சித்திரைப் புதுமலரே வாராயோ ! — கோவை சங்கர்

தமிழகத்துப் பொழிலினிலே புதுமலரும் பூத்ததுவே
தத்திவரும் புள்ளினமும் களிப்பதனில் மூழ்கியது;
தெம்மாங்கு பாடியது மக்களிலே யோர்கூட்டம்
தித்திக்கு மூணுண்ண நின்றதுவே மறுகூட்டம்
செம்மையுற பயிரோங்க அரும்பெருந் தொழில்வளர
செய்விக்கும் நம்பிக்கை கொண்டதுவே நம்தேயம்
‘அம்மா’வென இரக்கின்ற கூட்டமினி யிலையென்று
அடங்காத ஆவலொடு பார்க்கின்றாள் தமிழ்த்தேவி!!

சின்னஞ்சிறு குழவிக்கு பால்கிடைக்கு மெனவெண்ணம்
விளையாட்டுப் பொருள்மீது ஆசைகொளும் மழலையுமே
இனிக்கின்ற கல்விதனைக் கற்கின்ற சிறுவர்க்கு
இகத்தினிலே முதலாக விளங்குவதி லோர்நாட்டம்
மனமொத்துப் பருவத்தால் கட்டுண்ட காதலர்க்கு
மணந்தனை யிவ்வாண்டு வைத்திடலா மெனவாசை
துணையோடு குழந்தைகள் பலகொண்டு உழல்பவரோ
இடர்தீர்க்கும் புத்தாண்டு எனக்கொள்வா ருறுதியுமே!

உண்டிகொடுத் துயிர்காக்கு முழவனது மனதினிலே
‘உயர்ந்தோங்கி பயிர்களுமே வளரு’மென நம்பிக்கை
வேண்டிய பொருளினையே கொடுத்துவரும் வியாபாரி
‘வியாபாரம் பெருகு’மென கொண்டிடுவான் பேராசை
பண்பாடும் ஆலைகளும் பெருகிடவே முதலாளி
‘புத்தாண்டு வழிசெய்யும்’ என்றுபல எண்ணிடுவார்
பணமாக்கப் பணியில்லை யென்றலையும் மாந்தருமே
‘பணிகொடுக்கும் புத்தாண்டு’ என்றவரும் கூறிடுவார் !

ஈராறு திங்கட் கொருமுறையே மலர்ந்துவரும்
இணையில்லாப் புதுமலரே இசைகொண்ட பொன்மலரே
அரும்பெரு மாற்றலொடு இலங்கிவருந் தண்மலரே
அடைதற்கருந் தன்மைகளை யுட்கொண்ட தேன்மலரே
பாரதனில் பயில்கின்ற பண்புமிகு மாந்தரெலாம்
பூமலரே யுன்னிடமே பலப்பலவும் நோக்குகிறார்
சீர்மிகவே அவரவரின் எண்ணத்தைச் செயலாக்க
மென்மலரே யுன்னிடமே பணிவோடு வேண்டுகிறேன்!

பஞ்சாங்கம் (சு.ரா.)

பழைய பஞ்சாங்கம் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். அதில்  எத்தனை விஞ்ஞானம் இருக்கிறது தெரியுமா?  அது பெரிய ஆகாயம்.

அந்த வான வெளியை நாம் கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போமா? 

பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.  அவை: 

வாரம் ,   திதி ,   கரணம்,   நட்சத்திரம்,    யோகம்.

வாரம்:

ஞாயிறு, திங்கள் என்பது  வாரமாகும் . 

திதி:  

திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும். : 

அமாவாசை முதல் பிரதமை   துதியை   திருதியை  சதுர்த்தி   பஞ்சமி   சஷ்டி   சப்தமி   அஷ்டமி   நவமி   தசமி  ஏகாதசி துவாதசி திரயோதசி   சதுர்த்தசி  ஆகிய  15 நாட்கள் .

பிறகு பௌர்ணமி  முதல் மறுபடியும்  பிரதமை   துதியை   திருதியை   சதுர்த்தி   பஞ்சமி  சஷ்டி  சப்தமி  அஷ்டமி      நவமி       தசமி      ஏகாதசி  துவாதசி திரயோதசி  சதுர்த்தசி ஆகிய. 15 நாட்கள்.

மொத்தத்தில் 30 திதிகள். 

கரணம்,

ஒரு திதிக்கு இரு கரணங்கள் . ஆக மொத்தம் 60 கரணங்கள்.  

கீழே கொடுக்கப்பட்டுள்ள  11 கரணங்கள் சுழற்சி முறையில் வரும். 

 1. பவம்
 2. பாலவம்
 3. கௌலவம்
 4. சைதுளை
 5. கரசை
 6. வனசை
 7. பத்திரை
 8. சகுனி
 9. சதுஷ்பாதம்
 10. நாகவம்
 11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம் :

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 டிகிரி  கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். ( மொத்தம் 360 டிகிரி).  சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது

அனைவருக்கும் தெரிந்த அசுவதி முதல் ரேவதி வரையில் உள்ள:  27 நட்சத்திரங்கள். 

 யோகம்:

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

.1. விஷ்கம்பம் 10. கண்டம் 19. பரிகம்
2. பிரீதி 11. விருதி 20. சிவம்
3. ஆயுஷ்மான் 12. துருவம் 21. சித்தம்
4. சௌபாக்கியம் 13. வியாகதம் 22. சாத்தீயம்
5. சோபனம் 14. அரிசணம் 23. சுபம்
6. அதிகண்டம் 15. வச்சிரம் 24. சுப்பிரம்
7. சுகர்மம் 16. சித்தி 25. பிராமியம்
8. திருதி 17. வியாதிபாதம் 26. ஐந்திரம்
9. சூலம் 18. வரியான் 27. வைதிருதி

ராசி: 

 

பன்னிரண்டு ராசிகள்:

 1. மேஷம்
 2. ரிஷபம்
 3. மிதுனம்
 4. கடகம்
 5. சிம்மம்
 6. கன்னி
 7. துலாம்
 8. விருச்சிகம்
 9. தனுசு
 10. மகரம்
 11. கும்பம்
 12. மீனம்

 

ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர்.  அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம்.

ராசியின் பெயர் நட்சத்திரங்கள்
மேஷம் அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்.
ரிஷபம் கார்த்திகை 2, 3, 4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.
மிதுனம் மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.
கடகம் புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
துலாம் சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்
விருச்சிகம் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
தனுசு மூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்
மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்
கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1, 2, 3 பாதங்கள்
மீனம் பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

 

ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம்.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது

கிருகங்கள் :

 1. சூரியன் 
 2. சந்திரன் 
 3. செவ்வாய் 
 4. புதன் 
 5. வியாழன்  
 6. வெள்ளி 
 7. சனி 
 8. இராகு (நிழற்கோள்)
 9. கேது (நிழற்கோள்)

சூரியன் ஒவ்வொரு ராசியையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டு ஒரு வருடத்தில் 12 ராசிகளையும் கடக்கிறது. 

 

வாக்கியப் பஞ்சாங்கம் :

கி .மு. 1200 முதல் கி.மு.400 வரையில்  உள்ள காலத்தில் கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ரிஷிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் ஒரு முறையைக் கண்டு பிடித்தனர்.   இது “வாக்கிய முறை” எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் “வாக்கியப் பஞ்சங்கம்” எனப்பட்டது.. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.

ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,  திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம்,ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்,சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம்,திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்

 

.திருக்கணித பஞ்சாங்கம்

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு.
வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் இந்தப்  பிழைகளைக்  திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் “திருகணித முறை” எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் “திருகணிதம்” பஞ்சாங்கம் எனப் படும்.
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

 

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு “டெலஸ் கோப்புகள்” வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. 

ஒவ்வொரு வருடமும் பஞ்சாங்கக் கருத்தரங்கங்கள் பொதுவாக ஆடி மாதம்  நடக்கும்.  காஞ்சி மடாதிபதி, அஹோபில மடாதிபதி, தர்மபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் போன்ற மகான்கள் தலைமை வகிக்கும் அந்த கருத்தரங்கங்களில் பிரபல ஜோதிடர்களும், பஞ்சாங்கம் மற்றும் தினசரி காலண்டர் தயாரிப்பாளர்களும், கலந்து கொள்வார்கள்.

கருத்தரங்கில் பெரிய விவாதமே நடக்கும். வாதங்களும், பிரதிவாதங்களும், சர்ச்சைகளும், கருத்துப் பரிமாற்றங்களும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்படும்.

இதில் அனைவராலும், ஒருமுகமாக ஏற்றுக்கொள்ளப்படும் தகவல்களும், நிர்ணயிக்கப்படும் விரத காலங்கள் மற்றும் கோயில் உற்சவ நாட்கள் எல்லாம் அடுத்து வரும் பஞ்சாங்கத்தில் இடம் பெறும்.’

 

ன்றி: ஈகரை தமிழ் களஞ்சியம்  http://www.eegarai.net/t111579-topic

நன்றி : தமிழ் விகிபீடியா – பஞ்சாங்கம் 

நன்றி : தினகரன் ஜோதிடம்  http://astrology.dinakaran.com

 

படைப்பாளி ஆதவன் – (எஸ் கே என்)

ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் ஆதவன் 

1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்த  கே எஸ் சுந்தரம் (ஆதவன்) இந்திய இரயில்வேயிலும், ‘நேஷனல் புக் டிரஸ்டின்’  தமிழ்ப் பிரிவில் துணையாசிரியராக தில்லியிலும்  பெங்களூரிலும்  பணியாற்றியவர். 1987 ல் சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக  வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“1960, 70களில் இந்திய நகரங்களில் இளமைப் பொழுதைக்  கழித்த, படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரத்தியேக ஆசை அபிலாஷைகளையும், சோகங்களையும் நிராசைகளையும் ஆதவன் போல யாரும் தமிழில் பிரதிபலிக்க முடிந்ததில்லை” என்கிறார் திரு அசோகமித்திரன்.

அவர் சொற்களிலேயே ஏன் எழுதுகிறேன் என்பதைப்பற்றி :

“எழுதுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனவேதான் நான் எழுதுகிறேன். சாப்பிடாமல் இருந்து பார்த்தேன் முடிந்தது; காதலித்தவளை மறக்க முயன்றேன், முடிந்தது. ஆனால், எழுதாமலிருக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.”

தன் எழுத்துக்கள் குறித்து

‘நானும் என் எழுத்தும்’ என்று சொல்லிக் கொள்ள முற்படும்போது, இந்தச் சொற்றொடரில் பெருமையுடன் கூடவே ஓர் ஏளனத்தின் சாயலும் கலந்து தொனிப்பதாக எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது – ‘இவனும் இவன் மூஞ்சியும்’ என்று சொல்வதைப் போல. வேறு சிலரும் இதே விதமான அபிப்ராயந்தான் கொண்டிருக்கிறார்களென்பதை நான் அறிவேன் – என் மூஞ்சியைப் பற்றியும், என் எழுத்தைப் பற்றியும். இப்படி ஒரு பிரகிருதியா! இப்படி ஒரு எழுத்தா! என்று பரிகாசத்துடன் சிரித்துக் கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கெடுப்பானேனென்று, பல சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன். “யூ ஆர் ரைட், ஆஸ் யூ ஸே – இந்த – என்ன சொன்னீர்கள்?”

 

சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட ஒரு நகர்ப்புற, மத்தியதர இளைஞனான ராமசேஷனின் கண்களின் வழியே நவீன வாழ்க்கையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் பதிவாகும் “என்பெயர் ராமசேஷன்” இவரது தலை சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இந்தப் புதினத்தின்  ரஷ்ய மொழியாக்கம் இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனை ஆகியது.

இந்தியத் தலைநகரின் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு மக்களின்  வாழ்க்கைப் போக்கு, மன ஓட்டங்கள் அதிகார வர்க்கம். மாணவர் உலகம், பத்திரிகை உலகம், அரசியல் உலகம், கலை உலகம், விஞ்ஞான உலகம், தொழிலாளர் உலகம் ஆகிய சூழலில் படைக்கப்பட்ட “காகித மலர்கள்” மற்றொமொரு சிறந்த புதினம்.

‘இண்டர்வியூ’, ‘அப்பர் பெர்த்’, ‘தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு’, ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’,  ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ ஆகியவை  இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகளில் சில.

சுசீ என்றழைக்கப்படும் பள்ளியாசிரியை சுசீலா, மற்றொரு ஆசிரியையான மிஸ் டாமினிக் பற்றி சொல்லும் இவரது ‘சினேகிதிகள்’ சிறுகதை

“மிஸ் டாமினிக் தன்னைவிட இருபது ஆண்டுகள் ஜூனியரான என்னைப் பார்த்து பொறமைப்படுகிற ஒரு காலமும் வரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை”

என்று தொடங்குகிறது

வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்த அன்றே மிஸ். டாமினிக் தான் பிரின்சிபால் அறைக்கு வழி சொல்கிறாள். நேர்முகத்தேர்வின் குழுவில் அவளும் இருக்கிறாள். கேள்விகள் கேட்டதெல்லாம் பிரின்சிபால் அகதா மட்டுமே.

வேலைக்குச் சேர்ந்தபிறகு ஆறாம் வகுப்பிற்குக் கணக்குப் பாடம் எடுப்பது  சுசீலாவிற்குக் கிடைக்கவும் மிஸ் டாமினிக் தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். ‘மிடில்’  வகுப்புகளுக்குக் கணக்கு எடுப்பது மிஸ் டாமினிக்கின் ஏகபோக உரிமையாம்.

டாமினிக்கும் சுசீலாவும் சிநேகிதிகள் ஆகிவிடுகிறார்கள். கொண்டு வரும் மதிய உணவை மிஸ் டாமினிக் வீட்டிற்குச் சென்று சாப்பிடும் அளவிற்குப் பழகிவிடுகிறார்கள். அகதா பிரின்சிபாலாக இருந்தவரை டைம் டேபிள் வாங்குதல், எல்லா வகுப்பு பிராகரஸ் கார்டுகளை மேற்பார்வையிடுதல், பார்ட்டிகளோ சுற்றுலாக்களோ ஏற்பாடு செய்தல் என்று பல பொறுப்புகள்  மிஸ் டாமினிக் வசம் இருந்தன. ப்ரின்சிபாலுடன் டாமினிக் டீ சாப்பிடும்போது சுசீலாவும் பல சமயம் இருப்பாள்.

