சந்திரகுப்த மௌரியர்
அலெக்சாண்டர் சென்ற பிறகு இந்தியாவில் பெரும் சரித்திர நிகழ்வுகள் நடந்தன. ஒரு மாபெரும் அரசாட்சி மறைந்து மற்றொரு பிரம்மாண்டமான அரச வம்சம் துவங்கியது. சந்திரகுப்த மௌரியர் அதன் நாயகர். அது பற்றி இன்று ஆராய்வோம்..
இராமன் கதை சொல்ல வேண்டுமென்றால் இராவணன் கதை சொல்வது அவசியமாகும். ஆக – சந்திரகுப்த மௌரியரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் – நந்த அரசாட்சியைப் பற்றி முதலில் சொல்லியே ஆகவேண்டும்.
அலெக்சாண்டர் வேண்டுமென்றால் பயப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சேனை – நந்தர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு – நடுநடுங்கினர். குறிப்பாக நந்தர்களது சேனை (காலாட்படை: 200000 குதிரைப்படை: 80000 ரதப்படை: 8000; யானைப்படை: 6000) பலம் கண்டு – நொந்தனர். போரஸின் 30 யானைகளே அவர்களைப் படுத்தி எடுத்தது என்றால் – 6000 யானைகளா? ஆள விடுங்க சாமி- என்றனர். அவ்வளவு சக்தி வாய்ந்தது தன நந்தனின் படை பலம்.
நந்தர்களின் ஆட்சி – வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும் பரவியிருந்தது. தெற்கே விந்திய மலை வரை விரிந்திருந்தது. அவர்களது அபரிமிதமான செல்வக் குவிப்பு அவர்களது புகழை(?)க் கூட்டியது. தமிழ் நாட்டில் சங்கத்தமிழ்ப் புலவர் மாமூலனார் நந்தர்களது தலைநகரான பாடலிபுத்திரத்தைப் பற்றியும் நந்தர்களது செல்வச் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார்.
பல முதல்கள்:
மகாபத்ம நந்தன் – ‘முதல்’ நந்தன். இந்திய சரித்திரத்தில் க்ஷத்ரியரல்லாத ‘முதல்’ அரசன். அவன் ஆட்சிக்குப் பின்னர் மகன் தன நந்தன் அரசனானான். பெயரிலேயே ‘தனம்’ (‘நிதி’ J ).இவர்கள் இருவரும் இந்தியாவின் ‘முதல்’ மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். மக்களை மிரட்டி – இரக்கமில்லாமல் வரி வசூல் செய்து – பெரும் செல்வம் சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கற்றிருந்தனர். இவர்கள் செய்த ஊழல் – இன்றைய 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை விடப் பெரியது! இவர்கள் தான் உலகின் ‘முதல்’ அரசியல்வாதிகள் போலும்.
அலெக்சாண்டரால் வெல்ல இயலாத நந்தர்களை – 20 வயதான சந்திரகுப்த மௌரியர் வென்றார். அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கர்களையும் வென்றார். அவரை இந்தியாவின் ஜுலியஸ் ஸீசர் என்கிறார்கள் (உண்மையில் ஜுலியஸ் ஸீசரை ரோமின் சந்திரகுப்தர் என்றல்லவா கூறவேண்டும்!!)
சந்திரகுப்தர் பாடலிபுத்திரத்தில் பிறந்தார். தகப்பனார் அரச குல க்ஷத்ரியர் என்றும் தாயார் சூத்திரக் குடும்பத்தினர் என்றும் அறியப்படுகிறது.
இந்த சரித்திர சம்பவங்களைப் பார்க்கும்போது கல்கி அல்லது சாண்டில்யன் இதை எழுதவில்லையே என்று என் மனம் ஏங்குகிறது.
நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்!
‘யாரோ’ எழுத இருக்க உங்களுக்கு அந்தக் கவலை ஏன்? J
மேலே படியுங்கள்!
இந்தியாவின் காவலன்
“என்ன பேறு பெற்றேனோ?!” -வியந்தான் அந்த இளைஞன்.
