இரவு நேர பூபாளம் 
கால் பதித்து ஏறுகையிலேயே
காணாமல் போகும் மாயப்படிகள்
அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டு இருக்கையிலேயே
கவிழ்ந்து விழும் விமானங்கள்
சூரியனாய் மாறிய நட்சத்திரங்கள்
தீபாராதனை காண்கையிலேயே கால் கை அசைக்கும் கடவுள்கள்
படித்துக்கொண்டு இருக்கும்போதே பறிபோகும் பக்கங்கள்
ஆசையுடன் விழுங்கப் போகையில் அருவமான அன்னம்
கால்கள் தரையில் பதியாமல் பறக்கிற நடை,
கீழே நழுவும் மலையும் வயலும் கடலும் காடும்
குழந்தைகளாய் வளைய வரும் வளர்ந்த பிள்ளைகள்
முடிவில்லா பாதைகளும் ,மூடிய நுழைவுகளும்
எத்தனையோ வருடம் கழித்து சந்தித்த தோழி
அருகே போனதும் அன்னியமாய்ப் போனது
அலுவலகம் செல்லும் வழியிலேயே அவிழ்ந்து விழும் உடைகள்
தேடி அவலமாய்த் தவிக்கும் பொழுதுகள்
சிரித்தபடி குசலம் கேட்டு உறவாடும் மரித்த உறவுகள் என
வண்ண வண்ணக் கனவுகளில் தோய்ந்த என் பின்னிரவுகளும்
அதிகாலைகளும்
என் இருப்பை நிறைப்பவை !