அந்த நீண்ட தெருவில் வழக்கம்போல் இரண்டு மூன்று தடவைகள் அவன் நடந்து கொண்டிருந்தான். பஸ் போக்குவரத்தும், நெரிசலும் மிக்க தெருதான் அது. களை இழந்திருந்தது அவன் முகம். குறிப்பாக ஒரு வீட்டைப் பார்த்து சில தருணங்கள் பெருமூச்சுவிட்டபடி, தயங்கி தயங்கித்தான் நடந்து சென்று கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஓராண்டு ஓடிவிட்டது. முன்புபோல் அவன் இல்லை. அவனால் அவன் குடும்பத்தில் நிம்மதி இல்லை. அவன் வீடும் அந்த நீண்ட தெருவிலிருந்து சில தெருக்கள் தாண்டி உள்ளது.

எப்போதும் உற்சாகத்தோடும், கலகலவென்று பேசியபடியும் இருந்த அவன் மனநிலை ஏன் இப்படி மாறிப்போயிற்று?அன்று மட்டும் அந்தச் சம்பவம் நடக்காமலிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று தோன்றியது.
திரும்பவும் அவன் நடக்கத் தொடங்கினான். அந்த வீட்டிற்குள் நுழைந்து அவர்கள் முன் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.
அப்படி நினைத்து அவன் தயங்கித் தயங்கியே அந்த வீட்டை நெருங்கி விட்டான். ஆனால் அவனுக்குத் தைரியம் இல்லை. வீட்டின் கதவைத் தட்ட மனமில்லை. வீட்டில் உள்ளவர்களைக் கூப்பிட்டுச் சொல்ல அவனால் முடியாது என்றும் தோன்றியது. பின் ஏதோ முடிவுக்கு வந்ததுபோல் அந்தத் தெருவைத் தாண்டி தன் வீட்டிற்குச் சோர்வுடன் திரும்பிவிட்டான்.
வீட்டிற்கு வந்தவனைப் பார்த்து, அவன் மனைவி பிரேமா கேட்டாள்.
“என்ன அங்கே போயிருந்தியா?” என்று கேட்டாள்.
“போக முடியவில்லை,” என்றான் சோர்வாக.
“ஏன்?”
“என்னால முடியலை.”
பிரேமா அவனைப் புரிந்து வைத்திருந்தாள். அவன் ஆட்டோ ஓட்டி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகிறது. அவள்தான் அந்தக் குடும்பத்திற்காக வண்டியை ஓட்டிக்கொண்டு செல்கிறாள். குடும்பத்தை காப்பாற்றுவதற்கு அதைவிட வேற வழி இல்லை என்று தோன்றியது.
“ஒருமுறை அவர்களைப் பார்த்தால், எல்லாம் சரியாயிடும்,” என்றாள் அவள் திரும்பவும்.
“அவர்கள் என்னை மன்னிப்பார்களா?”
“ஒரு வருடம் முடிந்துவிட்டது. அவர்கள் துக்கம் போயிருக்கும்.”
“நீ சொல்றே..ஆனா, பாக்க தைரியம் வரலை.”
“நானும் வரேன். ரெண்டு பேரும் போய்ப்பார்ப்போம்,”
என்றாள் பிரேமா.
அவன் அவளை தீர்க்கமாகப் பார்த்தான். அவளுடைய மன உறுதி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“வெள்ளிக்கிழமை போகலாம்,” என்றாள் அவள் திரும்பவும்.
அதைக் கேட்டவுடன் உற்சாகமான மனநிலை சிறிது சிறிதாக அடைவதுபோல் தோன்றியது. அவளைப் பார்த்து,
“இன்னிக்கு நான் வண்டியை ஓட்டறேன்,” என்றான்.
அவளுக்குத் தாங்கமுடியாத சந்தோஷமாக இருந்தது.