வெவ்வேறு ஆசிரியைகளின் பலவீனங்கள், வகுப்புகளில் நடந்த தவறுகள், ரகளைகள், போட்டிகள், பொறாமைகள் முணுமுணுப்புகள்  எல்லாம் பற்றி பிரின்சிபாலுக்கு  மிஸ் டாமினிக் மூலமாகத் தகவல் கிடைத்துவிடும். யாரவது லீவு  போட்டால் அதை எடுக்க மிஸ் டாமினிக்  வந்துவிடுவாள். நோட்புக்குகளை பரிசீலித்து அதிலுள்ள தவறுகளை பிரின்சிபாலுக்கு ரிப்போர்ட் செய்துவிடுவாள்.

டாமினிக்குடன் நல்ல உறவுகளைப் பேணிவர ஒவ்வொரு டீச்சரும் பாடுபட்டாள். அதே சமயத்தில் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்றால் தங்களைப் பற்றி- தங்கள் குறைபாடுகளைப் பற்றி – அவளுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்துகொண்டு சற்று விலகியே இருக்கவும் செய்தார்கள். என் ஒருத்தியிடம் மட்டும் டாமினிக் காட்டிய   அன்பும் பரிவும் அவர்களுடைய  பொறாமையைக் கிளப்பிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஒற்று வேலை செய்வதிலும், தங்களைப் பற்றி பிரின்சிபாலிடம் கோள் மூட்டி விடுவதிலும் நானும் டாமினிக்குக்கு உடந்தை என்றும் சிலர் நினைத்தார்கள்.

சிலர் டாமினிக்கைப் பற்றி, தனியாக இருக்கிறாளா, ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, காதல் தோல்வியா,   சகோதர சகோதரிகள் எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் இவள் வாயைக் கிண்டுவார்கள். இவள் பதிலளிக்காமல் நழுவிவிடுவாள்.

அகதா ஓய்வுபெற்று பெண்டிக்டா பிரின்சிபாலாக வந்தும் டாமினிக்கின் பொறுப்புகளிலோ, அதிகாரத்திலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.

பிரின்சிபாலுக்குத் தளபதியாக, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பயமூட்டுபவளாக இருந்த டாமினிக் சுசீலாவிடம்  மட்டும் செடி கொடிகள், நாய்கள், உலக நடப்புகள், கல்விமுறையில் சீர்திருத்தங்கள் என்று அரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பவளாக இருந்தது யாருக்குத் தெரியும்.

டாமினிக்கின் தோழமை காரணமாக ப்ரின்சிபலின் அந்தரங்க வட்டத்தில் தானும் அடக்கம் என்ற பிரமையில் திளைத்து வந்தாள்.

பள்ளி அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பெண் பணம் கையாடிவிட்டதால் அவளை நீக்கிவிட்டார்கள். அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு நம்பகமான ஆள் தேவைப்பட்டது. பிரின்சிபால் பெனடிக்டாவும் டாமினிக்கும் வேறு  ஆளை நியமிக்கும் வரை அந்தப் பொறுப்பை சுசீலாவை ஏற்க வைக்கிறார்கள். நாமும் அதிகார வட்டத்தில் ஒரு நபர் என்னும் பிரமையில் அப்பொறுப்பை ஏற்று சுசீலா என்னும்  ‘டீச்சர்’,  ‘கிளார்க்’ ஆகிவிடுகிறாள். புதுப் பொறுப்பில் வாசுதேவன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.  சுசீலாவைச் சந்திக்க வந்த வாசுதேவனை, பள்ளியின் கணக்கு வழக்குகள் பரிசீலிக்க பெனடிக்டா கேட்டுக்கொள்கிறாள்.  சுசீலா – வாசுதேவன் நட்பு  திருமணத்தில் முடிகிறது.

திரும்பவும் குமாஸ்தாவிருந்து ஆசிரியை ஆகலாம் என்றால், “அந்த லைனிலிருந்து தொடர்பு அறுந்துபோய் இவ்வளவு நாளாகிவிட்டதே!” என்று சொல்லிவிடுகிறாள், பிரின்சிபால் பெனடிக்டா

பெனடிக்டா ஓய்வுபெற்றதும் மரியம் என்னும் புது பிரின்சிபால் பொறுப்பேற்கிறார். அவருக்கு டாமினிக்கின் வழிமுறைகள் பிடிக்கவில்லை. தன் வழி முறைகளை நியாயப்படுத்த  முயன்ற டாமினிக்கிடம் “உங்கள் கருத்துக்களை ஆதரிக்கும் வேறு பள்ளிக்கூடத்தில் நீங்கள் சேர்ந்து கொள்ளலாம்” என்கிறார் பிரின்சிபால்.

ஸ்டாஃப் ரூமில் இருந்தாலே உரத்த குரலும் சிரிப்புமாக அந்த அறையையே கலகலக்க வைக்கும் மிஸ் டாமினிக், அமைதியாகி விடுகிறாள். அரசியாக இருந்தவள், ஒரே நாளில் சாதாரணப் பிரஜை ஆனாள். சுசீலாவிற்கு அவள் மீது அனுதாபமாக இருந்தது.

டாமினிக் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருக்கையில், காசு வசூலித்து ஸ்வீட் காரம் காப்பியுடன், தனது வீட்டிலேயே ஒரு ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்கிறாள் சுசீலா.

தேநீர் விருந்து பெரும் வெற்றி. எல்லோரும் கலைந்துபோனதும் சுசீலாவின் கையைப் பிடித்துக்கொண்டு உரக்க அழுகிறாள்.

“நான் உனக்கு அநீதி இழைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு சுசீ” என்னை மன்னித்துவிடு.”

“மிஸ் டாமினிக் ! எனக்குப் புரியவில்லை.”

“நான் உன்னைப் பார்த்துப் பொறாமைப் பட்டேன்”

“நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?”

“சுசீ .. நீ ஆறாம் வகுப்பு டீச்சராக இருந்தபோது – உன் படிப்பு சொல்லிக் கொடுக்கும் திறனைப் பலர் புகழ்ந்தார்கள். குறிப்பாக, கணக்குச் சொல்லித்தருவதை… என்னால் அதைத் தாங்க முடியவில்லை சுசீ.. நான்தான் கணக்குச் சொல்லித்தருவதில் எக்ஸ்பர்ட் என்று நினைத்திருந்தேன்.”

“நீங்கள்…. நிஜமாக … “

“நீ ட்யூஷன் சொல்லித்தருவாயா என்றுகூடச் சில பெற்றோர் பெனடிக்டாவிடம் விசாரித்தார்கள். எனக்கு பயமாகப் போய்விட்டது, சுசீ “

“பயமா? எதற்காக?”

“நாமிருவரும் குடியிருந்தது  ஒரே ஏரியாவில். எனக்கு வர வேண்டிய ட்யூஷன் கிராக்கிகளை நீ பறித்துக் கொண்டு விடுவாயோ என்று பயமாயிருந்தது. …”

ட்யூஷனில் தனக்குப் போட்டியாக சுசீ வரக்கூடாது என்பதற்காகவே, அவளை ஆபீசில் போடும்படி பிரின்சிபாலிடம் சிபாரிசு செய்ததாகவும் கூறுகிறாள் டாமினிக். சுசீலா அதிர்ச்சியில் துவண்டு போகிறாள்.

