சரித்திரம் பேசுகிறது – யாரோ

ஆம்ரபாலி

பீடிகை:

பொதுவாக இந்த ‘சரித்திரம் பேசுகிறது’ தொடர் – காலப் பிரமாணமாக (chronologically) தொடர்ந்து எழுதப்படுகிறது.

இந்த முறை – சற்றே முறை தவறி – காலத்திற்குப் பின்னே சென்று ஆம்ரபாலியை படம் பிடித்துக் காண்பிக்க உள்ளோம்.

காலம்: கி மு 500; இடம்: வைசாலி

பேரழகு கொண்ட பெண் பேரழிவை விளைவிக்க வல்லவள் – ஆயினும் காவியத்தில் இடம் பெறத் தவற மாட்டாள்.

சீதையின் ‘பொன் மான்’ ஆசை – ராவணனையும் அசுர குலத்தையும் ஒருங்கே அழித்தது, ஆனால் காவியம் படைத்தது.

திரௌபதியின் சிரிப்பு – துரியோதனாதியர் மட்டுமல்லாது பாண்டவராதியரையும் அழித்தது. ஆயினும் காவியம் படைக்கத் தவறவில்லை.

ஹெலன் – இவளது முகம் ஆயிரம் கப்பல்களை ஏவியதாம் – ட்ராய் நகர் அழிந்தது. ஹோமர் இதைக் காவியமாக்கினார்.

அழகி கிளியோபாத்ராவின் ஒரு சஞ்சலம் மார்க் ஆண்டனி என்ற மாவீரனைத் தோல்வியடையச் செய்தது. – ஷேக்ஸ்பியர் அதைக் காவியமாக்கினார்.

தமயந்தியின் அழகு தேவர்களையும் மயக்கியது. அவள் சுயம்வரத்தில் தேவர்கள் நளன் போல் வேடமிட்டு அவளைக் கவர நினைத்தார்கள்.

இவர்களெல்லாம் இளவரசிகள், தெய்வத்தன்மை பொருந்தியவர்கள்..

ஆனால் நமது நாயகியோ சாதாரணப் பெண்.. அழகு மட்டுமே அவள் வாழ்வைக் காவியமாக்கியது.

sa1

இனி நம் கதைக்குச் செல்வோம்:

உலகையே தர்ம விளக்கால் ஒளியூட்டிய புத்தர் வாழ்ந்த காலம்.

மகத நாடு தோன்றிப் பெரும் புகழ் பெற்ற நாட்கள்.

பண்டைய பாரதத்தில், முடியரசுகளுக்கு இணையாகச் சிறிய குடியரசுகளும் கோலோச்சின.  குடியரசாகத் திகழ்ந்த ஒரு நகரம் வைசாலி (லிச்சாவிஸ் என்ற நாட்டின் தலைநகர்).

தெய்வ நாயகிகள் சீதாப்பிராட்டி, ஆண்டாள், வள்ளி எல்லாம் பூதேவியின் மடியில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

அது போல் வைசாலியின் அரசு மாந்தோப்பில், ஒரு மாமரம் அடியில், ஒரு அழகான பெண் குழந்தை கிடந்தது.

அழகென்றால் கொள்ளை அழகு!

மகாநமன் என்ற ஒரு குறு நில மன்னன் இந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தான்.

அந்தக் குழந்தை வளர வளர அதன் அழகு கூடிக் கொண்டே சென்றது.

அழகுடன் கவர்ச்சியும் நளினமும் சேர்ந்து கொண்டது.

அழகி நடனம் கற்பது இயற்கை தானே!

சிறந்த நர்த்தகியானாள்.

வைசாலியின் அரசன் மனுதேவ் அவள் நடன அரங்கேற்றத்திற்கு வந்திருந்தான்.

 பதினோரு வயதிலேயே பெரும் அழகி என்ற பெயர் பெற்றாள்.

அவள் தந்தையிடம் தினமும் பலர் பெண் கேட்டு வரத் தொடங்கினர்.

அவர்கள்…பிரபுக்கள், இளவரசர்கள், செல்வந்தர்கள் என்று பலர்.

ஆனால் அவள் மனமோ அந்த கிராமத்தில் இருந்த ஒரு இளைஞன் புஷ்ப குமாரிடம் லயித்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம் நடந்திருந்தால் இந்தக் கதை இங்கேயே முடிந்திருக்கும்.