“ஜாக்கிரதையாய் வண்டியை ஓட்டு,” என்று அவனிடம் சாவி கொடுத்தாள்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆயிற்று அவன் வண்டியைத் தொட்டு. ‘சாமியைக் கும்பிட்டு விட்டு, வண்டியை ஓட்டத் தொடங்கினான். அவன் வண்டியை எடுத்துக்கொண்டு தெருமுனையில் திரும்பும்வரை பிரேமா காத்திருந்தாள். அவளை அறியாமலே பெருமூச்சொன்று வெளிப்பட்டது. அன்று முழுவதும் அவன் மனநிலை உற்சாகமாக இருந்தது.
*************************
பேய் மழை அடித்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. சென்னையில் பொதுவாக மழை பெய்வது அரிது. ஆனால் அன்று புயல் சின்னம் உருவாகி மழை வலுத்து, தெருவெல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீண்ட நீண்ட மரங்களெல்லாம் தெருவில் அஙகங்கே சாய்ந்து கிடந்தன. மழையின் வெறுட்டலால், பல அலுவலகங்கள் சீக்கிரமாக மூடிவிட்டன. ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விளக்குகளும் எரியவில்லை. சாம்பசிவம் வழக்கம்போல் தன் அலுவலகத்தில் உள்ளவர்களை சீக்கிரமாகக் கிளம்பிப் போகச் சொல்லிவிட்டார். அவரும் அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டுக் கிளம்பினார்.

எப்போதும் இதுமாதிரியான தருணங்களில் பஸ்கள் நகரத்தில் ஒத்துழைப்பதில்லை. அவர் அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்து, பஸ்ஸிற்காகக் காத்திருந்து பஸ்ஸையும் பிடித்து வளசரவாக்கத்தை நோக்கிக் கிளம்பிக்கொண்டிருந்தார்.
அவர் இறங்க வேண்டிய இடத்தில் பஸ் நின்றதும், அவர் வழக்கம்போல் எப்போதும் மருந்து வாங்கும் கடைக்குள் சென்றார். கையில் ஒரு பக்கம் குடையைப் பிடித்துக்கொண்டு, வாங்க வேண்டிய மருந்துகளைக் காசு கொடுத்து வாங்கிக்கொண்டார். மழையோ கொட்டு கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. சென்னையில் இதுமாதிரி ஆவேசத்துடன் மழை பெய்தால்தான் தண்ணீர் பிரச்சினை தீருமென்று அவருக்குத் தோன்றியது.
மருந்துக்கடைக்குப் பக்கத்திலேயே புகழ்பெற்ற அந்த இனிப்பகம் இருந்தது. இனிப்பகத்திலிருந்து பேரனுக்குப் பிடித்த காரசேவையை கால் கிலோவிற்கு வாங்கிக்கொண்டார். எல்லாவற்றையும் பையில் அடுக்கிக்கொண்டு கடையைவிட்டுத் தெருவில் நடக்கக் காலடி எடுத்து வைத்தார். அந்தச் சமயத்தில்தான் அந்த விபரீதச் சம்பவம் நடந்தது.
எதிர்பாராதவிதமாய் சீறிப் பாய்ந்து வந்த ஒரு ஆட்டோ அவர் மீது மோதியது. அவர் தலைகுப்புற விழுந்தார். தெரு ஓரத்தில் இருந்த பிளாட்பாரத்தில் உள்ள கூரான பிளாட்பாரப் படியில் அவர் தலை மோதியது. அவர் நினைவிழந்து கிடந்தார்.
அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது அவன்தான். அவன் அந்த இடத்தை விட்டு கிலியுடன் ஓடிவிட்டான். ஓடிவிட்டாலும் அவன் உள்ளத்தை விட்டு அந்தக் கிலி ஓடவில்லை. ‘அவருக்கு என்ன ஆயிற்று?’ என்ற அங்கலாய்ப்பு அவனைப் பதைக்கச் செய்தது. அங்கேயே இருந்திருந்தால், அங்குள்ளவர்கள் தன்னைக் கொன்று போடுவார்கள் என்ற பயமும் அவனைச் சூழ்ந்து கொண்டது.