“என்னை மன்னித்துவிடு சுசீ! என்னை மன்னித்துவிடு!” என்று அவள் மீண்டும் அரற்றினாள். “உன்னைப்போல நானும் யாரவது ஓர் இளைஞனுடன் சமரசம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நான் மிகவும் கர்வம் பிடித்தவள். பணியாதவள். எல்லா ஆண்களையும் என்னிடமிருந்து விரட்டிவிட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாருமே மிச்சமில்லை. நான் மேலும் என் பிடிவாதத்தில் சிறைப்பட்டு, வக்கிரமான சுயநலவாதியாகி, என் உறவினர்களையும் விரோதித்துக் கொண்டு, கடைசியில் நான் அன்போடு நேசித்த ஒரு ஜீவனுக்குக்கூட துரோகம் பண்ணுமளவிற்கு..  “

தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது தனது  மதிப்பீடுகள் யாவும் பறிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டு வாழ்க்கையும் பயனற்றதாக உணர்ந்து, மற்றவர்களை நம்புவதையே கேள்விக்குறியாக்கி…

மிஸ் டாமினிக்!  நீ என் மனதில் சந்தேக விதைகளைத் தூவிவிட்டாய். அவநம்பிக்கையுள்ளவளாக்கி விட்டாய். இதுதான் நீ செய்த மிகப் பெரிய குற்றம், டாமினிக் இனி எந்த ஒரு  ஜீவனையும் முழு மனதாக ஒப்புக்கொள்ளவோ, அதன் மீது நம்பிக்கை வைக்கவோ.. ஓ காட்!

ஒய்வு பெற்றபிறகு மிஸ் டாமினிக் இதே நகரின் புறநகர்ப் பகுதி ஒன்றில்தான் வசித்து வருவதாகக் கேள்வி.  யாரோ அட்ரஸ் கூடக் கொடுத்தார்கள். ஆனால் நான் அவளைப் பார்க்கப் போகவில்லை. பார்க்க வேண்டுமென்று தோன்ற வில்லை.

என்று முடிகிறது கதை

இணையத்தில் கிடைக்கும் இவரது சில கதைகள்.

இண்டர்வியூ          புதுமைப்பித்தனின் துரோகம்      முதலில் இரவு வரும்

 

அம்மா  நீயா  இப்படி…..!  (நித்யா சங்கர் )

குழந்தைப் பருவத்தில் பாலோடு பாசத்தையும். அன்பையும்
ஊட்டி வளர்த்த அம்மா ….. பள்ளிப் பருவத்தில் வேகாத வெய்யிலில் மகன் பட்டினியாய்  இருக்கக் கூடாதே…., சூடாக சாப்பிடவேண்டுமே
யென்று சோற்றுப் பையுடன் பள்ளிக் கூடத்திற்கு ஓடி வந்த அம்மா,
காலேஜ் நாட்களில் பையனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று
அறிந்து யோசித்து யோசித்து ருசியாக ஆக்கிப் போட்ட அம்மா…..

அம்மா நீயா இப்படி…!

வருகிற மனைவி எப்படி அமைவாளோ…? பாசப் பிணைப்பில்
மகிழ்ந்திருக்கும் நம் குடும்பத்தைப் பிரித்து விடுவாளோ….?’ என்றெல்லாம்
சந்தேகம் எழும்ப கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த
மதுவை உட்கார வைத்து, ‘கல்யாணத்துக்கப்புறம் பாருடா… உன்
மனைவியாக வரப் போறவளை என் பொண்ணு மாதிரித் தாங்கி த்தாங்கி
வெச்சுக்குவேன் என்று உறுதி சொல்லி கல்யாணம் பண்ணி வைத்த
அம்மா……. அம்மா நீயா இப்படி…?

பூஜா புகுந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.
கழுத்திலே கட்டிய மஞ்சச் சரட்டின் நிறம் கூட மாறவில்லை..
அதற்குள் அவசர அவசரமாக ஒரு வீடு பார்த்து, ஒரு நல்ல நாளில்
பால் காய்ச்சி மதுவையும், பூஜாவையும் தனிக் குடித்தனமும் வைத்து
விட்டாள் அம்மா.

‘ஏன்… ஏன்… தப்பு எங்கே நடந்தது?.’ என்று காரணம்
புரியாமல் அயர்ந்து போய் நின்றான் மது.

அவனுக்குத் தெரிந்த வரை பூஜா மேல் ஒரு குறையும் இருப்-
பதாகத் தெரியவில்லை… அதுவும் தனிக் குடித்தனம் வரவேண்டும்
என்று தெரிந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டு அவள் அழுத
அழுகை இருக்கிறதே…..!

‘அம்மா, நான் என்ன தப்பு செய்தேன்… நான் ஏதாவது
தப்பு செய்திருந்தா என்னைத் திட்டுங்க… ஏன் அடிக்கக் கூட
உங்களுக்கு உரிமை இருக்கு. மாமனார், மாமியாருடன் –
அதாவது என் அம்மா, அப்பாவுடன் – ஒரு குடும்பமா சந்தோஷமா
இருக்க வேண்டும் என்று ஆசையோடு வந்தேனே … அதுக்கு
நீங்கள் தரும் தண்டனையா..? ஏன் அம்மா.. இப்படி எங்களைப்
பிரிச்சு வெக்கறீங்க..? சொல்லுங்க அம்மா சொல்லுங்க…’ — அவள்
பேச்சிலே கபடமில்லை.. உண்மை இருந்தது…

தோளிலே சாய்ந்து அழுதவளை மெதுவாக அணைத்துக்
கொண்டும், ஆதரவோடு தடவிக் கொடுத்தும், ‘ அடீ.. பைத்தியக்காரி..
அசடு மாதிரி ஏண்டி அழுதுட்டு இருக்கே… நாங்க கிரவுண்டு
·ப்ளோரில் இருக்கோம்.. நீங்க ·பர்ஸ்ட் ·ப்ளோரில் இருக்கப்
போறீங்க. உங்க படுக்கையறை பால்கனியிலிருந்தோ, சமையலறை-
யிலிருந்தோ ‘அம்மா’ன்னு கூப்பிட்டேன்னா ரெண்டாவது நிமிஷமே
நான் உங்க வீட்டுலே இருக்கப் போறேன். அது போல் நான்
‘பூஜா’ன்னு கூப்பிட்டேன்னா ரெண்டாவது நிமிஷம் நீ என்
முன்னால் நிற்கப் போறே… நீங்க ரெண்டு பேரும் சின்னஞ்
சிறிசுக .. ஜாலியா லைபை எஞ்சாய் பண்ணணும்’ என்று ஆறுதல்
கூறினாள் அம்மா. அம்மாவின் சொற்களில் கோபமோ, தாபமோ,
வஞ்சமோ இல்லை. அன்பும் பாசமும்தான் தெரிந்தது.

‘அவதான் இவ்வளவு சொல்றாளே… பின்னே எதுக்கு
அவங்களைத் தனியாப் போகச் சொல்றே..? அவங்களும் இங்கேயே
இருக்கட்டுமே…’ என்றாள் ஊரிலிருந்து வந்திருந்த அத்தை.

அம்மாவின் பதிலோ அவள் இதழோரம் கசிந்த ஒரு
சின்ன புன்னகை.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் மது.

‘என்னங்க.. தூக்கம் வரலையா..?’ என்றாள் பூஜா.

‘எனக்கு ஒண்ணுமே புரியலை பூஜா…. தப்பு எங்கே
நடந்ததுன்னே புரியலை…. அம்மா ஏன் இப்படி..!’

