கார் திருட்டு – ஜே ராமன்

 

கார் திருட்டு

பேங்கிலிருந்து நோ பார்க்கிங் ஸோனில் பார்க் பண்ணியதற்கான அபராதத் தொகையை பத்தாவது தடவையாகக் கட்டிவிட்டு மனச்சோர்வுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என் டீனேஜ் மகள் ஷீலாவுக்குக் கார் வாங்கிக் கொடுத்த நாள் முதல் இந்த பார்க்கிங் டிக்கெட் அபராதம் அடிக்கடி கட்டுவது எனக்கு மிகச் சாதாரண விஷயமாகி விட்ட்து. கார் என் பெயரில் இருப்பதால் டிக்கெட் ஜாம் ஜாமென்று மெயிலில் எனக்கு வந்துவிடும்!

பாவம் ஷீலா! ஸ்கூலில் சக மாணவர்களுடன் போட்டியிட்டுக்கொண்டு படிப்பதே பெரிய சவால்! அதைத் தவிர ம்யூசிக்கில் அதிக ஆர்வம் காட்டியதால் கர்நாடக சங்கீத  பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக் கொண்டாள். அவள் நாட்டம் இங்லீஷ் பாப் ம்யூசிக்கில் சென்றதால் எங்கள் அனுமதியுடன் ஒரு கிதார் வாசிப்பவருடனும் மற்றுமொரு ட்ரம்மருடனும் இணைந்து வார இறுதியில் சின்னச்சின்ன இசைவிழா நிகழ்ச்சிகள்வேறு நடத்தி அவளை ஒரு இயந்திரமாக மாற்றிக்கொண்டிருந்தாள். அவள் நேரமின்மையால் அவதிப்படுவதால் இந்த பார்க்கிங் டிக்கெட் பிரச்சனயை நான் பெரிது பண்ணாமல் அமைதியாய் அபராதத் தொகையை கட்டிக்கொண்டு வந்தேன்!

    இரவு  வந்தது. மணம் பறக்க சமைத்திருந்த டின்னர் டைனிங் டேபிளில் அழகாக வைக்கப்பட்டிருந்தது. ‘இன்னமும் ஷீலா வரவில்லை? ம்…. இன்று என்ன சமையல்?’ என்று மனைவியிடம் வினவ ‘எந்த தப்பான இடத்தில் பார்க் பண்ணிவிட்டு அடுத்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறாளோ, தெரியவில்லை! இன்றைய சமையல் மெந்தியகீரை குழம்பு, உருளைக்கிழங்கு பொடிமாஸ், கேரட் வெள்ளரி போட்ட பச்சடி மற்றும் மைசூர் ரசம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ஷீலா ‘டாடி, இன்று ஒழுங்காக பார்க் பண்ணி அடுத்த கான்செர்ட்டை ஏற்பாடு செய்து வந்திருக்கிறேன்.. காரை கேரேஜில் விடவில்லை.  ஒரே பசி, வீட்டிற்கு முன்னால் வெளியிலேயே ரோடில் பார்க் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். ஸாரி டாடி’ என்று விடை அளித்துவிட்டுக் கை கழுவி முகம் அலம்பி எங்களுடன் சாப்பிட ஆரம்பித்தாள். ‘மம்மி, யூ ஆர் தி பெஸ்ட் குக்  இன் தி வேர்ல்ட்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்த ஷீலா ‘குட் நைட் டாடி மம்மி. நாளை மேதமேடிக்சில் டெஸ்ட். தயாராக்க வேண்டும்’ என்று  கூறிவிட்டு தன் ரூமுக்குச் சென்றாள். நாங்களும் டைனிங் டேபிளை விட்டு எழுந்தோம். டைனிங் டேபிள், சமையலறை வேலைகளை இருவரும் சமமாக பகிர்ந்து முடித்துக்கொண்டு  டீவீ  ரூமுக்குள் நுழைந்தோம்.

