சரித்திரம் பேசுகிறது – யாரோ

           ♦சரித்திரம் பேசுகிறது♦

சந்திரகுப்தனை விட்டுப் பிரிய நமக்கு மனம் வரவில்லை.

அவனது ‘பின் கதையை’ சொல்லிவிட்டுப் பிறகு பிந்துசாரன் கதைக்குச் செல்வோம்.

இரத்தங்கள் சிந்தியே சரித்திரம் உருவானது!

சிந்திய இரத்தங்கள் ஆறாக ஓடி மலைகளிடம் தவழ்ந்து நதிகளில் கலந்து கடலில் சேர்ந்து கால வெள்ளத்தில் கரைந்து போனது.

இரத்தங்களுக்கு நடுவில் அத்தி பூத்தாற்போல் ஒரு சில காதல் பூக்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன .

 ‘இந்த ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பா’ என்று நீங்கள் வியப்பது புரிகிறது!

கதையைக்  கேளுங்கள்:

இளைஞனாக இருந்த போது சந்திரகுப்தன் ஒரு முறை ஜீலம் நதிக்கரையோரம் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு ஒரு பெண்ணைப் பார்த்தான். பெண்ணென்றால் அது பெண்ணா! பளிங்கினாலான உடல், பொன்னிறக் கூந்தல், நீலமணிக் கண்கள் இவற்றுடன் காந்தப் புன்னகை  – இவள் பெண் தேவதையோ? வானத்திலிருந்து பறந்து வந்த கிரேக்கச் சிலையோ? பணிப்பெண்கள் புடை சூழ அவள் நக்ஷத்திரக் கூட்டத்திலிருந்த முழுமதி போல் ஜொலித்தாள். அவள் கிரேக்க மன்னன் செலுகஸ் நிகேடரின் மகள் ‘ஹெலேனா’.  யவன ராணி! சாண்டில்யனை யவன ராணி எழுதத் தூண்டிய சரித்திர நாயகியோ?

மனதைப் பறி கொடுத்த சந்திரகுப்தன் – அன்று வெறும் இளவரசன் தான். நாடு ஒன்றும் இல்லாத வீர இளைஞன். கிரேக்க வீரர்களின் பெருங்காவல் தாண்டி அவளுக்குப் புறாக்கள் மூலம் காதல் கடிதங்கள் மட்டுமே அனுப்ப முடிந்தது. அந்நாளிலே சந்திரகுப்தனது வீரம் நாடறிந்தது. ஹெலேனாவும் சந்திரகுப்தனைப் பார்த்திராவிடினும் அவனது பிரதாபங்களைக் கேள்விப்பட்டுக் காதலில் உருகினாள்.  தமயந்தி நளனிடம் காதல் கொண்டது போல் – தமயந்தியாவது நளனின் உருவப்படம் கண்டிருந்தாள்,  ஹெலனா கற்பனையிலேயே சந்திரகுப்தனை உருவகித்துக்  காதல் கொண்டாள்.

சந்திரகுப்தன் சாணக்கியரிடம் தனது காதல் மயக்கத்தைக் கூறி –“தலைவா! இதற்கும் நீ தான்  ஒரு வழி சொல்ல வேண்டும்”

சாணக்கியன் அரசியல் வழியாகக் காதலுக்குத் துணை போகிறான்!

‘சந்திரகுப்தா! செலுகஸ் நிகேடர் இன்று மன்னன். அலெக்சாண்டருக்குப் பிறகு வந்த கிரேக்கத் தலைவன். வலிமை பொருந்தியவன். படை பலம் கொண்டவன். அவன் மகளை மணக்க வேண்டுமானால், அது அவனிடம் போரிட்டு வென்று பிறகே நடக்கும்”

மேலும் கூறினான்:

“முதலில் நந்தனை வென்று அரசனாகு !  காலம் நம் வசப்படவேண்டுமானால் – நாம் களம் புக வேண்டும்- வெற்றி வாகை சூட வேண்டும். காலத்திற்குக் காத்திருக்க வேண்டும்”

சந்திரகுப்தன் இதைக்கேட்டு நொந்து போகவில்லை. வீரனாயிற்றே! பெரும் உற்சாகம் கொண்டான்!

காதலர்கள் காலம் வரக் காத்திருந்தனர்.

 

sa1

காலம் வந்தது! சந்திரகுப்தன் மன்னனானான். செலுகஸ் நிகேடரின் ஆதிக்கத்தை நிறுத்த வெற்றிப் போர் புரிந்தாலும் – விரைவில் உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்டான். ஹெலேனா மனதில் இருந்தாளே!