அதுதான்ங்க .. எனக்கும் புரியலே… மாமியார், மாமனார்
எல்லோருடனும் கூட்டுக் குடும்பத்திலே இருக்கணும்னு ஆசை
ஆசையாய் வந்தேன். என்ன ஆச்சுன்னே தெரியலையே.. ஆனா
அம்மாக்கும் என் மேல் கோபமோ, வெறுப்போ இருக்கிறதாகவும்
தெரியலே..பாதி வேலையை இழுத்துப் போட்டுண்டு நீங்க
ஆபீஸிலேயிருந்து வறதுக்குள்ளே முடிச்சிட்டு ‘ரெண்டு பேரும்
வெளியிலே ஜாலியா போயிட்டு வாங்க’ன்னு அன்பா அனுப்பறாங்க.
மதுவுக்கு இது பிடிக்கும், பூஜாக்கு இது பிடிக்கும்னு பார்த்துப்
பார்த்துச் செய்து கொண்டு தராங்க… நாம் தனித்தனியே ரெண்டு
வீட்டிலே இருக்கிறோமே யொழிய பாதி நாளும் அம்மாவுடைய
பிரிபரேஷன்தான். உங்களுக்கு நெனவு இருக்கா.. ஒரு நாள்
உங்ககிட்டே ‘ஒரு பர்டிகுலர் ஸாரி டெக்ஸ்டைல்ஸ் ஷாப்பில்
டிஸ்ப்ளேயில் போட்டிருந்தான். அது எனக்கு ரொம்ப பிடித்தது’
என்று சொல்லிட்டிருந்தேன். அதை எப்படியோ அம்மா
கேட்டிருக்காங்க. அன்னிக்கு சாயந்திரமே அதை வாங்கி வந்து
எனக்கு பிரஸண்ட் பண்ணினாங்க. இப்படி ஆசை ஆசையாய்
பண்ணற அம்மா கூடவே இருக்க முடியாமப் போச்சு பாருங்க…
நான் என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலீங்களே..’ என்று
விசும்பினாள்.

‘ஓகே… கவலைப் படாதே …. எல்லாம் போகப் போக
சரியாகி விடும்….’ என்று ஆறுதல் கூறிய படியே அவளை
அணைத்துக் கொண்டான் மது.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவன், திடீரென்று கண்
விழித்தான். அறையிலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
வாட்சைப் பார்த்தான். மணி பன்னிரண்டு. பூஜா கனத்த
இருமலோடு பாத்ரூமில் முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

‘பூஜா .. ஏன், என்னம்மா ஆச்சு ..?’

‘என்னமோ தெரியலே .. ஒரே வோமிட்டிங் ஸென்ஸேஷன்..
இருமல் வேறே .. ஜுரம், தலை வலி வேறே ..’

‘அப்படியா .. அம்மாவைக் கூப்பிடட்டுமா ..”

‘வேண்டாங்க .. பாவம் அவங்க நல்லா தூங்கிட்டு
இருப்பாங்க .. படுத்துத் தூங்கினா சரியாயிடும்’ என்று கூறியவாறு
வந்து கட்டிலில் படுத்தாள். அவள் முகம் சோர்ந்து போயிருந்தது.
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. மதுவுக்கு என்ன
செய்வது என்றே தெரியவில்லை .. அம்மா மேல் கோபம்
கோபமாக வந்தது. எல்லோரும் சேர்ந்திருந்தால் அம்மா
ஏதாவது கை வைத்தியம் செய்திருப்பாள். விடிஞ்சதும்
டாக்டரிடம் போயிருக்கலாம்.

‘என்னடா செய்வது ..?’ என்று எண்ணியபடியே
பால்கனிக்கு வந்தான்.

‘என்னடா .. மது .. என்ன ஆச்சு? தூங்கலியா..?’
என்ற அம்மாவின் குரல் கீழ் போர்ஷனிலிருந்து கேட்டது.

‘அம்மா… பூஜாவுக்கு உடம்பு முடியலேம்மா.. ரொம்ப
இருமலாவும், வோமிட்டிங் ஸென்ஸேஷனாவும், ஜுரமாவும்
இருக்கு .. ‘ என்றான் தீனமான் குரலில்.

‘பயப்படாதே .. ஐந்து நிமிஷத்தில் வரேன்’ னு
சொல்லியபடியே உள்ளே போனாள். மதுவும் உள்ளே வந்தான்.
அம்மாவின் வருகைக்குக் காத்திருந்தான்.

சொன்னபடியே ஐந்து நிமிஷத்தில் கதவைத் தட்டினாள்
அம்மா. மது ஓடிப் போய் கதவைத் திறந்தான். அம்மாவைக்
கண்டதும் அவன் முகத்திலே உள்ள கவலை ரேகைகள்
மறைந்தன. மனதிலே ஒரு திடமும் நம்பிக்கையும் வந்தது. அம்மா
கையில் ஒரு குவளையில் கஷாயம் கொண்டு வந்திருந்தாள்.

பூஜாவிடம் ஓடிப் போய், ‘என் செல்லம் .. என்னடா
செய்யுது .. ஒண்ணும் பயப்படாதே.. அம்மா இருக்கேன் இல்லே..
இந்தக் கஷாயத்தைச் சாப்பிடு.. உன்னுடைய ஜுரம் எல்லாம் ஓடிப்
போயிடும்’ என்றபடியே கஷாயத்தை அவளுக்கு புகட்டினாள்.

‘அம்மா .. எனக்கு பயமா இருக்கும்மா .’ என்று சின்னக்
குழந்தை போல் அதுவரை தேக்கி வைத்திருந்த துக்கத்தையெல்லாம்
அழுது கொட்டித் தீர்த்தாள் பூஜா. அம்மாவின் மடியில் தலை
சாய்த்து படுத்தாள்.

‘சீ..சீ.. அம்மா வந்துட்டேன் இல்லே.. இனி ஒண்ணுக்கும்
பயப்படாதே..’

‘அம்மா.. என்னை விட்டுப் போயிடாதீங்க…’

‘இல்லேடா செல்லம் ..நான் உன் கூடவே இருக்கேன்.
மது நீ ஹாலில் படுத்துக்கோ .. கவலைப் படாமே தூங்கு..
நாளைக்கு ஆபீஸ் போகணும் இல்லியா .. நான் பூஜாவைப்
பார்த்துக்கறேன்.. ‘ என்று அவள் தலையையும், முதுகையும்
ஆதரவோடு தடவியபடியே விடிய விடிய உட்கார்ந்திருந்தாள்
அம்மா. பூஜாவும் நிம்மதியாக உறங்கிப் போனாள்.

ஆபீஸிலிருந்து வந்தவன் வீடு பூட்டியிருப்பதைப்
பார்த்து, ‘பூஜா எங்கே காணலியே ..’ என்ற சந்தேகத்தோடு
அம்மாவின் வீட்டிற்கு வந்தான். வீட்டில் நுழையப் போனவன்
அம்மாவும், அத்தையும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து
வாசலில் நின்றான்.

‘ஏண்டீ உமா… பூஜா ரொம்ப நல்ல பொண்ணாத்
தெரியறா .. உங்கிட்டயும் ரொம்ப பாசமாவும், அன்பாவும்
இருக்கா .. அப்படி இருக்கும்போது அவங்களை ஏன் தனிக்
குடித்தனம் வெச்சிருக்கே….’ என்றாள் அத்தை.

‘அதுக்கு நீங்கதான் காரணம் அக்கா… ‘ என்றாள் அம்மா.
சிரித்தபடியே.