அவனது வியப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை! தனக்கு முதலில் கல்வி கற்கக் கிடைத்ததோ உலகின் ‘முதல்’ பல்கலைக் கழகம். அதுவும் முதல் தரமான ஒன்று. பிரம்மாண்டமானது. பதினாயிரம் மாணவர்கள் கற்கும் உன்னதமான கல்விச் சாலை. கிரேக்கர்கள், பாபிலோனியர்கள், சீனர்கள் தவிர இந்திய நாட்டினர் என்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்!
தக்ஷசீலம்!
கற்களாலே கோட்டை போல் அமைந்திருந்த பாடசாலைகள். மரங்கள் பாதை ஓரத்தை அலங்கரிக்க அலை அலையாக அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாட சாலைக்குச் செல்லும் அழகே அழகு! மயில்கள் சாலை ஓரம் தத்தி தத்தி நடை பழகியது.
முகப்பு மண்டபத்தில் பல வண்ண ஓவியங்கள் தொங்கின. அந்த இளைஞன் அந்த படங்களை வெகு ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை வெயிலில் அந்த ஓவியங்கள் தங்க முலாம் தீட்டியது போல் தக தகத்தது -மின்னியது. தினமும் பார்த்த ஓவியங்கள் தான் என்றாலும் அவன் மனதில் அன்றும் அவை பிரமிப்பை ஊட்டத் தயங்கவில்லை.
அந்த படங்கள் எல்லாம் அந்த பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணாக்கர்கள். எப்படிப்பட்ட மாணாக்கர்கள் அவர்கள் என்றால் – அவர்கள் மாணாக்கர்களாக இருந்து பின்னர் அங்கேயே ஆசிரியராகி உலகிற்கே பெருமை சேர்த்தவர்கள்!
முதல் ஓவியத்தில் பணிநி (Panini) –சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தவர்! அதன் விதிகளை அமைத்தவர்!
அடுத்து சராகா (Charaka) – ஒரு ஆயுர்வேத மருத்துவர்! இவரது சராகா சாமிதா (Charaka Samhita) இன்றைய ஆயுர்வேதத்திற்கே மூலமாக உள்ளது.
ஜீவக் – ஆஹா! இந்த ஆயுர்வேத மருத்துவர் – புத்தருடைய நோயைக் குணமாக்கியவர்! இவரது அறுவை சிகிச்சை பற்றிப் பேசாத வாயே இல்லையே! அமராப்பள்ளி என்ற உலகப் பேரழகியை * (சென்ற குவிகம் இதழில் இவள் அழகைப் பற்றி ‘யாரோ’ எழுதியிருந்தார்) இளமை குன்றாமல் காத்து சிகிச்சை செய்தவர்! உலகின் முதல் Plastic surgeon போலும்!
அடுத்த ஓவியம் விஷ்ணு ஷர்மா- அரசியல் துறையில் புரட்சி செய்த ‘பஞ்ச தந்திர’ கதைகளால் பெரும் புகழ் பெற்றவர்!
பலப்பல ஓவியங்கள் கடந்து வந்தான் அந்த இளைஞன்.
கடைசியாக ஒரு ஓவியம் பாதி வரையப்பட்டிருந்தது.
அதன் ஓவியர் அதன் அருகிலே அமர்ந்து தூரிகையை வண்ணத்தில் தோய்த்துக் கொண்டு இருந்தார்.
“ஐயா. இது யார் ஓவியம்?”
“நீ யாரப்பா?” – ஓவியர்
“என் பெயர் சந்திரகுப்தன். இங்கு அரசியல் பாடம் பயில்கிறேன்”
“சரியான ஓவியத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்! – இது நீ இதுவரை பார்த்த படங்களில் இருப்பவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை… மேலும் அரசியல் பாடத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் இவரை விடப் பெரிய மேதை இன்று இவ்வுலகில் யாரும் இல்லை”
சந்திரகுப்தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்:
“அலெக்சாண்டர் தக்ஷசீலம் வாசல் வரை வந்து விட்டாரே! அவரை வெல்ல முடியுமா இவரது ராஜதந்திரத்தால்”
“அவரிடமே கேட்டுப்பார்” – ஓவியர் குரலில் பெரும் நம்பிக்கை ஜொலித்தது.
“அவர் எங்கே இருக்கிறார்? யார் அவர்?” சந்திரகுப்தன் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
“அவர் பெயர் விஷ்ணு குப்தர். சாணக்யா என்றே அனைவரும் அழைப்பர்.
