
பஸ் ஓட்டல் வாசலில் நின்றது. இருவரும் இறங்கினார்கள். அவள் கண்கள் கலங்கி இருந்தன . படப்படப்பும், பயமும் சேர்ந்து வெளிப்பட்டன. சாலையைப் பார்த்துக் கடந்தனர். அவன் அவள் கைகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டான்.
“பயமாக இருக்கிறது, ராம்” என்றாள் நடுங்கும் குரலில்.
அவனுக்கும் பயம் தெரிந்தது. தவறு செய்து விட்டோம் என்ற உறுத்தல் மனசை நெருடியது.
“பயப்படாதே, மாலினி” என்றான்.
“எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ?”
“ஒன்றும் ஆகாது”
“உன்னை நம்பலாமா?”
“நம்பு. உனக்கு ஒன்றும் ஆகாது. நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம்.”
கஸ்தூரிபாய் தெருவின் முனையில் இருந்தது அந்த மருத்துவமனை. தயங்கியபடி அவர்கள் நடந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் மருத்துவமனையில் கூட்டம் வழியும். வருபவர்கள் தங்கள் முறைக்காகப் பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவன் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டு, கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. கர்ச்சீப்பால் கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டாள், சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களாவென்ற அச்சம் இருந்தது. உள்ளே உட்கார இடமில்லாததால், நின்று கொண்டிருந்தனர். மருத்துவரிடம் அனுப்பும் உதவியாளனிடமிருந்து தன் முறைக்கான டோக்கனை வாங்கிக் கொண்டான்.
“இன்னும் எத்தனை நேரம் ஆகும்?”
“ஒரு மணி நேரமாகும்”
“சரி நாங்கள் ஒரு மணி நேரம் கழித்து வரட்டுமா?”
உதவியாளன் தலை ஆட்டினான். இருவரும் மருத்துவமனையிலிருந்து விலகித் தெருவிற்கு வந்தனர்.
“ஒண்ணும் ஆகாதே, ராம்ý”அழுகையை அடக்க முடியாமல் அவள் கேட்டாள்.
“ஒண்ணும் ஆகாது, ஒண்ணும் ஆகாது, நீ தைரியமாக இரு”
“ஏன் இப்படியெல்லாம்?”
“ஆசைப்பட்டதால். அந்த ஓட்டலுக்குப் போவோம். ஏதாவது சாப்பிடுவோம். பேசிக்கொண்டிருப்போம். டாக்டரைப் பார்க்கப் போகும்போது, இப்படி அழுதுகொண்டே போகக்கூடாது.”
“ஜாக்கிரதையாக இருக்கத் தவறிவிட்டேன்.”
“உன் மேல் எந்தத் தவறும் இல்லை”
“நம் இருவர் மேலும்”
“நம்மைப் படைத்த ஆண்டவன் மேலதான்”
இப்படிச் சொல்லிவிட்டு அவன் அவளைப் பார்த்தான். பொதுவாக ராம் இப்படிப் பேசுவதை அவள் விரும்புவாள். இப்போது அவள் முகத்தில் சிரிப்பு வரவில்லை.
“நீ இப்படிப் பேசியே உன் காரியத்தை முடித்துக்கொண்டாய்” என்றாள் வெறுப்புடன்.
அவன் முகபாவம் ஏதோ குற்றம் செய்தவன்போல் மாறியது, ஓட்டல் வாசலில் ஒரு பிச்சைக்காரி அவளுடைய சோனிக் குழந்தையை மார்பில் அணைத்தபடி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் குழந்தை கண்களை உருட்டி வினோதமாகப் பார்ப்பதுபோல் பட்டது.
“இவள் யாரிடமாவது ஏமாந்து இருப்பாளா?” என்றாள் மெல்ல முணுமுணுத்தபடி.
“உனக்கு இன்னும் பயம் தீரவில்லை. என்னை நீ அதுமாதிரி நினைக்காதே” என்றபடி பிச்சைக்காரிக்குத் தன் பாக்கெட்டிலிருந்து காசை எடுத்துப் போட்டபடி ஓட்டலுக்குள் அவளுடன் நுழைந்தான். இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்தனர். அப்படி அமருவது அவனுக்குப் பிடிக்கும்.
“நீ என்னை ஏமாற்றிவிட்டால், உயிரோடு இருக்க மாட்டேன்” என்றாள் கண்ணீர் பொங்க. அவள் குரலில் உறுதி.