*      *        *       *

தூக்கிவாரிப் போட்டது. அலறிப்   புடைத்துக்கொண்டு ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்து படுக்கையில் குதித்து எழுந்தேன். ‘என்னங்க சத்தம்?’ என்று பதட்டத்துடன் மனைவி கேட்ட கேள்விக்கு பதில் ஷீலாவின் அறையிலிருந்து ‘டாடி டாடி’ என்ற கூக்குரலிருந்து கிடைத்தது. இருவரும் ஷீலா ரூமுக்குப் பறந்தோம். போவதற்கு முன் கடிகாரம் 1.30  அதிகாலை என்று காட்டியதை மனதில் பதிய வைத்துக் கொண்டேன்.. ‘டாடி, என் கார் ஸ்டார்ட்டாகும் சத்தத்தைக் கேட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.  அங்கு   காரை யாரோ ஓட்டிக்கொண்டு போவது தெரிந்தது..’ என்று பதைபதைப்புடன் ஷீலா கூறினாள்.

நானும் ஷீலாவும் ஆடைகளை மாற்றிக்கொண்டு என் காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தோம். ‘என்ன ப்ராப்ளம்’ என்று கேட்ட போலீஸ் ஆஃபீசரிடம் விஷயத்தை விளக்கி ஒரிஜினல் டாக்குமெண்டுகளையெல்லாம் காண்பித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்தோம். காண்டாக்ட் லாண்ட் லைன் நம்பரையும்.(அப்போதெல்லாம் மொபைல் கிடையாது) பதிவு செய்து கொண்ட ஆஃபீசர் ‘இப்போதெல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் காரில் சொகுசாய் செல்லத் திருடியவன் அதை  வேறு இடத்தில் அம்போ என்று விட்டுவிட்டுப் போவது ஒரு ரகம்! இதில் கார் உடன் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு ரகம் பெரிய ‘கார் திருட்டு ராக்கெட் கும்பல்’ காரை திட்டம்போட்டுத் திருடிக் கண்காணாத இடத்திற்கு எடுத்துச் சென்று அக்கு வேறு ஆணிவேறாய் எல்லா பார்ட்டுகளையும் கழட்டி வேறு கார்களில் மாட்டுவது ,அல்லது அவர்கள் கும்பலைச் சேர்ந்த வியாபாரிகள் மூலமாக விற்பது.  இந்த ரகத்தில் காரை மறந்துவிட வேண்டியதுதான்’ என்று கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு பெரும் மன பாரத்துடன் வீடு திரும்பினோம்.

எஃப் ஐ ஆர் பதிவு செய்து  இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் போலீசிடமிருந்து ஒரு தகவலும் இல்லையே. அவர்களை நாமே காண்டாக்ட் பண்ணலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே லாண்ட் லைன் மணி அலறியது. ஷீலா ‘டாடி, போலீசிலிருந்து உங்களுக்கு கால்’ என்று ரிசீவரை நீட்டினாள்.

‘ஹலோ. காரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா’ என்னும் என் கேள்விக்கு போலீஸ் ஆஃபீசர் ‘நல்ல செய்தி! கார் கிடைத்துவிட்டது! நீங்கள் ரொம்ப லக்கி. திருடியவன்   சொகுசு சவாரி செய்துவிட்டுக் காரை உங்கள் வீட்டிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் வரிசையாக வீடுகள் இருக்கும்  பகுதியில் டம்ப் பண்ணிவிட்டு சென்றிருக்கிறான். நல்ல வேளையாகக்  ‘கார் ராக்கெட்’ கும்பலிலிருந்து தப்பியது! பேப்பர் பென்சில் இருக்கிறதா? அட்ரஸ் சொல்லுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்’. என்றார். விலாசத்தைக் குறித்துக்கொண்டவுடன் தாங்க்ஸ் சொல்லி ரிசீவரை வைத்தேன். ‘ஷீலா, கார் கிடைத்து விட்டது. இன்று ஞாயிறுதானே! கிளம்பு போய் காரை எடுத்துவந்து விடலாம்’ என்றவுடன் ஷீலா துள்ளிக் குதித்துக்கொண்டு கிளம்பினாள்.

