சுஜாதா எழுதிய மாறுதல் நாடகத்தின் குறு வடிவம்

மாபெரும் எழுத்தாளர் சுஜாதா எழுதிய அரைமணிநேரம் 20-25 நிமிடங்கள் நடைபெறக்கூடிய மாறுதல் என்ற நாடகத்தை சின்னஞ் சிறார் நடிப்பதற்காக 8 நிமிடத்தில் சுருக்கி அமைத்த வடிவம் இது.    (சுஜாதா மன்னிப்பாராக).

ஆனந்த் அபார்ட்மெண்ட்ஸைச்   சேர்ந்த அனன்யா, ஷாலு, கிருத்திகா, ரேகா நடித்து, “மிகவும் சிறப்பாக இருந்தது” என்று டாக்டர் பாஸ்கரன் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த நாடகம்.

குவிகம்  இலக்கியவாசலின் 13வது நிகழ்வில் அரங்கம் ஏறியது.

குறு வடிவம் மற்றும் இயக்கம்: விஜயலக்ஷ்மி

(இந்த  நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோவை  அடுத்த பக்கத்தில்  காணலாம்)

பாத்திரங்கள்: சுந்தரமூர்த்தி, நாடகாசிரியர் விசுவநாதன்,

நடிகை ராதா, சபா செக்ரட்டரி ராமன்.

விசுவநாதன் ; உங்க நம்பர் என்ன?

சுந்தரமூர்த்தி : ஏ – ஏழு.

விசு : எனக்கும் ஏ – ஏழு கொடுத்திருக்காங்களே!

சுந்த : எங்கே ! காட்டு ! ( விசு காட்டுகிறான் )

சுந்த : (சற்று ஆச்சரியத்துடன்) இது தப்பு. நான் இருபது வருஷமா இந்த சபாவிலே மெம்பரா இருக்கேன். இருபது வருஷமா இந்த ஏ – ஏழிலே உக்காந்திருக்கேன். இதே லொடக்காசி நாற்காலியிலே…… (டிக்கெட்டை மறுபடி பார்க்கிறார்) நீ என்ன மெம்பரா? உன்னைப் பார்த்ததே இல்லையே ! புதுசா!

விசு : ஆமா சார் ! யாரையாவது கேட்டுப் பார்ப்பமா?

சுந்த : கேக்கறது என்ன ? ஸீட்டு தப்பு. அங்க எங்காவது போய் உக்காரு.
(விசு பக்கத்தில் உட்காருகிறான். சுந்தரமூர்த்தி அவனை விரோதத்துடன் பார்க்கிறார்.)

விசு : : செக்ரட்டரி வரட்டும் சார். அவர் தீர்த்து வெக்கட்டும்.

( ஒரு பெண் வருகிறாள். சுந்தரமூர்த்தி போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது. )

பெண் : அண்ணா ! ஸீட்டு கிடைச்சுதா?

விசு : எங்க ! எனக்குக் கொடுத்த அதே சீட் நம்பர்லே இவரு ஓக்காந்திருக்காரு.

பெண் : ஐயோ ! அது எப்படி ! சார் உங்க டிக்கட்டைக் காட்டுங்க.

சுந்தர : இத பாரும்மா ! நான் இந்த சபாவிலே நீ பொறக்கறதுக்கு முன்னாடில இருந்தே மெம்பர். இதே ஸீட்டைத் தேச்சுக்கிட்டு இருக்கிறவன்.

பெண் : அதெப்படி ஸார் உங்க நம்பர் இவனுக்கும் கொடுத்திருக்காங்க ! வேறே ஏதாவது ஏ – செவன் இருக்கா ? ( அவர் பக்கத்திலே உட்காருகிறாள் ). உங்க டிக்கட்டைப் பார்க்கலாமே.

சுந்த : டிக்கட்டு எல்லாம் என்கிட்டக் கிடையாது. நான் மெம்பர்ங்கறேன்.

பெண் : மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.

சுந்த : எதுக்குக் காட்டணும் ? காட்ட வேண்டிய அவசியமில்லை.

பெண் : காட்டலைன்னா ஸீட்டையாவது விடுங்க. இவன் கிட்டே ஏ – செவன் இருக்கில்லே ?

சுந்த : என்னடாது எழவாப் போச்சு ! நான் எத்தனை வருஷமா இதே ஸீட்லே…..

பெண் : அப்ப மெம்பர்ஷிப் கார்டைக் காட்டுங்க.