சாம்பசிவம் இப்படி தலைகுப்புற விழுந்து கிடந்தது அவர் குடும்பத்தினருக்குத் தெரிந்து, அவர் வீட்டில் உள்ளவர்கள் பதைபதைக்க ஓடிவந்து, அவரை அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவருடைய பையன்களுக்கு ஆட்டோ இடித்துவிட்டது என்ற தகவல் மட்டும் தெரியும். எந்த ஆட்டோ இடித்தது என்பது தெரியாது. சிலமணி நேரங்களில் சாம்பசிவம் இறந்து விட்டார். எதிர்பாராத மரணம் ஏற்படுத்திய துயரம் அந்தக் குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டது. அச் சம்பவம் அந்தக் குடும்பத்திற்குத் தீராத துக்கமாகவும் மாறி விட்டது.

அவனுக்கு அவர் இறந்த செய்தி தெரிந்தபிறகு, நிம்மதியில்லாமல் தவித்தான். அவன் ஆட்டோ ஓட்ட வந்த நாளிலிருந்து இதுதான் முதல் கோர விபத்து. பல ஆண்டுகளாக அவன் மிக ஜாக்கிரதையாக ஓட்டி வருவான். அவனைப் பொறுத்தவரை அவன் நேர்மையாகவே இருக்க முயற்சி செய்தான். அதிகமாக பணம் புடுங்க மாட்டான். அவன் ஆட்டோவில் யாராவது தெரியாமல் பொருட்கள் வைத்துவிட்டுச் சென்றால், உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் முயற்சி செய்வான். அவன் ஆட்டோ ஓட்ட வந்த பல ஆண்டுகளில் ஒருமுறை கூட இதுமாதிரியான கோர விபத்து ஏற்பட்டதில்லை. எல்லோரும் சேர்ந்து நம்மைக் கொன்று போடுவார்கள் என்ற தீராத பயத்தினால், அவன் அங்கிருந்து ஓடி வந்து விட்டான். அதன்பின் அவன் நிம்மதியில்லாமல் தவித்தான். அவனும் அந்தப் பகுதியில்தான் இருந்தான் என்பதால், யார் மீது மோதினோம் என்பதுகூட அவனுக்குத் தெரியும். அவன் வண்டி ஓட்டுவதையே நிறுத்தி விட்டான். ‘நிம்மதி’, ‘நிம்மதி’ என்று நிம்மதியைத் தேடி ஓட ஆரம்பித்து விட்டான். இச் சூழ்நிலையில் பிரேமாதான் அவன் வண்டியை எடுத்து ஓட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறாள். அவனைப் பார்த்துக்கொள்ளும் பெரிய பொறுப்பும் அவளைச் சார்ந்ததாக மாறி விட்டிருந்தது. அவனுக்கு நிம்மதியைத் தரும் விஷயம், அக் குடும்பத்தைப் பார்த்து, அந்தக் கோர விபத்திற்குத் தான்தான் காரணம் என்று மன்னிப்புக் கோர வேண்டும். கடந்த ஓராண்டாக அவன் இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
*****************************
சாம்பசிவம் குடும்பத்திற்கு அவனைத் தெரியாதென்றாலும், இந்தச் சம்பவத்திற்குமுன் அவர் வீட்டு வழியாக அவன் பலமுறை சென்றிருக்கிறான். சாம்பசிவத்தை அவன் முன்பு பார்த்தும் இருந்திருக்கிறான். அவர் குடும்பத்தினரிடம் மண்டியிட்டு, தெரியாமல் நடந்த அந்த விபரீதச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டால்தான் மனம் நிம்மதி அடையும் என்று அவனுக்குத் தோன்றியது. தன் முன்னால் தான் நிகழ்த்திக் காட்டிய மரணம் என்று அவனுக்குத் தோன்றியதால், அவன் நிம்மதி பறிபோனதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விபத்தால் மட்டும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். விபத்தால் முக்கியமானவர்களை இழந்து நிற்கும் ஒவ்வொரு குடும்பமும் தடுமாறாமல் இல்லை.
