லாக்கர் – அழகியசிங்கர்


 சனிக்கிழமை மிஸஸ் சாரி போன் செய்கிறாளே என்று அவள் மீது எனக்குக் கோபம். சனிக்கிழமை இரண்டு மணியுடன் அலுவலகம் முடிந்து விடுகிறது. பின் நாங்கள் வங்கிக் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பும்போது மணி மூன்றடித்து விடும். சனிக்கிழமைகூட நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்ற கடுப்பு எனக்கு எப்போதும் இருக்கும்.

மிஸஸ் சாரி இப்போது நங்கநல்லூரில் வசிக்கிறார். அவர் கணவரும் அவரும்தான் தனியாக இருக்கிறார்கள். பிள்ளைகள், பெண்கள் எல்லோரும் இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். சாரி குடும்பத்தில் எல்லோருக்கும் ஏகப்பட்ட வருமானம். நல்ல நிலையில் இருந்து சாரி அவர்கள் ரிட்டையர்டு ஆகி, பென்சன் பணம் கணிசமான அளவிற்கு வாங்குகிறார். அவர்கள் முதலில் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள். அப்போது எங்கள் வங்கியில் ஆரம்பித்த கணக்கை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எப்போதோ கணக்கை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. காரணம் திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் கிளைதான் ராசியான கிளையாம்.

சாரி மாமி லாக்கருக்காக நங்கநல்லூரிலிருந்து இங்கு வந்து லாக்கரைத் திறப்பாள். அவள் போட்டிருக்கும் சேமிப்பு கணக்குகளிலிருந்து வட்டி ஒழுங்காக வரவில்லை என்றால், ஏன் என்ற கேள்வியைக் கேட்பாள். நேரே உள்ளே தலைமை மேலாளரைப் போய்ப் பார்ப்பாள். அவர் எனக்கு அவர் அறையிலிருந்து போன் பண்ணிக் கூப்பிடுவார். நான் உள்ளே போய் சொல்ல வேண்டும்.
பின் மிஸஸ் சாரி என் ஸீட்டிற்கு வந்து, ஒவ்வொரு மாதமும் ஒண்ணாந்தேதி வட்டி வந்திடும், ஏன் வரலைன்னு ஒரு பாட்டுப்   பாடுவாள். அவளை சமாதானம் செய்ய வேண்டும்.

பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கீதா சொல்வாள் : “சார், அந்த மாமியை பகைச்சுக்காதீங்க..எல்லா டெப்பாஸிட்டுக்களையும் எடுத்துக்கிட்டுப் போயிடுவா…”

கீதா இப்படி சொல்வாளே தவிர ஒரு உதவியும் செய்ய மாட்டாள். பெரிய ராணி மாதிரி அவளுக்கு நினைப்பு. தன் டிரஸ் மீது அழுக்கே படாம உட்கார்ந்து போகிறவள்.

சனிக்கிழமை வந்தாலே ஒரே கூட்டமாக இருக்கும். அதுவும் முதல் வாரம் என்றால் கேட்கவே வேண்டாம்.

மிஸஸ் சாரி சரியாக ஒன்றரை மணிக்கு வந்தாள்.

“லேட் ஆயிடுத்து,” என்றாள் மிஸஸ் சாரி.

“உட்காருங்கள்,” என்று உட்கார வைத்தேன்.

என் முன் நின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் மிஸஸ் சாரி வந்திருப்பதையே மறந்து விட்டேன்.

கீதா உடனே, “மாமியை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறந்து விடுங்க,”என்று சொன்னவுடன் மாமி எதிரில் உட்கார்ந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது.

லாக்கர் நோட்டில் கையெழுத்துப்போடும்படி சொன்னேன். பின் மிஸஸ் சாரியை லாக்கர் அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஒவ்வொரு முறையும் லாக்கருக்கு அழைத்துக்கொண்டு போவதற்குள் எனக்குப் பெரும்பாடாக இருக்கும். எங்கள் கிளையில் லாக்கர் கீழே பாதாள அறையில் இருக்கிறது. உண்மையில் லாக்கர் பக்கத்தில்தான் வங்கிப் பணத்தைப் பூட்டி வைக்கும் பெட்டகமும் இருக்கும்.