இதே ஊரில் குரு குல பள்ளி ஒன்று நடத்தி வருகிறார்”
“நன்றி ஓவியரே..ஆமாம்…என் படம் ஒன்றும் வரைவீரா?” சந்திரகுப்தன் சிரிக்கவில்லை.
“அது நீ என்ன சாதிக்கிறாய் என்பதைப் பொறுத்தது”- ஓவியர் சிரித்தார்
“வரும் கிரேக்க எதிரிகள் அனைவரையும் நம் நாட்டிலிருந்தே ஒழித்து கொடுங்கோல் மன்னன் தன நந்தனையும் வென்றால்?” சந்திரகுப்தன் மெல்லச் சிரித்தான். அதில் உறுதியும் இருந்தது.
ஓவியன் (மனதில் ‘கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ என்று விளம்பரம் ஓடியது?) திகைத்துப்போனான். இந்த வாலிபன் உடல் வலிவு மட்டுமல்ல நெஞ்சத் துணிவும், கொள்கையும் கொண்டவன் தான் போலும்…
“அதைச் செய்தால் என் ஓவியம் மட்டுமல்ல – இந்திய சரித்திரத்திலேயே உனக்கு இடம் உண்டு..”
மயில் ஒன்று தவழ்ந்து வந்து சந்திரகுப்தன் அருகில் நின்றது. சந்திரகுப்தன் அதைத் தொட்டு என்ன மாயம் செய்தானோ, மயில் தோகை விரித்து ஆடியது.
ஓவியன் வியந்து போனான்.
“மயிலைப் பழக்குவது எங்கள் குலத்தொழில்” – சந்திரகுப்தன்.
“அப்படியானால், நீ சொன்னபடியே நீ மன்னனால்… உனது வம்சம் மௌரியர் (மயில்) என்றழைக்கப்படட்டும்”
அவனது சொல் சரித்திரத்தில் இடம் பெறும் என்று அந்த ஓவியன் கனவு கூட கண்டதில்லை.
அதற்கு மேலும் சந்திரகுப்தனுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை. சாணக்கியரை சந்திக்க விருப்பம் கொண்டு ஓவியரிடம் விடை பெற்றான்.
மாலை வெயில் மறைந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியிருந்தது.
சந்திரகுப்தன் வேகமாக நடந்து தனது குதிரை கட்டப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றான். குதிரையில் ஏறி வழி விசாரித்துச் செல்ல சற்றே தாமதமாகியது. இருள் கவ்வி நின்றது.
சாணக்கியரின் பெருங்குடில் அடைந்து கதவைத் தட்டப்போனான். அப்பொழுது சாணக்கியரின் வாசலில் இரண்டு குதிரை பூட்டிய ரதம் ஒன்று வந்து நின்றது. வாசலில் பத்து வீரர்கள் வேல் பிடித்துக் காவல் காக்கத் தொடங்கினர், சந்திரகுப்தன் அது தக்ஷசீல மன்னன் அம்பியின் ரதம் என்று உணர்ந்தான். சற்றே ஒளிந்து மறைந்தான். அம்பி உள்ளே சென்று சாணக்கியரிடம் பேசத் தொடங்கினான். அவன் குரலில் பெரும் பதட்டம் இருந்தது. உள்ளே பேசுவது சந்திரகுப்தனுக்கு மெல்லக் கேட்டது. அலெக்சாண்டர் படையுடன் நாடு வாசல் நெருங்கியது பற்றிக் கூறி – என்ன செய்யலாம் என்று கேட்டான். சாணக்கியன் – எதிர்த்துப் போரிடுவது தான் சரியான முடிவு என்றான்.
அம்பி: “விஷ்ணு குப்தரே… அலெக்சாண்டரின் பிரதாபங்கள் நீங்கள் கேள்விப்படவில்லையா? பாரசீக மன்னர் எவ்வளவு பலம் பொருந்தியவர். அவரையே வீழ்த்தினானாமே? நகரங்கள் பல எரிந்து மக்கள் மடிந்தனரே!” சொல்லும்போதே அம்பியின் குரல் நடுங்கியது!
சாணக்கியர் – அம்பி அலெக்ஸாண்டரை எதிர்ப்பது எவ்வளவு அவசியமாகும் என்று பல விதமாக அறிவுரை கூறியும் அம்பி அதை ஏற்கவில்லை. அவன் உடல் முழுவதும் பயம் ஒன்றே பரவி இருந்தது.