அரசன் மனுதேவ் அவளது நடனம் கண்டதிலிருந்தே கிறங்கிப் போயிருந்தான்..

எப்படியாவது இவளை அடைய வேண்டும் என்று வெறி கொண்டான்.

திருமண செய்தி அவன் வெறியைப் பெரிதாக்கியது.

நீங்கள் நினைப்பது சரி தான் (எத்தனை சினிமா பார்த்திருப்பீர்கள்!)

மணநாளில் மணமகன் பிணமாக்கப்பட்டான்.

திருமணம் நின்றது.

மீண்டும் பிரபுக்கள், இளவரசர்கள், செல்வந்தர்கள் என்று பலர் வரத் துவங்கினர்.

அவர்களுக்கு மோகம் தலைக்கேறியது.

‘என்னை விடுத்து.. வேறு எவருக்காது திருமணம் செய்ய நினைத்தால்… மவனே.. சங்கு தான்.. ‘ என்று மிரட்டினர்.

குடியரசான வைசாலியில் பாராளுமன்றம் கூடியிருந்தது.

அங்கத்தினர்கள்  ஆம்ரபாலியைப் பற்றி விவாதித்தனர்,

வாசக அன்பர்களே!
நாம் வங்கிகளை தேசியமயமாக்கிய அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம்! தொழிற்சாலைகளை தேசியமயமாக்கிய அரசாங்கங்களைப் பார்த்திருக்கிறோம்!

ஆனால் ஒரு பெண்ணையே தேசியமயமாக்கிய அரசாங்கத்தைப்  பார்த்திருக்கிறீர்களா?

அது தான் நடந்தது!

அநியாயம்!

ராமாயணம் மகாபாரதம் எல்லாமே ‘பெண்ணுக்கு அநீதி’ செய்து காவியமாகியது.

நம் காவியமும் அதற்கு விலக்கில்லை.

ஆம்ரபாலி – ‘நகர் வது’ (நகரத்தின் மணப்பெண்) என்று நியமிக்கப்பட்டாள்!

அனைவருடைய மகிழ்ச்சிக்காகவும் வைசாலியின் ஒருமைப்பாட்டிற்காகவும் இந்த முடிவாம்!

அதன்படி அவள் வைசாலியின் எந்த/எல்லா ஆடவருடனும் உறவு கொள்ளவேண்டும்.

வைசாலி நகரமே இன்பத்தில் மிதந்தது.

ஆம்ரபாலியின் அழகே அவளைச் சீரழித்த கொடுமையை என்னவென்று சொல்வது?

அவளுக்கு ‘ஞான்பத கல்யாணி’ என்ற பட்டமளித்தனர்.

அதன் படி நாட்டின் தலை சிறந்த பெண்மணியாக 7 வருடங்களுக்கு அங்கீகாரம்.

சிறப்பு அரண்மனை கொடுக்கப் பட்டது.

அவளுக்குத் தன் காதலர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.

அத்துடன் அவள் அரச சபையில் நடனமாட வேண்டும்.

 

ஆம்ரபாலியின் அழகின் புகழ் வைசாலி நகர் தவிர மகதம் வரை பரவியது.

மகதம்-வைசாலி இடையே பெரும் பூசல் நிலவி வந்தது.

ஆனாலும் மகத மன்னன் பிம்பிசாரன்  ஆம்ரபாலியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தான்.

யாரும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்க – மாறு வேடம் அணிந்தான்.

ஆம்ரபாலியின் அரண்மனை சென்று அவளைச் சந்தித்தான்.

அந்த ஆடவனின் நீண்ட கரங்களையும் பரந்த மார்பையும் பார்த்து அவளுக்கு ‘ஆசை’ பிறந்தது.

“ஐயா தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”

“நான் ஒரு இசைக்கலைஞன். நடனத்துக்குப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவன்” – பிம்பிசாரன்.

அவன் பொய்யுரைக்கவில்லை.

அவன் பாடினான்.

‘பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்’ என்பது போல் ஆம்ரபாலியின் கால்கள் ஆடத்துவங்கியது. மேனி அதற்குத் தகுந்த அபிநயம் புரிந்தது.