சமீபத்தில் எங்கள் வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் பஸ்கள் திரும்பும் தெருமுனையில் நின்றுகொண்டு செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அரசாங்க பஸ் ஒன்று திரும்புகிற வேகத்தில் அவரை அடித்துவிட்டது. அந்த இடத்திலேயே அவருக்கு மரணம். அவரை இழந்து நிற்கிறது அவரது குடும்பம். இன்னும் சில மாதங்களில் அவருடைய பெரிய பெண்ணிற்குத் திருமணம் நடக்க உள்ளது. இதை எப்படி விவரிப்பது என்பது தெரியவில்லை. செல்ஃபோன் மூலம் மரணத்தை வரவழைத்துக்கொண்டார் என்று கூடச் சொல்லலாம்.
சமீபத்தில் ‘தீம்தரிகிட’என்ற ஞாநியின் அக்டோபர் 2004 மாத இதழைப் படித்தேன். அதில் டைரி என்ற பகுதியில் ஞாநி எழுதிய ஒரு பகுதியை இங்கு தருகிறேன்.
‘இளமையில் வறுமையை மீறி படித்து வாழ்க்கையில் உயர முற்படும் இளம் உயிரை மரணம் பறிப்பது அதிலும் பெரும் கொடுமை. திரைப்படக் கல்லூரியில் என் மகனின் வகுப்புத் தோழனாக இருந்த நரசிம்மன் என்ற மாணவர் ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ராஜபாளையத்தில் ஏழைக் கூலித் தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த நரசிம்மன் விடுமுறை நாட்களில் ஊரில் டிராக்டர் ஓட்டி, வேறு வேலைகள் செய்து வீட்டுக்கும் உதவி, தன் கல்விச் செலவையும் சமாளிக்கப் பாடுபட்டு வந்தவர். மரணச் செய்தியை அவர் தாயாருக்குத் தெரிவித்தபோது, உடலைக் காண்பதற்கு சென்னை வர பஸ் கட்டணத்துக்குக் கூட காசில்லாத நிலை. “அங்கயே புதைச்சிட்டு புதைச்ச மண்ணையாச்சும் எனக்குக் காட்டுங்க,”என்று அழுதாராம்.
மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி எப்படி உருக்கமாக இருக்கிறது. இது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை. இந்த விபத்திற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகிவிட்டவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும். உண்மையில் ‘விபத்தில் கொல்லப்பட்டார்’ என்ற வார்த்தையை ஞாநி பயன்படுத்தியிருக்கிறார். கொல்லப்பட்டார் என்றால் கொலை குற்றம் செய்தவர்களாவார்கள் வாகன ஓட்டிகள். அப்படி குறிப்பிட முடியுமா என்ன?
நம் கதையில் வருகிற முக்கியமான கதாபாத்திரம், வெள்ளிக்கிழமை அன்று பிரேமாவுடன் சாம்பசிவம் வீட்டிற்குச் செல்லலாமென்று நினைத்திருந்தான். அவனை அறியாமல் ஒருவித பரபரப்பு நீடித்துக் கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் காலை பத்து மணிக்குமேல் அந்தத் தெருவில் உள்ள அந்த வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிறிது தூரத்திலிருந்து அந்த வீட்டைப் பார்த்தபோது, அவர்கள் வீட்டிலிருந்த கடைசிப் பையன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருந்தான். தெருவில் அந்த வண்டி மறைந்தவுடன், அவர்கள் இருவரும் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
கதவைத் தட்டியபடி வாசலில் நின்றிருந்தார்கள். சாம்பசிவம் மனைவி கதவைத் திறந்து வெளியே நின்றிருந்த அவர்களைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
“நீங்கள் யார்?”
