ஒவ்வொரு ஓலையிலும் ஒவ்வொரு விசித்திரமான சித்திரம் வரையப்பட்டிருந்தது.
அதை நோட்டம்விட்ட வந்தியத்தேவனின் தலை சுற்றியது. ‘ஏதோ புதிர் பொதிந்த ஓலைகள் போல் தோன்றுகின்றனவே!’ என்று மறுபடியும் அவைகளை நோக்கினான்.
‘சோழர்களால் முறியடிக்கப்பட்ட பாண்டிய நாட்டை மீட்டு பாண்டியர்களின் ஆட்சியை நிலைநாட்ட சபதம் எடுத்துக் கொண்டவர்கள் ‘ஆபத்துதவிகள்’ எனப்படும் சதிகாரர்கள். அந்தக் கும்பலின் ரகசியம் ஒன்றை சோழ ஒற்றன் அறிந்து கொண்டிருக்கிறான். அதைத் தெரிந்துகொண்ட சதிகாரர்கள் அவனைத் துரத்திக் கொன்றிருக்கிறார்கள். அறிவாளியான ஒற்றன், உண்மையை ஓலைகளில் சங்கேத சித்திரமாகப் பதித்து எவரிடமாவது கொடுக்க நினைத்திருந்தான் போலும்!
பாண்டிய சதிகாரர்களின் மிகப் பெரிய ரகசியம் ஒன்று இந்த குறிப்பேடுகளில் புதைந்து கிடக்கிறது, நன்கு பொறுமையாக அலசி புதிர் முடிச்சை அவிழ்க்க வேண்டும். மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும்! சோழ நாட்டை முன்னெச்சரிக்கையுடன், விழிப்பாக இருக்கச் சொல்ல வேண்டிய கடமை நம் தலை மேல் சுமத்தப்பட்டிருக்கிறது’ என்று எண்ணிய வந்தியத்தேவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு தன் குதிரையை நோக்கி நடந்தான்.
அவன் அருகிலிருந்த சிற்றூரை அடைந்த போது ஒரு நாழிகை ஆகிவிட்டது. அங்கிருந்த ஊர்ச்சபைத் தலைவரைப் பார்த்து தான் யார் என்றும் வழியில் நடந்த விபரங்களையும் கூறி, மாண்ட சோழ ஒற்றனின் நல்லடக்கத்திற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டான். விவரங்களை அறிந்த ஊர்ச்சபைத் தலைவரும் அப்படியே செய்வதாக உறுதியளித்தார். நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் வந்தியத்தேவன்.
அத்தியாயம் 02. வந்தியத்தேவன்.
குதிரையில் அமர்ந்த வந்தியத்தேவன் குடந்தையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தான். இந்த சமயத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது!
‘விஜயாலயன்’ அஸ்திவாரம் அமைத்து நிலை நாட்டிய சோழ பரம்பரையில் உதித்த ‘மதுராந்தக உத்தம சோழர்’ அரசாண்டு கொண்டிருந்த காலம் அது.வந்தியத்தேவன், தமிழ் வரலாற்றில் புகழ்பெற்ற வாணர் குலத்தில் தோன்றியவன். சோழர்கள் கீழ் இருந்த வாணகப்பாடி நாட்டு வல்லத்து அரசன். ‘அரையன்’ என்னும் சொல்லை நாட்டின் பெயரையும் சேர்த்துப் பட்டப் பெயராக அந்த நாட்களில் வழங்கப்பட்டு வந்தது. ஆகையால் நமது வீரன், ‘வல்லவரையன் வந்தியத்தேவன்’ என்று அழைக்கப்பட்டான்.
வந்தியத்தேவன் சிறுவனாய் இருக்கும் போதே வாணர் ஆட்சியின் பொற்காலம் முடிவடைந்தது. வந்தியத்தேவன் பெற்றோர், உறவினர், நாடு அனைத்தையும் இழந்து அனாதையானான். நசிந்த குலத்தின் கடைசி வாரிசாக மிஞ்சினான். வாலிபப் பருவத்தை அடைந்ததும் இழந்த நாட்டை சிறிதேனும் மீட்க உறுதிகொண்டான்.
