தமிழகத்துப் பொழிலினிலே புதுமலரும் பூத்ததுவே
தத்திவரும் புள்ளினமும் களிப்பதனில் மூழ்கியது;
தெம்மாங்கு பாடியது மக்களிலே யோர்கூட்டம்
தித்திக்கு மூணுண்ண நின்றதுவே மறுகூட்டம்
செம்மையுற பயிரோங்க அரும்பெருந் தொழில்வளர
செய்விக்கும் நம்பிக்கை கொண்டதுவே நம்தேயம்
‘அம்மா’வென இரக்கின்ற கூட்டமினி யிலையென்று
அடங்காத ஆவலொடு பார்க்கின்றாள் தமிழ்த்தேவி!!
சின்னஞ்சிறு குழவிக்கு பால்கிடைக்கு மெனவெண்ணம்
விளையாட்டுப் பொருள்மீது ஆசைகொளும் மழலையுமே
இனிக்கின்ற கல்விதனைக் கற்கின்ற சிறுவர்க்கு
இகத்தினிலே முதலாக விளங்குவதி லோர்நாட்டம்
மனமொத்துப் பருவத்தால் கட்டுண்ட காதலர்க்கு
மணந்தனை யிவ்வாண்டு வைத்திடலா மெனவாசை
துணையோடு குழந்தைகள் பலகொண்டு உழல்பவரோ
இடர்தீர்க்கும் புத்தாண்டு எனக்கொள்வா ருறுதியுமே!
உண்டிகொடுத் துயிர்காக்கு முழவனது மனதினிலே
‘உயர்ந்தோங்கி பயிர்களுமே வளரு’மென நம்பிக்கை
வேண்டிய பொருளினையே கொடுத்துவரும் வியாபாரி
‘வியாபாரம் பெருகு’மென கொண்டிடுவான் பேராசை
பண்பாடும் ஆலைகளும் பெருகிடவே முதலாளி
‘புத்தாண்டு வழிசெய்யும்’ என்றுபல எண்ணிடுவார்
பணமாக்கப் பணியில்லை யென்றலையும் மாந்தருமே
‘பணிகொடுக்கும் புத்தாண்டு’ என்றவரும் கூறிடுவார் !
ஈராறு திங்கட் கொருமுறையே மலர்ந்துவரும்
இணையில்லாப் புதுமலரே இசைகொண்ட பொன்மலரே
அரும்பெரு மாற்றலொடு இலங்கிவருந் தண்மலரே
அடைதற்கருந் தன்மைகளை யுட்கொண்ட தேன்மலரே
பாரதனில் பயில்கின்ற பண்புமிகு மாந்தரெலாம்
பூமலரே யுன்னிடமே பலப்பலவும் நோக்குகிறார்
சீர்மிகவே அவரவரின் எண்ணத்தைச் செயலாக்க
மென்மலரே யுன்னிடமே பணிவோடு வேண்டுகிறேன்!