மணிமகுடம் – புதிய சரித்திரத் தொடர் கதை — ஜெய்சீதாராமன்

முன்னுரை

அமரர் கல்கியின் நாவல்களில் தலைசிறந்த படைப்பு விஜயாலயன் ஸ்தாபித்து தஞ்சையைத் தலைநகரமாய் கொண்டு, ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் பொற்காலமாய் திகழ்ந்த பிற்கால சோழர்களின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகும். என்னுடைய இந்த குறுநாவலை எழுதத்தூண்டிய சிந்தனை, பொன்னியின் செல்வனில் அவர் குறிப்பிட்டிருந்த பாண்டியர்களின் வம்சாவளிப் பொக்கிஷங்களான, விலைமதிக்க முடியாத மணிமகுடத்திலிருந்தும் இரத்தின மாலையிலிருந்தும் எழுந்ததாகும்!! அவைகள் மதுரையைத் தலைநகரமாய்  கொண்ட பாண்டியர் பொருட்டு ஈழ மன்னன் மகிந்தனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விவரம் வரலாற்றில் பொறிக்கப்பட்ட சான்றாகும்!!   இந்த என் கற்பனை நிறைந்த குறுநாவலின் வடிவாக்கம் அவைகளை  மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கிறது! நான் வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்தவைகளை முடிந்தவரையில் கற்பனை மூலமாகவே சித்தரித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வனின் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவன் இக்கதையிலும் முக்கிய பாத்திரத்தை ஏற்கிறான். அமரரின் கற்பனை வடிவாக்கம் நந்தினி, திருமலை மற்றும் ஒன்றிரண்டு பாத்திரங்களைத் தவிர ரவிதாசன் உள்பட ஏனையோர் அனைவரும் இவ்வரலாற்றில் அடக்கம். கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நேயர்கள் அறிந்துகொள்ள ஒரு தொடர் வரைபடத்தையும், சோழ நாடு மற்றும் ஈழப் பிரதேசங்களில் வரும் முக்கிய இடங்கள் அடங்கிய வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன்.

வந்தியத்தேவன், மர்ம புதிர் முடிச்சுகளை அவிழ்த்து, எல்லா பாண்டியர் எதிர்ப்புகளையும் முறியடித்து, மற்றும் தன் புத்தி சாதுர்யத்தினால் பொக்கிஷங்களை சோழர்களிடம் பத்திரமாக சேர்ப்பிக்கின்றானா என்பதற்கான விடையை நாவலின் இறுதியில் காணலாம்.

எனவே என்னால் இயன்றமட்டும் சிரமப்பட்டு இதை ஒரு விறுவிறுப்பான கதையாக முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை சித்தரிக்க முயன்றிருக்கிறேன். அதில் நான் தோல்வியுற்றிருந்தால் இது என் முதல் கதையானதால் உங்கள் மன்னிப்பை நான் சிரம்தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன். இதற்குமுன் கதை எழுதும் பழக்கத்தை நான் ஏற்றதில்லை!

கதையை முடித்து முதன்முதலில் இக்கதையின் நகலை என் நண்பர் Mr. சகஸ்ரநாமனிடம் காண்பித்தேன். அதைப்படித்து என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர் – அவரே இக்கதையின் அஸ்திவாரம்!

இக்கதைக்கு உறுதுணையாய் இருந்து என்னை ஊக்குவித்த குரு Ms..ப்ரீதம் சக்ரவர்த்தி, கடைசிவரை சரியான பாதையில் இட்டுச் சென்றவர். அவருக்கு என் முதல் நன்றி உரித்தாகுக! எனக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்திய மனைவி ஷாந்தாவுக்கு நன்றி. எனக்கு  ஊக்கமளித்த மகள் சுஷீலாவுக்கு நன்றி. மற்றும் எழுத்துப் பிழைகளை சரிபார்த்துக்கொடுத்த Mr. ஸ்ரீநிவாசன், Mrs. உஷாஸ்ரீநிவாசன், பாலகிருஷ்ணன் முதலியோருக்கு நன்றிகள்!