இசையும் நடனமும் ……

“தேனோடு கலந்த தெள்ளமுது… கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்… இந்த கலைக் கூடத்தில்…

இருவரது கண்களும் ஒன்றை ஒன்று கவ்வியது..

இருவரது கலைகளும் ஒன்று சேர்ந்தது.

கலைகளுடன் காதலும் கலந்தது.

நாட்கள் நொடிகள் போல வேகமாகப் போனது.

sa3

காதலன் பிரிந்தான்.

ஆம்ரபாலி காதலனின் கருவைத் தன்னுள் தாங்கினாள்.

பிறந்த மகனுக்கு ‘விமலா கொண்டன்னா’ என்று பெயரிட்டாள்.

வருடம் ஒன்று உருண்டோடியது.

வைசாலியில் போர் முரசம் கொட்டியது.

ஆம்ரபாலி பணிப்பெண்ணை அழைத்து:

“பெண்ணே, வைசாலியின் மீது போரா? இது என்ன விபரீதம்? விவரம் அறிந்து வா”-  பணித்தாள்.

பணிப்பெண் அரண்மனையை விட்டு வெளியே வந்தாள்.

வீதியில் வைசாலியின் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அருகிருந்த  நாற்சந்தியில், ஒரு வீரனின் உருவப்படம் ஆறடி உயரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த்தது.

வீரர்கள் அதற்கு எரியூட்டிக்  கொடும்பாவியாக எரித்தனர்.

‘பிம்பிசாரன் ஒழிக’ என்ற கோஷம் விண்ணைத் தொட்டது.

பிம்பிசாரன் வைசாலி மீது படையெடுத்து வந்திருந்தான்

எளிதாகக் கைப்பற்றிவிடலாம்.. பின் ஆம்ரபாலியை அடையலாம் என்று நினைத்திருந்தான்.

போர்க்களத்தில் காயப்பட்டுக் களத்திலிருந்து விலகி  ஆம்ரபாலியின் அரண்மனையின் பின்புறம் வந்து விழுந்தான். பணிப்பெண் அவனை வைசாலியின் படை வீரன் என்று எண்ணி மாளிகைக்குக் கொண்டு வந்தாள்.

ஆம்ரபாலி அவனைப் பார்த்ததும் தன் காதலனென்று கண்டு கொண்டாள்.

பிம்பிசாரன் மயங்கிக் கிடந்தான்.

விளக்கு கொண்டு வந்தபின் பணிப்பெண் அவன் முகத்தைப் பார்த்து விட்டு
‘ஐயையோ…”

என்று வீரிட்டு அலறிவிட்டாள்.

“ஏனடி இப்படிக் கத்துகிறாய்? இவருக்கு வெறும் மயக்கம் தான்’ – என்றாள் ஆம்ரபாலி.

‘இல்லை.. அம்மா.. இல்லை “ அவள் வாய் குழறத் தொடங்கியது.

முகமோ பீதியின் உச்சத்தை எட்டியது.

“என்னடி சொல்ல வருகிறாய்.. சொல்லித் தொலையேன்” ஆம்ரபாலி சற்று பொறுமை இழந்தாள்.

‘இவர் … இவர்… மகதத்தின் மன்னர் பிம்பிசாரர்” – சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கும் மயக்கம் வரத் தொடங்கியது.

‘என்ன … இவரா… அவரா??“ – ஆம்ரபாலியின் குரல் நடுங்கியது.

‘ஆம் அம்மா… இவர் கொடும்பாவியைத் தான் வீதியில் நிறுத்தி எரித்துக் கொண்டிருந்தார்கள்”

அந்த நேரம் கண் விழித்த பிம்பிசாரன், “அம்பை …” என்று  ஆம்ரபாலியை  ஆசையுடன் அழைத்தான்.

“நீங்கள் மகதத்தின் மன்னர்தானா? சே! சே! எதிரி நாட்டு மன்னரிடமா நான் காதல் கொண்டிருந்தேன்?”  ஆம்ரபாலி நெருப்பை மிதித்தவள் போல் துடித்தாள்.

“உன் மேல் கொண்ட காதலினால்.. நான் வெறும் இசைக் கலைஞனாகவே வந்தேன்; அதே காதலுக்காகத்தான் இன்றும் படையெடுத்து வந்தேன்” – பிம்பிசாரன் காதலில் கசிந்தான்.