சற்று நேரத்தில் அம்பி வெகு சோகமாகக் குடிலை விட்டு வெளியேறினான். ரதத்தில் புறப்பட்டுச் சென்றான்.
சட்டென்று ஒரு கரம் சந்திரகுப்தனின் தோளைப் பிடித்தது. அது சாணக்கியன் கரம். ஒரு பிராம்மணனின் கரத்திற்கு இவ்வளவு சக்தியா!
“ஐயா வணக்கம்” – சந்திரகுப்தன்.
“சந்திரகுப்தா, இங்கு என்ன ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இது அரச சமாசாரம்!”
சந்திரகுப்தனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
‘உங்களுக்கு என் பெயர்?”
“நீ இங்கு ஒளிந்த போதே நீ யார் என்பதை அறிந்தேன். நீ நந்த குலத்தில் பிறந்தவன். 20 வயதே ஆனாலும் மாவீரன். ஒரே நேரம் 20 எதிரிகளுடன் போரிட்டு வெல்லக்கூடியவன். இதை தக்ஷசீலப் பல்கலைக்கழகத்துப் போர் பயிற்சி சாலையில் நீ செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன். போர்க்கலையில் பெரும் திறமை சாலி. மக்களாதித்துவத்தில் (leadership) மிகச் சிறந்தவன். அம்பி போல் இல்லாமல் – பயமற்றவன். கொள்கை உள்ளவன்…” என்று சிலாகித்துக்கொண்டே போனார்.
சந்திரகுப்தன் சிறிது வெட்கமும் பெரும் பிரமிப்பும் அடைந்தான்.
“என்னைப்பற்றி இவ்வளவு விபரம்..எப்படி…”
“அரசியலில் இது ரொம்ப சகஜமப்பா! ஒற்று அறிவது அரசியலின் முக்கிய அங்கம். உன்னைப்போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுத்து அவர்களுக்குப் போதிப்பது தான் எமக்குத் தொழில். உன்னைச் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் இருந்தேன்”
சந்திரகுப்தனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல் இருந்தது.
“உண்மையைச் சொல்லப் போனால் பாடலிபுத்திரத்தில் உனது வீரத்தையும் அறிவையும் பார்த்து நான் தான் உன் தந்தையிடம் சொல்லி உன்னைத் தக்ஷசீலத்துக்குக் கல்வி கற்க அனுப்பினேன். இது உனக்கும் தெரியாது”
‘இது தான் இறைவன் திருவுளமோ’ – வியந்தான் சந்திரகுப்தன்.
சாணக்கியர் சந்திரகுப்தனை இருக்கையில் அமரச் சொல்லிப் பின் தொடர்ந்தார்.
நாட்டின் பல பகுதிகளின் நிலைமை மற்றும் அரசாட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் – இவை அனைத்தையும் சுருக்கமாக சாணக்கியர் விவரித்தார்.
தக்ஷசீலாவின் ஒரு மூலையில் இருந்து கொண்டு பாடலிபுத்திரத்திலிருந்து மாசிடோனியா வரை எப்படி அரசியலை ஆராய்ந்து இருக்கிறார் இந்த மேதை!
சந்திரகுப்தனுக்கு ஒரு கேள்வி!
“அலெக்சாண்டர் – நந்தன் இந்த இருவரும் நமது நாட்டை உடைத்து விடுவரோ? இதற்கு என்ன செய்யலாம்?”
“நீ தான் அதைச் செய்ய வேண்டும்” – உறுதியுடன் – ஆணை இட்டார்.
சாணக்கியரின் அந்தத் தொனியில் சந்திரகுப்தனுக்கு மெய் சிலிர்த்தது.
“மன்னன் புருஷோத்தமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“யாரே அந்த மாவீரரை அறியாதவர்கள்” – சந்திரகுப்தன்.
“அவனது நட்பு உனக்கு வேண்டும்; நீ ஒரு அரசியல் கூட்டணி அமைக்க வேண்டும். புருஷோத்தமனைச் சந்தித்து அலெக்ஸாண்டரைத் தடுக்கச் சொல்லவேண்டும். அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தம் செய்து கொள். அலெக்சாண்டரையும் சந்தித்துப் பேசு. அவனும் நந்தனும் இணைந்து விட்டால் இந்த நாட்டைக் காக்க இந்த சாணக்கியராலும் இயலாது!” சாணக்கியரின் முகம் லேசாகக் கருத்தது.