சுந்த : கார்டு கொண்டுவரலை. செக்ரட்டரி வரட்டும். அந்தாளுக்கு என்னை நல்லாத் தெரியும்.

விசு : ராதா விட்டுரு. செக்ரட்டரி வந்தப்புறம் பார்த்துக்கலாம்.

பெண் : இல்லை அண்ணா ! அப்புறம் கூட்டம் ஜாஸ்தி வந்துரும். அதனாலதான் உன்னை முன்னால வந்து உக்காரச் சொன்னேன். நாடகத்தை எழுதினது நீ ! ஒனக்கு இந்தச் சலுகை கூடக் கிடையாதுன்னா எப்படி? (சுந்தரமூர்த்தி திரும்பிப் பார்க்கிறார்) அதுக்கு மேலே நானும் இதில நடிக்கிறேன். இப்ப மட்டும் செக்ரட்டரி இந்த ஸீட்டு உனக்கில்லைன்னு சொல்லட்டும். எல்லாத்தையும் கான்சல் பண்ணிட்டு வீ வில் வாக் அவுட் !

விசு : அதெல்லாம் வேண்டாம் ! பெரியவங்களோட நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போயிடலாம்.

பெண் : மெம்பர்ஷிப் கார்ட்கூட இல்லேண்ணா இவர்கிட்ட !

விசு : எதுக்குத் தகராறு ? அவங்க வரட்டுமே !

(இதற்குள் சுந்தரமூர்த்தியின் தோரணை சற்று மாறியிருக்கிறது.)

சுந்த : (ராதாவிடம்) என்ன சொன்னே நீ ? (விசுவிடம்) இந்த நாடகத்தை நீ எழுதியிருக்கியா ?

விசு : ஆமா ஸார் ! இன்னிக்கு என்ன நாடகம்னு தெரியுமா உங்களுக்கு?

சுந்த : தெரியாது.

விசு ; தெரியாமையா நாடகம் பார்க்க வரீங்க?

சுந்த : இப்ப எல்லா நாடகமும் ஒரே மாதிரிதானே இருக்கு ! ஏதோ ஓரங்க நாடகமோ என்னவோ சொன்னாங்க.

பெண் : உங்க ஒய்ஃப் வரலையா ஸார்?

சுந்த : அவ வந்துட்டா வீட்ல சமையல் பண்றது யாரு?

விசு : வாஸ்தவம்தான்.

பெண் ; `என்ன வாஸ்தவம்? அந்தம்மா மட்டும் டிராமா பார்க்க வேண்டாமா?

சுந்த : அதுக்கு ஒரு எழவும் புரியாது. அழ வேண்டிய இடத்திலே சிரிக்கும்.

பெண் : அவங்களுக்கு அங்கதான் சிரிப்பு வருதோ என்னவோ?

சுந்த : என்ன டிராமா இன்னிக்கு?

விசு : என்ன மாதிரி டிராமா உங்களுக்குப் பிடிக்கும்?

சுந்த : எனக்குப் பிடிக்கிற டிராமா எல்லாம் போயிடுத்துப்பா. அந்தக் காலத்தில கிட்டப்பா, செல்லப்பா, டிராமா எல்லாம் பார்த்திருக்கேன். வெங்கலக் குரல்லே மைக்கே இல்லாம கணீர்னு பாடுவா. என்ன ஸ்டேஜ் எபெக்ட்ஸ் ! அனுமார் ஸஞ்ஜீவி மலையை எடுத்துண்டு வருவார். ஸ்டேஜ்லயே மலை பறக்கும். அவ்வையார் டிராமா பார்த்திருக்கியோ நீ? அதை நாடகத்தோட பொற்காலம்னுதான் சொல்லணும்.

விசு : அப்போ இப்ப…?

சுந்த : இப்ப என்ன ? வெறும் ஜோக்ஸ், இல்ல அரசியல், இல்ல பிராமண வீட்டுக் கதை. இப்ப என்ன பண்றாங்க. நாடகத்தைப் படிச்சுக் காட்டறாங்க. படுதா வேண்டாம். நாற்காலி வேண்டாம். இப்ப ஓங்கண்ணா எழுதியிருக்கிற நாடகத்தைச் சொல்லல. பொதுவா நாடகங்களைப் பத்திச் சொல்லிண்டிருக்கேன். நீ தப்பா நெனைச்சுக்காதே.