அட்ரஸை அடைந்தோம். குறிப்பிட்ட சந்து வரிசையான பழைய வீடுகளின்  பின்புறத்தில் இருந்தது. காரேஜ், வீடுகளின் பின் பக்கம் இருப்பது அந்தக்கால  கட்டட அமைப்பு விசேஷம்! சந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. சந்தில் திரும்பியதும் எங்கள் காரின் பின் பகுதி தூரத்தில் காண ஷீலா ‘டாடி, அதோ நம்ம கார்’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினாள்!

அருகே வந்த எங்களுக்கு அங்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!!!!

காரின் நான்கு வீல்களைக் காணவில்லை! நான்கு வீல்களுக்குப் பக்கத்தில் கற்கள் வைத்துக் கார் அவைகளில் நிறுத்தப்பட்டிருந்தது!

நான்கு கதவுகளும் அஜாராக திறந்து வைக்கப் பட்டிருந்தன! உள்ளே கார் சீட்டுகளெல்லாம் கத்தியால் கீறப்பட்டு உள்ளிருந்தவை பயங்கரமாய் வெளியில் நீட்டிக்கொண்டு எள்ளி நகையாடின! ஸ்டியரிங் வீல் காணவில்லை! ரேடியோ/காசெட் ப்ளேயர்/சிடி ப்ளேயர் மிஸ்ஸிங்!

பூட் கதவு திறந்திருந்தது! உள்ளே ஸ்பேர் வீல்/டூல்ஸ்/ஜாக் காணோம்!

பானெட் வேறு திறந்து நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது! உள்ளே இஞ்சின், பாட்டெரி, ஏர் கண்டிஷனர் உள்பட முழுதும் வெறுமையாக இருந்தன!!!

எங்களால் இந்த எதிர்பாராத அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. ஷீலா ‘டாடி’ என்று என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அப்போது ஒரு அதிசியம் நிகழ்ந்தது!

காருக்குப் பக்கத்திலிருந்த கேரேஜைத் திறந்துகொண்டு ஒரு வயதான பெரியவர் எங்களை நோக்கி வந்தார்! ‘ஹலோ’ வென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘இது உங்கள் காரா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு ‘இந்த சந்தில் இதுவரை இரண்டு கார்கள் டம்ப் செய்யப்பட்டிருக்கின்றன. இது மூன்றாவது.. இடம் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக வெறிச்சென்றிருப்பதால் கார் திருடர்கள் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போலும்! உங்கள் கார் இங்கு 5ம் தேதி காலையில் டம்ப் செய்யப்பட்டிருக்கிறது. இது என் கவனத்தைக் கவர்ந்தது.. இந்தப் பேட்டைக்குச் சொந்தமில்லாத காரானதால் எனக்கு சந்தேகம் வந்து அதைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். மாலை சுமார் 5 மணிக்கு என் சந்தேகம் வலுப்பட்டது. எங்கள் பேட்டை போலீஸுக்கு உடனே ஃபோனில் தகவல் கூறினேன். அன்றும் அடுத்த நாளும் கார் அலங்காமல் குலுங்காமல் அப்படியே பார்க்கிங்கில் இருந்தது. நான் மறுபடி போலீசிற்கு ஃபோன்பண்ணி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று வினவினேன். தொலைந்த காரைப் பற்றிய தகவல் வேறு போலீஸ் பேட்டையிலிருந்து வந்திருந்ததாகவும் நீங்கள் தகவல் கொடுத்த உடனேயே அவர்களுக்கு மெஸேஜை அனுப்பி உஷார் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் மூன்றாம் நாள் காலையில் நான் இங்கு வந்து பார்த்தபோது காட்சி முழுவதும் தலைகீழாக மாறியிருந்தது. கார் பார்ட்டுகளெல்லாம் மிஸ்ஸிங்க்! கார் உள்ளே சீட்டுகளையெல்லாம் நாசம் செய்திருந்தார்கள். நீங்கள் ஏன் முதல் நாளன்றே வந்து காரை எடுத்துப் போகைல்லை?’ என்று கேட்டார்.