அதற்கான சந்தர்ப்பம் ஒன்று அவனைத் தேடி வந்தது. சோழர் கீழ் இருந்த கடம்பூர் வல்வில்ஓரி குலத்து இளவரசன், அவனுடைய இளம் வயது நண்பன் கந்தமாறன், வந்தியத்தேவனைக் காஞ்சீபுரத்திற்கு அழைத்தான். அப்போதைய சக்ரவர்த்தி சுந்தரசோழரின் மூத்த குமாரன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், படைத்தளபதி மாதண்டநாயகனாக நியமிக்கப்பட்டிருந்தான். சோழர்களின் வடதிசைப் படையை, காஞ்சீபுரத்தை மையமாகக் கொண்டு எல்லையைப் பாதுகாத்து வந்தான். அவனுடன் அங்கு கந்தமாறன் எல்லைக் காவலில் பணிபுரிந்து கொண்டிருந்தான். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய வந்தியத்தேவன் வல்லத்திலிருந்து பாலாறு வழியாகக் காஞ்சிக்குப் பயணத்தைத் தொடங்கினான்.
காஞ்சியை நெருங்கும் சமயம் வனவிலங்குகள் நிறைந்த காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒரு பயங்கரமான காட்சியைக் கண்டான். ஒரு ஓடையில் சர்வலட்சணங்களும் பொருந்திய வாலிபன் ஒருவன் குனிந்து தண்ணீர் பருகிக் கொண்டிருந்தான். சத்தம் இல்லாமல் மெதுவாய் பதுங்கிப் பதுங்கி அடிமேல் அடி வைத்து நடந்து வந்த புலி ஒன்று பக்கத்தில் இருந்த பாறையின் மேலேறி அந்த வாலிபன் மேல் பாயத் தருணம் பார்த்தது.
ஒரு கணம்தான்! வந்தியத்தேவன் குதிரையிலிருந்தபடியே தொங்கவிடப்பட்டிருந்த வேலை எடுத்து மின்னல் வேகத்தில் புலிமேல் குறிதவறாது எறிந்தான். புலி பாய்வதற்கும், பறந்து வந்த வேல் அதன் கழுத்தின் ஒரு பக்கத்தில் தைத்து, உள்ளே புகுந்து மறுபக்கத்தின் வழியாக வெளிவந்து சிறிது நீட்டிக் கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது. பாய்ந்த புலி கோரமாகக் கத்திக் கொண்டே வெருண்டு, நெளிந்து, வாலிபனைத் தள்ளிக்கொண்டு தண்ணீரில் தொப்பென்று விழுந்தது. உணர்வை இழந்து தண்ணீரை விழுங்க ஆரம்பித்து, மூழ்கியது!
கனமான வஸ்து ஒன்றால் தள்ளப்பட்ட வாலிபன் என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் திடுக்கிட்டான். அதிர்ச்சியால் இடறி தண்ணீரில் விழுந்தான். விழும் முன் ஒருகணம் வந்தியத்தேவனையும் புலியையும் நோக்கினான். வாயில் தண்ணீர் புகுந்து தத்தளித்தான். மூச்சு முட்டியது. நினைவை இழந்தான்.
அதற்குள் வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தடால் என்று கீழே குதித்து கையில் கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்து வந்தான். தண்ணீருக்கு அடியில் சென்ற புலி இன்னும் வெளியே வரவில்லை. கத்தியைக் கரையில் வைத்துவிட்டுத் தண்ணீரில் இறங்கி மூழ்கிக் கொண்டிருந்த வாலிபனைத் தூக்கினான். தண்ணீரை வெகுவாகக் குடித்திருந்த அவனை மெதுவாகத் தரையில் குப்புறப் படுக்க வைத்தான். வயிற்றின் பின்புறத்தில் முதுகில் கையை வைத்து அமுக்கி அமுக்கி எடுத்தான். வாலிபன் வாயிலிருந்து தண்ணீர் குப்குப்பென்று வெளிவந்தது. அவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கத்தியை மறுபடி கையில் எடுத்து புலி தண்ணீரில் விழுந்த இடத்தை நோக்கினான். அடியிலிருந்து ரத்தம் மேல் வந்து தண்ணீரைச் சிவப்பு நிறமாக்கத் தொடங்கிக் கொண்டிருந்தது.