“அலெக்சாண்டரிடம் என்ன பேசுவது?” ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான் சந்திரகுப்தன்.
“நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறு. பாரசீகத்தில் கிடைத்த செல்வத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு செல்வம் இருப்பதைக் கூறி அவனை உசுப்பேத்து!”
“இதில் நமக்கு என்ன லாபம்?”
“அதே சமயம் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து நந்தனின் பெரும் படை பலம் பற்றிப் பேசு. முக்கியமாக கங்கை நதி தாண்டினால் அங்கு இருக்கும் 6000 யானைப்படைகளைப் பற்றிப் பேசு.”
“அலெக்சாண்டர் நந்தனை வென்றால் நமக்கு ஒரே எதிரி அலெக்சாண்டர் மட்டும் தான். அலெக்சாண்டர் திரும்பிச் சென்றால் நமக்கு ஒரே எதிரி நந்தன் மட்டும் தான்!! நாம் இந்தப் பூசலில் வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும்”
என்ன ராஜதந்திரம்! சந்திரகுப்தன் பெரு வியப்பில் ஆழ்ந்தான்.
“சந்திரகுப்தா .. இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உன்னிடம் மட்டும் தான் இதைச் சொல்வேன். இது எனது சொந்த விஷயம்” சாணக்கியர் முகம் சிவந்தது. துக்கச் சாயல் முகத்தில் விரிந்தது.
“எனது அரசியல் புகழ் தன நந்தனையும் சென்றடைந்திருந்தது. அவன் என்ன தான் கொடுமையான வசூல் ராஜா வானாலும் அவன் நிர்வாகம் மெச்சத் தகுந்ததே! பல மந்திரிகள் – சில ராஜதந்திரிகள் ஆலோசனை கேட்டு நடப்பவன். என்னை ராஜதந்திர ஆலோசனையாளனாக நியமிக்க அழைத்தான்”
“அவன் ராஜ கொலு மண்டபத்திற்குச் சென்றேன்! அவனது வரிக்கொடுமையால் மக்கள் படும் இன்னலைச் சொன்னேன்.”
“நந்தன் அதை சற்றும் விரும்பவில்லை. பெருங்கோபத்தில் என்னை அவமானம் செய்தான்”
“நான் என் உயிரைப்பொருட்படுத்தாமல் சொன்னேன்”
“உன்னையும் உன் குலத்தையும் அடியோடு அழித்த பின்னரே எனது குடுமியை முடிப்பேன் – என்று சூளுரைத்தேன்”
“நந்தன் என்னை அங்கேயே கொல்ல விரும்பினான்.ஆனால் அவனது ஆலோசகர்கள் தடுத்ததால் நான் இன்று இங்கு இருக்கிறேன்”
சாணக்கியரின் விரிந்த குடுமி மேலும் பரந்து கோபம் கொண்ட முகம் நெருப்புப் போல் சிவந்தது.
“ஆசிரியரே! நான் வாக்களிக்கிறேன். தன நந்தனை வென்று உங்கள் பழி தீர்க்கிறேன்”- என்றான் சந்திரகுப்தன்.
அன்றிலிருந்து சந்திரகுப்தன் தினமும் சாணக்கியரைச் சந்தித்து – அரசியல் பாடம் கற்றான். இடையில் புருஷோத்தமனைச் சந்தித்துப் பேசினான். அம்பியின் துரோகம் பற்றியும் அலெக்சாண்டரை எதிர்ப்பதின் அவசியத்தையும் கூறினான்.
“புருஷோத்தமரே, எனது படை மகதத்தில் பரந்து கிடக்கிறது. நந்தனை வீழ்த்த பின்னாளில் உங்கள் துணை எனக்குத் தேவை. ஆனால் இன்று நீங்கள் அலெக்ஸாண்டரை நிறுத்த வேண்டும்”
புருஷோத்தமன் பெரு மகிழ்ச்சி கொண்டான். சந்திரகுப்தனின் பிரதாபங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவனது துணிவையும் தீர்க்க தரிசனத்தையும் கண்டு இவன் நட்பு தனக்குத் தேவை என்று முடிவு செய்தான்.
