தேர்தல் நையாண்டிகள் – தமிழ்த்தேனீ

cartoon3

விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார்; பதவி வந்தவுடன் துரோணர் போல  விரலைக் கேட்கிறார்

வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள்.வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் என்று சொல்லலாமே! இறுதி வாக்காளர் என்று சொன்னால் பயமாக இருக்கிறது

கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர் வேட்பாளர்களாய். கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்

அசோகர்   சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார். ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்.

இதுவரை நானே உங்களை ஆண்டேன், இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன், என்பது முக்கியமல்ல. இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன், என்பதும் முக்கியமல்ல. என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன். என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம். அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்

கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன்  கரங்கள் என்னைப் பிளந்தன

யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று. மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது. எனக்கு ஒரு சந்தேகம் – தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள். அதெல்லாம் மட்டும் மக்களுக்குப் புரிகிறதா என்ன ?

கப்பலை  நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது.   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது. ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை.cartoon 1

வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறது. பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்  என்று வாக்குறுதி அளிப்போரே!  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்று வீர்களா?   இப்போதுதான் புரிகிறது

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள். ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று.

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணினி எல்லாம் கொடுக்கிறீர்களே. படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா ?

ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே! குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள். பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா?  பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை பாவம் எங்குதான் போகும் ? குழந்தையை அனாதையாக விடலாமா?

நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ ?. இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும் ? அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை, அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள். எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள். அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

நுகர்வோர்  பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று. அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.

ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது  இடத்தில் இந்தியா உள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

ஒரு வேட்பாளர் வீட்டிற்கு வந்தார் அவருடன் கூட வந்தவர்கள் ஐயா வணக்கம் நீங்க நம்மளுக்குதான் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும் இருந்தாலும் வீடு தேடி வந்து கேக்கறதுதானே முறை  என்றார் சாமர்த்தியமாக நான் மிருதுவான குரலில் உங்களுக்குதான் ஓட்டு போடணும்னு நீங்க கேக்கறதுக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கா அப்படீன்னு கேட்டேன். உடனே அவர் சார் நீங்க போடுவீங்கன்னு நம்பிக்கையா வந்தோம் என்றார். நான் ஐயா நான் உங்களுக்கு ஓட்டு போடமாட்டேன்னு சொல்லவே இல்லே உங்களுக்குத்தான் போடணும்கிறதுக்கு ஏதாவது வலுவான காரனம் இருக்கானுதான் கேட்டேன் என்றேன் . உடனே மற்றவர்கள் இவரு நமக்கு ஓட்டு போடமாட்டாரம் வாங்க அடுத்த வீட்டுக்கு போகலாம் என்றார். வீட்டுக்கு வீடு கட்சிக்குக் கட்சி மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் வலுவான காரணம் மட்டும் சொல்ல முடியவில்லை ஒருவராலும்.

ஏய்யா உனக்கெல்லாம் எதுக்கு கௌன்சிலர் ஆகணும் எம் எல் ஏ ஆகணும் மந்திரி ஆகணும்னு இந்த வேண்டாத ஆசை ? என்னண்ணே அப்பிடிக் கேட்டுட்டீங்க மக்கள் மேலே எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? நானும் நாலு எழுத்து படிச்சவன்தானே ! நானும் ஒரு முறையாவது சட்டசபைக்கு , பார்லிமெண்டு்க்கு எல்லாம் போயி அந்த மைக்கு நாற்காலி எல்லாத்தையும் தூக்கி அடிச்சு அன்-பார்லிமென்ட் வார்த்தையெல்லாம் பேசணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?

பட்டு வாடா, செல்லமே வாடா,  கண்ணே வாடா, முத்தே வாடா, பவழமே வாடான்னு கொஞ்சுவாங்க அந்தக் காலத்திலே ! இப்போ என்னடான்னா பட்டுவாடாவையே தடை செய்யறாங்களாமே ?