மிஸஸ் சாரியை லாக்கர் முன் நிறுத்தி லாக்கரைத் திறந்து வைத்தேன். பெரிய லாக்கர் வைத்திருந்தாள் மாமி. இதைத் தவிர பையன், பெண்ணிற்கெல்லாம் வேற வேற லாக்கர் வைத்திருந்தாள். லாக்கரைத் திறந்து அதில் உள்ள பொருள்களை எண்ணுவாள். அதற்குத் தன் கையிலிருந்து ஒரு நோட்புக் வைத்திருந்தாள். அதில் எழுதியிருக்கிற ஐட்டம்ஸ் சரியாகப் பார்த்து ஒப்பீடு செய்த பிறகுதான் போவாள்.

“நீங்க சீக்கிரமா முடிச்சுடுங்க..இன்னிக்கு சனிக்கிழமை..அரைநாள்தான்..இன்னும் கொஞ்ச நேரத்தில பூட்டிடுவோம்..”

“சரி, சரி,” என்றாள் மாமி.

நான் மாடி ஏறி வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். ஏறும்போது மூச்சிரைக்கும். பெரிய அவதி. லாக்கரில் ஒருவரை விட்டுவிட்டு வந்திருப்பேன். மேலே போய் என் ஸீட்டில் உட்காரப் போனால் இன்னொருவர் வந்திருப்பார். திரும்பவும் அவரை அழைத்துக்கொண்டு லாக்கருக்குப் போக வேண்டும். இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து கொண்டிருப்பார்கள். எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் யாரிடம் இதையெல்லாம் காட்ட முடியும்.

லாக்கரைப் பற்றி இன்னொரு பிரச்சினை என் ஸீட் முன்னால் நின்று கொண்டிருந்தது. வந்திருந்தவர் டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டிருந்தார். லாக்கர் லெட்ஜரில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டுமாம். அவரை உட்காரச் சொன்னேன். அவர் கொண்டு வந்த பேப்பரைப் பார்த்தேன்.

“யார் பெயரில் லாக்கர் இருக்கிறது?” என்று கேட்டேன்.

“தங்கை பெயரிலும் அவர் கணவர் பெயரிலும் இருக்கிறது.”

“அவர்கள் இருவரும் வர வேண்டும்.”

“அவர்கள் இருவரும் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார்கள்..”

“அவர்கள் இருவரும் ஒரு முறையாவது நேராக இங்குவந்து உங்கள் பெயரைச் சேர்க்கவேண்டும் என்று சொல்லவேண்டும்..”

“இப்போதைக்கு அவர்களால் வர முடியாது…”

“அப்படியென்றால் ஒன்றும் செய்வதிற்கில்லை…”

“அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்கள். என் பெயரைச் சேர்க்கச் சொல்லி..”

“கடிதம் கொடுத்தாலும் நேரே வரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு பிரச்சினைவரும்.”

நான் சொன்னதைக்கேட்டு பெரிதாக சத்தம் போட்டபடி அவர் கடுப்புடன் அந்த இடத்தை விட்டுப் போனார்.

இந்த வங்கிக் கிளையில் லாக்கர் எப்போதும் ஒரு பிரச்சினை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வங்கி இது.

சனிக்கிழமை என்பதால் 12 மணிக்கே வங்கியை மூடிவிட வேண்டும். ஆனால் முடிவதில்லை. நசநசவென்று கூட்டம். தாங்க முடியவில்லை. ஒரு வழியாகக் கூட்டம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். ஒவ்வொரு ஊழியரும் வீட்டிற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். இதோ கீதாவும் கிளம்பிவிட்டாள். கொடுத்து வைத்தவள். வீடு பக்கத்திலேயே அலுவலகம். விருப்பமான நேரத்தில் வந்துவிட்டுப் போகலாம். எதிரில் எஸ்பி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸர் ஜெகந்நாதன் டிபன் சாப்பிடப் போய்விட்டார்.

உள்ளே தலைமை மேலாளர் வட்டார அலுவலகத்தில் கூட்டம் என்று கிளம்பிப் போய்விட்டார். சனிக்கிழமை என்பதால் வரமாட்டார். இரவு பங்களுர் போகும் வண்டியில் ஏறி திங்கள் காலையில்தான் அலுவலகம் வருவார். மாடியில் லோன் ஆபிஸர் கூடுவாஞ்சேரியிலிருந்து வருகிறார். சனிக்கிழமை என்றால் யாரிடமும் சொல்லாமல் கூட ஓடிப் போய்விடுவார். அவருக்கும் தலைமை மேலாளருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டுதான் இருக்கும்.