“வைசாலி எனது தாயுமாகும்.. தந்தையுமாகும் … இதன் மீது படைஎடுப்பதென்பது என் உயிரையே பறிப்பதாகும்” ஆம்ரபாலியின் குரலில் துக்கத்தை விடக் கோபமே குடி கொண்டிருந்தது.

“அம்பை… நீ தான் எனக்கு வேண்டும்”

“முதலில் போரை நிறுத்துங்கள்” ஆம்ரபாலியின் குரல் கெஞ்சவில்லை… ஆணையிட்டது.

வீரத்தில் சிறந்தவனாக இரும்பு உடல் கொண்டாலும் இதயமோ காதலில் கரும்பாகக் கரைந்தது.

“அம்பை… நீ என்னுடன் வா.. மகதத்திற்கு உன்னை மகாராணியாக்குகிறேன்.. “ பிம்பிசாரன் கெஞ்சினான்.

“வைசாலிக்குத் துரோகம் செய்ய என்னால் இயலாது.. என் உடல் இந்த மண்ணுக்குத்தான் சொந்தம்..”

வெகு ஏமாற்றத்துடன் பிம்பிசாரன் பிரிந்தான்… ஆம்ரபாலி கேட்டுக் கொண்டபடி போரை நிறுத்தினான். மகதத்தின் மக்கள் பலர் அவனைக் கோழை என்றும் தூற்றத் தொடங்கினர்.

‘காதலுக்கு மரியாதை’ என்று பிம்பிசாரன் எண்ணினான்.

நொந்த பிம்பிசாரன் பாடலிபுத்திரம் சென்றான்.

மகன் அஜாதசத்ருவே அவனைச் சிறை செய்து கொடுமைப்படுத்தினான்.

அன்னம் கொடுக்காமல் பிம்பிசாரனை மெல்ல சாகடித்தான்.

ஆண்டுகள் சில சென்றன.

sa4

ஆம்ரபாலியின் வாழ்வு ‘நகரத்தின் மணப்பெண்ணாகவே’ தொடர்ந்தது.

செல்வம் அவளைத் தேடி வந்து குவிந்தது.

ஆம்ரபாலி சேர்த்த செல்வங்களை –கோவில்கள், மருத்துவமனை – சாலைகள் –என்று சமூகத்திற்குக் கொடுத்தாள்.

அவளது கருணையும், அன்பும், தயாள குணமும், அழகும் இன்றும் கங்கைக் கரை கிராமங்களில் பாடப் படுகிறதாம்.

நமது கதை ஒரு பெரு திருப்பம் அடைய உள்ளது.

மகத மன்னன் அஜாதசத்ரு – ஆம்ரபாலியின் அழகைக் கேள்விப்பட்டு அவளை அடையத் துடித்தான். வைசாலி மீது படை எடுத்தான். ஆம்ரபாலிக்கும் அஜாதசத்ருவுக்கும் காதல் என்று அறிந்த வைசாலி மக்கள் பொங்கி எழுந்தனர்.

sa5

(அஜாதசத்ருவும் ஆம்ரபாலியும்)

அவளைச் சிறை வைத்தனர்.

அஜாதசத்ருவுக்கு இது பெருங் கோபமூட்டியது.

வைசாலி நகரை சூறையாடி முற்றிலும் தீக்கிரையாக்கினான் – ஆம்ரபாலியின் சிறையைத் தவிர.

தாயாகவும் தந்தையாகவும் எண்ணியிருந்த வைசாலி அழிந்தது ஆம்ரபாலிக்குத் தாளாத துயரத்தைக் கொடுத்தது.

அஜாதசத்ரு ஆம்ரபாலியை அணுகி:

“ஆம்ரபாலி…இனி நீ விடுதலை பெற்றாய்.. உனக்காகவே இதைச் செய்தேன்” என்று பெருமிதத்துடன் கூறினான்.

ஆம்ரபாலி: “ஏன் இப்படி.. கண்களை எடுத்து விட்டு ஓவியம் எதற்கு.. இனி நீங்கள் போகலாம். உங்களோடு எந்த உறவும் வைக்க நான் விரும்பவில்லை”

கண்டிப்பான குரல் அஞ்சாத அஜாதசத்ருவையும் தாக்கியது. கலக்கியது. அவனும் மகதம் திரும்பினான்.