திடீர் என்று குதிரைகளின் குளம்புகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்ட வந்தியத்தேவன் அச்சத்தம் வந்த திக்கை நோக்கி எழுந்து நின்றான். அதில் வந்த வீரர்கள் சரட்சரட் என்று குதிரையிலிருந்து இறங்கி ஓடிவந்தனர். வாலிபன் குப்புறப்படுத்திருப்பதையும் வாளேந்திய ஒரு வீரன் ஒருவன் பக்கத்தில் நிற்பதையும் கண்டு வந்தியத்தேவனைக் குற்றவாளி என்று எண்ணி சூழ்ந்து கொண்டு பிடித்தனர். வியந்துபோன வந்தியத்தேவன் அமைதியாக வாலிபன் இருந்த இடத்தை நோக்கினான். மற்றவர்கள் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
வாலிபன் மெல்லக் கண்விழித்தான்.
வந்திருந்த வீரர்கள்..
‘வட திசை மாதண்டநாயகன்..
பட்டத்து இளவரசர்..
ஆதித்தகரிகாலர்!
வாழ்க! வாழ்க!!’
என்று கோஷம் எழுப்பியது வந்தியத்தேவனை வியக்க வைத்தது. வீரர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் அருகில் வந்து “இளவரசே! உங்களுக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே? இந்த வாலிபன் உங்களைத் தாக்க முயன்றானா? சொல்லுங்கள்! உடனே இவனை எமலோகத்திற்கு அனுப்புகிறேன்!” என்றான்.
ஆதித்த கரிகாலன் முதலில் கட்டுண்ட வந்தியத்தேவனைப் பார்த்துப் பின் தண்ணீரை நோக்கினான். இரத்தச் சிவப்பாக மாறியிருந்த இடத்தில், செத்த புலி திடீரென அடியிலிருந்து தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்து மிதந்தது. வேல் புலியின் கழுத்திலே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். அதற்குள் எங்கிருந்தோ வந்த பறவைகள் கூட்டம் புலியை மொய்க்க ஆரம்பித்தன. நடந்ததை புரிந்து கொண்ட கரிகாலன் காவலர்களை நோக்கி வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்க்குமாறு கட்டளையிட்டு, மெல்ல எழுந்து எல்லோரையும் விலக்கி வந்தியத்தேவன் அருகில் செல்லத் தலைப்பட்டான். உடன் வந்த காவலர்கள் தலைவன் விரைந்து சென்று வந்தியத்தேவனின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு மன்னிப்புக்கோரும் பாவனையில் தலைதாழ்த்திச் சொல்லிவிட்டு தன் வீரர்களுடன் சிறிது தூரம் தள்ளிச் சென்றான்.
அதற்குள் வந்தியத்தேவனின் அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டு “நண்பா! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” என்று கரிகாலன் கனிவுடன் கேட்டான்.
“பெயர் வந்தியத்தேவன்..”என்று ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை. அதற்குள் கரிகாலன்,
“ஆகா!வல்லவரையன் வந்தியத்தேவனா? உன்னைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தெரியும்! கந்தமாறன் என்னிடம் உன் வீரத்தைப் பற்றிப் புகழ்ந்து தள்ளியிருக்கிறான். அதை, அறிமுகமாகுமுன்பே, என் முன்னாலேயே நிரூபித்துவிட்டாயே! குறி தவறாமல் வேலை புலி மேல் பாய்ச்சி என் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் அல்லவா!” அதிலும் என்ன ஒரு வேகம்.. என்னவொரு குறி.. அபாரம் நண்பா.. அபாரம்!” என்றான்.
“இளவரசே!தக்க சமயத்தில் சந்தர்ப்ப இடத்திற்கு என்னால் வந்ததினால் இதை சாதிக்க முடிந்தது. என்னுடைய இடத்தில் யாராய் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றான் வந்தியத்தேவன்.
“நல்ல அறிவும், வீரமும் உள்ள உன்னிடம் மிகுந்த பணிவும் காணப்படுகிறது. அது உன் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது நண்பா!” என்று கரிகாலன் பதில் கூறினான்.
