையில் ( மொத்தத்தில் அல்ல) எனக்குப் பிடித்திருந்தது. ஐம்பது மார்க் தருவேன்.