செலுகஸ் நிகேடர் பஞ்சாப் மற்றும் காந்தாரம் அரசுகளைச்  சந்திரகுப்தனுக்குக் கொடுத்தான். சந்திரகுப்தன் 500 யானைகளைக் கொடுக்க இசைந்தான். ஆனால்.. சந்திரகுப்தன் அத்தோடு விடவில்லை. ஹெலேனாவை மணமுடித்துத் தர வேண்டும் என்றான். செலுகஸ் நிகேடர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

எவ்வளவு திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம்! எவ்வளவு கதைகள் கேட்டிருக்கிறோம்! அப்பன்கள் எல்லோரும் ‘தன் மகள்- மகன்’ என்று வரும் போது காதலுக்கு வில்லன் தான்! அது போல் , செலுகஸ் நிகேடர் இதற்கு உடனே சம்மதிக்கவில்லை!    

ஹெலேனா தந்தையிடம் சொல்லிவிட்டாள்: “மணந்தால் சந்திரகுப்தன். வேறு எந்த இந்திரனும் வேண்டாம்!”

கடைசியில் செலுகஸ் நிகேடர் இசைந்தான்!

ஹெலேனா சந்திரகுப்தனை மணந்தாள்!

sa2

(Image Courtesy: Hutchinson’s Story of the Nation (Archive.org) via Wikimedia Commons

துர்தாரா சந்திரகுப்தனின் பட்ட மகிஷி. சில சரித்திர ஆசிரியர் ஹெலேனா தான் தியோடர் என்ற பெயர் கொண்டு பின் துர்தாரா என்று அரசியானாள் என்பர். ஆனால் பெரும்பாலான சரித்திர வல்லுனர்கள் கருத்துப்படி சந்திரகுப்தனின் மகாராணி துர்தாரா – ‘தன நந்தனின்’ குமாரி!

கதாநாயகன் எதிரியின் மகளைக் கல்யாணம் செய்வது என்பது இந்நாள் சினிமாவில் மட்டுமல்ல – தொன்று தொட்டு வந்துள்ளது போலும்.

sa3

சந்திரகுப்தன் காலத்தில் பெருவாரியான வட இந்தியா மௌரிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும் , கலிங்கம் மௌரியரின் கையை விட்டுப்போனது. பின்னாளில் அசோகர் அதைக் கைப்பற்றியது பெரும் சரித்திரமாகும்.

மகத நாடு செல்வாக்கு கொண்டிருந்ததால்  மற்ற அரசர்கள் சந்திரகுப்தனைக்  கொன்று விட முயல்வர் என்பது சாணக்கியரின் பயம். ஒரு வெற்றியாளன் இருந்தால் பல துரோகிகள் இருப்பார்களே!

சந்திரகுப்தனைப்   போரில் வெல்வதோ இயலாதது.

ஆனால் ‘விஷம்’?

சாணக்கியர் விஷ விஞ்ஞானத்தை கரைத்துக் குடித்தவர். தக்ஷசீலத்தில் ஆயுர்வேத மருத்துவம் பயின்றதோடு விஷ வகைகளைப் பற்றி முழுதும் ஆராய்ந்து அறிந்தவர். சந்திரகுப்தனை விஷத்தால் யாரேனும் மாய்க்க முயல்வர் என்ற அச்சம் அவர் மனதை வாட்டியது. அதனால் சந்திரகுப்தனுக்கும் தெரியாமல் தினமும் அவனது உணவில் சிறு விஷத்தைக் கலந்து அவன் உடலில் எதிர்ப்பு சக்தியை  ஊட்டினார்.

ஒரு நாள்…

மகாராணி துர்தாரா நிறை மாத கர்ப்பிணி. இன்னும் ஏழே நாட்களில் மௌரிய வாரிசை பெற உள்ளவள். சந்திரகுப்தன் மனைவியை தன்னுடன் சேர்ந்து இரவு உணவு உண்ண அழைத்தான். அந்நேரம் சாணக்கியன் உணவறைப்  பக்கம் வர நேரிட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து உணவு உண்பதைப் பார்த்த சாணக்கியன் திடுக்கிட்டான். தடுக்க முயலுமுன் – துர்தாரா விஷ உணவை அருந்தி விட்டாள். அவள் உடல் துடித்தது.  திடீர் விஷம் அவளைப் பாதித்து நிலை  குலைந்தாள். உடனே மயங்கி விழுந்தாள்.

sa4

சாணக்கியர் உடனே அவளை அருகிலிருந்த அறைக்கு எடுத்துச் சென்றார். தக்ஷசீலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை முறையாகக் கற்ற சாணக்கியர் உடனே முடிவு செய்தார். தாயைக் காக்க இயலாது. குழந்தையைக்  காப்பாற்றி வாரிசைப் பெறுவது அவசியம் என்றுணர்ந்தார். கத்தியால் அவள் வயிற்றை அறுத்து குழந்தையை உலகுக்குக் கொணர்ந்தார். அதற்கு முன் அந்த விஷம் குழந்தையின் நெற்றியில் பட்டு நீலப் பொட்டு போல் நிலைத்தது.

