அந்தக் காலத்தில் சிலோன் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி – நீங்கள் கேட்டவை -பழையன என்று வரும். அதில் வரும் பாடல்களைக் கேட்கும் போதே நீங்கள் பத்து-பதினைந்து வருடம் காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் போனதுபோல இருக்கும்.
அந்த வரிசையில் “முக்தா வீ சீனிவாசன்” அவர்கள் எழுதிய ‘தமிழ் திரை உலகம் ஆயிரம் செய்திகள் ‘ என்ற புத்தகத்திலிருந்து சில டிட்பிட்ஸ்.
(இதன் சிறப்பு என்னவென்றால் முக்தா வீ சீனிவாசன் அவர்களே சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் அமர்ந்து விற்பனை செய்தபோது வாங்கிய புத்தகங்கள் இவை.)
இந்தியாவின் முதல் பேசும்படம் ‘ஆலம் ஆரா’ 14.03.1931 அன்று வெளியானது.
முதல் தமிழ் பேசும்படம் ‘பக்தபிரகலாதா’ . கதாநாயகி தமிழிலும், கதாநாயகன் தெலுங்கிலும் மற்றொருவர் ஹிந்தியிலும் பேசி நடித்த படம்.
தமிழில் ஆரம்ப சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் கே.சுப்ரமணியன் ( தஞ்சாவூர் பாபநாசத்துக்காரர்)
எல்லிஸ் ஆர் தான்காண் என்ற அமெரிக்கர் பல தமிழ்ப் படங்களை இயக்கினார். அவர் தான் சதி லீலாவதியில் எம் ஜி ஆரை அறிமுகப்படுத்தியவர்.
ஜெமினி எஸ் எஸ் வாசன் 70 படங்களுக்கு மேல் தயாரித்தவர். நந்தனார், சந்திரலேகா, அவ்வையார்,வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்றவை அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட். ( ஜெமினி கணேசன் இவரது ஜெமினி ஸ்டூடியோவில் பணிபுரிந்ததால் அந்தப் பெயரைப் பெற்றார்.)
ஏ வி எம், சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற கிராமபோன் கம்பெனியை 1932இல் ஆரம்பித்தார். பின்னர் அவர் தயாரிப்பாளராகி, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அவர்களுடன் இணைந்து எடுத்த பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.
பாட்டே இல்லாத அந்தநாள் என்ற படத்தை இயக்கியவர் வீணை எஸ் பாலசந்தர். ( இன்றைக்குப் பார்த்தாலும் படம் டக்கராக இருக்கும்)
தமிழக முதல்வராக இருந்த ஐந்து முதல்வர்கள் திரை உலகத் தொடர்பு கொண்டவர்கள்: அண்ணா, கருணாநிதி,எம்.ஜி.ஆர்., வி என் ஜானகி, ஜெயலலிதா ஆகியவர்கள்.
சென்னையில் விஜயா வாகினி, ஏ வி எம் , சேலத்தில் மாடர்ன் ஸ்டுடியோ, கோவையில் பக்ஷிராஜா ஸ்டுடியோ ஆகியவை முக்கியமான ஸ்டுடியோக்கள்.
கவிஞர் கண்ணதாசன் முதல் பாட்டு எழுதிய படம் ‘கன்னியின் காதலி’ பாடல் ‘கலங்காதிரு மனமே’
தியாகராஜ பாகவதர் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார். அவரது ஹரிதாஸ் என்ற படம் மூன்று வருடங்கள் ஓடியது.
பி யு சின்னப்பா மிகவும் பிரபலமான கதாநாயகர். அவர் தன் வருமானத்தையெல்லாம் புதுக்கோட்டையில் வீடாக வாங்கிக் குவித்தார். அதனால் புதுக்கோட்டை அரசர் ‘இனி யாரும் பி யு சின்னப்பாவுக்கு வீடு விற்கக் கூடாது’ என்று தடையுத்தரவு போட்டாராம்.
டி ஆர் மகாலிங்கம் , கே ஆர் ராமசாமி, எம்.ஆர் ராதா, சகஸ்ரநாமம், எம்,கே,ராதா, ரஞ்சன், எஸ் எஸ் ராஜேந்திரன், என். எஸ் கிருஷ்ணன் , தங்கவேலு, சந்திரபாபு , ஜெய்சங்கர், ரவிசந்திரன், முத்துராமன், சிவகுமார் , பாலையா, நம்பியார், வீரப்பா, நாகேஷ் , கே பி.சுந்தராம்பாள், டி பி ராஜலட்சுமி, எம்.எஸ் சுப்பலக்ஷ்மி., எஸ்.டி சுப்பலக்ஷ்மி, டி ஆர் ராஜகுமாரி, கண்ணாம்பா, பானுமதி, பத்மினி, வைஜந்திமாலா, சாவித்திரி,சரோஜாதேவி, தேவிகா, மனோரமா ஆகியோர் அந்தக்காலப் பிரபலமான நடிக, நடிகைகள்.
தியாகராஜ பாகவதரும், என் எஸ் கிருஷ்ணனும் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளரை கொன்றதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர்கள். எம்.ஆர்.ராதாவும் எம் ஜி ஆரைச் சுட்ட காரணத்திற்காகச் சிறைத் தண்டனை பெற்றார்.