ஆம்ரபாலியின் மனம் சுக்கு நூறாக உடைந்து போய் இருந்தது. அரண்மனையில் தனக்குத்தானே சிறை வைத்துக்கொண்டாள். பணிப்பெண்கள் ஆம்ரபாலியைப் பற்றிக் கவலை கொண்டனர்.

ஒரு நாள்:

அரண்மனை மாடத்தில் ஆம்ரபாலி வீற்றிருந்தாள்.

பணிப்பெண்: “தலைவி! ஒரு புத்த துறவி நம் ஊருக்கு வந்துள்ளார். அவரைச் சென்று பார்த்தவர்கள் பெரும் மன அமைதி கொள்கின்றனராம்”

ஆம்ரபாலி : “…”

பணிப்பெண்: “தாங்கள் அவரைச் சென்று அவசியம் பார்க்கவேண்டும். கீழே வீதியில் பாருங்கள். அவர் நடந்து செல்கின்றார்.”

ஆம்ரபாலி அரண்மனையை விட்டு வெளியே வந்தாள்..

அந்தத் துறவி நடந்து கொண்டிருந்தார்.

ஆம்ரபாலிக்கு இது ஒரு புது அனுபவம்.

முதல் முறையாக!

தன்னைக் கண்ட எந்த ஆணும் தன்னை மறுமுறை நோக்கத் தவறியதில்லை.

துறவியோ ஆம்ரபாலியைக் கண்டும் அவளைக் காணாதவராகவே நடந்தார்.

ஆம்ரபாலி பின்தொடர்ந்தாள்.

ஒரு மாமரம் அடியில் அவர் அமர்ந்தார்.

ஆம்ரபாலி அவரைக் கண்டாள்.

இளம் துறவி.

திடகாத்திரமான உடல்.

அழகிய கண்கள்.

சீரான நடை.

சாந்தமான முகம்.

முறுவலோடிய இதழ்கள்.

குறுகுறுவென்ற தாடி.

நீண்ட கரங்கள்.

‘புத்தம் சரணம் கச்சாமி… தர்மம் சரணம் கச்சாமி’ என்ற மென்மையான சாரீரத்தில் பாடினார்..

‘சாரீரமும் சரீரத்தைப் போலவே சுகமாக இருக்கிறதே! என்ன கம்பீரமான – அதே சமயம் மென்மையான அழகான இளைஞன்!’

ஆம்ரபாலி திகைத்துப் போனாள்!

இது வரை என்னைப் போன்ற அழகி உலகில் இல்லை என்று நினைத்திருந்தேனே!

ஆண்களில் இப்படி ஒரு அற்புத அழகா?!

கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல உயர்தர ஆண்களுடன் இன்பம் அனுபவித்தேனே!

இதுபோல் அழகனைப் பார்த்ததே இல்லையே!

‘நான் பார்த்ததிலே .. உன் ஒருவனைத் தான்..  நல்ல அழகன் என்பேன்’ என்ற  பாடல் அவள் மனதில் நிறைந்தது.

ஆம்ரபாலி :‘வணக்கம். தாங்கள்?’

துறவி அவளைப் பார்த்தார்.

ஆனால் பதில் சொல்லவில்லை.

என்னைப் பார்த்தாலே தெரியவில்லையா? என்பது போன்ற முக பாவம்.

ஆம்ரபாலி தொடர்ந்து பேசினாள்.

“இந்த இளம் வயதில் உங்களுக்கு ஏன் இந்தத் துறவு வாழ்க்கை?”

துறவி: ‘உண்மையைத் தேடி.”

ஆம்ரபாலி முதலில் திகைத்தாள்.

மறு கணம் இதழில் மயக்கம் தரும் முறுவலைக் கூட்டினாள்.

“இளமையைத் தொலைத்துவிட்டு… உண்மையைத் தேடுவதில் பலன் என்ன?”

இப்பொழுது – துறவி முறுவலித்தார்.

“பரமானந்தம் இதில் மட்டும் தான் கிட்டும். பெண்ணே , நீ தேடுவது வெகு தற்காலிக இன்பம்”

தனது மனத்தையும் புரிந்து கொண்டுதான் பேசினாரோ என்று ஆம்ரபாலிக்குத் தோன்றியது.