தாய் இறந்தாள்.

குழந்தை பிறப்பதற்கு முன்னே அந்த தாய் இறந்தாள்.

நீலப்பொட்டு கொண்டதால் அதற்கு ‘பிந்து’ சாரன் என்று பெயரிட்டனர்.

தாய் வயிற்றைக்  குடைந்து எடுத்ததை சிசேரியன் என்பர். ஜூலியஸ் சீசர் இம்முறையில் பிறந்தவர் என்பர். அதற்கு 300 வருட முன்பே சாணக்கியர் செய்தார்.

இந்த விஷப்பரீக்ஷையின்  பின் விளைவு சாணக்கியரை எப்படிப் பாதித்தது என்பதை அடுத்த இதழில் சொல்வோம்.

பிந்துசாரன் வளர்ந்தான்.

சந்திரகுப்தன் அரசு நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.

சமண (ஜைன) மதம் சந்திரகுப்தனை ஈர்த்தது. அதன் தலைவர் ‘பத்ரபாகு’ சந்திரகுப்தனது குரு ஆனார்.

பிம்பிசாரன் 22 வயதடைந்தான்.

பத்ரபாகு சந்திரகுப்தனை அழைத்தார்.

‘சந்திரகுப்தா.. எனது தீர்க்க தரிசனத்தில் தெரிவது என்னை பெருங்கவலைக்கு உள்ளாக்குகிறது.”

“அது என்ன குருவே?”

“நாட்டில் பெரும் பஞ்சம் வரவிருக்கிறது. மக்கள் பசிப்பிணியால் மாள்வர்”

“ஐயோ. இது என்ன சாபம்?”

“அரசனான நீதான் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்”

“சொல்லுங்கள் குருவே. என்ன செய்ய வேண்டும்”

“நீ அரசனாக இருந்து இதைச்  சாதிக்க முடியாது”

“…??…”

“சமண மதத் துறவியாகி நீ இறைவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
தென்னிந்தியாவில் சரவணபெலேகுலா என்று ஒரு புனிதத் தலம் உள்ளது. அங்கு சென்று முனிவராகக்  காலம் கழிக்க வேண்டும்.”

“தங்கள் சித்தம் என் பாக்கியம்”

காரியங்கள் விரைவே நடந்தேறின!

சந்திரகுப்தன் முடி துறந்தான்.

மகன் பிந்துசாரனுக்கு முடி சூட்டினான்.

கையில் பிச்சைப்பாத்திரம் எடுத்து குரு பத்ரபாகுவைத் தொடர்ந்து தெற்கு நோக்கிச் செல்லத் துவங்கினான்.

இளைஞனாக கனவு பல கண்டு, மன்னனாகி , அகிலத்தின் திரவியங்களையும் அனுபவித்த சந்திரகுப்தன் துறவியாகி அமைதி கொண்டான்.

சரவணபெலேகுலாவில் சந்திரகிரி என்ற மலையில் குகை ஒன்றில் பல வருடங்கள் முனிவராக இருந்தான்.

பல மலைவாசிகள் சந்திரகுப்தனை தெய்வமாகக் கும்பிட்டு வணங்கினர். ஒரு சிலருக்குத்தான் வாழ்வின் எல்லா நிலையிலும் வெற்றி கிடைக்கிறது. சந்திரகுப்தன் அதில் ஒருவன்.

சில வருடம் கழித்து … சமண முனிவரது வழக்கப்படி – பட்டினி கிடந்து உயிர் விட்டான்.

sa6

(பத்ரபாகு கூப்பா –சரவணபெலேகுலாவில் சந்திரகிரி மலையில் உள்ள குகை –சந்திரகுப்தர் இறந்த இடம்)

சரித்திரத்தை அழகு படுத்திய சந்திரகுப்தன் மறைந்தான். 

நாமும் நமது சரித்திரச் சித்திரத்தைத் தொடர்வோம்…

Advertisements

One response to “சரித்திரம் பேசுகிறது – யாரோ

  1. யாரோ இவர் யாரோ என்ன ஊரோ என்ன பேரோ – நான் பள்ளியில் ஹிஸ்டரி படிக்கும்போது – சாலைகள் அமைத்தார் – இருபுரமும் மரங்கள் வளர்த்தார் என்றுதான் படித்தேன்! Very dry. மிகவும் கடினமான சப்ஜெக்ட். இவ்வளவு சுவையாக கதைபோல் இருந்திருந்தால் முதல் ரான்க் வாங்கியிருப்பேன். இப்போதுகூட சரித்திரத்தை இப்படி கதை வடிவில் மாற்றி பாடமாக்கினால் எப்படி இருக்கும்?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.