முப்பது வருடங்கள் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற அன்று நன்றி அறிவித்தலாக அலுவலக நண்பர்களும் நிர்வாகமும் அணிவித்த மாலையும் கழுத்துமாக பரிசுப் பொருட்களுடன் காரைவிட்டு இறங்கிய ரங்கராஜனிடம் “நீங்க ஜாக்கிரதையா இறங்குங்கோ நானும் சீனுவும் இதெல்லாம் எடுத்துண்டு வரோம், சீக்கிரமா உள்ளே போங்கோ, யார் கண்ணாவது படப்போறது ” என்றாள் வைதேகி
“சரிடீ சும்மா என்னை மெரட்டிண்டே இருக்காத,நானும் கொஞ்சம் எடுத்துக்கறேன் ” என்றபடி அவரால் முடிந்த அளவு எடுத்துக்கொண்டு “காரிலிருந்து எல்லாம் எடுத்தாச்சன்னு ஒருவாட்டி பாத்துட்டு அனுப்பு, அப்புறமா இத மறந்துட்டேன் அதைக் காணோம்னு புலம்பாத ” என்றபடி உள்ளே போனார் ரங்கராஜன்
“சரி நானும் கிளம்பறேன் அம்மா காத்திண்டு இருப்பா உங்காத்துக்கு போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுதான் வந்தேன் இருந்தாலும் கவலைப் படுவா” என்றான் சீனு
“இருடா கைகால் ஓடவிடாம ஆக்காதே ஒருவாய் காப்பி போட்டுத்தரேன் சாப்டுட்டு அப்புறமா போயேன் யாரு வேண்டாம்னா ” என்றபடி,உள்ளே போய் காப்பியை எடுத்துண்டு வந்து ” இந்தாங்கோ ஒருவாய் காப்பி சாப்டுங்கோ ..இந்தாடா சீனு நீயும் சாப்புடு ” என்றபடி காபி கொடுத்துவிட்டு உள்ளே போனாள் வைதேகி
சீனு கையில் காப்பியை வைத்துக்கொண்டு ” என்ன சார் ரிடையர்ட் ஆயாச்சு , இனிமே எப்படி பொழுது போகும் உங்களுக்கு ? வழக்கமா காத்தாலெ 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு ப் போய்ட்டா சாயங்காலம் 7 மணியாகும் வரதுக்கு… ஏதாவது ப்ளான் வெச்சிருக்கேளா ? ” என்றான்
” டேய் சீனு என் மனசில ஓடறதைக் கண்டுபிடிச்சா மாதிரி கேள்வி கேக்கற. நான் கூட்டுப் புழுடா எனக்கு அந்த வேலையை விட்டா ஒண்ணும் தெரியாது.. ஏதோ இதுவரைக்கும் வேலை கொடுத்த அந்த ஆபீசுக்காகவே யோசிச்சு யோசிச்சு வேலை செஞ்சாச்சு. இது வரைக்கும் ஒருநாள் கூட லீவு எடுத்ததில்லே அதுக்காகவே எங்க எம் டி மேடையிலே என்னை எப்பிடிப் பாராட்டினார் பாத்தியா ? எப்போ வேணா மறுபடியும் வேலை செய்யணும்னு எண்ணம் வந்தா இந்த ஆபீஸ் உங்களுக்குக் கதவைத் திறந்தே வெச்சிருக்கும்னு சொன்னார், கவனிச்சியோ ? ” என்றார் ரங்கராஜன்
” சார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்கோ. எல்லாருமே மேடையிலெ அப்பிடித்தான் பாராட்டுவா . அதெல்லாம் நம்பிண்டு அங்கே போய் நிக்காதீங்கோ …மதிக்கமாட்டா , அதெல்லாம் மேடை நாகரீகம் அவ்ளோதான் ” என்றான் சீனு. ” உங்க அனுபவத்தை அதும் மூலமாக் கிடைச்ச அறிவை, யுக்திகளை எல்லாம் யாருக்காவது சொல்லிக்குடுங்களேன், நல்ல பொழுது போக்கா இருக்கும் எல்லாருக்கும் உதவியா இருக்கும் . இப்பவே மணி எட்டாறது ஏதாவது கொஞ்சம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுங்கோ …. உழைச்சது போதும். சரி நான் கிளம்பறேன் ” என்றபடி சீனு கிளம்பினான்,
“இந்த வேளைக்கு நீங்க உழைச்சு நாம் படிப்படியா முன்னுக்கு வந்து நம்ம கடமைகளையும் முடிச்சாச்சு இனிமே பெரிய பொறுப்புன்னு எதுவும் நமக்கு இல்லே. உழைச்சது போதும் நீங்க பாட்டுக்கு வேளாவேளைக்கு சாப்புடுங்கோ, நல்ல நல்ல புஸ்தகமா வாங்கிப் படிங்கோ, கொஞ்ச நேரம் டீவி பாருங்கோ, மனசை நிம்மதியா வெச்சிண்டு இருங்கோ” என்றபடி அங்கே வந்த வைதேகி வாசல் கதவைத் தாப்பாள் போட்டுட்டு வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
” தாய்க்குப் பின் தாரம்னு சொல்லுவா. நான் ஆபீஸ்லே மேனேஜரா இருந்தேன் . அங்கே நான் சொன்னதை எல்லாரும் செய்வாங்க. இனிமே நீ சொல்றதைத்தான் நான் செய்யணும். நீதான் எனக்கு மேனேஜர் ” என்று சிரித்தபடி கூறினார் ரங்கராஜன்.