‘ஏய்..ஏய்.. என்ன சொல்றே? நானா காரணம்?’

‘அக்கா .. ஒரு பொண்ணு புதுசா கல்யாணம் பண்ணிட்டு
வரும்போது பல கற்பனைகளோடும், எண்ணங்களோடும் புகுந்த
வீட்டுக்கு வரா.. புகுந்த வீட்டிலே எல்லோரும் புதியவங்க…
அவ தன் வீட்டை எப்படி எல்லாம் வெச்சுக்கணும்னு நினைக்-
கிறாளோ, அது மாதிரி செய்ய முடியாம போகலாம் .. டென்ஷனில்
குடும்பம் நடத்திட்டிருக்கிற மாமியார், மாமனார் வாயிலிருந்து
ஏதாவது கடுஞ்choல் வரலாம். அது நாம் டி.வி. ஸீரியலில்
பார்க்கற மாதிரி பூதாகாரமா வெடிக்கலாம். அதனாலே வருகிற
பெண்ணுக்கு எப்பவும் ஒரு ஸ்பேஸ் கொடுக்கணும். அது
எப்பவும் கூட்டுக் குடும்பத்திலே நம்மால முடியாம போகலாம்.
அது அவளுக்குப் பெரிய குறையா தெரியலாம். உங்க பையன்
விஷயத்திலே அதுதான் நடந்தது. யோசித்துப் பாருங்க..அந்த
நிலைமை ரிபீட் ஆக வேண்டாம்னு தான் நான் இப்படிப்
பண்ணினேன். பூஜா மாதிரி தங்கமான ஒரு மருமக கிடைக்க
நான் கொடுத்து வெச்சிருக்கணும். விட்டா அன்பாலேயே
என்னைக் குளிப்பாட்டிடுவா… அது போல் ‘நானும் ஸீரியல்
மாமியார் இல்லே ..அவள் ஆசா பாசங்களுக்கு அணை போடாத
அன்பான மாமியார்னு அவளுக்குப் புரிய வைக்கணும்
இல்லியா .. இனிமே பாருங்க.. நான் திட்டினாலும் – ஏன்
அடிச்சாலும் – கூட என்கிட்டே என் போண்ணு மாதிரி
ஒத்தைக்கு ஒத்தையா அன்போடு மல்லுக்கு நிற்பாளே ஒழிய
அவள் போடும் சண்டையில் காழ்ப்பு இருக்காது’ என்றாள்
அம்மா கண் கலங்க.

‘என்னடி .. அப்படி ஒரு ஐடியா இருக்கா.. இதுதான்
சாக்குன்னு அவளை அடிக்க வேறே போறியா.. ‘ என்று
சிரித்தாள் அத்தை.

‘அட, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அக்கா,
இப்ப ஜாலியா இருக்காம அவங்க எப்ப வாழ்க்கையை அனுபவிக்க
போறாங்க..நம்ம உடம்புலே இப்போ தெம்பு இருக்கு. அவங்க
ஆனந்தமா இருக்கிறதைப் பார்த்து நாமும் சந்தோஷமா
இருக்கலாமே.. நாம ஓய்ஞ்சு போறபோது அவங்ககிட்டேதானே
போகப் போறோம். அப்போ அந்த வாழ்க்கையிலே அன்பும்,
அரவணைப்பும் இருக்கும். வசந்தம் இருக்கும். காழ்ப்பு இருக்காது.’
என்று சொன்ன அம்மா, தன் காலை யாரோ தொட்டுக் கும்பிடுவதை
உணர்ந்து திகைத்து திரும்பினாள்.

மது அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுது
கொண்டிருந்தான்.

‘அம்மா.. இந்த ஒரு எண்ணத்திலா இப்படிப் பண்ணினே..
புரியாத புதிராக இருந்த உன் செய்கையின் அர்த்தம் இப்பப்
புரிஞ்சது. பூஜாவை நீ சரியாகப் புரிஞ்சுக்கலே.. அவள் ‘நீ இப்படிப்
பிரிச்சு வேச்சுட்டியே’ என்று புலம்பாத நாளில்லே.. நாளைக்கே, ஏன்,
இன்னிக்கே இங்கே நாங்க ஷிப்ட் பண்ணிடறோம்’

‘பைத்தியக்காரா.. ஜாலியா இருங்கடா.. உனக்கு இப்பப்
புரியாது. சில வருடங்களுக்கப்புறம் சொல்வே.. அம்மா நீ
செய்தது சரிதான்னு.. போடா.. பூஜா கோயிலுக்குப் போயிருக்கா..
சாவி அந்த ஆணியில் மாட்டியிருக்கு பார்’ என்றாள் அம்மா.

மதுவின் கண்கள் கலங்கின.

பாஸ்போர்ட் வேண்டுமா? – எஸ்ஸெஸ்

1. Book an appointment through Passport Seva Portal http://passportindia.gov.in 2. Visit the designated Passport Seva Kend...

 

 •   புது பாஸ்போர்ட்  பெற அல்லது பழைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க  முதலில் அரசாங்க பாஸ்போர்ட் இணைய தளத்தில்   https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink )   பதிவு செய்து பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்  பெறவேண்டும்.
 • பிறகு உங்களைப்  பற்றிய அனைத்துத் தகவல்களையும், மொபைல் எண் உட்பட அனைத்தையும்   இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
 • பிறகு என்றைய தேதியில் /நேரத்தில் பாஸ்போர்ட் கேந்திராவில் நேரடியாகச் செல்ல அனுமதி இருக்கிறது என்பதையும் இணைய தளத்தில் அறிந்து, அந்தக் குறிப்பிட்ட நேரத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 • அதன்பின் பாஸ்போர்ட் பெறுவதற்கான தொகையை கடன் அட்டை அல்லது வங்கி இணையம் வழியாகக் கட்ட வேண்டும்.
 •  அப்போது உங்கள் நேர்காணல் நியமனம் உறுதியாகிவிடும். உங்கள் நியமனக் கடிதத்தை பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் நேர்காணல் தேதி, நேரம் எல்லாம் உங்கள் மொபைலில் செய்தியாக வந்துவிடும்.
 • குறிப்பிட்டுள்ள நாளுக்கு  முதல் நாளும் அன்றும் உங்களுக்கு நினைவூட்ட செய்தியும் மொபைலில் வரும் .
 • உங்கள் பிறந்த தேதி, தற்போதைய முகவரி, மற்றும் அலுவலக ஆட்சேபணை இல்லாக் கடிதம் , ஓய்வூதிய அட்டை போன்றவற்றின் உண்மை ஆவணங்களை பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லும் போது எடுத்துச் செல்லவேண்டும்.  ( எது எது எடுத்துச் செல்லவேண்டும் என்று இணைய தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம்)

தற்போது குறிப்பிட்டுள்ள நாளில் பாஸ்போர்ட் கேந்திராவிற்குச் செல்லுகிறீர்கள்.

 

Citizen Collect Acknowledgement Letter Stage I – ‘A’ Counter Token Issuance Data verification & Fee Collection (Optional) ...

Token: The token contains a Token Number, which appears at the top of the token. This Token Number is used for further seq...

LCD Display: Token Numbers are displayed on the Token display screen in the manner shown below. The Counter Number where t...