“வீரமும், விவேகமும் பணிவும் என் பெற்றோர்கள் சின்ன வயதிலேயே எனக்குப் புகட்டியிருக்கும் விஷயங்கள். ஆனால் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை இளவரசே..!” என்று சொல்ல ஆரம்பித்த வந்தியத்தேவன் முடிக்கவில்லை.
கரிகாலன் அவன் பேசுவதைத் தடுத்து “ஆம்! நண்பா அறிவேன். ம்.. கவலையை விடு. நீ இழந்த வாணகப்பாடியை மறுபடியும் அடையலாம்! நீ மேலும் என் பொருட்டு சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கின்றன! வா. பாசறைக்குச் சென்று மற்றவைகளைப் பற்றிப் பேசலாம்” என்று வந்தியதேவனின் தோள்களில் கையைப் போட்டு, குதிரைகளினருகே சென்று வீரர்களிடம் ‘போகலாம்’ என்பதை கையை உயர்த்தி, மறுபடியும் முன்னால் தாழ்த்தி செய்கை மூலம் உணர்த்தினான். அனைவரும் புரவிகளில் ஏறிப் பாசறைக்கு விரைந்து சென்றனர்.
இப்படியாக ஆரம்பித்த அவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்த வந்தியத்தேவனின் தீரமான வீரச்செயல்களாலும் யாரையும் ஈர்த்துச் சிரிக்க வைக்கும் வாக்குச் சாதுர்யங்களினாலும், கரிகாலனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானான். அவன் இட்ட பல வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தான். கரிகாலனின் சகோதரி இளைய பிராட்டி, குந்தவையின் காதலைப் பெற்றான். பிற்காலத்தில் ராஜராஜன் என்று சரித்திரத்தில் புகழ் பெறப்போகும் கரிகாலனின் சகோதரன் அருள்மொழியின் ஒப்பிலா நட்பைப் பெற்றான்.
இந்த நிலை வெகுகாலம் நீடிக்கவில்லை. காரணம் கரிகாலன் தன் பதினெட்டாம் வயதில் பாண்டியர்களுடன் நடத்திய போரில் வீரபாண்டியனின் தலையைக் கொய்து வெற்றி பெற்றான். கோபம் அடைந்த பாண்டியனைச் சேர்ந்த ஆபத்துதவிகளான வீரபாண்டியனின் மகள் நந்தினி மற்றும் ரவிதாசன், கருத்திருமன் போன்றோர் கரிகாலனையும் சோழர் குலத்தையும் வேரோடறுத்துப் பாண்டிய நாட்டை மீண்டும் ஸ்தாபிக்க சபதம் எடுத்தனர்.
வந்தியத்தேவன் கரிகாலனைச் சேர்ந்த சில காலத்தில் இந்தச் சதிச்செயலைப் பற்றிய செய்தியை ஓரளவு புரிந்து கொண்டான். கரிகாலனை கண்ணும் இமையுமாக கண்காணித்து வந்தான். ஆனால்.. விதி வலியது. சதிகாரர்கள் வெற்றி பெற்று கரிகாலனை மர்மமான முறையில் கொன்றார்கள். கரிகாலனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் மேல் விழும்படியான சூழ்நிலையை வேறு உருவாக்கியிருந்தார்கள். பழி அவன் மேல் விழுந்தது. வல்லவரையன் தஞ்சைப் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். உண்மையான குற்றவாளி அவன் அல்ல என்ற உண்மை நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான்.
சுந்தர சோழருக்குப் பிறகு உத்தம சோழர் அரச பதவியை ஏற்றார். வந்தியத்தேவன் செய்த சேவைகளைப் பாராட்டி வாணகப்பாடியை திரும்பவும் பெற்று வல்லத்து குறுநில மன்னன் ஆகினான். மேலும் ஈழத்தின் புது சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். பதவியை ஏற்குமுன் வல்லத்து மாளிகைகளை நிர்மாணம் செய்வதில் தற்சமயம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் வல்லத்திலிருந்து குடந்தை வழியாகத்தஞ்சை செல்லும் போதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
தொடரும்