அவனுக்கு சாம்பசிவம் மனைவியைப் பார்த்தவுடன் குற்ற உணர்ச்சி தலைதூக்கி நின்றது. தலைமுதல் கால்வரை உடலில் ஒருவித நடுக்கம் உருக்கொண்டது.
“அம்மா, உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்,” என்று நாக்குழறி அவன் பேச ஆரம்பித்தான். சாம்பசிவம் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்குமுன் அவர்களை எங்கோ பார்த்த மாதிரி ஞாபகத்திற்கு வந்தது.
“ஒரு நிமிஷம் நாங்கள் உள்ளே வரலாமா?” என்று விண்ணப்பித்துக் கொண்டாள் பிரேமா.
சற்று தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தாள் சாம்பசிவம் மனைவி.
“ஓராண்டுக்கு முன்னால் ஒரு சம்பவம் நடந்தது, தெரியுமா?” என்று பேச்சை ஆரம்பித்தாள் பிரேமா.
சாம்பசிவம் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சம்பவம்?”
பிரேமாவிற்கும், அவனுக்கும் எப்படிச் சொல்வது என்பதில் தயக்கமாக இருந்தது.
“உங்க வீட்டுக்காரர் ஒரு ஆட்டோ விபத்தில் இறந்து போனாரே, ஞாபகத்தில் இருக்கிறதா?”
“ஞாபகத்திலிருக்காவா? அது எங்கே மறந்து போகும். கொடூரமான சம்பவம் ஆயிற்றே அது,” என்று தொண்டை கமறச் சொன்னாள் சாம்பசிவம் மனைவி.
“அந்தச் சம்பவம் நடக்கக் காரணமானவர் இவர்தான்,”என்று கூறி பிரேமா அவனைக் காட்டினாள்.
சாம்பசிவம் மனைவி ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் தாடியுடன் களை இழந்து காணப்பட்டது.

அந்தச் சம்பவம் நடந்த அன்று அவளுடைய கடைசிப் பையன், ‘அந்த ஆட்டோக்காரன் மட்டும் என் கையில் கிடைத்தால், கொல்லாமல் விடமாட்டேன்,’ என்று கதறி அழுதது ஞாபகத்திற்கு வந்தது.
“நல்லகாலம் என் கடைசிப்பையன் இப்பத்தான் கிளம்பிப்போனான்…அவன் இருக்கும்போது வராமல் போனீர்களே?”
“அம்மா, என்னை மன்னிசிடுங்கம்மா…அன்னிக்கு வேணும்னு இடிக்கலை..நல்ல மழை..இருட்டு..தெருவில லைட்டெல்லாம் போயிடுச்சு.. சாமி அப்பத்தான் கடையில எதையோ வாங்கிட்டு பிளாட்பாரம் பக்கம் வந்திருக்காங்க..வண்டியில பிரேக் சரியில்லாம பேலன்ஸ் போயிடுத்து..அதுதான் இடிச்சுட்டேன்… அன்னிலிருந்து நிம்மதி இல்லாம தவிக்கிறேன்…உங்களிடம் மன்னிப்புக் கேட்க வந்திருக்கேன்,” என்று கூறியவன், சாம்பசிவம் மனைவி காலில் விழுந்து நமஸ்காரம் செய்தான்.
ஒரு வினாடி சாம்பசிம் மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ஆட்டோ டிரைவர் தான் செய்த மகா தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதா? அவளுக்குப் பதட்டமாக இருந்தது.
“நான் அப்பவே போலீசுகிட்டே சரண் அடைஞ்சிருக்கலாம். ஆனா எனக்குத் தைரியம் வரலை. என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு..”