இதோ கோடியில் உட்கார்ந்திருக்கும் ஓய்வு ஊதியம் பார்க்கும் அலுவலரும் கிளம்பிவிட்டார். இப்போது நானும், தலைமை காஷியரும், பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் வைக்கும் கடை நிலை ஊழியர் கேசவனும்தான் இருக்கிறோம்.

தலைமைக் காஷியர் கூப்பிட்டார்.

“சார், முடிந்து விட்டது. வர்ரீங்களா?”

“இதோ” என்று காஷியர் அறைக்குள் நுழைந்தேன்.

எல்லாவற்றையும் எண்ணிக் கையெழுத்துப் போட்டேன். பின் கேசவனைக் கூப்பிட்டு காஷ் எடுத்துக்கொண்டு போகும் பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே சென்றோம். பாதாள அறைக்குச் செல்ல வேண்டும். பின் காஷ் காபினைத் திறந்து எல்லாப் பெட்டிகளையும் உள்ளே வைத்துப் பூட்டினோம். வெளியே வந்து ஸ்டிராங் ரூமை பல சாவிகளை வைத்துப் பூட்டினோம். பின் மாடிக்கு வந்து கதவைப் பூட்டினோம்.

“இன்னிக்கு ஏகப்பட்ட கூட்டம்….ஐந்நூறில இரண்டு கள்ள நோட்டு வேற,,” என்று அலுத்துக் கொண்டார். இதோ காஷியரும் கிளம்பிப் போய் விட்டார்.

நானும் கேசவனும்தான். கணினிக் கணக்குகளையெல்லாம் முடிக்கச் சிறிது நேரம் ஆகும். வேகம் வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறேன்..

“என்னப்பா கேசவா…சனிக்கிழமை கூட வங்கியைவிட்டுச் சீக்கிரமா கிளம்ப முடியலை…”என்றேன் அலுத்தபடியே.

“ஆமாம். சார்…இங்கே அப்படித்தான்…”

அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் குடிக்கப் போய்விடுவான். அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. சனிக்கிழமை நிச்சயமாகக் குடி உண்டு.

“என்னப்பா கேசவா…ஜெகந்நாதன் இல்லை.”

“அவர் அப்பவே வீட்டிற்குப் போய்விட்டார். தெரியாதா உங்களுக்கு”

“அப்படியா….சீக்கிரம் வங்கியைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப் போக வேண்டும்…”

அவசரம் அவசரமாக நானும் கேசவனும் வங்கியைப் பூட்டிவிட்டுக் கிளம்ப ஆயுத்தமானோம்… மெயின் ஸ்விட்சை கேசவன் ஆப் செய்தான்…அந்த சமயத்தில் யாரோ சன்னமாய் சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்டது…

“கேசவா…யாரோ சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்கிறது. எங்கே?”

“சார், அது ரோடில யாரோ சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க…வாங்க சார் போகலாம். “

வங்கிக் கதவைப் பூட்டும்போது எனக்குக் காரணம் புரியாத படபடப்பு இருந்தது. பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். இன்னும் ஒரு நாள் வங்கியைப் பற்றி நினைக்க வேண்டாம்.

மேற்கு மாம்பலத்திலிருந்து தினமும் நான் 8 மணிக்கே திருவல்லிக்கேணிக்கு வந்து விடுவேன். திரும்பவும் வீடு போய்ச் சேர ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணி ஆகிவிடும். அண்ணாசாலை வழியாக மாலையில் வீட்டிற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

“என்ன இன்றைக்கு சீக்கிரம் வந்து விட்டீர்கள் போலிருக்கே?” என்று கேட்டாள் மனைவி.

“இல்லை. உண்மையில் மானேஜர் சீக்கிரமாய்க் கிளம்பிப் போய்விட்டார்…அதான் கொஞ்சம் சீக்கிரம்…அவர் இருந்தால் போக விட மாட்டார்.

“இன்னிக்கு தி நகர் மார்க்கெட் போகணும்…மொத்தமா காய்கறி வாங்கிக்கொண்டு வந்துடலாம்..அர்ச்சனாவிற்கும் வாங்கிக் கொண்டு வந்துடலாம்..”என்றாள் மனைவி.