ஆம்ரபாலி விடவில்லை.

“இந்த மாயையை விட்டுவிட்டு என் விருந்தினராக என்னோடு சில மாதங்கள் தங்கி இருக்கவேண்டும். வரும் நான்கு மாதங்கள் பெரும் மழைக்காலம். இம் மழைக்காலத்தில் பயணம் செய்வது தங்களுக்கும் இயலாது.” வேண்டினாள்.

‘என் தவத்தை மாயம் என்று சொல்கிறாள்’ என்று எண்ணிய இளந்துறவியின் முகத்தில் மந்தகாசம் சற்றுப் பரந்தது.

ஆனால் அவர் கண்ணில் எந்தவித சலனமும் இல்லை.

ஒரே கணம் யோசித்தார்.

பிறகு:

“என் குருவிடம் கேட்கிறேன். அவர் சரி என்றால் வருகிறேன்”

பிறகு தனது பையிலிருந்து ஒரு மாம்பழத்தை  எடுத்து  ஆம்ரபாலியிடம் கொடுத்து,  “இந்தப் பழத்தை நான் வரும் வரை கெடாமல் பார்த்துக்கொள்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார்.

புத்தரின் மடம்.

நமது இளந்துறவி புத்தரிடம் ஆம்ரபாலியின் விண்ணப்பத்தைக் கூறினார்.

அருகிலிருந்த மற்ற சீடர்கள் துடித்தனர்.

முற்றிலும் பக்குவப்படாத சீடர்கள் பொறாமையால் தவித்தனர்.

ஆம்ரபாலியின் அழகுப் பிரதாபம் புத்த சங்கத்திலும் பரவியிருந்தது.

புத்தர் நமது இளந்துறவியிடம்: “சரி நீ சென்று வா” என்றார்.

சீடர்கள் குழப்பத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

‘என்ன சொல்கிறீர்கள் குருவே! ஆம்ரபாலியைப் பற்றித் தாங்கள் அறியாததா? நமது சங்கத்திற்கு இது பெரும் அவமானம்” என்று கதறினர்.

புத்தர்: “சீடர்களே! இவன் கண்களைப் பாருங்கள். அதில் ஏதேனும் ஆசை தெரிகிறதா? மேலும் நான் போக வேண்டாம் என்று சொன்னாலும் இவன் வருத்தப்படப் போவதில்லை. இவன் திடமான தியானி. நான் இவனை முழுமையாக நம்புகிறேன்.”

இளந்துறவி ஒரு மாதம் கழித்து  ஆம்ரபாலியின் அரண்மனையை அடைந்தான். இடையில் ஆம்ரபாலி – துறவி தந்த மாம்பழத்தைப் பாதுகாக்க பெரு முயற்சி செய்தாள் – ஒன்றும் பயனில்லை.

இளந்துறவியின் வருகை  ஆம்ரபாலிக்குப் பேருவகை தந்தது.

கார்கால மழை மேகத்தைக் கண்ட வண்ண மயில் போலக் காதலில் ஆடினாள்.

துறவி: “ஆம்ரபாலி, நான் தந்த மாம்பழம் எங்கே? கொண்டு வா“ என்று பணித்தார்.

ஆம்ரபாலி கொண்டு வந்த பழம் அழுகியிருந்தது. புழுத்திருந்தது. நாற்றம் மூக்கைத் துளைத்தது.

“இந்த அழுகிய பழத்தினால் தங்களுக்கு என்ன பயன்?”  ஆம்ரபாலி வினவினாள்.

துறவி தன் கைகளால் அந்தப் பழத்திலிருந்து மாங்கொட்டையைப் பிரித்தெடுத்தார்.

‘சென்ற மாதம் பார்த்த மாம்பழத்தின் அழகும், மணமும், சுவையும் இப்பொழுது எங்கே? இந்த மாங்கொட்டையைப் பார். ஒரு புதிய மாமரத்திற்கு வித்தாகும் தகுதி கொண்டது” .

“மாங்கொட்டை ஆத்மா போன்றது. எத்தனை நாள் உனது தோலும் சதையும் அழியாதிருக்கும்?”