முக்கியமாக பொன்னியின் செல்வன் க்ரூப்பின் K.சுந்தர் அவர்கள் வரலாற்று சம்பந்தமாக திருத்தங்கள் செய்ய மிகவும் உதவிகள் புரிந்திருக்கிறார். பிழை திருத்தங்கள் மற்றும் சரியான நடைமுறைகள் முதலியவற்றிலும் உதவி செய்து என்னை ஊக்குவித்திருக்கிறார். அவருக்கு நான் என்றென்றும் கடன்பட்டுள்ளேன். க்ரூப்பின் மற்றுமொரு உறுப்பினர் Mr சுந்தர்ராஜனும் பிழைகளை திருத்தம் செய்வதில் துணை புரிந்திருக்கின்றார். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

கடைசியாய் இதை படிக்கும் ஒவ்வொரு நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்கள், விமர்சனம் முதலியவைகளை என்னிடம்  jands.raman@gmail.com  மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த குறுநாவலை   அமரர் கல்கிக்கு   சமர்ப்பிக்கின்றேன்

 

ஜெய்சீதாராமன்

==================================================================

அத்தியாயம் 01. குடந்தை சாலையில்..

 பொழுது சாயும் மாலை நேரம். சூரியன் தன் பொன்நிறக் கதிர்களால் பூமியை செந்நிறமாக மாற்றிப் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. ஆடி மாதத் தென்றல் மரங்களையும் செடிகொடிகளையும் மெல்ல அசைத்து எழுப்பிய ‘மரமர’சத்தம் தேவகானம் போல் தோன்றியது. வசீகரமும், நல்ல திடகாத்திரமும், வைரம்பாய்ந்த நெஞ்சும் கொண்ட இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்த புரவி ஒன்று கொள்ளிடத்திலிருந்து குடந்தை செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் தலையெடுத்து ஆட்சியை நிலைநாட்டிக் கொண்ட காலம் அது. இளைஞனின் பெயர் ‘வந்தியத்தேவன்’.

பாதை மனித சஞ்சாரமில்லாமல் வெறுமையாய் காட்சியளித்தது. களைப்படைந்தவனாகக் காணப்பட்ட வந்தியத்தேவன் பாதைக்குச் சற்று அருகில் தென்பட்ட ஓடைக்கு அருகில் சென்று கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். புரவியில் தொங்கவிடப்பட்டிருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து கவிழ்த்துப் பார்த்து அது தீர்ந்துவிட்டிருப்பதை அறிந்து கொண்டான். இறங்கி ஓடையில் முகத்தைக் கழுவி தண்ணீர் பருகினான். அரை இடுப்பிலிருந்து முறுக்கிக் கட்டிய துணியை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு, குடுக்கையில் தண்ணீரை நிரப்பி, குதிரையின் அருகில் சென்று சேணத்துக் கயிற்றில்  மாட்டி, கட்டிக் கொண்டிருந்தான்.அப்போது..

டக் டக்கென்று விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பொலி கேட்டு, சத்தம் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு திடுக்கிடும் காட்சியைக் கண்டான்!

பாதையில் குதிரையில் ஒருவன் முன்னால் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் குதிரைகளில் நான்கு நபர்கள் உடலில் போர்த்திய துணியும், தலையில் முண்டாசும் அணிந்து துரத்திக்கொண்டு வந்தனர். முன் குதிரையைத் தாண்டிச் சென்று அதை வழி மறித்துச் சட்டென்று நிறுத்தினார்கள். மடக்கப்பட்ட குதிரை பிளிரிட்டுக்கொண்டு முன் கால்களிரண்டையும் மேலே தூக்கித் தடுமாறியது. அதிலிருந்தவன் கீழே விழுந்தான். துரத்தியவர்களில் ஒருவன் கீழே குதித்தான். இடுப்பிலிருந்து கத்தியை உருவி கீழே விழுந்தவனை நோக்கிப் பாய்ந்தான். நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவன், விழுந்த நிராயுதபாணியை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதே தன் முதற் கடமை என்று எண்ணி, தான் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். நினைத்ததை உடன் முடிக்கும் இயல்பு கொண்ட நமது வந்தியத்தேவன் குதிரையிலிருந்து வேலை எடுத்து, கணப் பொழுதில் குறி தவறாது பாய்ந்தவன் மேல் எறிந்தான்.