“எனக்குத் தூக்கம் வரும்போல் இருக்கு…நான் தூங்கறேன்..எழுப்பு,”
என்று கூறியபடி அறையில் போய்ப் படுத்தேன்.

கொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன். விழிப்பு வரும் சமயத்தில் எனக்கு
யாரோ முனகுவதுபோல் குரல் கேட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மணி ஆறடித்திருந்தது. என் உடம்பு பரபரப்பாகிவிட்டது. மிஸஸ் சாரியைப் பற்றி திடீரென்று ஞாபகம் வந்தது. லாக்கரிலிருந்து மிஸஸ் சாரி சொல்லிக்கொண்டு போகவில்லை என்று ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டேன். கேசவனுக்கு போன் செய்தேன்.

“என்ன சார்,” என்று கேட்டான் கேசவன்.

“உடனே ஆபீஸிக்கு வா…அந்த  மிஸஸ் சாரி போகும்போது
சொல்லிக்கொண்டு போகலை… மிஸஸ் சாரியைப் பூட்டிக்கிட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன்..”

“நான் நல்லா பாத்தேன் சார்…யாரும் இல்லை..”

“எனக்கு தூக்கம் வராது. கதவைத் திறந்து பார்த்திட்டா நல்லது.”

“என்ன ஆச்சு…கடைக்கு வரலையா?”
என்று கேட்டாள் மனைவி.

எரிச்சலுடன், “இல்லை இல்லை,” என்றேன் மனைவியைப் பார்த்து.

திரும்பவும் திருவல்லிக்கேணியை நோக்கி ஓட்டினேன். பனகல் பார்க் பக்கம் போக முடியாமல் கூட்டம். மிஸஸ் சாரி அங்கிருக்கக் கூடாது என்று எனக்கு இஷ்டமான தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

போகும்போது தலைமை காஷியர் வீட்டிற்குப் போய் அவருடைய சாவியை வாங்கிக்கொண்டேன். “ஏன்?” என்று கேட்டார்?

“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது,” என்றேன்.

“ஐய்யய்யோ….நான் வரட்டுமா?”

“வேண்டாம். நான் பூட்டிட்டுத் திரும்பவும் சாவியைக் கொண்டுவந்து கொடுத்திடறேன்..”

கேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.

“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது”என்றேன்.

“ஐய்யய்யோ….நான் வரட்டுமா?”

“வேண்டாம். நான் பூட்டிட்டு திரும்பவும் சாவியை கொண்டு வந்து கொடுத்திடறேன்..”

கேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.

“கேசவா..மிஸஸ் சாரி லாக்கருக்குப் போனவங்க வெளியே வந்த மாதிரி தெரியலை..”

“ஏன் சார், வரலைன்னா எப்படி சார்…அவங்க கிட்டே செல்போன் இருக்காது..போன் பண்ண மாட்டாங்க..”

“அதான் ஒண்ணும் புரியலை….”

அவசரம் அவசரமாகக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். மெயினை ஆன் செய்தேன். கேசவன் மாடிப்படிக்கட்டுக் கேட்டைத் திறந்தான். லைட்டைப் போட்டான்.

அங்கும் இங்கும் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. மனித அரவம் கேட்டதும் பதுங்கிக் கொண்டன.

“சார் எந்தச் சத்தமும் கேட்கலை.. உங்களுக்குப் பிரமை சார்..”

ஸ்ட்ராங் ரூமைத் திறந்தோம். ஸ்ட்ராங் ரூமைப் பூட்டிவிட்டால், அந்த இடம் கும்மென்று இருக்கும். காற்று நுழையக் கூட வழி இருக்காது. யாராவது மாட்டிக்கொண்டால் மூச்சுத் திணறிச் சாக வேண்டியதுதான்.

எனக்குத் திக்கென்றிருந்தது.

“சாரி மாமி..”என்று சத்தம் போட்டபடி லாக்கர் அறைக்குள் நுழைந்தேன்.

நான் லாக்கர் திறந்த இடத்தில் சாரி மாமி மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.

எனக்குப் பதட்டமாகப் போய்விட்டது. அவசரம் அவசரமாக முகத்தில் தண்ணீரை அடித்தோம். மாமி அசைந்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.

மாமி லாக்கரில் எல்லாவற்றையும் வைத்துவிட்டுச் சாத்தியிருந்தாள். லாக்கரிலிருந்து நகைகள் எதுவும் எடுத்துக்கொண்டு போகவில்லை. லாக்கரில் நகைகளை வைப்பதற்குத்தான் வந்திருக்கிறாள் போலிருக்கிறது.