போலீஸின் அஜாக்ரதையினால் வெகுண்ட நான் ‘எங்கள் பேட்டை போலீஸிடமிருந்து இரண்டு மணி முன்னால்தான் எனக்குக் காரைப் பற்றிய தகவல் கிடைத்தது. உடனேயே விரைந்து வந்துள்ளோம். கார் கிடைத்த நல்ல செய்தியைத்தான் சொன்னார். டேமேஜ் பற்றிய விவரம் அவருக்குத் தெர்ந்திருக்கவில்லை. என்ன கொடுமையிது! என்று பதிலளித்தேன். ‘ஏதோ தப்பு நடந்திருக்கிறது. காஃபி அருந்திக்கொண்டே அடுத்த கட்ட வேலையைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாம்’ என்று அவர் வீட்டிற்கு எங்களை அழைத்தார். கேரேஜ் வழியாக வீட்டுக்குள் சென்றோம்.

‘என் ஒய்ப்ஃ காலமாகி 3 வருடம் ஆகிறது. ஒரே மகன். இன்னும் மணமாகவில்லை. இப்போது ஜப்பானுக்கு வேலைவிஷயமாய் சென்றிருக்கிறான்’ என்று சொல்லிக்கொண்டே எங்களை டைனிங் டேபிளில் அமர்த்திவிட்டு ஒரு நொடியில் காஃபி போட்டு ஒரு தட்டில் எடுத்துக்கொண்டுவந்து வைத்தார். கோப்பைகளில் ஊற்றி ‘மில்க், சக்கரை ப்ரௌன் சக்கரை எதுவேண்டுமானாலும் கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

தன் சட்டைப் பையிலிருந்து விசிடிங் கார்டை எடுத்து ‘அசட்டையாக இருந்த போலீஸை சும்மா விடாதீர்கள்’ என்று நீட்டினார். ‘இதில் என் அட்ரெஸ் ஃபோன் நம்பர்  எல்லாம் இருக்கிறது. நான் இதில் உங்களுக்கு சாட்சியாகவும் உறுதுணையாகவும் இருக்கத் தயார்’’ என்றார். நானும் என் விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்து ‘நாளை இங்கு வந்து கார் இருக்கும் நிலையை பல கோணங்களில் போஃட்டோ எடுக்கப்போகிறேன். பின் போலீஸில்  தெரிவித்து அவர்கள் அனுமதியுடன் காரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்கிறேன். உங்களின் இந்த ஹெல்ப்பை நாங்கள் என்றென்றும் மறக்கமாட்டோம். ரொம்பவும் தாங்க்ஸ்’ என்று விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்த நாள் காலையில் அந்த இடத்திற்குச் சென்று பல கோணங்களில் ஃபோட்டோக்கள் எடுத்து இன்ஸ்டண்ட் ப்ரிண்ட் ஸ்டுடியோவில் கொடுத்து ப்ரிண்ட்கள் தயார் செய்து வைத்துக் கொண்டேன்.

அன்று இரவு நான் பின் வருமாறு  போலிஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதினேன்.