ஆம்ரபாலி பேச்சிழந்தாள்!

துறவி நான்கு மாதம் ஆம்ரபாலி அரண்மனையில் இருந்தார்.

ஆம்ரபாலி மனம் சற்றே அலை பாய்ந்தது.

எனினும் துறவியின் வாழ்வு ஒரு தீ போல் கொழுந்து விட்டு எரிந்தது.

மாதம் நான்கு சென்றது.

ஆம்ரபாலி மெல்ல மெல்ல அடங்கினாள்.

மனம் அமைதி அடைந்தது.

துறவியிடம் மதிப்பு கொண்டாள்.

“என்னை மன்னித்து அருள வேண்டும்.

உங்களை இங்கிருக்க விரும்பியது எனது சுயநல நோக்கமாக இருந்தது.

ஆனால் இன்று என்னைத் தூயவளாக்கி விட்டீர்கள்.

ஒரு வேண்டுகோள்”

துறவி அமைதிப் புன்னகை சிந்தினார்.

“தங்கள் குருநாதர் புத்தரை சந்திக்கத் தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவரையும் எனது வீட்டில் தங்க வைத்து அவரிடமும் உபதேசம் பெறவேண்டும்.”

துறவி: “தவறாமல் செய்கிறேன். குருநாதர் நிச்சயம் வருவார்”

புத்தர் ஆம்ரபாலி அரண்மனை வந்தார்.

(ஆம்ரபாலி புத்தரை வரவேற்கிறாள்)

sa6

ஆம்ரபாலி அவர் தாள் பணிந்து:

“தவத்திரு குருவே, தங்கள் சீடரைக் கவர நான் பெரு முயற்சி செய்தேன். ஆனால் – அவர் உங்கள் திருவடிகளே வாழ்வை உய்விக்கும் பெரு மருந்து என்று என்னை உணர வைத்தார். என் உடைமைகள் எல்லாம் இனி புத்த சங்கத்திற்கே.  தாங்கள் இங்கு சிறு காலம் தங்கி என் பணிவிடைகளை ஏற்றருளவேண்டும். அதன்பின் நான் புத்த பிக்ஷுணி ஆகி தங்களுக்கு சேவை செய்து வாழ்வைக் கழிக்க விரும்புகிறேன்”

புத்தர்: “ஆம்ரபாலி .. ஆனால் .. பெண்களை சங்கத்தில் சேர்ப்பதிற்கில்லை”

ஆம்ரபாலி: ‘ஏன் அப்படி?”

புத்தர் :”பெண் புத்தத் துறவிகளின் தவ வாழ்க்கையைக் குலைக்கக்கூடும்”

ஆம்ரபாலி: “புத்தத் துறவிகள் எல்லாம் அத்தனை மனத்திடமற்றவர்களா?”- துணிச்சலுடன் கேட்டாள்.

புத்தருக்கு பதில் சொல்ல இயலவில்லை.

பெண்களை சங்கத்தில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.

sa7

புத்தரின் சங்கத்தில், அனைத்து பிக்ஷுக்கள் “சங்கம் சரணம் கச்சாமி! தர்மம் சரணம் கச்சாமி” என்று கோஷமிட ஆம்ரபாலி காவி உடை அணிந்து புத்த பிக்ஷுணி ஆனாள்.

இறைவன் ஆம்ரபாலிக்கு முதலில் புற அழகு அளித்து உருவாக்கிப் பின் இறுதியில் அக அழகு அளித்து முழு அழகியாக்கினான்.

காலங்கள் பல சென்றாலும்  ஆம்ரபாலி கதை சரித்திரத்தில் பேசப்படுகிறது.

 

sa8

 

கொசுறு:

வைஜயந்திமாலா, சுனில்தத் நடித்த ஆம்ரபாலி திரைப்படத்தில் வைஜயந்திமாலாவின் அழகான நடனத்தைக் கண்டால் அந்தப் பேரழகிக்கு இவரைவிடப் பொருத்தமானவர் யாரும் இருக்கமுடியாது என்று தோன்றும். அவரது படங்கள் இந்தக் கதையை  அலங்கரிக்கின்றன. 

இந்த நடன வீடியோவையும் பாருங்கள்: 

 

சரித்திரம் மேலும் பேசும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.