வேல் அவனின் ஒரு தொடையைத் துளைத்தது. நிலை தவறி, தள்ளாடி உதிரம் பெருக அவன் தரையில் விழுந்தான். கத்தி தரையில் விழுந்தது. அதற்குள் தரையில் குதித்த மற்ற மூவர்களில் ஒருவன், கத்தியை முதலில் விழுந்தவனின் நெஞ்சில் பாய்ச்சினான். பிறகு கத்தியை நெஞ்சிலிருந்து வெளியே உருவ முயன்றவாறே வந்தியத்தேவன் இருந்த திக்கை நோக்கினான். அவன் கண்களும், சம்பவ இடத்திற்கு உருவிய கத்தியுடன் பாய்ந்து வந்து கொண்டிருந்த வந்தியத்தேவனின் கண்களும் ஒரு கணம் சந்தித்தன. ஏதோ தப்பு செய்துவிட்டவன் போல் கத்தியை உருவும் முயற்சியைக் கைவிட்டு, சட்டென்று பாதி முகத்தை, கழுத்தில் தொங்கிய துணியை ஒரு கரத்தால் இழுத்து மூடி, மற்றொரு கரத்தால் கூட வந்த மற்ற இருவரையும் பார்த்து ஒரு சைகை செய்தான். மூவரும், வேலால் தாக்குண்டவனை விட்டுவிட்டு விரைந்து ஓடினார்கள். இருவர் முதலில் குதிரைகளில் தாவி ஏறினார்கள். மற்றொருவன் வேலால் தாக்கப்பட்டவனின் குதிரையின் முகப்புக் கயிறைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பின்பற்றினான். சுளீரென்று சவுக்கால் அடித்து குதிரைகளை விரட்டிவிட்டார்கள். அவைகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.

ஓடி வந்த வந்தியத்தேவன் நின்றான். கொலையாளிகள் விரைந்து சென்று கொண்டிருந்ததைக் கண்டான். கத்தியால் குத்தப்பட்டவனின் முனகல் கேட்டு திரும்பிப் பார்த்தான். தொடர்ந்து சென்று மற்றவர்களைப் பிடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். முதலில் வேலினால் அடிபட்டவனின் அருகில் சென்றான். உதிரம் நன்கு வெளியேறியதால் பலவீனமடைந்திருந்த அவனைப் பார்த்து “ஏன் அந்த மனிதனைக் கொன்றீர்கள்? உடனே பதிலைச் சொல்” என்று கடினமான தோரணையில் கேட்டான். அந்த மனிதன், சுட்டெரிக்கும் கண்களினால் வந்தியத்தேவனை வெறித்து நோக்கினான். கண் இமைக்கும் நேரத்தில் இடுப்பிலிருந்த சிறிய திருகுவாளை எடுத்து நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டான். அவன் தலை தொங்கியது.

அவனை விட்டுவிட்டு மற்றவனை நோக்கி வந்தியத்தேவன் விரைந்தான். மூக்கில் விரலை வைத்துப் பார்த்து உயிர் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவன், பதிந்திருந்த கத்தியை பலம் கொண்டு உருவி வெளியில் எடுத்தான். அதன் கைப்பிடியில் மீன் உருவம் பொறித்திருந்ததைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் பிறகு தூர எறிந்தான். இரத்தம் குப்பென்று பீறிட்டது. அடிபட்டவன் நினைவை இழந்திருந்தான்.

வந்தியத்தேவன் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் குடுக்கையை எடுத்து வந்து, திறந்து கையில் தண்ணீரை விட்டு முகத்தில் தெளித்தான். குதிரையின் அருகே கீழே விழுந்திருந்த அரைத் துணியை ஓடிப் போய் எடுத்து வந்து, கிழித்து, கத்திக் காயத்தில் வைத்து, இடுப்பைச் சுற்றிலும் கட்டினான். துணியால் அவனுக்கு விசிறினான். நேரம் கடந்தது. அடிபட்டவன் மெல்ல கண்களைத் திறந்தான். சுற்றுமுற்றும் பார்த்து வந்தியத்தேவனை நோக்கினான்.

வந்தியத்தேவன், “நண்பா, வலிக்கிறதா? அவர்கள் யார்? ஏன் உன்னைத் துரத்திக் கொல்ல முயன்றார்கள்?” என்று சரமாரியாய் கேள்விகளைச் பொழிந்தான்.

அடிபட்டவன் ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் ஒன்றும் வெளிவரவில்லை. பேசும் சக்தியை அவன் இழந்திருந்தான்.

“உன்னை உடன் குடந்தைக்கு தூக்கிச் சென்று வைத்தியசாலையில் சேர்த்துச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறி வந்தியத்தேவன் அவனைத் தூக்க முயன்றான்.

ஆனால், அடிபட்டவனின் கைகள் வந்தியத்தேவனின் கைகளைப் பற்றின. ‘இனிமேல் பயனில்லை’ என்று சொல்வது போல் வந்தியத்தேவனுக்குத் தோன்றியது.மெல்ல ஒரு கரத்தை விடுவித்து, தொலைவில் நின்றுகொண்டிருந்த அவனுடைய குதிரையைச் சுட்டிக் காட்டியபடியே மறுபடியும் ஏதோ சொல்ல முற்பட்டான்! ஆனால் வெறும் முனகல் சத்தம்தான் வெளிவந்தது.

