அபயமென்று வந்தவரை ஆட்கொள்ளும் முருகா
உபாயமொன்று சொல்லிடுவாய் எமக்கின்று முருகா
உற்பத்தி பெருகிடினும் கடைக்குவந்த பண்டங்கள்
கறுப்பு சந்தையிலே காணாமல் போகிறது
விண்முட்டும் விலையேற்றம் விழிகளும் பிதுங்குகிறது
செலவுமேல் செலவாகி பணமெலாம் கரைகிறது!
ஊழலின் சூழலில் மாந்தர்க்கு திண்டாட்டம்
கள்ளமுடை மாந்தர்க்கு நாளெல்லாம் கொண்டாட்டம்
சுயநலக் கும்பலின் கொடுமைகள் ஏராளம்
அமைதியை அழிக்கின்ற வன்முறையின் வெறியாட்டம்!
ஊழலிலா காற்றினையே சுவாசிக்க வேண்டும்
சுயநலமிலா உலகினிலே இருந்திடவே வேண்டும்
யாமும்நல் மனிதராய் வாழ்ந்திடவே வேண்டும்
அதற்குபல வழிகள்நீ சொல்லிடவே வேண்டும் !