“சமீபத்தில் பேப்பர் படிச்சியா? அந்தப் பெண் போல நீ இருக்கணும்.”
“நான் நான் மாதிரிதான் இருக்க முடியும். இன்னொருவர் மாதிரி இருக்க முடியாது, இன்னும் என் வீட்டில் யாருக்கும் தெரியாது. தெரிந்தால் குடலை உருவிப் போடுவார்கள்.”
“அவர்கள் உன்னைப் பார்த்து சந்தேகப்படலையா?”
“அம்மாவுக்கு சந்தேகம். பொய் சொல்லி மூன்று நாள் ஒதுங்கி இருப்பதுபோல் ஏமாற்றிவிட்டேன்.”
சாப்பிடுவதற்கு என்ன வேண்டுமென்பதை சர்வரிடம் தெரிவித்தாள். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு,“என் உயிருள்ளவரை உன்னைக் கைவிடமாட்டேன்” என்றான் உணர்ச்சி பொங்க.
“நீ இப்படிப் பேசித்தான் என்னை ஏமாத்திட்டே.”
“உன்னை ஏமாத்தல. இன்னும்கூட உன் மேல் அன்பு அதிகம். அது மாறாது. எந்தச் சக்தியாலும் மாற்ற முடியாது.”
“சினிமா வசனம் போல இருக்கு, ராம்”என்றாள் அவள் வெடுக்கென்று.
“நான் பேசுவது அப்படித்தான் இருக்கும். சினிமா வசனங்கள் நம்மைக் கெடுத்துவிட்டன.”
“ராம் இதெல்லாம் எளிதாக முடிந்து விடுமா?”
“எளிதாக முடியும், மாத்திரை கொடுத்துக் கலைத்து விடுவார்கள். ஆனால் நீ பயப்படாமல் தைரியமாக இருக்கவேண்டும்.”
“ஏன் இது மாதிரியெல்லாம் ஆக வேண்டும்?”
“நாம் அவசரப்பட்டு விட்டோம். புத்திசாலித்தனமாய் இருந்திருக்கலாம்.”
“உனக்கு எப்போதும் என் உடல் மீதுதான் கண். அன்பு இல்லை.”
“தப்பாச் சொல்றே மாலினி. உன்னை நேசிக்கிறேன். உலகத்தில் எதற்கும் ஈடு இணையில்லாத நேசம் இது.”
“திரும்பவும் சினிமா வசனம்.”
“அப்படித்தான் தோணும். தைரியமாக இரு மாலினி. பயப்படாதே.”
குறித்த நேரத்தில் அவர்கள் இருவரும் மருத்துவரைச் சந்தித்தனர். கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொண்டிருந்த அவள், பெண் மருத்துவரைப் பார்த்தபோது நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தாள்.
“உன் பெயர் என்ன?”
“மாலினி.”
“இவர் என்ன வேணும்?”
மாலினிக்கு உடல் வேர்த்தது. பதில் சொல்லத் தெரியாமல் நாக்குழறியது. ஏதோ தப்பு செய்துவிட்டதுபோல் பயம். கண்களிலிருந்து கண்ணீர் சுரக்கத் தயாராக இருந்தது. ராம் நிதானமிழந்து காணப்பட்டான்.
“என்ன பதிலே சொல்லமாட்டேங்கறே?”
“நான் சொல்றேன் டாக்டர், நானும் இவளும் ஒரே கல்லூரியில் ஒரே குரூப்பில் படிக்கிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் இதுமாதிரியான தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிட்டது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும்.”
பெண் மருத்துவருக்கு எல்லாம் புரிந்து விட்டது. சமீபகாலங்களில் இது மாதிரியான சம்பவங்களை அதிகமாக அவள் சந்திக்கிறாள். அவனைப் பார்த்து,
“நீ வெளியில் போய் நில். நான் இவளைச் சோதிக்க வேண்டும்.” அவன் அந்த இடத்தை விட்டுப் போனபின், பெண் மருத்துவர் அவளைக் கேட்டார்.
“எத்தனை நாள் தள்ளிப் போச்சு”
“45 நாட்களுக்கு மேல்”
“நீ ஏன் புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளவில்லை?”
ஏதாவது பேசினால் பெரிதாக வாய்விட்டு அழுதுவிடுவாள் போலிருந்தாள்.
“அமைதியாய் இரு. அழாதே. உன் உடல்நிலை பாதிக்கும்.”