ஒரு தேர்தலை நடத்தி அதில் பங்கு கொண்டு மக்கள் மனதில் ஆசைவிதைகளைத் தூவி வருங்காலத்தில் நறுமணம் கமழும் ஒரு பூந்தோட்டத்திலே அவர்களை குடியேற வைப்பது போன்ற கனவுகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தி அவர்களை மயக்கி அவர்கள் மனதை வசியம் செய்து வாக்களிக்கச் செய்து வெற்றி பெறுவது என்பது உண்மையிலேயே கடினமான செயல்தான்

“ஏண்டா நாம தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டம் போட்ட போதெல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு வந்து கையைத் தட்டி ஆரவாரம் செஞ்சு மகிழ்ந்தாங்களே ! எதிர்க்கட்சியைப் பத்தி நாம் சொன்ன புள்ளி விவரமெல்லாம் கேட்டு ஆமா ஆமா ன்னு கோஷம் போட்டாங்களே. அப்புறம் ஏண்டா நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட ஓட்டே போடலே மக்களுக்கு நாம பேசினதெல்லாம் புரியலையா?” “அவங்களுக்கு நாம பேசினது மொத்தம் புரிஞ்சு போச்சுண்ணே, அதான் ஓட்டு போடலே”

மதுவிலக்கு கொண்டுவருவோம் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று எல்லாத் தலைவர்களுமே சூளுரைக்கிறார்கள் பொது மக்களே நன்றாக உற்றுக் கவனித்துக் கேளுங்கள் , மது விலைக்கு கொண்டு வருவோம் என்றுதான் சொல்கிறார்கள்!

வாக்களிப்பது மக்கள் கடமை அளித்த வாக்கை காப்பாற்றுவது வேட்பாளர்கள் கடமை அல்லவா? அவற்றை நிறைவேற்றாத வேட்பாளர்களை என்ன செய்யலாம் ?

ஜெயிக்கிற குதிரைமேல் பணம் கட்டியே பழக்கப்பட்டுவிட்டோம் நாம்.   இல்லையென்றால்  நம் பணமும் பறி போய்விடுமே என்கிற பயத்தில். ஆனால் அரசியல் அப்படியல்ல.  ஜெயிக்கிற கட்சிக்கு  வாக்களித்தால் ஏற்கெனவே  பறி போன   நம் பணமும், இனி வருங்காலங்களில்  நாம் ஈட்டும் பணமும் இரண்டும் சேர்ந்து  போய்விடும் . ஆகவே ஜெயிக்கிற கட்சி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு  வாக்களிக்காமல்  ஜெயிக்க வேண்டிய  கட்சிக்கு வாக்களியுங்கள்

நாட்டின் முதுகெலும்பு தொழிலாளிகள். அந்தத் தொழிலாளிகளுள் முக்கியமான தொழிலாளி விவசாயி. அப்படிப்பட்ட விவசாயியைக் கடன் வாங்க வைத்து வட்டி கட்ட வைத்து விட்டு இப்போதென்ன திடீர் அக்கறை விவசாயிகளின் கடனை முழுவதுமாக நீக்க? தேர்தல் காலத்தில் மட்டுமே வருகிறதா விவசாயிகளின் நினைவு ?

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான் என்னும் ஔவையின் மொழியிலே குடி உயரக் கோன் உயர்வான் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டுதான் குடியை உயர்த்துகிறார்களோ ?

பால் கூட வாங்க முடியலே படிக்கவும் முடியலே மின்சாரமும் இல்லே , படிச்சும் வேலை கிடைக்கலே என்றெல்லாம் யாரையோ நடிக்க வைத்து அவர்களைப் பேசவைத்து அதை வெளியிடுகிறார்களே.  உண்மையான மக்களை சந்தித்தாலே நடிக்க வைக்க வேண்டும் எனும் அவசியம் இல்லாமலே மக்களே உண்மையை் பேசுவார்களே. எதற்கையா இந்த நடிப்பும் வேஷமும்? எல்லாவற்றையுமே நடிப்பால்தான் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்துவிட்டீர்களா.? ஆமாம் நடித்தால்தானே நம்புகிறார்கள் மக்கள்