‘மேலே ரெஃபெரென்ஸ் செய்துள்ள என் கார் இம்மாதம் மூன்றாம் தேதி காலை 1.30 மணி அளவில் என் வீட்டிற்கு முன் இருக்கும் ரோடில் பார்க் செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து களவாடப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு 5ம் தேதி காலையில் என் வீட்டிலிருந்து சுமார் 40 கிமி தொலைவில் உள்ள  மேலே குறிப்பிட்டுள்ள லேனில் களவாளிகள்  டம்ப் செய்திருக்கிறார்கள். அந்த பேட்டைக்குச் சொந்தமில்லாத காரை மேலே குறிப்பிட்ட குடிமகன் – என் சாட்சி – கண்காணித்து மாலை 5 மணி அளவில் அந்த பேட்டை போலீசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். சாட்சி நபர், ஒரு ஆக்க்ஷனும் எடுகாமல் கார் குத்துக் கல்லாய் அப்படியே இருப்பதைக் கவனித்து,  7ம் தேதி போலீசிடம் என்ன ஆக்ஷன் எடுத்திருக்கிறீர்கள் என்று வினவ,  ஆஃபீசர் ரெலெவெண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5ம் தேதியே மெசேஜ் அனுப்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.  இதற்குப் பிறகு 7ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஒரு பயங்கர அமைதி.   15ம் தேதி காலை சம்பவ லேனுக்கு வந்தடைந்த போது கார் பார்ட்டுகள் எல்லாம் களவாடப்பட்டு கார் தாறுமாறாக டேமேஜ் ஆகியிருப்பது தெரிய வந்தது. சாட்சி நபர் 7ம் தேதி மாலை வரை கார் எந்த டேமேஜுமில்லாமல் இருந்ததைக் கவனித்திருக்கிறார். 7ம் தேதி இரவு பார்ட்டுகளையெல்லாம் கழற்றி எந்தக் காரணதிற்காகவோ டேமேஜ்வேறு செய்திருக்கிறார்கள். இதை 8ம் தேதி காலை சாட்சி நபர்   பார்த்திருக்கிறார். எனக்கு 15ம் தேதி காலை 10 மணி அளவில் எங்கள் பேட்டை போலீஸிடமிருந்து கார் டம்ப் செய்யப்பட்ட தகவல் தெரிந்தது. டம்ப் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்து உண்மையை அறிந்தோம். சாட்சி நபரின் காண்டாக்ட் நம்பர் மற்றும் விலாசம் மேலே கொடுக்கப் பட்டிருக்கிறது.

என்னால் உங்களுக்கு விடும் கோரிக்கை:

1.கார் டேமேஜ் ஆனது 7ம் தேதி இரவு. கார் டம்ப் செய்ப்பட்ட விவரம் உங்களுக்கு 5ம் தேதி மாலையே தெரியும். ஏன் என்னை உடனே காண்டாக்ட் பண்ணவில்லை? இதன் மூலம் டேமேஜை பூரணமாக தவிர்த்திருக்கலாம் அல்லவா?

2.ஐந்தாம் தேதியிலேயே தெரிந்த விஷயத்தை எனக்கு 15ம் தேதி – கார் டேமேஜ் ஆகி 8 நாட்களுக்கு பின் – தெரிவித்தது ஏனோ?

3.எங்கள் பேட்டை ஸ்டேஷன் எனக்கு 15ம் தேதி அறிவித்தபோது கார் டேமேஜான விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் காரைப் பற்றி எந்தத் தகவலையும் அப்டேட் செய்து கொள்ளாதது எனக்கு வியப்பளிக்கிறது.  இது ஏனோ?

இதனால் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏதோ தவறு நேர்ந்திருப்பது ஊர்ஜிதமாகிறது.

தயவு செய்து உண்மையைக்  கண்டுபிடித்து எனக்குச்  சரியான தீர்ப்பைத்  தெரிவியுங்கள். தப்பு உங்களுடையது என்பது உறுதியானால் என் காருக்கு உரிய  காம்பென்சேஷன் வழங்கத் தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இத்துடன் டேமேஜ் கண்டிஷனில் எடுத்த சில ஃபோட்டோக்களை இணைத்திருக்கிறேன். இன்னும் கார் அதே இடத்தில்தான் இருக்கிறது. நீங்கள் அனுமதி அளித்தால் அப்புறப்படுத்திவிடுகிறேன்’ என்று கையெழுத்திட்டுக் கடிதத்தை முடித்தேன்.

கொரியரில் கமிஷனருக்கு லெட்டரை ஃபோட்டோக்களுடன் புதியதாக என் ஒர்க் நம்பரையும் சேர்த்து அனுப்பிவைத்தேன்.