மழைக்காலம் வந்தது. அலெக்ஸாண்டரின் படையும் வந்தது. எதிர்பார்த்தபடி அம்பி அலெக்ஸாண்டரிடம் சரணடைந்தான். பரிசு பல கொடுத்துப் பிழைத்தான். மாமன்னன் புருஷோத்தமனைப் பற்றி பல விவரங்களைக் கூறி அலெக்ஸாண்டருக்குப் பேருதவி செய்தான்.
புருஷோத்தமன் மாபெரும் யுத்தம் செய்தான். இந்த சண்டையில் அலெக்சாண்டர் வென்றதாக கிரேக்க இலக்கியம் கூறும். ஆனால் இது சற்றே சர்ச்சைக்கு இடம் பெற்ற விஷயம். போருக்குப் பின் புருஷோத்தமன் மன்னனாக ஆட்சி செய்தான். மற்றும் அவனது நாட்டுக்கு மேலும் பல பகுதிகள் (அலெக்சாண்டர் முன்பு வென்ற பகுதிகள் உட்பட) சேர்ந்தது. எனவே போரானது வெற்றி-தோல்வியல்லாமல் – ஒரு உடன்படிக்கையால் முடிந்தது என்றும் ஒரு பேச்சு உண்டு. மொத்தத்தில் அலெக்ஸாண்டர் படைக்கு புருஷோத்தமன் ஒரு பெரும் கலக்கம் கொடுத்தான்.
அலெக்சாண்டர் சன்டிரகொட்டோஸ் (Sandrokottos) –(நமது சந்திரகுப்தன் தான்) என்னும் மாவீரன் நந்தருக்கு எதிராக படை திரட்டி வருவதை அறிந்திருந்தான். அவனைப் பார்ப்பதில் அவனும் விருப்பம் கொண்டிருந்தான். இவன் உதவி பின்னாளில் தேவைப்படுமோ?
சந்திப்பு நிகழ்ந்தது.
முன்னம் கூறிய படி சந்திரகுப்தன் நந்தனின் பெரும் செல்வக் களஞ்சியங்களைப் பற்றிக் கூறி அவனை உசுப்பேத்தினான்.
மேலும் அலெக்ஸாண்டரின் தளபதிகளைச் சந்தித்து:
“தளபதிகளே! போரஸின் 30 யானைகள் உங்களை எப்படித் தாக்கியது? கங்கை நதியைத் தாண்டினால் அங்கு 6000 யானைப்படைகள் உங்களை துவம்சம் செய்யத் தயாராகக் காத்திருக்கிறது. நன்று யோசித்து அலெக்சாண்டருக்கு அறிவுரை கூறுங்கள்”
மாதங்கள் பல சென்றன.
அலெக்சாண்டர் மற்றொரு போரில் காயப்பட்டான். ஆனாலும் நந்தனின் செல்வம் அவனை ஈர்த்திருந்தது. ஆனால் தளபதிகள் முரண்டு பிடித்ததால் அலெக்சாண்டர் இந்தியாவிலிருந்து திரும்பினான்.
சந்திரகுப்தன் – சாணக்கியர் இருவரும் தக்ஷ்சீலத்தை விட்டு ரதத்தில் பாடலிபுத்திரத்தை சென்று அடைந்தனர். காட்சிகள் மாறின. பாடலிபுத்திரம் மாட மாளிகைகளுடனும் பரந்த சாலைகளுடனும் விளக்கின் ஒளியாலே அலங்கரிக்கப்பட்டு மின்னியது. நகரின் எந்த பகுதியிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்றனர். மக்கள் தங்களுக்குள் – நந்த ராஜனைப் பற்றியும் அவனது வரி பற்றியும் பேசித் துயருற்றனர். வளர்ந்து வரும் தலைவன் சந்திரகுப்தன் அவர்களுக்கு ஒரு தெய்வ தூதனாகவே தோன்றினான்.
சந்திரகுப்தன்- சாணக்கியர் நேரடியாக நந்தனின் அரண்மனையை கத்தியில்லாமல் – ரத்தமில்லாமல் வெல்ல முயன்று தோற்றனர்.