பெண் ; நல்ல நாடகங்களைப் பாக்காம எப்படி ஸார் நீங்க சொல்ல முடியும்?

சுந்த : நல்ல நாடகங்கள் இருக்கா, சொல்லு., பாக்கறேன். ஒனக்காகப் பாக்கறேன். (விசுவிடம்) ஆமா ! உன் அபிப்பிராயத்திலே நாடகம்னா என்னன்னு நினைச்சுண்டிருக்கே?

விசு : அதைத்தான் பாக்கப் போறீங்களே?

சுந்த : என்ன, சொல்லேன்.

விசு : சொல்றேன் ! அதுக்குள்ள இந்த சீட்டுப் பிரச்னையைத் தீர்த்துக்கலாம்னுட்டு…

பெண் : (வெளியே பார்த்து) பிரச்னையைத் தீர்த்துரலாம். செக்ரட்டரி வரார்.

சுந்த ; ராமன்! இங்க வாய்யா ! நான் இந்தச் சபாவிலே எத்தனை நாளா மெம்பர்?

செக்ர : என்ன இப்படிக் கேட்டுட்டேள்? ஆரம்பத்திலேருந்தே நீங்கதானே மெம்பர்!

சுந்த : எத்தனை வருஷமா இந்த இடத்திலே உட்கார்ந்துண்டிருக்கேன்?

செக்ர : ஏன்? என்ன விஷயம்?

சுந்த : இவருக்கு என் ஸீட்டைக் குடுத்திருக்கியே, என்னய்யா ஆர்கனைசேஷன் !

செக்ர : இஸ் இட் ? (விசுவிடம்) ஸார் கொஞ்சம் காமிங்கோ! (டிக்கட்டை வாங்கிப் பார்த்து விட்டு, யோசித்து ) இது எப்படி ஆச்சு? (சுந்தரமூர்த்தியிடம்) சார்! ஐம் ஸோ ஸாரி! இன்னிக்கு மட்டும் வேறு ரோவில சீட் போட்டுக் கொடுத்துர்றேன்.

சுந்த : அது எப்படி இவருக்கு மட்டும் சலுகை? இவரை அங்கே போகச் சொல்லு.

செக்ர : சார், இவர் யார் தெரியுமோல்லையோ, ஆதர்.. , டிராமாவோட சிருஷ்டிகர்த்தா, எழுதினவருக்கு ஒரு மரியாதை வேண்டாமா?

சுந்த : வேற ஸீட்டு போட்டுக் கொடுக்கறது? என் சீட்தான் ஆம்டுதோ?

செக்ர ; இத பாருங்க. மத்த ஸீட்டெல்லாம் ஃபுல்லி ரிசர்வ்ட். இன்னிக்குக் கமிஷனர் வரார்.

சுந்த : ஏன், நான் மட்டும் வர மாட்டேனா?

செக்ர : ஆனஸ்டா, அதான் நீங்க இந்த மாதிரி எக்ஸ்பெரிமண்டல் டிராமாவுக்கெல்லாம் வர மாட்டீங்கன்னு நினைச்சோம். அதான் சார் இந்தக் குழப்பம். இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா?

சுந்த : (கண்டிப்பாக) அதெல்லாம் முடியாதுப்பா.

செக்ர : (சுருதி மாறி) அண்ணா மன்னிக்கணும்…. ரொம்பப் பிடிவாதம் பிடிக்கறேள்.

சுந்த : நானா? நானா பிடிவாதம் பிடிக்கறேன்?

செக்ர : ஒரு நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டேளா?

சுந்த : முடியாது. ஆன் பிரின்சிபிள், முடியாது.

செக்ர : (பரிதாபமாக  விசுவைப் பார்த்து) ஸாரி சார்! நீங்க வந்து ஒண்ணு செய்யுங்கோ. இப்போதைக்குப் பக்கத்திலேயே இந்த சீட்லேயே உக்காந்து பாருங்கோ. (சுந்தரமூர்த்தியிடம் ஆவேசமாக) அண்ணா ! உங்க ஏ – செவன்லேயே ஜீவித காலம் வரைக்கும் உக்காருங்கோ ! நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம். (விசுவிடம்) நீங்க இங்க உக்காந்துக்கங்கோ சார். (பெண்ணிடம்) ஸாரி மிஸ் ராதா, உங்களை மேக்கப் ரூம்ல கூப்பிட்டுண்டிருக்கா.