மாமியை நானும் கேசவனும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து மாடிப்படி வழியாக ஏறி ஹாலில் படுக்க வைத்தோம்.

கேசவனைப் பார்த்து, கேசவா..மாமிக்கு மூச்சு வர்றது இல்லையா? என்று நடுக்கத்துடன் கேட்டேன்.

“மூச்சு வர்றது…கவலைப்படாதீங்க.. மாமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் போதும்…பக்கத்திலேயே சக்தி ஆஸ்பத்ரி இருக்கு..சேர்த்து விடலாம்..”

“கேசவா, நான் இங்க இருக்கேன்..நீ போய் டாக்டர் யாரையாவது கூப்பிட்டு வா…”

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, ஆஸ்பத்ரியில் சேர்க்கச் சொன்னார்.

“டாக்டர்..என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

“ஒண்ணும் தெரியலை..ஆஸ்பத்ரியில உடனடியாகச் சேர்க்கணும்..”

நானும் கேசவனும் பக்கத்தில் இருக்கிற  ஆஸ்பத்ரியில் சாரி மாமியைச் சேர்த்துவிட்டு, வங்கிக் கதவைச் சார்த்திவிட்டு ஆஸ்பத்ரியில் கிடந்தோம். பின் மாமி வீட்டுக்குப் போன் பண்ணித் தகவல் தெரிவித்தேன். கீதாவிடம் போன் பண்ணிச்சொன்னேன். அவளும் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்துவிட்டாள். க்ளூக்கோஸ் வாட்டர் எல்லாம் ஏற்றியவுடன் மாமி கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணைத் திறந்து பார்த்தாள். என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

“என்ன இப்படி செய்து விட்டீர்களே?” என்றாள் கோபமாக.

நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். “மன்னிச்சிடுங்கோ..நீங்க லாக்கரிலிருந்து வந்து விட்டீர்கள் என்று நினைத்தேன்.”

“நல்லா நினைத்தீர்கள், போங்கள்..”என்றாள் சாரி மாமி விரக்தியுடன்.

டாக்டர் தனியாகப் பேசும்போது, “இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால், மாமி பிராணன் போயிருக்கும்,” என்றார்.

எனக்கு கேட்கும்போது திக்கென்றது. எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சாரிமாமா எப்படியோ வந்து சேர்ந்தார். ரொம்ப வயசானவர். என்னைப் பார்த்து கண்டபடி திட்ட ஆரம்பித்தார். நான் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தெரியாமல் நடந்துடுத்து…மன்னித்துக் கொள்ளுங்கள்,”என்றேன்.

“நான் உன்னை சும்மா விடமாட்டேன். போலீசுல சொல்றேன்..”என்றார் உணர்ச்சி வசப்பட்டு. கீதாவிற்கு ரொம்பத் தெரிந்தவர். கீதா என்னை மன்னிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டாள்.

சாரி மாமி இரண்டு நாட்கள் ஆஸ்பத்ரியில் இருந்தாள். எங்கள் வங்கிக்கிளையிலிருந்து எல்லோரும் சாரி மாமியை விஜாரித்தார்கள். தலைமை மேலாளர் என்னைத் தனியாகக் கூப்பிட்டுக் கண்டபடி திட்டினார்.

“உங்களாலே பிராஞ்ச் பேரே கெட்டுப்போயிடுத்து…”

வீட்டிற்குப் போன இரண்டு வாரங்களில் சாரி மாமி செய்த காரியம் என்னவென்றால், எல்லா கணக்குகளையும் நங்கநல்லூருக்கு மாற்றியது. லாக்கர்கூட சாரி மாமி மாற்றிவிட்டார்.

என்னை வேற இடத்திற்கு மாற்றும்படி கிளை மேலாளர் வட்டார அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

2 responses to “லாக்கர் – அழகியசிங்கர்

  1. இந்தக் கதையின் ஆசிரியர் வங்கியில் வேலைபார்தவர் என்று தெரிகிறது. முன்பு அலாரம், இப்போது லாக்கர். எந்தத் தொழிலும் “Job Hazards” உண்டு. சில சௌகர்யங்களும் உண்டு.அடுத்த கதையாவது சோகக் கதையாக இல்லாமல் இருக்கும் என எதிர் பார்க்கலாமா?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.