 

 1. முதலில் பாதுகாப்பு சோதனை.
 2. பிறகு உங்கள் ஆவணங்களையும், நியமனக் கடிதத்தையும் சரிபார்த்து டோக்கன் கொடுப்பார்கள்.
 3. அதைப் பெற்றுக்கொண்டு  ‘A’ பிரிவுக்குச்  செல்லவேண்டும். அங்கே உங்கள் டோக்கனுக்கு எந்த கவுண்டர் என்று அறிவிப்புப் பலகையில் வந்ததும் அந்த இடத்துக்குச் செல்லவேண்டும்.
 4. அங்கே உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களையும் வெப்காமில் படம் பிடித்து , பின்னர் இன்னொரு இடத்தில் உங்கள் எல்லா விரல் ரேகைகளையும் பதிவு செய்வார்கள்.
 5. பிறகு அறிவிப்புப் பலகையில் உங்கள் டோக்கனுக்கு எந்த  ‘B ‘ பிரிவிற்கு (கவுண்டர்) செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்றால் பாஸ்போர்ட் அதிகாரிகள் உங்கள் தகவல்களும் ஆவணங்களும் சரியாக இருக்கின்றன்னவா என்று சரி பார்த்து பின்னர் ‘C’ பிரிவுக்கு அனுப்புவார்கள்.
 6. ‘C’ பிரிவில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் உங்கள் தகவல்களை சரிபார்த்து உங்களுக்குக் காவல்துறை சோதனை தேவையா என்பதைப்பற்றியும் மற்றும் பாஸ்போர்ட் எத்தனை நாட்களில் வரலாம் என்றும் கூறுவார்கள்.
 7. பிறகு நீங்கள் உங்கள் கருத்துப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு வெளியேறலாம்.

இவற்றை முடிக்க , மொத்தமாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் நீங்கள் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

அதிகமில்லை  ஜெண்டில்மேன் , 30 – 40 நிமிடங்கள் தான்.

அதெல்லாம் சரி பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குப் பிறகு வரும்?

என் நண்பர் ஒருவருக்கு நேர்காணலுக்குப்  போய் 24 மணிநேரத்தில் பாஸ்போர்ட் கையிலேயே வந்து விட்டது!

எனக்கு மூன்று நாட்கள் ஆயின.

அதை தவிர பாஸ்போர்ட் தற்சமயம் பிரிண்ட் ஆகிவிட்டது, தபாலில் சேர்க்கப்பட்டது என்ற தகவல்கள் உங்களுக்கு எஸ்‌எம்‌எஸ் மூலமாக வந்து கொண்டே இருக்கும்.

ஸ்பீட் போஸ்ட் எண்ணைக் கொடுத்து அது எந்த இடத்தில் இருக்கிறது என்று கண்காணிக்கும் வசதியையும் தருகிறார்கள்.

மொத்தத்தில் இது ஒரு சுகானுபாவம்.

வாரே  வா ! ஹாட்ஸ் ஆஃப் ! என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா?

சொல்லுவோம்.

அரசுக்கும் உருவாக்கிய டிசிஎஸ் நிறுவனத்துக்கும் நன்றி சொல்லி, அரசாங்கத்தில் ஒவ்வொரு இடமும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு முடிப்போம்.

எதற்காக எழுதுகிறேன் ?

” எதற்காக எழுதுகிறேன் ? “

இந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது -. பிரபல எழுத்தாளர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலை எழுதி இலக்கிய வட்டத்தில் அவர்களை விட்டே படிக்க வைத்து பின்னர் அவற்றை  எழுத்து என்ற பத்திரிகையின் சிறப்பு வெளியீடாக வெளியிட்டவர் மதிப்பிற்குரிய சி.சு.செல்லாப்பா அவர்கள்.

நடந்த வருடம் 1962.

அதில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள்  ஜானகிராமன், ஜெயகாந்தன், சாலி வாகனன், பிச்சமூர்த்தி, லா ச ராமாமிர்தம், கு.அழகிரிசாமி, ஆர்.ஷண்முகசுந்தரம், வள்ளிக்கண்ணன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியன், ஆர்.வி.

சந்தியா பதிப்பகம் 2014 இல் இவற்றை  ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் தான் ஏன் எழுதுகிறேன்  என்று சொல்லியிருப்பது அழகு ! மிக அழகு !

அவர்கள் கதைகளை  ஆராதிக்கும் நமக்கு அவர்கள் அவற்றை ஏன் எழுதினார்கள் என்று தெரிந்தால் இன்னும் நிறைவாக இருக்குமல்லவா?

சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம்:

ஒரு பிரபல ஆங்கில ஆசிரியர் கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு தேவை நான்கே நான்கு. பார்வை, ஞாபகம், பிரதிபலிப்பு, திட்டம். மற்ற எல்லாமும் இவற்றை செப்பனிடச் செய்யும் கருவிகள் தான். 

நாம் தமிழ் ஆசான்கள் என்ன கூறுகிறார்கள்?

தி.ஜானகிராமன்:

ஏன்  எழுதுகிறாய் என்று கேட்பது  ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். …

நான் எழுதுகிறது பணத்துக்காக, பேருக்காக, பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நானும் இருக்கிறேன் என்று காண்பித்துக் கொள்வதற்காக, தாக்ஷிண்யத்திற்காக,எனக்கே எனக்காக, கொஞ்சம்  எனக்கும் கொஞ்சம் உங்களுக்குமாக, சில சமயம் எதற்கு யாருக்கு என்று தெரியாமல்  – இப்படிப் பல மாதிரியாக எழுதுகிறேன்…. …

கடைசியில் பார்க்கும் பொழுது இத்தனை காரணங்களும் மூன்று குழிகளில் பிரிந்து விழுந்து விடுகின்றன…. …

எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும்     ..

.இந்த மூன்றும் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே எழுத்தில் இருக்கிறார்போல சிலசமயம் ஒரு பிரமை ஏற்படலாம். அது பிரமை தான். உண்மையில்லை.

இரவு  எட்டு மணிக்கு காய்கறி வாங்கும் பொழுது, நேற்று மாலையில் வந்தது, இன்று காலையில் வந்து இன்று முழுதும் வெயிலில் காய்ந்தது, இன்று மாலை வந்தது மூன்றும் ஒரே குவியலாகக் கிடக்கும். ஆனால் சற்று உற்றுப் பார்த்து தொடாமல் கூட கலந்துகட்டி என்று கண்டுபிடித்து விடலாம். …

ஆனால் எனக்குத் தெரியும் எது கொம்பில் பழுத்தது ,   எதை நான் தடியால் அடித்து குடாப்பில் ஊதிப் பழுக்க வைத்திருக்கிறேன் என்று. எனக்காக நான் எழுதும் போது கொம்பில் பழுத்த பழம். நான் பண்ணிய தவத்தின் முனைப்பில் பழுத்த பழம் அது. … .. அது சில சமயம் …மூளியாகவோ குறையுள்ளதாகவோ இருக்கலாம். .. அந்த கருப்பு கசப்பு எல்லாம் அதன் அம்சம். இந்த தவத்தில் தான் என் சுயரூபம் எனக்குத்  தெரிகிறது.

இந்தக் கலை வடிவம் தான் என்னுடையது. என் தவத்தின் பெருமையைப் பொறுத்தது.  மூளியும் அதன் பெருமை. சட்டம் போட்டு என்னைப் பயமுறுத்தாதீர்கள்.  நான் உங்களுக்காக எழுதுகிறதைப் பற்றி நீங்கள் அந்த தீர்ப்பெல்லாம் சொல்லலாம். நான் கவலைப்படவில்லை. வாலைப் போட்டுவிட்டு  பல்லியைப் போல் தப்பிவிடுவேன்.