அனைவரும் அறிந்த கதை தான் இது:
மகத நாட்டு எல்லையில் ஒரு சிறு கிராமம். அங்கு ஒரு குடும்பத்தோடு சந்திரகுப்தன் தங்கியிருந்தான். அவன் தான் சந்திரகுப்தன் என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த வீட்டில் சிறுவன் சூடான சப்பாத்தி சாப்பிடும் போது அவசரமாக நடுவில் கையை வைக்க – சூடு தாங்காமல் அலறினான்.
அதற்கு அவன் அன்னை:
“அட.. ஏன் நடுவில் இருந்து சாப்பிடுகிறாய்? சந்திரகுப்தன் நந்தனின் அரசை நடுவில் தாக்கியது போல செய்கிறாயே! விளிம்பில் இருந்து சாப்பிடு. சுகமாகச் சாப்பிடலாம்.”
சந்திரகுப்தனுக்கு இது வேத வாக்காகத் தெரிந்தது. படைகளைத் திரட்டினான்.
பல இளைஞர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.
சந்திரகுப்தன் ஓலை அனுப்ப – புருஷோத்தமனும் படைகளை அனுப்பி உதவி செய்தான். சாணக்கியர் தனது உயர்ந்த மாணாக்கர்களைச் சேர்த்துக் கொண்டார். தக்ஷசீலத்தின் தளபதி – சந்திரகுப்தரின் நண்பன். அவனும் இந்த சேனையில் சேர்ந்தான்.
‘மலை நாயகன்’ என்று அழைக்கப்பட்ட குறு நில மன்னன் – மிகவும் சக்தி வாய்ந்தவன். அவன் படையும் திறமை மிக்கது. சாணக்கியர் மலை நாயகனனுடன் சந்திரகுப்தனுக்காக ஒரு கூட்டணி அமைத்தார்.
சாணக்கியர்: “நாம் வென்றால் நந்த நாட்டில் ஒரு பகுதி உனக்கு”!
மலை நாயகன் சந்திரகுப்தரின் படையில் சேர்ந்தான்.
மகத எல்லையிலிருந்து மெல்ல உள்நோக்கிப் படைஎடுத்து – அங்கு மக்கள் ஆதரவும் பெற்றுப் பின் நந்தனை வென்றான் சந்திரகுப்தன்.
‘தன நந்தன்’ கைது செய்யப்பட்டு அரண்மனைக் கூடத்தில் கொண்டு வரப்பட்டான்.
அன்றைய நாளின் மிகப்பெரிய கேள்வி:
‘நந்தனை என்ன செய்யலாம்?’
சாணக்கியன் குடுமியை முடித்திருந்தான்.
முகத்தில் வெற்றிப் பெருமிதம்.
தன நந்தன்: “சாணக்கியரே! அன்றொரு நாள் நீங்கள் என் நிலையில் இருந்தீர்! உம்மை நான் உயிருடன் விட்டேன் என்பதை நினைவு கூறும்”
சந்திரகுப்தன் சாணக்கியரின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
“உண்மை தான் தன நந்தரே! நீர் சாவது எங்களுக்கு முக்கியமல்ல… நாடு சாவாமல் இருப்பதே முக்கியம். தன நந்தா! நீ உன்னால் சுமக்க முடிந்த தனங்களை மட்டும் எடுத்துக் கொள். எங்கள் கண் காணாத இடத்துக்குச் சென்று விடு. ஆனால் எங்கள் கண்ணில் பட்டால்.. அதன் பிறகு உன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை”
தன நந்தன் சரித்திரத்திலிருந்து மறைந்தான்.
பாடலிபுத்திரம் புதுப் பொலிவு பெற்றது.
சந்திரகுப்தன் மகதத்தின் அரசனானான்.
மௌரியர் ராஜ்யம் மலர்ந்தது.
மக்கள் விரும்பிய மன்னன்.
சாணக்கியர் போன்ற மகா மந்திரி.
பொற்காலம் ஒன்று பிறந்தது.
இத்துடன் இந்தக் கதையை முடித்திருக்கலாம். ஆனால் சந்திரகுப்தன்- சாணக்கியர் கூட்டணி இன்னும் பல வெற்றிகளை அடைந்தது.
அரண்மனை ஆலோசனைக்கூடம்:
சந்திரகுப்தன்: “ஐயா! மலை நாயகன் மறைவு பற்றி”
சாணக்கியர்: “அவன் தான் அகால மரணம் அடைந்தானே! நாட்டின் எல்லாப் பகுதிகளும் உனக்கே!” – அவரது குரலில் சோகத்தை விட ஒரு சந்தோஷமே தென்பட்டது.
