பரீக்ஷா – நாடகக் குழு – ஞாநி

பரீக்‌ஷா: 1978 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வரும் முன்னோடி நவீன நாடகக்குழு.

விஜய் டென்டுல்கர், பாதல் சர்க்கார், பிரெக்ட், பிண்ட்டர்,
பிரீஸ்ட்லி ஆகியோரின் நாடகங்களை தமிழுக்கேற்ற விதத்திலும், தமிழ் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ந..முத்துசாமி, ஜெயந்தன், பிரபஞ்சன், அறந்தை நாராயணன், அம்பை, எஸ்.எம்.ஏ.ராம், சுந்தர ராமசாமி, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளையும் சென்னை நாடக ரசிகர்களுக்கு
வழங்கி வந்துள்ளது.

பாதல் சர்க்கார்: இந்தியாவில் வீதி நாடக வடிவத்தின் முன்னோடி. வங்கத்தில் மூன்றாவது அரங்கம் என்ற புதிய வகையை அறிமுகம் செய்து மனித விழிப்புணர்வுக்காகவே நாடகம் என்ற கோட்பாட்டை பரவலாக்கிய பாதல் சர்க்காரின் படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன.

தேடுங்கள்: பாதல் சர்க்காரின் மிச்சில்தான் தமிழில்
தேடுங்கள்.ஊர்வலங்களின் கால்களுக்குக் கீழே நசுங்கிக் கொல்லப்படும் இளைஞனும், காணாமற் போய்விட்ட கிழவனும் நிஜமான வீட்டுக்கு வழி சொல்லும் ஊர்வலத்தை தேடுகிறார்கள். அன்பை முன்னிறுத்தும் நிஜமான மனிதர்களின் ஊர்வலம் எப்போது வரும் ? கோரஸ் வடிவில் நம் வாழ்க்கையை நமக்கே படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி இந்த நாடகம். பரீக்‌ஷாவின் தயாரிப்பில் இது முற்றிலும் இன்றைய தமிழ் சூழலுக்கேற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.

சென்னை நகரின் முதல் நவீன தீவிர தொழில்முறையல்லாத தமிழ் நாடகக் குழுவான பரீக்‌ஷா 1978-ல் தொடங்கியபோது, வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பிடையே இருக்கும் போலி நம்பிக்கைகளைக் களைவதே தன் நோக்கம் என்று அறிவித்தது. கடந்த 37 வருடங்களில் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, ஜெயந்தன், பிரபஞ்சன், திலீப் குமார், சுஜாதா, ஞாநி, அறிஞர் அண்ணா ஆகியோரின் நாடகங்களையும், பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேத தேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி,பிரீஸ்ட்லீ ஆகியோரின் நாடகங்களின் தமிழ் வடிவங்களையும் பரீக்‌ஷா நிகழ்த்தியுள்ளது.

வாரந்தோறும் நவீன நாடகம் என்ற முயற்சியை 1992-93ல் ஓராண்டு நடத்தியது. நாடக விழாக்களில் பங்கேற்பு தவிர, இதர புரவலர் ஸ்தாபன ஆதரவு, மான்ய உதவிகள் இல்லாமல், பார்வையாளரிடம் திரட்டும் பணத்தைக் கொண்டு மட்டுமே பரீக்‌ஷா நாடகங்களை நிகழ்த்தி வருகிறார் இதன் நிறுவனரான எழுத்தாளர் ஞாநி.

ஜெர்மன் நாடகாசிரியர் பிரெக்ட்டின் காகேசியன் சாக் சர்க்கிள் நாடகத்தை தமிழுக்கேற்ற விதத்தில் மாற்றியமைத்து ஞாநி எழுதி இயக்கியிருக்கும் நாடகம்‘வட்டம்’. துரைகள் காலம் முதல் புரட்சி காலம் வரையிலான கதையை 20-க்கும் மேற்பட்ட நடிகர்களுடன் சொல்கிறது இந்த நாடகம். ஒரு குழந்தை யாருக்கு சொந்தம்…பெற்ற அன்னை துரையம்மாவுக்கா, வளர்த்த அன்னை கன்னியம்மாவுக்கா என்பதை திருடியாக இருந்து நீதிபதியாக மாறிய முனியம்மா எப்படி தீர்மானிக்கிறாள் என்பதே கதை. பெண்களுக்கான சம உரிமை, நிலத்தின் மீதான உழவரின் உரிமை, ராணுவம் முதலிய ஆட்சி இயந்திரங்களின் பங்கு எல்லாவற்றையும் பற்றி சமூக அரசியல் தொனியில் எள்ளலுடன் சொல்கிறது ‘வட்டம்’.

எட்டுக் கதைகளின் தொகுப்பு வட்டம்!

தனி நபர் நடிப்பு வடிவத்தில் மேல் சாதி விதவை, ஓர்பால் உறவாளர், மகளை இழந்த தாய், மனைவியை தொலைத்த கணவன், பெண்சீண்டல் எதிர்ப்புப் போராளி, குழந்தையைக் கொன்ற இளைஞன், கணவனைக் கொன்ற இளைஞி, காதலைத் தேடும் இளைஞன், உள்ளேயும் வெளியேயும் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர் என விதவிதமான எட்டு கதைகளைப் பேசுகிறது வட்டம்.

சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைக்கு, நாடகாசிரியர் அ.ராமசாமி அளித்துள்ள நாடக வடிவம்தான் “பல்லக்குத் தூக்கிகள்.”

இது ஆள்வோர் மற்றும் ஆளப்படுவோர் பற்றிய நாடகம்.

நாடக நிகழ்வு 20 நிமிடங்கள்.

தனி நபர் நடிப்பு வடிவத்தில் உள்ள பல சிறு நாடகங்களின் தொகுப்பு நாடகம்தான் “நாங்கள்”.

 

‘நான் நீ, நாம்’ என்ற சூழலைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள இந்த நாடகங்களில் ஒவ்வொரு பாத்திரமும் தன் கதையைச் சொல்கிறது. ஒவ்வொரு கதையும் நமக்குப் பரிச்சயமானதுதான் ஆனால் அதிர்ச்சியானது. நம் குடும்பம் சார்ந்த கதைகள் .இந்தியச் சூழலில் புனிதமாகவும் நம்மை தொடர்ந்து வாழவைக்கும் வடிவமாகவும் கருதப்படும் குடும்ப அமைப்பின், சமூக அமைப்பின் அழகும் அழுக்கும் வெளிப்படும் கதைகள்.

 

இதில் இருக்கும் எட்டு கதைகளில், ஆறு கதைகளை ஞாநியும், இரண்டை ’மா’வும் எழுதியுள்ளனர்.

“சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வெவ்வேறு வேலைகளிலிருந்தாலும், நாடகம் மீது காதலும் சமூகம் மீது அக்கறையும் கொண்டிருப்பதே பரீக்‌ஷாவில் இணைவோரை ஒன்றுபடுத்துகிறது” என்று ஞாநி பெருமிதப்படுகிறார்.