 

ஜெயகாந்தன்

 

 

நான் எழுதுவதே, ஏதோ தன்னியல்பாக – தெய்வ வரம் போல், அல்லது தெய்வ சாபம் போல் , என் ஆளுகைக்கு அப்பாலான ஏதோ ஒரு நிகழ்ச்சி போல் நிகழ்வாதா? ..

குறியும் நெறியுமில்லாத என்னிடம் உள்ள அதீத , அபூர்வ மனுஷ்வத்தில் கிளைப்பதா?

மலர் எதற்காகப் பூக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்றெல்லாம் அழகாக எனது நண்பரொருவர் என்னிடம் கேட்டாரே அது போலத் தானா ? அதெல்லாம் வெறும் ஹம்பக். …

நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெரும் கல்வியின் விளைவும் நாடு தனி முயற்சியின் பயனுமாகும். …

எனது ரோஜாக்கள் நண்பர் சுப்பிரமணியம் போன்றவர்களுக்கு எருக்க மலர்களாய்ப் படுகின்றன.

இவை எருக்கம் பூக்கள் அல்ல’ இவைகள் ரோஜாவும் மல்லிகையும் கடவுளர்க்கும் பிடித்த பாரிஜாத மலர்களுமாகும் என்று காட்டுவதற்காக , தாங்கள் எருக்கம் பூக்கள் தான் என்று எண்ணி குப்பையில் ஒதுங்கிக் கிடக்கும் அந்த மலர்களுக்கே அவற்றை உணர்த்துவதற்காக நான் எழுதுகிறேன். …

கலைத்தன்மைக்கு எந்தவித குறைவும் வராமல் கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்பு புதல்வனாகவும் இருந்து தான் நான் எழுதுகிறேன்.

சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன்.

எனது கொள்கையில் குறைவில்லாத போதும் எனது திறமைக் குறைவால் நான் தோற்றும் போகலாம். அது தோல்வியாகாது. போர்க்களத்தில் சந்தித்த மரணத்திற்கு நேராகும். என் கையில் இருக்கும் கோடி இன்று கேலி செய்யப்படலாம். பிடுங்கி எறியப்படலாம். ஆனால் அதுதான் நாளைய உலகில் எல்லோரின் தலைக்கு மேலும் பறக்கப்போகிறது. அந்த நாளைய உலகை நிர்மாணிக்கும் மகா சமுத்திரத்தில் நான் ஒரு துளி. என் எழுத்து ஒரு அலை.

(மற்றவர்கள் பிறகு)

 

 

இலக்கியவாசல் முதலாம் ஆண்டுவிழா அழைப்பிதழ்

நண்பர் கிருபானந்தனும் நானும் இணைந்து அமைத்த குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு  நண்பர்களின் நல்லாதரவோடு  ஓராண்டைப் பூர்த்தி

செய்கிறது.

சென்ற வருடம் சித்திரைத் திங்களில் துவங்கிய இந்த வாசலுக்கு

 திருப்பூர்   கிருஷ்ணன், வா.வே.சு, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன்,   பதின்மூன்று சிறுகதை ஆசிரியர்கள், நீரை அத்திப்பூ, சாரு நிவேதிதா, ஸ்ரீஜா வெங்கடேஷ், அசோகமித்திரன், அழகியசிங்கர், ரவி தமிழ்வாணன், பாம்பே கண்ணன், ஞாநி 

ஆகிய இலக்கிய வித்தகர்களுடன், மற்றும் பல இலக்கிய நண்பர்கள், வாசகர்கள்  வந்து சிறப்பித்தை நாங்கள் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறோம்.

இந்த நிகழ்வுகளின் வலைப் பதிவுகளையும் ஒலி வடிவங்களையும்

ilakkiyavaasal.blogspot.in  என்ற  வலைப்பூவில் பார்க்கலாம். கீழே உள்ள வலைப் பதிவுகளைச் சொடுக்கினால் தாங்கள் அந்த நிகழ்வின் புகைப்பட -ஓலி வடிவைக் கண்டு – கேட்டு ரசிக்கலாம்.

இந்த சித்திரை மாதத்தில் முதலாம் ஆண்டுவிழா சற்று பெரிய அளவில் நடைபெற உள்ளது. ” இயல் இசை நாடகம்” என்று மூணு நிகழ்ச்சிகள்

இயலுக்கு, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,பிரபஞ்சன் என்ற இலக்கிய சிகரங்களைப் பேசக் கேட்டு  கவுரவிக்கிறோம்.

இசைக்கு  ஒரு வில்லுப்பாட்டு.

நாடகத்திற்கு , கோமல் சாமிநாதனின்  நாடகம்.

எங்கே ? எப்போது?

இந்த இதழின் கடைசிப்பக்கம் பார்க்க

 

தலையங்கம் -சூடு

panama copy

 

இந்தியாவில்  குறிப்பாகத் தமிழகத்தில் எங்கும் எதிலும் இப்போது சூடு பறக்கிறது !

மார்ச் ஏப்ரல் மாதத்திலேயே 100 டிகிரிக்கு மேல் கோடையின் தாக்கச் சூடு. கொதிக்கும் சாலைகள் தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்   துவங்கியுள்ளது.

பனாமா வெளியீட்டால் ஊழல் வாதிகள் உலகெங்கும் பறந்து கிடக்கிறார்கள் என்கிற சூடு!

கேரளாவில் கொல்லத்திற்கு அருகே பரவூர் தேவி கோவிலில் நடைபெற்ற வாண  வேடிக்கை விபரீதமாகி 110  க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிய சூடு !

( அந்தக் கொடுமையை இந்த வீடியோவில் பார்த்தால் அந்த சூட்டின் கொடுமை புரியும்! )

கொல்லம் கோவில் பட்டாசுத் தீ விபத்து

எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் சூடு வேற!

தமிழகம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் சூடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அண்ணா தி மு க வின் இரட்டை இலை எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தி மு க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் சில குட்டிக் கட்சிகள்.

விஜய்காந்த் கூட்டணியில் வை கோ, திருமாவளவன், இடது வலது சாரிகள் கடைசியாக வாசனின் த மா கா ,

பாட்டாளி கட்சி  தனியாக ,

பி ஜே பி  தன்னந் தனியாக

இப்படி ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் சூடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கத்திரி வெயிலே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது தேர்தல் ஜுரம்.

இப்படிப் பலவித சூடுகள்!. நாம் எப்போதும் சூடு கண்ட பூனை ஆயிற்றே!  எததனை சூடு பட்டாலும் நமக்கு சூடு சொரணை வருமா?  தெரியவில்லை. ஆனால் ஓட்டுப் போடுவது நமது கடமை. ஐந்து முகங்களுடன் நோட்டா  ( 49 ஓ) சேர்த்து ஆறு முகங்கள் இருக்கின்றன.  விதியை மனதில் எண்ணிக்கொண்டு நமக்குப் பிடித்த முகத்தில் குத்துவோம். நடப்பது நடக்கட்டும். 

 

 

 

Editor and Publisher’s office address:

S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com

ஆசிரியர் & பதிப்பாளர்  : சுந்தரராஜன்
துணை ஆசிரியர்     : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர்    :அனுராதா
ஆலோசகர்              :அர்ஜூன்
தொழில் நுட்பம்    : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை             : அனன்யா