அவனுடைய கண்கள் நன்றியுடன் வந்தியத்தேவன் கண்களை நோக்கின! சிறிது நேரம்தான்! ஒரு கணம் பிரகாசமடைந்த கண்கள் மறுகணம் மங்கி மூடின. கைகள் தளர்ந்தன. அவனைவிட்டு உயிர் பிரிந்தது.

வந்தியத்தேவன் தரையில் அமர்ந்து சிறிது நேரம் மாண்டவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினான்.

மெல்ல எழுந்து நின்றான். நடந்த சம்பவங்களை நினைத்து ஜீரணிக்க சிறிது நேரமாயிற்று. ‘எதற்காகக் குதிரையைச் சுட்டிக்காட்டி இவன் ஏதோ சொல்ல முயன்றான்?’ என்று யோசித்தவாறே அந்த மனிதனுடைய குதிரையின் அருகில் சென்றான்.எஜமானர் இல்லாத வேற்று மனிதர் வந்திருப்பதைப் பார்த்து குதிரை கனைத்து முரண்டு பிடித்தது.

வந்தியத்தேவன் தன் குதிரையின் அருகே சென்றான். பையிலிருந்து தன் குதிரைக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த வெல்லக் கட்டிகளை எடுத்து வந்து, அவற்றில் இரண்டை எடுத்து மிரண்ட குதிரையின் வாய்க்கு அருகே கொண்டு சென்றான். மிகப் பசியுடன் இருந்த அந்தக் குதிரை அதை நாக்கால் பற்றி உண்ண ஆரம்பித்தது. மெதுவாக எஞ்சியிருந்ததையும் கொடுத்தான். அதையும் நன்றாகச் சாப்பிட்டு முடித்தது! குதிரைகளின் பாஷையை அறிந்த வந்தியத்தேவன் கயிற்றைப் பிடித்தவாறே அதன் தாடையைத் தட்டிக் கொடுத்தான் சிறிது நேரம் அதன் கழுத்தை தடவியவாறே இருந்தபின் அது சாந்தம் அடைந்தது.

குதிரையின் முதுகில் கட்டியிருந்த சேணத்தை நோக்கினான். அதன் இரு பக்கங்களிலும் பொருட்கள் வைத்த பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. பைகளை சோதனை செய்தான். அவைகளில் அணியும் ஆபரணங்கள் மட்டுமே இருந்தன. வேல் ஒன்று தனியாக வேறு பையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. இவைகளைத் தவிர வேறு ஒன்றும் தென்படவில்லை.

‘இந்த சாதாரணப் பொருட்களைப் பற்றியா இவ்வளவு கஷ்டப்பட்டு நம்மிடம் தெரிவிக்க முயன்றான்? நிச்சயமாக இருக்காது! கொல்லப்பட்டவன் ஏதோ முக்கிய உண்மையைப் பற்றியே சொல்ல நினைத்திருக்கிறான். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ம்.. சேணத்தின் கீழ் ஏதாவது மறைத்து வைத்திருப்பானோ?’ என்று எண்ணியவாறே அதன் அடியில் கையை விட்டுத் துழாவினான். அவன் கணிப்பு வீண் போகவில்லை. பை ஒன்று கீழே விழுந்தது!

பையை எடுத்துக் கவிழ்த்துக் கீழே கொட்டினான்.

உள்ளிருந்து சில எழுத்தோலைகளும், ஒரு கனமான சிறிய தாமிரத் தகடும் கீழே விழுந்தன.

தகடைக் கையில் எடுத்து உற்று நோக்கினான். வேலைப்பாடுடன் கூடிய அந்தப் பதக்கத்தில் ஒரு புலியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மாண்டவன் ஒரு சோழ நாட்டின் கைதேர்ந்த ஒற்றன் என்பதைத் தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கத்தியின் கைப்பிடியில் ஏற்கெனவே கண்ட மீனின் உருவம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது புரிய ஆரம்பித்தது.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் பகை முற்றிப்போயிருந்த அந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சோழ ஒற்றனைப் பாண்டியர்கள் கொன்றிருக்கிறார்கள் என்பதை அறிய வந்தியத்தேவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பாண்டிய சதிகாரர்கள் எப்படி சோழ நாடு முழுவதிலும் பரவியிருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்தான்! தொடர்ந்து எழுந்த ஆர்வத்தால் தூண்டப்பட்டுத் தரையில் கிடந்த எழுத்தோலைகளைப் பார்வையிட்டான். அவைகள் கீழ்க்கண்டவாறு காணப்பட்டன:

ps1

 

(தொடரும்)

One response to “மணிமகுடம் – புதிய சரித்திரத் தொடர் கதை — ஜெய்சீதாராமன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.