படைப்பாளி – கு. அழகிரிசாமி (எஸ் கே என்)

 

இடைச்சேவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவரும், இவரது நெருங்கிய நண்பரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கி ராஜநாராயணனும் சாகித்ய அகடமி விருதுபெற்ற, குறிப்பிடத்தக்க படைப்பாளிகள். இவர் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமரிசனங்கள் ஆகியவையும், இவரது சிறுகதைகளைப் போலவே படிப்பினையைப் போதனையாகச் சொல்லாத அரிய அனுபவம் என்று கூறலாம். இவர் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்.  கீர்த்தனைகள் படைத்தவர்

*****

மிகவும் பேசப்படும் இவரது குமாரபுரம் ஸ்டேஷன் என்னும்  கதை

‘குமாரபுரம் என்பது ஒரு காட்டு ஸ்டேஷன். அரை மைல் சுற்றளவிற்கு எந்த ஊரும் கிடையாது. ஸ்டேஷன் என்று கட்டிவிட்டால் பெயர் வைக்காமல் முடியுமா? இடுகுறிப் பெயராவது வைத்துத்தானே ஆகவேண்டும்?’

என்று தொடங்குகிறது  .

புதியதாக மாற்றலாகி வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரின் பால்ய நண்பர் சுப்பராம ஐயர் ஓரிரு நாட்கள் தங்குகிறார். இந்த ஸ்டேஷனுக்கு பிரயாணிகளும் வருவதுண்டோ என்கிற ஐயம் அவருக்கு. ‘இப்படி இன்னும் பத்து ஸ்டேஷன் இருந்தால் போதும் இரயில்வே பட்ஜெட்டில் வருஷம் தவறினாலும் துண்டு விழுவது தவறாது’ என்கிறார்.

அதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் கோவில்பட்டி சந்தை தினங்களில் பத்து டிக்கட்களாவது தேறும் என்கிறார். தவிர, கோடையில் சுற்றுவட்டாரத்தில் நிலத்தில் வேலை செய்பவர்கள் மண்கலயங்களில் குடிநீர் எடுத்துச் செல்வார்களாம்.

தண்ணீர்ப்பந்தலுக்குப் பதிலாக ஸ்டேஷன் கட்டிவிட்டார்கள் என்று கேலி செய்கிறார் சுப்பராம ஐயர். ஸ்டேஷன் மாஸ்டர் பள்ளிக்கூடம் என்பது எதற்காக என்று  கேள்வி கேட்கிறார். நூறு குழந்தைகள் படிக்கத்தான் என்று பதில் வருகிறது. பிள்ளைகள் எதற்காகப் படிக்கிறார்கள் என்று அடுத்த கேள்வி. சுப்பராம ஐயர் பதிலளிக்கா விட்டாலும் ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லுகிறார்.

 ‘எந்த பைத்தியக்காரனும் அறிவு வளர்ச்சிக்காகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. நீங்களும் நானும் அறிவு வளர்ச்சிக்காகவா படித்தோம். படிக்காதவனுக்கும் வேலை உண்டு என்று சட்டம் செய்யட்டும். எவனாவது மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் வந்து ஒதுங்குகிறானா என்று பார்க்கிறேன் என்று சவால் விட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

மூன்றாம் நாள் காலையில் எட்டுமணி பாசஞ்சர் வண்டியில் சுப்பராம ஐயர் ஊர் திரும்ப இரயிலுக்காகக் காத்திருக்கிறார். கோவில்பட்டி சந்தைக்குச் செல்லும் பயணிகள் முன்னதாகவே வந்து stationவெற்றிலைப் பாக்கு போட்ட வண்ணம் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எப்போதோ மாடு வாங்கிவந்த கதையை ஓர் ஆசாமி சொல்ல மற்றவர்கள் கவனமாக ‘ஊம்’ போட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்கள் பேச்சுகளில் உள்ள உண்மை சுவாரஸ்யம், அர்த்தம் மற்றும்   தூரத்தில் தெரியும் கிராமங்களும் தனக்கு ஒரு பாடம் கற்பிப்பதாக உணர்கிறார், சுப்பராம ஐயர்.

பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயது மதிக்கத்தக்க  நான்கு சிறுவர்களும் ஒரு பெரியவருமாக  அவசர அவசரமாக வருகிறார்கள். காலில் பூட்சும், க்ளோஸ் கோட்டும் ஜரிகை அங்கவஸ்திரமுமாக, பள்ளிக்கூடத்திற்கு எப்போதோ வரும் பெரிய இன்ஸ்பெக்டரைப்போல காணப்படும் சுப்பராம ஐயரை வியப்போடு பார்க்கிறார்கள்.   

ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கட் கொண்டு வந்து கொடுக்கிறார். இரயிலும் வருகிறது. கூட்டமில்லை. ஐயர் ஏறிய பெட்டியிலேயே அந்தச் சிறுவரும் அவர்களுடன் வந்த பெரியவரும் ஏறிக்கொள்கிறார்கள். ஏராளமான சாமான்களோடு பூதாகரமான ஆகிருதியுடன் ஒருவரும் அவருடைய கனத்தில் முக்கால் வாசியாவது இருக்கும் ஒரு அம்மாளும் அந்தப் பெட்டியில் ஏற்கனவே இருக்கிறார்கள். அந்த மனிதரின் வைரக்கடுக்கன், வைரமோதிரம், தங்கப்பித்தான்கள் சிறுவர்களின் ஆச்சரியத்திற்கு உள்ளாகிறது.

பூதாகாரமான மனிதர் சௌஜன்யமாக சிறுவர்களை எங்கே பிரயாணம் என்று கேட்கிறார். அவர்கள் ஊரான இடைச்சேவலில் ஏழாம் வகுப்பு இல்லை என்றும், கோவில்பட்டியில் உள்ள பெரிய பள்ளியில் பரிட்சை எழுதிச் சேருவதற்குத்தான் அவர்கள் செல்கிறார்கள் என்றும்சிறுவர்கள் சார்பில்  பெரியவர் பதில் சொல்கிறார்.

நானே கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்று அந்த வைரக்கடுக்கன் ஆசாமி மூன்று கேள்விகள் கேட்கிறார்

“வாட்டீஸ் யுவர் நேம்?”. “வாட்டீஸ் யுவர் பாதர் நேம்?’, “வாட் கிளாஸ் யூ பாஸ்?” எனக் கேட்கிறார். பதில்கள் கேட்டு நீங்கள் எல்லாம் பாஸ் என்கிறார். மேலும் கேள்விகள் கேட்கச் சொன்னால், “நம்ம இங்க்லீஷ் அவ்வளவுதான். அதுக்குமேல எங்க வாத்தியார் கத்துக்கொடுக்கல” என்று சிரிக்கிறார். 

பூதாகாரமான ஆசாமி திருநெல்வேலியில் பங்கஜ விலாஸ் என்னும் ஹோட்டல் நடத்துவதாகவும், நிறைய  படிக்கும் பையன்கள் இவர் ஹோட்டலில்தான் சாப்பிடுவதாகவும் தர்மத்திற்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் எத்தனையோ பேருக்கு ஸ்கூல் பீஸ் கட்டிவருவதாகவும் சொல்கிறார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. என்றாலும் அவர் ஹோட்டலில் சாப்பிடும் மாணவர்கள் எல்லாம், ஏன் இந்த நான்கு சிறுவர்களும் கூட,   தன் குழந்தைகள் தானே என்கிறார்.

அந்தப் பரீட்சைக்குப் பெரிய வாத்தியார் ஒரு மாசம் வீட்டில் வைத்து, மிகுந்த முயற்சி எடுத்துப்  பாடம் சொல்லிக்கொடுத்தாகவும், அந்தப் பையன்களில் ஒருவன் தனது பேரன் என்றும், மற்ற பையன்களில் ஒருவன் வசதி இல்லாதவன் ஆகையால் அவன் செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாகவும் பெரியவர் சொல்கிறார்.

சுப்பராம ஐயர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயரை எழுத்துக்கூட்டி ‘அன்னா கரீனா – லியோ டோல்ஸ்டோய்’ என்று ஒரு சிறுவன் படிக்கிறான்.

“டோல்ஸ்டோய்!. அதுவும் சரிதான்! சொல்லிக்கொடுக்காத வரையில் யாருக்கும்  டோல்ஸ்டோய் தானே ஒழிய டால்ஸ்டாய் எப்படி ஆகமுடியும்?” என்று நினைத்துக்கொள்கிறார் சுப்பரம ஐயர்.     