.” அடப் போங்கோன்னா உங்களுக்கு எப்பவுமே கேலியும் கிண்டலும்தான். நான் நல்லதைத்தான் சொல்லுவேன். நான் சொல்றதைக் கேக்கலாம் தப்பில்லே ” என்றாள் வைதேகி. ” இப்போ டீவியைப் பாருங்களேன் ” என்றபடி டீவியைப் போட்டாள் வைதேகி
அந்த தொலைக் காட்சித் தொடரில் ஒரு பெண் கருமையில் முக்கி மீண்டும் பொருத்திக் கொண்டாற்போன்ற கண்களோடு நெற்றியில் பலவிதமான பொட்டுக்களோடு பளபள ஆடை அலங்காரங்களோடு தன் காதலனிடம் ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தாள் . ” ரமேஷ் என்னை ஏமாத்திடலாம்னு நெனைக்காதே என்னைக் காதலிச்சுட்டு வேற ஒருத்திய நீ கல்யாணம் செஞ்சுண்டா அதைப் பாத்துண்டு நான் சும்மா இருக்க மாட்டேன், உன்னையும் வாழவிடமாட்டேன்” என்றாள் முகத்தைக் கர்ண கடூரமாக வைத்துக்கொண்டு.
எரிச்சலுடன் அடுத்த சேனலுக்குத் தாவினார். அங்கே ஒருவன் “இதோ பாரு! எனக்குக் கிடைக்காத உன்னை யாருக்குமே கிடைக்காம செஞ்சிருவேன் . கொன்னுடுவேன் ” என்று பயமுறுத்திக் கொண்டிருந்தான்
“ஏண்டி இவ இப்பிடி ராக்ஷசி மாதிரி கத்தறா இவளை எப்பிடி இவன் காதலிச்சான் முட்டாள் முட்டாள்!” என்றார் ரங்கராஜன்
” நானும் நீங்களும் சீரியல் எல்லாம் பாத்ததில்லே அதுனால்தான் தெளிவா இருக்கோம் . இதெல்லாம் பாக்காதீங்கோ ! நேஷனல் ஜியாகரபிக் ன்னு ஒரு சேனல் இருக்கு. அனிமல் ப்ளானட்டுன்னு ஒண்ணு இருக்கு . அதெல்லாம் பாருங்கோ ! ட்ராவல் அண்ட் லிவ்விங் ன்னு ஒரு சேனல் இருக்கு அதைப் பாருங்கோ ! இனிமேயாவது ரெண்டு பேரும் கிளம்பி எல்லா ஊரையும் சுத்திப்பாக்கலாம் ” என்றாள் வைதேகி,
” உண்மையிலேயே நமக்கெல்லாம் இந்தப் பாழாய்ப்போன காதலைத் தவிர உருப்படியா யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லையா ? எப்பிடி எல்லாருக்கும் மூளை இப்பிடி வறண்டு போச்சு ? அது சரி, இந்தக் காதலப் பத்தி உன் அபிப்ராயம் என்ன ? ” என்றார் ரங்கராஜன்.
வைதேகி, ” போறும் \ ரொம்ப வழியாதீங்கோ ! காதலைப் பத்திப் பேசற வயசைப் பாரு …… இந்தக் கண்றாவியைப் பத்தி எனக்கொண்ணும் தெரியாது. உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சா. நாமளும் வாழ்ந்து நம்ம கடமையை நெறைவேத்தியாச்சு. அவ்ளோதான் எனக்குத் தெரியும் . தனித்தனியா பொறந்தோம், ஒண்ணா சேர்ந்தோம், தனித்தனியா போகப்போறோம், இதுலே காதல்னா என்னான்னு சொல்றது ?” என்றாள்.
ரங்கராஜன் அவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்.
” உங்களுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு குடுக்கும் போது எங்கம்மா சொன்னா .. நீயும் சந்தோஷமா இரு , மாப்பிள்ளையையும் சந்தோஷமா இருக்க விடுன்னு . அதைத்தான் நானும் செஞ்சுண்டு இருக்கேன. இப்போ காதலிக்கறவா யாரு சந்தோஷமா இருக்கா ? எனக்குத் தூக்கமா வரது. உங்களுக்கு அடுப்பு மேடையிலே பால் காச்சி வெச்சிருக்கேன். மறந்து போய்ட்டேன்னு அப்பிடியே வெச்சிட்டு வந்துடாதீங்கோ ! எறும்பு உள்ளே விழுந்து செத்துப் போகும். பாலைக் குடிச்சுட்டு நேரத்தோட தூங்குங்கோ” என்றபடி உள்ளே போனாள் வைதேகி,
அப்பிடியே சோபாவில் உட்கார்ந்து அசை போடத் துவங்கினார் ரங்கராஜன்.
அவருக்குத் திருமணம் ஆனதிலிருந்து இன்று வரை எல்லாக் காட்சிகளும் மனத்திரையில் நடனமாடின. ‘நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்’ என்னும் பாட்டு சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களின் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. வைதேகி வெச்சிருந்த இதமான சூட்டுடன் கூடிய பாலைக் குடிச்சுட்டுப் படுக்கை அறைக்குப் போன ரங்கராஜன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த வைதேகியைப் பார்த்தார் அவர் மனதுக்குள் அன்பு பாசம் நேசம் எல்லாம் கலந்த நறுமணமான ஒரு தாமரை மலர்ந்தது. அருகே சென்று குனிந்து போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்திவிட்டுப் படுத்தார். காதல் என்றால் என்னவென்று புரிந்தது அவருக்கு.