“இப்ப ஏன் வந்து சொல்றே?” என்றாள் கோபத்துடன் சாம்பசிவம் மனைவி.
“நான் சொல்லாட்டி நிம்மதியாய் இருக்க முடியாது. அதான் சொல்றேன்.”
“என் சின்னப்பையனுக்குத் தெரிஞ்சா ஒன்னை சும்மா விடமாட்டான்.”
“அம்மா, எனக்கு என்ன ஆனாலும் சரி. கடந்த ஒரு வருஷமா இந்தச் சம்பவத்தை மனசுக்குள்ள வைச்சு சிலுவையில சுமக்கிற மாதிரி சுமந்து கொண்டிருக்கிறேன்….உங்க சின்னப் பையன் என்னைக் கொன்னுட்டா அந்தப் பாரம் கொறஞ்சுடும்..”
சாம்பசிவம் மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அந்தச் சம்பவம் நடந்த அன்றைக்கு அவன் அவளிடம் இதைச் சொல்லியிருந்தால், அவளே அவனைக் கொன்னுருப்பாள். அவ்வளவு ஆவேசத்துடன் இருந்தாள். ஆனால் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு முடிந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அது மறக்கடிக்கப்பட்ட கசப்பான சம்பவமாக மாறி வருகிறது.
“இரு,”என்று அவர்களை உட்கார வைத்துவிட்டு, உள்ளே சென்று அவர்கள் இருவருக்கும் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
“இதைக் குடியுங்கள்,”என்றாள்.
அவர்களுக்குத் திகைப்பாக இருந்தது. மோரைக் குடித்தார்கள்.
சாம்பசிவம் மனைவி சொன்னாள் :
“ஓராண்டுக்குமுன் நடந்த கோர சம்பவம் இது. அந்தத் துக்கத்தை அப்போதே அழுது தீர்த்தாயிற்று. இனி துக்கப் படுவதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையில் எந்தக் குடும்பத்திற்கும் இதுமாதிரி கோர விபத்தால் மரணம் நிகழக்கூடாது..விதி..ஏதோ நடந்து விட்டது? அதுக்குக் காரணமா நீ இருந்துட்டே..என்ன செய்ய முடியும்? நீ இவ்வளவு தூரம் வந்து மன்னிப்புக் கேட்கறதே பெரிய விஷயமா இருக்கு..நான் மன்னிக்க ஒண்ணுமில்லை..அன்னிக்கு உன்னைப் பாத்திருந்தா நானே உன்னை கொலை செய்யற அளவிற்கு வெறியோட இருந்திருப்பேன். உன்னை பழி வாங்கினா நடந்தது சரி ஆயிடுமா? இதைப் பத்தி பெரிசா நினைக்காம நீ போகலாம்.. வருத்தப்படாதே.. பழையபடி வண்டியை ஓட்டு. ஆனா வண்டி ஓட்டறதுக்கு முன்னாடி உனக்கு சாமி பக்தி இருந்தா, வேண்டிட்டு ஓட்டு.. உனக்கு சாமி பக்தி இல்லாட்டி, ஒருவினாடி வண்டியை ஓட்டறதுக்கு முன்னாடி கண்ணை மூடிக்கிட்டு நல்லபடியா யார் மீதும் வண்டியை இடிக்காம ஓட்டணும்னு மனசுக்குள்ளவாவது நினைச்சுக்கோ.. “
சாம்பசிவம் மனைவி பேசியதைக் கேட்டு, அவர்கள் இருவரும் திகைத்து விட்டார்கள். அவள் இப்படிப் பேசுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டபடி அவனைத் திட்டித் தீர்ப்பாள் என்றுதான் நினைத்தார்கள். ஏன் எதாவது அசாம்பாவிதம் நடந்தாலும் நடக்கும் என்றும் நினைத்தாள்.
கண்களில் குளம்போல் நீர் நிரம்ப, அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.