படைப்பாளி – திலீப்குமார் (எஸ்கே என்)

கட்டுரையில் மேற்கோள்கள் அதிகம் என்பதால் மேற்கோள் குறித்த ஒரு கவிதையுடன் தொடங்கியுள்ளேன்.
“அழகே அல்ல”

ஆணித்தரமாய் மேடையில் முழங்கினார் அரசியல்வாதி அய்யாசாமி
எந்தக் கருத்தையும் சொந்தமாகவே சிந்திக்க வேண்டும்
அடுத்தவன் கருத்தை எடுத்துச் சொல்வது அழகே அல்ல
மேற்கோள் காட்டி பேசுபவன் எல்லாம் முட்டாள் என்றான்
சீன அறிஞன் சியாங்கு புயாங்கு.
(கணையாழியில் எப்போதோ படித்த கவிதை
கவிஞர் பெயர் நினைவிலில்லை)
1. விக்கிபீடியாவில் திலீப்குமார் பற்றி
திலீப்குமார் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டவர். சிறுகதை, இலக்கியத் திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள்.
2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் “பாஷா பாரதி” என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.
2. அசோகமித்திரன் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து..
“திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையானப் பரீட்சார்த்தப் படைப்பு. சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது உற்சாகம் தவிர்த்தது அல்ல.

திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.”

3. ஆபிதீன் பக்கங்களில் ஒரு பதிவு :-

தன்னுடைய ’தீர்வு’ சிறுகதை உருவான விதத்தை திலீப் அதில் சொல்லியிருந்தார் இப்படி : ‘ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் “தீர்வு” என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேளை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை.

விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்துக் கதையை வேறு பிரதியெடுத்துக் கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது. ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனைச் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது “தீர்வு” கதையை ஞாபகப் படுத்தினேன். அது          ” நல்ல கதையாச்சே, அப்பவே போடச் சொல்லிட்டேனே! “என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டுக் கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது.’
அந்தக் கதை இப்படிப் போகிறது.

தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் 30 குடும்பங்கள் வசிக்கும் ஒரு கட்டிடத்தில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குப் போகும் போது கண்ட காட்சி வழக்கத்திற்கு விரோதமாய் இருந்தது.
வெறிச்சோடி அழுக்காய்க்கிடந்த முற்றமும், சுத்தமாக இருந்த நடைவெளியும, கிணற்றைச் சுற்றிக் கும்பலாக நின்றுகொண்டிருந்த ஒரே ஆண்களும் பெண்களும் குழந்தைகளும், அந்தக் கும்பலின் நடுவில் நின்றபடி கிணற்றுக்குள் மிகச் சிரத்தையாக எதையோ தேடிக்கொண்டிருந்த மாமாவும் …

கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய 18 X 18 முற்றம். ஒரு பக்கம் கோவில் சுவரும் மற்ற மூன்று பக்கங்களிலும் சுற்றியுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் 30 குஜராத்தி குடும்பங்கள். மாதத்தில் 29 நாட்களும் சம்பளத்தை எதிர்பார்க்கும் ஆண்கள், சண்டையிலும், ஊர் வம்பிலும் மிக நாட்டம் உடைய மட்டமான இந்திப் படங்களிலும், இனிமையான இந்திப் பாடல்களிலும் ரசனை உடைய பெண்கள், சராசரியாக குடும்பத்திற்கு ஐந்து வாரிசுகள் கொண்ட குடும்பங்கள் இவை.
எதிரில் வந்த கோபால்பாய் தெரிவித்த விஷயம் இதுதான்.
“என்னத்தைச் சொல்ல திலீப் பாய்! தண்ணீரின் கதைதான் பெரிய கதையாகிவிட்டிருக்கிறது. வீட்டில் குடிப்பதற்கு ஒரு துளி தண்ணீர் இல்லை. இந்த லட்சணத்தில் கிணற்றில் எலி விழுந்து இறந்துவிட்டது. பாபு பாய் பாவம்! எட்டு மணியிலிருந்து அதை வெளியே எடுக்க முயல்கிறார். முடியவில்லை.”

மேல்மாடியிலுள்ள மாமாவின் வீட்டில் ரொம்பவும் மடி ஆச்சாரம் பார்க்கும் பாட்டி கோவிலுக்குப் போயிருந்தாள். கட்டிடத்தில் எல்லோரையும்விடவும் வயதில் முதிர்ந்தவள் இவள். லெளகீக விவகாரங்களில் மிக மிக விவேகமுள்ளவளாகவும், ஆன்மீக விசாரங்கள் நிறைந்த ஒரு தெளிந்த சிந்தனாவாதியாகவும் கருதப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்தாள்.