ஸ்கூட்டர் விலையிலே பாதி தருவதை விட ஒண்ணு செய்யலாம் பாதி ஸ்கூட்டர் இந்த தேர்தலிலேயும் மீதி ஸ்கூட்டர் அடுத்த தேர்தலிலேயும் தரலாம். முழுக் கிணறு ஆகிவிடும். ஏற்கெனவே கிணறுகளாகப் பார்த்து பார்த்துதான் ஸ்கூட்டரெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது

கணக்கிலே கடன் வாங்கிக் கழிக்கலாம்  கூட்டலாம்  கணக்கில்லாமல் கடன் வாங்கக் கூடாது. அதே போல் கணக்கில்லாமல்  இலவசங்களை வழங்கக் கூடாது

முன்பெல்லாம் வாக்குச் சாவடிக்கு வாக்காளர்களை மரியாதையாக காரிலே அழைத்துச் சென்று வாக்களிக்க வைப்பார்கள். வாக்களித்தவுடன் மறந்துவிடுவார்கள் வீட்டுக்கு நடந்துதான் வரவேண்டும் . இப்போது வாக்களிக்கச் சென்று பாதுகாப்புடன் வீட்டுக்குத் திரும்ப முடிகிறது என்பது மனதுக்கு ஆறுதலான விஷயம். ஆனாலும் இப்போதும் வாக்களித்த மறுகணமே வாக்காளர்களை மறந்துவிடுகிறார்களே வேட்பாளர்கள் என்பதுதான் வருத்தப்படுத்தும் விஷயம்

இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஜோதிட நம்பிக்கை மட்டும் யாரையுமே விடுவதில்லை. ஜோதிடர்களும் இறையை விட அவர்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு ஏதேனும் சொல்லிவைக்கிறார்கள். அதை நம்பி எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்னும் ஆர்வமுள்ளவர்கள் கெட்ட கிரகங்களின் பார்வையிலிருந்து விடுபடவேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொண்டு கோயிலிலே கொள்ளையடித்தாகிலும் அந்தப் பணத்திலே கொஞ்சம் ஜோதிடருக்கும் அள்ளிக் கொடுத்துவிட்டு அவர் சொல்படியெல்லாம் ஆடுகிறார்கள் வெள்ளைத் துண்டு, மஞ்சள் துண்டு பச்சைத் துண்டு என்றெல்லாம் கலர் கலராக துண்டுகளை போர்த்திக் கொண்டும் தலையில் கட்டிக் கொண்டும் ரவிக்கையாகத் தைத்துப் போட்டுக்கொண்டும் பிரசாரம் செய்கிறார்கள். கலர்க் கனவுகள் நிறைந்த தேர்தலப்பா இது!  துண்டுப் பிரசாரம் கேள்விப்பட்டிருக்கிறேன் சிறு சிறு காகிதத்திலே அச்சிட்டு அதைக் கொடுப்பார்கள். இது வித்தியாசமான துண்டுப் பிரசாரமாக இருக்கிறது

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது உங்கள் உரிமை. உங்கள் விருப்பம் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மைதான். வீடு தேடி வந்து வாக்களிக்கக் கோரும் வேட்பாளர்களின் ஆட்களும் மனிதர்களே , வேட்பாளரும் மனிதரே. ஆகவே வருபவர் யாராக இருந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அன்போடு உபசரித்து மரியாதையாக வழி அனுப்புங்கள். அதற்குப் பிறகு நன்கு ஆலோசித்து உங்கள் மனசாட்சிப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். மதம் கட்சிகள் எதிர்கட்சி நம் கட்சி எதுவுமே முக்கியம் இல்லை. மனிதம் முக்கியம். ஆகவே மனிதம் காப்போம்

வேட்பாளர்களே தேர்தல் நேரத்தில் நீங்கள் பேசுவதையெல்லாம் உற்றுக் கவனிக்கிறார்கள் பொது மக்கள் . மற்ற நேரங்களில் நீங்கள் பேசுவதே இல்லையே என்னும் ஏக்கத்தில். ஆனால் எப்போது மக்களைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் போகிறீர்கள் அந்த ஏக்கம் உங்களுக்கு வராதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.