அடுத்த நாள் கமிஷனர் ஆஃபீசிலிருந்து காலை 10 மணிக்கு ஒர்க் நம்பருக்குக் கால் வந்தது.    

‘உங்கள் கோரிக்கை நம்பர் ஒன்றைப் பற்றிய ஓர் கேள்வி கேட்கலாமா? 6ம் தேதி காலை 11 மணிக்கு உங்களை ஃபோனில்  காண்டாக்ட் பண்ணியதற்கான ரிகார்ட் பதிவாகியிருக்கிறதே!’ என்ற வினா அங்கிருந்து வந்தது.

‘அது என் வீட்டு நம்பர். என்னிடம் பேசியதாகப் பதிவாகி இருக்கிறதா? பகலில் ஷீலா ஸ்கூலுக்குச் சென்றிருப்பாள். நாங்களும் எங்கள் வேலை அலுவகங்களுக்குச் சென்றிருந்திருப்போம்’.

சிறிதுநேரம் மௌனம் நிலவியது. ‘ஸாரி. உங்களிடம் பேசியதாகப் பதிவாகவில்லை’

‘ஏன் மாலையில் அல்லது அடுத்த நாளில் காண்ட்டாக்ட் பண்ணவில்ல?’

‘சாரி. அதற்கு இப்போது எங்களிடம் விடையில்லை, தாங்க்ஸ்’ என்றுகூறி ரிசீவரை வைத்துவிட்டார்கள்.

பகல் 12 மணிக்கு மற்றுமொரு கால்.

‘இதை கார் இன்ஷூரன்ஸிலிருந்து க்ளைம் பண்ணியிருக்கலாமே’ என்ற கேள்வி அங்கிருந்து வந்தது.

‘இது தேர்ட் பார்ட்டி ஒன்லி  இன்ஷூரன்ஸ். கார் களவுக்கு க்ளைம் பண்ண அதில் இயலாது’ என்று பதிலளித்தேன்.

‘தாங்க்ஸ்’ – ஃபோன் கட்டாகிவிட்டது.

பிறகு மதியம் 1 மணிக்கு இன்னுமொரு கால். ‘இதோடு இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளலாமா? இனிமேல் இம்மாதிரியான தப்புக்கள் நடக்காதவாறு இருக்க நாங்கள் உறுதியளிக்கின்றோம்’

அதற்கு நான் ‘எனக்கும் அந்த அபிப்பிராயம்தான். ஆனால் என் கருத்துக்கு இதில் இடமேயில்லை. என் மகள் ஷீலா அதற்கு உடன்படமாட்டாள். வீக்கெண்டுகளில் கான்செர்ட் பண்ணிக்கொண்டும் ஸ்கூல் படிப்பிலும் கான்செண்ட்ரேட் செய்தும் இந்த கார் அவள் வாழ்க்கையில் மிக அத்தியாவசியமான பொருளாகிவிட்ட்து. அவளிடம் இதை என்னால் சஜெஸ்ட் செய்ய இயலாது. மன்னிக்கவும்’ என்று பதிலளித்தேன்.

அத்துடன் சம்பாஷணை முடிவடைந்தது.

அன்று மாலை  காலிங் பெல் அடித்தது. நான் கதவைத் திறந்தபோது போலீஸ் ஆஃபீசர் ஒருவர்  நின்றுகொண்டிருந்தார்.

ஆஃபீசர் ‘உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா?’ என்றார்.

‘நிச்சயமாக’ என்று அவரை லவுஞ்சிற்கு அழைத்துச் சென்று  சோஃபாவில் அமருமாறு பணித்தேன்.

‘போலீஸ் செய்த தவறினால் எற்பட்ட உங்கள் இழப்பிற்கு நாங்கள் மிகவும் வருந்தி மன்னிப்பைக் கோருகிறோம். எங்கள் நல ஃபண்டிலிருந்து காரின் இன்றைய மதிப்புக்கு இதோ இந்த கேஷ் செக். தயவுசெய்து பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று செக்கை நீட்டினார். அதைப் பெற்றுக்கொண்டு ‘மிகவும் நன்றி’ என்று கூறினேன்.