கிணற்றடியில் அந்த எலியை எடுக்க ஒரு பழக்கூடையை.க் கயிற்றில் கட்டி முயற்சி நடக்கிறது. அந்த எலியை வெளியே எடுத்துப் போடுவதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டிருந்த மாமா, தான் எல்லோராலும் கவனிக்கப்படுகிறோம் என்ற உண்மையை மனத்துக்குள் ரசித்து அசட்டுத்தனமாக ஆனந்தப்பட்டு முன்னைவிட, இன்னும் சற்று சிரத்தையுடன் தனது வேட்டையில் ஈடுபடுகிறார்.

சுமார் முக்கால் மணி நேரம் எலி போக்குக் காட்டியது. கடைசியாக, பத்தே கால் மணிக்கு எலி வெளியே எடுக்கப்பட்டது. எலியின் பிணத்தைப் பார்க்கக் கூசி, குழந்தைகளும் பெரியவர்களும் நகர ஆரம்பித்தனர். தனது ஆண்மையையும், தைரியத்தையும் வெளிக்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதிய யாரோ ஒரு இளைஞன் கூடையுடன் எலியை வெளியே எடுத்துச் சென்றான். மாமா, வெற்றி பெற்ற கஜினி முகம்மதாகவும், சீசராகவும், நெப்போலியனாகவும் உணர்ந்தார்.
இப்போது கிணற்று நீரைக் குடிக்க உபயோகிக்கலாமா?” என்ற ஒரு நியாயமான கேள்வி.  ஹெல்த் ஆபீஸில் போய்ச் சொன்னால் அவர்கள் ஏதாவது மருந்து தெளித்துவிடுவார்கள். அல்லது நாமாகவே சிறிது க்ளோரினைத் தூவிவிட்டுவிடவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் எல்லோர் முகத்திலும்  கலவரமும் பீதியும் நிறைந்து காணப்பட்டன. ஹெல்த் ஆபீஸ் போவதைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாக்குச் சொல்கிறார்கள். தங்களைத் தவிர யாராவது ஒருவர் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என்று மட்டும் மிக மிக விரும்பினார்கள்.
மேலோட்டமாகக் கிணற்றிலிருந்து பதினைந்து அல்லது இருபது குடங்கள் நீரை இறைத்துக் கீழே ஊற்றிவிட்ட பிறகு தண்ணீரை உபயோகிக்கலாம் என்று அரிய யோசனையும் செயலாக்கப்படுகிறது. மூச்சிரைக்க இதைச் செய்து முடித்த பிறகும் எல்லோரும் கிணற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கோவிலிலிருந்து திரும்பிவந்த பாட்டி என்ன விஷயம் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். வாருங்கள் நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன் என்று குஜராத்தியில் கூறுகிறாள்.

பீரோவினுள் ஜரிகைத் துணிகள் அணிவிக்கப்பட்டு, குட்டிக் குட்டி மெத்தைகளின் மேல் உட்கார்ந்திருந்த சின்னச் சின்ன விக்ரஹங்கள் தவிர மூலையில் காவித் துணியில் சுத்தமான ஒரு வெள்ளைத் துணியால் கட்டப்பட்டிருந்த ஏதோ முடிந்துவைக்கப்பட்ட மிகச் சிறிய மண்குடம் இருந்தது. ஒரு கிண்ணத்தை வரவழைத்தாள். பின் குடத்தின் வாய் – துணியை அவிழ்த்து அதிலிருந்து சிறிது நீரைக் கிண்ணத்தில் ஊற்றினாள்.

“ஸ்யோ ஆ கங்கா ஜல் ச்சே. பிரபுனு நாம் லய் னே குவா மா நாக்கி த்யோ னே வாப்ரோ” (இந்தாருங்கள். இதில் கங்கா ஜலம் உள்ளது. கடவுளின் பெயரைச் சொல்லி கிணற்றில் ஊற்றிவிட்டு நீரை உபயோகியுங்கள்.) பிராஞிவன்லால் மிக பவ்யமாகத் தலையை ஆட்டிக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் கிணற்றடிக்குச் சென்றனர்.

சிறிது நேரத்தில் எல்லோர் வீட்டுப் பானைகளிலும் கிணற்று நீர் நிரம்பி வழிந்தது. கட்டிடத்தில் அமைதி கலைந்து, இயக்கம் துவங்கியது.
பாட்டி அமைதியாக ‘ஜன் கல்யாணி’ல் லயிக்கத் துவங்கினாள். என்று முடிகிறது கதை.

இணையத்தில் கிடைக்கும் இவரது மற்ற கதைகள் ( கதைப் பெயரைச் சொடுக்கினால் கதையைப் படிக்கலாம்)

மூங்கில் குருத்து,

கண்ணாடி,

கடிதம்

தீர்வு,

கானல்

தடம்,

 அக்ரஹாரத்தில் பூனை

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s