சுந்த : (தன்னிச்சையாக) நான் எதுக்குச் சொல்ல வரேன்னா, ஒரு பிரின்சிபிள்னு லைஃப்ல வேணும் இல்லையா?

விசு : வாஸ்தவம்தான்.

சுந்த ; பர்சனலா இதை எடுத்துக்கக் கூடாது நீங்க. என் லைஃப் பூரா இப்படி நான் சண்டை போட்டிருக்கேன். ஒரு பிரின்சிபிள்னு வெச்சுண்டா, அதை விடவே கூடாது. அதுலேருந்து மாறவே கூடாது.

விசு : அது எப்படி சார்? மாறுதல் இல்லாம முன்னேற்றமே இல்லையே சார்.

சுந்த : மாறணும்னா நீ மாறிட்டுப் போய்யா. நான் எதுக்கு மாறணும்? எதுக்காக ஒன்னோட வால்யூஸை நான் ஏத்துக்கணும்? இந்த ஓலகத்தில இருக்கிறவரைக்கும் ஒரு பிடிவாதம் வெச்சுண்டு இருக்க எனக்கு உரிமை இருக்கா இல்லியா?

விசு : இந்த மாதிரி பெரியவங்களுடைய பல விதமான பிடிவாதங்களினால இளையவர்கள் செய்ய நினைக்கிற மாறுதல்களுக்குத் தடங்கல் வருதுன்னு நினைக்கிறேன்.

சுந்த : அது எப்படி? எல்லா மாறுதல்களையும் நாங்க ஏத்துக்கணும்னு கட்டாயம் இல்லையே?

விசு : மாறுதல் இல்லேன்னா மனுஷன் செத்துப் போயிடுவான் ஸார். எல்லாத்திலேயும் மாறுதல் வந்துதான் தீரணும்.

சுந்த : மாறுதல்ங்கறது நல்லதுக்கா, கெடுதலுக்கானு பார்க்கணுமா வேண்டாமா?

விசு : அய்யோ, நல்லது கெடுதல் எல்லாம் பத்தி இந்த மாறுதலுக்குக் கவலை இல்ல சார்.

சுந்த : மாறுதலோ, புரட்சியோ நம்மகிட்டே வர முடியாதப்பா.

விசு : வந்துரும் சார் வந்துரும்.

சுந்த : சரி. அது பாட்டுக்கு வரட்டும். (கெடிகாரத்தைப் பார்த்து) இன்னிக்கு உன் நாடகம் என்ன சொல்லுது?

விசு : என் நாடகம் இந்த மாறுதலைப் பத்தித்தான் சார். நீங்க நாடகம்கிறது, பாட்டு, படிப்பினைன்னீங்க. என் அபிப்பிராயத்தில நாடகம், நம்முடைய பாசாங்குகள், பிடிவாதங்களை எல்லாம் காட்டணும்.

சுந்த : அப்படியா? யாரு நடிகர்கள்? நம்ம ராதா. அப்புறம்?

விசு : அப்புறம் நானு, செக்ரட்டரி, நீங்க.. அவ்வளவுதான்.

சுந்த : என்னப்பா சொல்றே? புரியும்படியாச் சொல்லு. நானா?

விசு : இதுவரைக்கும் நாம பேசிக்கிட்டு இருந்ததுதான் என் முதல் ஓரங்க நாடகம் சார். நாடகம் மாறிப் போச்சு. (எதிரே கையைக் காட்டி) அத பாருங்க, அவுங்கல்லாம் இதுவரைக்கும் நம்மைத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. (பக்கவாட்டில் பார்த்து உரக்க) விளக்கைப் போடுப்பா ஆடியன்சுக்கு!
இதான் சார், நாடகத்திலே ஏற்பட்டுக்கிட்டு இருக்கிற மாறுதல்.

சுந்த : (நின்று ஆடியன்ஸைப் பார்த்து, பிரமித்து) அடப்பாவி! நான் வரல்ல ! எனக்கு இந்த மாறுதல் வேண்டாம் ! வேண்டவே வேண்டாம் !

விசு : அதைத்தான் நானும் சொல்றேன். வெலகிக்கங்கன்னுட்டு !
( ஏ – ஏழு ஸீட்டில் விசுவநாதன் உட்கார்ந்து கொள்ள, மேடை விளக்குகள் மங்கி மறைய திரை விழுகிறது.)

இந்த குறு நாடகத்தின் ரிகர்சல் போது எடுத்த வீடியோ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.