‘ஒரு சின்ன விண்ணப்பம், இந்த காகிதத்தில் நிகழ்வைப் பற்றி புகழ்வானாலும் அல்லது இகழ்வானாலும் உங்கள் கருத்தை எழுதித் தாருங்கள். அதை அப்படியே எங்கள் மேகஸீனில் பப்லிஷ் செய்துவிடுகிறோம்.’ என்று பேப்பரையும் பென்னையும் நீட்டினார்’.

‘போலீஸ் குற்றவாளிகளைத்தான் கண்டுபிடித்துக் கூண்டில் ஏற்றுவார்கள். இந்த சம்பவம் அதற்கு நேர்மாறான விதிவிலக்கு.  தன் குற்றத்தையே கண்டுபிடித்ததுமல்லாமல் இழப்புக்குச் சரியான ஈடு கொடுத்ததற்காக போலீஸ் டிபார்ட்மெண்டை நான் மிகவும் மதித்துப் பாராட்டுகிறேன்’ என்று எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்த ஆஃபீஸர் சிரித்துக்கொண்டே ‘தாங்க்ஸ், ஷீலாவிடம்’ என் சார்பில் சாரி தெரிவித்து விடுங்கள். மற்றும் டேமேஜ் காரைப் பற்றிக் கவலை வேண்டாம். நாங்களே அகற்றிவிடுகிறோம்’ என்று கூறியவாறு விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

 

அன்று இரவு மூவரும் டின்னர் சாப்பிடும் சமயம் ஷீலாவிடம் விஷயத்தை விளக்கினேன். ‘டாடி’ என்று சந்தோஷ மிகுதியால் கோஷமிட்டாள். மனைவியிடம், ‘ சாட்சி நபருக்கு ஃபோன் பண்ணவேண்டும். அவருக்கு ஃப்ளவர் பொக்கே அனுப்ப எற்பாடு செய்யப்போகிறேன்’ என்றேன்.. மூவரும் லவுஞ்சுக்குச் சென்று அமர்ந்தோம். ‘டாடி, அந்த செக்கைக் காட்டுங்கள்’ என்றதும் நான் அதை எடுத்துவந்து காட்டினேன்.

அதை கையிலெடுத்துப் பார்த்தவாறே  ‘நான்தானே வெளியே காரை பார்க் பண்ணியிருந்தேன் கேரேஜில் விடாமல்!. எனவே இந்த செக்  என்னுடையது. எனக்கே சொந்தம்’.

‘எங்கே அவளைக் காணோம்’ என்ற எனக்கு மனைவி அளித்த பதில்

“எஸ்கேப்”

இது ஸிட்னி ஆஸ்ட்ரேலியாவில் பல வருடங்களுக்கு முன் என் வாழ்வில் நடந்த ஒரு  உண்மைச் சம்பவம்.  ஆஸ்ட்ரேலியா போலீஸ் இங்கு மாதிரி ரொம்பவும் திறமைசாலிகள். ஆனால் முக்கிய வேறுபாடுகள் திறமையில் இல்லை தோற்றத்தில் இருக்கிறது. போலீஸில் சேர முக்கிய தேவை குறைந்த பட்சம் 6 அடி உயரம். டம்மி தெரியாமல் உடம்பை ட்ரிம்மாக வைத்திருக்கிறார்கள். போலிஸ் ஃபைன் பணத்தின் ஒரு சிறு பகுதி போலீஸ் நல ஃபண்டுக்கு செல்கிறது. இது அவர்களின் கடமை உணர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது.  

இந்த வகையான சம்பவம் இங்கு நடந்திருந்தால் அதன் விளைவு எப்படியிருந்திருக்கும்? போலீஸ் எப்படி ஹாண்டில் பண்ணியிருப்பார்கள்? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.  

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.