அமைதி ஆனாள்.
“நீ என்ன படிக்கிறே?”
“பி.எஸ்.ஸி.”
“உன் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது”
“இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எல்லாமே அவசரம்.”
“டாக்டர், இதை எப்படியாவது எடுத்து விடுங்கள். உங்களைக் கையெடுத்துக் கும்பிடறேன்.”
“கவலைப்படாதே! அந்தப் பெஞ்ச் மீது ஏறிப் படுத்துக்கொள்.”
காரணமில்லாத படபடப்புடன் பெஞ்ச் மீது ஏறிப்படுத்துக் கொண்டாள்.
பெண் மருத்துவர் கையில் உறையை மாட்டிக் கொண்டு, அவளைப் பரிசோதித்தாள். மாலினி அதிகமான திகைப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.
பரிசோதனைக்குப் பின், பெண் மருத்துவர் தன் இடத்தில் வந்தமர்ந்தார். மாலினி தன் உடைகளைச் சரிசெய்துகொண்டு எதிரில் அமர்ந்தாள்.
“நீ ஜாக்கிரதையாய் இருக்கணும். உடம்பைப் புஷ்டியாக வைத்திருக்கணும். இளைத்துப் போயிருக்கிறாய்.”
“டாக்டர், இதை எப்படியாவது தடுக்க வேண்டும். முடியுமான்னு சொல்லுங்க.”
“உன் உடம்பு பலவீனமா இருக்கு… சோதித்துப் பார்த்தா நல்லா வளர்ந்த மாதிரி தெரியுது.”
“டாக்டர்”… மாலினி பெரிதாக அழத் தொடங்கினாள்.
“கவலைப்படாதே, ஊசி போடறேன். ஒரு வாரத்திலே கலைந்து போகலாம். போகலைன்னா டிஅண்.ஸி பண்ணிடலாம். பயப்படாதே!”
ஊசி போட்டபடி பெண் மருத்துவர் சொன்னார். “இந்த முறை சரி பண்ணலாம். கல்யாணத்துக்கு முன் இதெல்லாம் தப்பு. ஜாக்கிரதையாய் இருக்க எத்தனையோ வழி இருக்கு. ஏதாவது ஆச்சுன்னா உன்னைக் கல்யாணம் பண்ணிப்பானா?”
“அப்படித்தான் சொல்றான்.”
“தைரியமாய் இரு… பார்க்கலாம்”
மருத்துவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு, மாலினி மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தபோது ராம் அவளைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.
“என்ன ஆச்சு?”
அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. காரணம் புரியாத கோபம். கெட்ட வார்த்தையில் அவனைத் திட்ட வேண்டும் போல் தோன்றியது.
“ஊசி போட்டிருக்கார். ஒரு வாரத்தில் தெரியுமாம்” என்றாள் விரக்தியுடன்.
“மாலினி, பயப்படாதே! தைரியமாய் இரு. உனக்காக சாமியை வேண்டிக்கறேன்.ýý
üüராம் என்னைக் கைவிடமாட்டியே?”
“நிச்சயமாய், இதையும் மீறிப்போனா உன்னைக் கல்யாணம் செய்துப்பேன். என் அன்பு தூய்மையானது”
“நீ பொய் சொல்றே. உனக்கு… உனக்கு என் உடம்பு தேவை.”
“நிச்சயமாக ஏமாத்தமாட்டேன்” சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு திரும்பவும் கேட்டாள்.
“என்னைக் கல்யாணம் செய்துப்பியா?”
“கட்டாயமாக. யார் தடுத்தாலும் கவலைப்படமாட்டேன். ஆனால் இந்தப் படிப்பு போதாது. வேலை கிடைக்க வேண்டும்”
மாலினி ஆறுதல் அடைந்தவள்போல் தென்பட்டாள். அவள் கைகளைப் பற்றியபடி பேருந்து நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
இருவரும் பஸ் ஏறினார்கள். அவள் வீடு இருக்கும் தெருவை ஒட்டியபடி இருந்த பிரதான சாலையில் பஸ் நின்றது. இறங்கினாள் அவனைப் பார்த்தபடியே, அவள் கண்கள் சோகத்தைக் காட்டின. பஸ் நகர்ந்தபோது வார்த்தைகள் அர்த்தமிழந்து இருந்தன. அவன் கை அசைத்தான். அவளும்தான்.