சந்திரகுப்தன்: “அவன் விஷமிடப்பட்டதாக….ஒரு வதந்தி…”
சாணக்கியர்: “அரசியலில் சில விஷயங்கள் நடக்கும்… அது விஷமாகவும் இருக்கும். விஷமமாகவும் இருக்கும். அது நமக்கு விசேஷமாக உதவினால் அதை ஆராயக்கூடாது”
சந்திரகுப்தனுக்குப் புரிந்துவிட்டது…
“அப்ப புருஷோத்தமன்?”
“புருஷோத்தமன் நமக்குத் தேவை. அவனால் தான் மேற்கு நாட்டைக் காக்க முடியும். மேலும் கிரேக்கர்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியம்”
“ஆஹா… நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”
சாணக்கியர் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.
கவலை அவர் நெற்றிச் சுருக்கத்தில் நெளிந்தது.
சந்திரகுப்தன்: “இன்னும் என்ன யோசனை தலைவா?”
சாணக்கியர்: “சந்திரகுப்தா .. நமது வெற்றி முழுமையாகவில்லை… புரிந்தததா?”
சந்திரகுப்தன்: ”ஆமாம் … நமது திட்டத்தின் படி நந்தனை வென்றோம். ஆனால் … அலெக்சாண்டர் போன பிறகு மாசிடோனியாவின் செலுகஸ் நிகேடர் (Seleucus Nicator) … மேற்கில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க உள்ளான். அதை…அவனை.. முறியடிக்க வேண்டும்”
“சரியாகச் சொன்னாய்”
வெகு விரைவில் காரியங்கள் நடந்தேறின.
படையெடுப்பு நடந்ததது. செலுகஸ் நிகேடர் தோல்வி அடைந்தான். உடன்படிக்கைப் படி இளவரசியான தன் மகள் ஹெலெனா (helena) வை சந்திரகுப்தனுக்கு மணம் முடித்தான்.
மேலும் அவன் வசமிருந்த- காந்தாரம், காம்போஜம், காந்தகார், பலோசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்தன் அரசுடன் இணைந்தது. பதிலுக்கு 500 யானைகளைப் பெற்றான்.
‘இந்தியாவின் காவலன்’ என்ற இந்தக் குறுங்கதை நிறைவு பெறுகிறது.
(சாண்டில்யனும் – கல்கியும் மன்னித்து அருள்வார்களாக)
சரி….எந்த கதை நாயகனுக்கும் – அவனது வெற்றிக்காலம் முடிந்த பின் கஷ்டங்கள் வரும். மனிதனாகப் பிறந்தாலே இது சகஜம் தானே!
பரசுராமருக்கு ராமனைச் சந்திக்கும் வரை தான் வெற்றி.
ராமன் பட்டாபிஷேகம் முடிந்த பின் அடைந்ததது சோகங்களே.
கிருஷ்ணன் தன் மகன்கள் அனைவரும் அடித்துக்கொண்டு சாவதைக் கண்டு நொந்தான்.
பாண்டவர்கள் மகாபாரதம் முடிந்த பின் சந்தோஷமென்பதே அறியவில்லை.
அதே போல் நம் நாயகன் சந்திரகுப்தன் கதையிலும் சோகங்கள் … அதை விட்டு விடுவோம்.
இன்னும் சில வருடங்கள் கழித்து –இந்த வம்சத்தில்- உலகம் போற்றும் மாமன்னன் – ‘மகா அசோகன்’ தோன்றுவான்.
சரித்திரம் இன்னும் பேசும்….
***சிறு குறிப்பு:
‘இந்தியாவின் காவலன்’ என்ற சரித்திரக் கதையா?.. மருந்துக்கு ஒரு பெண் பாத்திரமே இல்லை என்ற குற்றம் சொல்பவர்களே! அமரப்பள்ளி என்ற அழகியைப் பற்றி கோடி காட்டியுள்ளேன்! நீங்கள் ஆணையிட்டால் அமரப்பள்ளி என்ற சரித்திரக்குறுங்கதை எழுதத் தயார். Circulation worry கொண்ட குவிகம் ஆசிரியரும் மகிழ்வார் !