இருட்டென்றால் அப்படி கும்மிருட்டு
அமாவாசைக்கு அடுத்த நாள் இன்னிக்கி
இருப்பதோ பட்டிக்காடு மின் தடையும் வேற
ராந்தலும் வெளக்கும் அவிஞ்சு மணி மூணாச்சு
காலையில சரியா கூவிச்சு வெடக்கோழி
ஆறு அஞ்சு மணியைப் பாத்ததுமே மூடிக்கிச்சு
மதியம் சாப்பாட்டுக்குக் கோழி தயாராச்சு
கோழியக் கேட்டுட்டா மசாலா அறைப்பாக
உறிச்ச நாட்டுக்கோழி தளதளன்னு கொஞ்சிச்சு
மணக்க மணக்க மாமியா அறைச்சுத் தர
குலுக்கிக் குலுக்கிக் கொழுந்தியா கொதிக்கவைக்க
எட்டூருக்குக் கேட்டுச்சு நாட்டுக்கோழி வாசம்
தலை வாழை இலை போட்டு அள்ளி அள்ளி வச்சாக
வாயைத் தொறந்தாக்கா காக்கா கொத்தும் வரை
மாமனும் பிடி பிடிச்சேன் முட்ட முட்டத் தின்னுப்புட்டேன்
ராத்திரி ஆனதும் ஒருக்களிச்சு எழுந்திருச்சேன் வயித்துக் கோழிக்கு றெக்கை முளைச்சிடுச்சு
குறுக்கும் நெடுக்குமா முட்ட முட்டத் தொடங்கிச்சு பரக்கப் பரக்க நானும் இடந்தேடி ஓடிப்போனேன்
இருட்டே நல்ல துணை தனியிடமே செம சொகம்
கிருட்டுக்கிருட்டுன்னு சுவத்துக்கோழி கத்திச்சு
சளக்கு சளக்குன்னு கறுப்புப் பண்ணி பொறளுது
உஸ்உஸ்ஸுன்னு கரும் பாம்பு நெளியுது
கீக்குக்கீக்குன்னு சொறித் தவளை கத்திச்சு
வழ்வழ்ழென்று கிழ நாய் ஊளையிட
பாம்போ பண்ணியோ நாயோ தவளையோ
என் அவசரம் எனக்கு வேறெதுவும் தெரியலே
முள்ளளுச்செடிகிட்டே முட்டுக்குத்தி உக்காந்தேன்
கடனையெல்லாம் முடிச்சிபுட்டு காலார நடைநடந்து
தேங்கிக் கிடக்கும் பள்ளத்துக் குட்டையில்
காலைக் கழுவி இடக்கர் அடக்கல் முடித்தேன்
மாப்பு தான் நானும் ஆனாலும் தமிழ் வாத்தி .