பரிட்சைக்குத் தயார் செய்வதற்காகப் பெரிய வாத்தியார் கொடுத்திருந்த காகிதங்களைச் சிறுவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

“பட்டிக்காட்டுப் பயல்கள் ஆனாலும் படிப்பு நல்ல படிப்புதான். வாத்தியாரு அப்படி. அந்த மாதிரி ஒரு தகப்பன்கூடப் புள்ளைகமேல அவ்வளவு பிரியமா இருக்கமாட்டான்னு சொல்றேனே” என்றார் பெரியவர்

“அது சரிதான். வாத்தியாரும் ஒரு தகப்பன்தானே?” என்றார் ஹோட்டல்காரர்.

இதைக் கேட்டதும் சுப்பராம  ஐயரின் உடம்பு சிலிர்த்தது.

இரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட ஹோட்டல்காரர், படிச்சிருந்தா  உத்தியோகம் பார்த்திருக்கலாம் . ஆனா இத்தனை வருஷமா பள்ளிப் பிள்ளைகளுக்கு உபகாரம் செய்திருக்க முடியாது என்கிறார்

“..நாலு பேருக்கு உபகாரமா இருந்தாத்தான் படிப்பிலே சேர்த்தி. ஊர்காரனை மிரட்டுற படிப்பு வேண்டவே வேண்டாம்..” 

கோவில்பட்டியில், பெரியவரையும் பிள்ளைகளையும் தங்குவதற்காக அவர்கள் ஊரைச் சேர்ந்த ஒரு போர்ட்டர் தன் வீட்டிற்கு அழைத்துப்போகிறான்.

சுப்பராம ஐயர் வீடு போகும்போது நினத்துக்கொள்கிறார்.

குமாரபுரம்  ஸ்டேஷன், ஸ்டேஷன் மாஸ்டரின் தர்க்கங்கள், வேப்பம்பூ மணத்துடன் வீசிய காற்று, கரிசல் மண் மணமும் உயிரும் கொடுப்பது,  ஹோட்டல்காரரின் தர்ம குணம், படிப்புக்கு அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுத்த விளக்கம், கிராமத் தலைமையாசிரியர் தந்தையைப்போல் சிறுவர்களை நடத்தியது, டால்ஸ்டாயை ‘டோல்ஸ்டோய்’ என்று வாசித்த ‘அறிவு’, ஏழைப் போர்ட்டரின் விருந்துபசார அழைப்பு  இப்படி,  எல்லாமே அவருக்கு ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. இருபது நிமிஷ ரயில் பிரயாணத்தில், இருபது வருஷங்கள் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாத எத்தனையோ அரிய விஷயங்களைத் தெரிந்துகொண்டது போன்ற  ஆனந்தப் பரவசம் ..  கிராமத்து ஹெட்மாஸ்டரையும், ஹோட்டல் முதலாளியையும், போர்ட்டரையும்விடப் பெரிய வாத்தியார்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்று அவருக்கு ஒரு நிமிடம் தோன்றியது. அவர்களிடம் படிக்காத படிப்பையா இந்தச் சிறுவர்கள் இனிமேல் படிக்கப் போகிறார்கள் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ‘குமாரபுரம் ஸ்டேஷனுக்கு பிரயாணிகள் வராததைவிடப் பெரிய கேலிக்கூத்து, மேற்படிப்பிற்காக இவர்கள் வருவது! அந்த ஸ்டேஷனுக்காவது தண்ணீர்ப்பந்தல் என்ற மதிப்பு உண்டு ஆனால்…

அந்தச் சிறுவர்கள் சேர வந்திருந்த பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு இடம் கிடைப்பதும் அந்தப்பள்ளியில் பரிட்சை வைத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் ஹெட் மாஸ்டர், அந்த சுப்பராம ஐயர்தான் என்று கதை முடிகிறது.

*****

பலராலும் குறிப்பிடப்படும் இவரது கதைகள்: அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், பேதமை, தெய்வம் பிறந்தது, காற்று,  தம்பி ராமையா, இருவர் கண்ட ஒரே கனவு, பெரிய மனுசி.

இணையத்தில் கிடைக்கும் சில கதைகள்

அன்பளிப்பு,   இருவர் கண்ட ஒரே கனவு , தியாகம்          

  எஸ் கே என்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.