சரித்திரம் பேசுகிறது! –யாரோ

அசோகர்

pic1

பழைய நாளிதழில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு:

பள்ளி ஆசிரியர் (மாணவனைப் பார்த்து):
        “சொல்.. அசோகர் ஏன் போரை வெறுத்தார்?”
மாணவன்(சினிமா ரசிகன்):
        “எம்.ஜி.ஆரின் அடி தாங்க முடியாமல் சார்!”

அசோகரைப் பற்றிப் பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்களில் படிக்காதவர்கள் வெகு குறைவு.
அவர் – ஒரு கருணை மனம் கொண்ட சக்கரவர்த்தி – புத்த சமயத்தைத் தழுவி – உலகெங்கும் பரப்பிய உத்தமர் – சாலை ஓரம் நிழல் தரும் மரங்கள் நட்டார் – என்று பல விபரங்கள் படித்திருப்போம்.

ஒன்று மட்டும் நிச்சயம்!

அசோகர் போல எந்த ஒரு மன்னரும் தான் எண்ணியதை சரித்திரத்தில் ஆழமாகப் பதிவு செய்யவில்லை. ஸ்தூபிகள், கல்வெட்டுகள் எனப் பலப்பல பதிவுகள்.. அவைகள் எல்லாம் – தான் என்ன சொல்ல விரும்புகிறோமோ அவைகளை (மட்டுமே) பதிவு செய்தன! அதாவது -நம் எம் ஜி ஆர் தன் படங்களில் நல்லவராக நடித்து மக்கள் அபிமானம் பெற்றது போல்.

pic2

(கல்வெட்டு – கிரேக்க மற்றும் அராமைக்(Aramaic) மொழியில்)

pic3

(சாஞ்சி ஸ்தூபி)

நாம் இங்கு காணப் போவது?
அசோகர் போரை வெறுக்கும் முன்பு எப்படி இருந்தார் என்பது பற்றி.

நதி மூலம்… ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பர்.

ஒரு சில அரசர்களின் ‘மூலமும்’ அது போலே.

அதைத் தான் இன்று ஆராய்வோம்!

என்ன.. எனக்குக் குதர்க்க புத்தியா?

அட..சரித்திரம் எழுதத் துணிந்தால்..இதெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டும்!  

pic4

அசோகனின் தாய் எவ்வளவு அழகோ, அசோகனது தோற்றம் அதற்கு நேர் மாறாக இருந்தது. அதன் காரணமாக பிந்துசாரன் அசோகனை அவ்வளவு விரும்பவில்லை.

பிந்துசாரனின் பல மனைவியர்களுக்கு பலப்பல மகன்கள் இருந்தனர். அவர்கள் நூறென்று சில கதைகள் கூறும். பிந்துசாரன் அந்த எல்லா மகன்களின் ஜாதகங்களையும் கணித்து வைத்திருந்தான்.

அசோகன் உஜ்ஜயினி நாட்டுக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான்.

பிந்துசாரனின் மகன் சுசிமா, மூத்தவன். பிந்துசாரனுக்கு விருப்பமானவான்.  பட்டத்து இளவரசன்.  அவன்  தக்ஷசீலத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டான். அங்கு மௌரிய அரசு அதிகாரிகள் செய்த கொடுமைகளால் நொந்த மக்கள் பெரும் புரட்சி நடத்தினர். கலவரங்களில் ஈடுபட்டனர். சுசிமாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாடலிபுத்திரத்திற்குத் திரும்ப அழைக்கப்பட்டான்.

பிந்துசாரன் அசோகனை அழைத்து:

“அசோகா… சுசிமா தக்ஷசீலத்தில் கஷ்டப்பட்டுத் திரும்பி வந்துள்ளான்.”

அசோகன்: “தந்தையே, சுசிமா திறமையற்றவன். அனைவரையும் பகைத்துக்கொண்டால் வேறென்ன நடக்கும்?”

“அப்படியானால் நீ சென்று அந்த புரட்சியை அடக்குகிறாயா?”

“நீங்கள் ஆணையிட்டால் நான் நிச்சயம் செய்வேன்”

அசோகன் விரைந்தான்.

அந்தப் புரட்சியாளர் தலைவர்கள் அவனை எல்லையிலேயே சந்தித்துப் பரிசுகளை அளித்தனர்.:

“மக்கள் அதிகாரிகள் மீது தான் கோபம் கொண்டுள்ளனர். உங்கள் மீதோ மௌரிய அரசு மீதோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நீங்கள் அவர்களை அடக்கினால் எங்கள் புரட்சி அடங்கும்” –என்றனர்.

அசோகன் தக்ஷசீலத்தில் அமைதியை ஏற்படுத்தினான்.

 

பிந்துசாரன் மதகுருவின் பெயர் பிங்களவத்ஸா.

பிந்துசாரன் தன் மகன்களில் எவன் தனக்குப் பிறகு அரசாளப் பெரும் தகுதி கொண்டவன் என்பதைக் கண்டறிய எண்ணம் கொண்டான். அந்த செயலைப் பிங்களவத்ஸாவிடம் ஒப்புவித்தான்.

பிங்களவத்ஸா: “மன்னர் மன்னரே! எல்லா இளவரசர்களையும் தங்களது ‘தங்க’ அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள்”.

பிந்துசாரன் எல்லா இளவரசர்களையும் ‘தங்க’ மாளிகைக்குச் செல்லும்படி உத்தரவிட்டான்.

அசோகன் தயங்கி நின்றான்.

பிங்களவத்ஸா அவனிடம் சென்று ;

“மகனே.. அரசரும் மற்றும் எல்லா இளவரசர்களும் தங்க மாளிகைக்குச் சென்று விட்டனர். நீயும் செல்.”

அசோகன்:

“அரசன் என்னை முழுதும் வெறுக்கிறார். என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  நான் ஏன் அங்கு போகவேண்டும்?”

பிங்களவத்ஸா:

“இருப்பினும் நீ செல்லத்தான் வேண்டும்”

அசோகன்:

“அப்படியானால் செல்கிறேன்”

அசோகன் ஒரு பழைய ராஜகுல யானை ஒன்றில் ஏறித் தங்கமாளிகை சென்றடைந்தான்.

இளவரசர்கள் அனைவரும் விருந்து உண்டனர்.

அசோகன் புழுங்கல் அரிசி சாதத்துடன் தயிர் சேர்த்து மண் பாண்டத்திலிருந்து உண்டான்.  

பிந்துசாரன்:

“குருவே, நீங்கள் தான் இந்தத் தேர்வை நடத்த வேண்டும். எனக்குப் பின் இந்த நாட்டை ஆளத் தகுதி கொண்டவன் யார்”

அடுத்த நாள் அனைத்து இளவரசர்களும் திரும்பினர்.

மன்னன் குருவை அழைத்து : “யார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதாக எண்ணுகிறீர்கள்”

குருவிற்கு அசோகன் பின்னாளில் அரசனாவான் என்று நம்பிக்கை இருந்தது.

ஆனால் மன்னனிடம் அப்படிச் சொன்னால் அவன் கோபம் கொள்ளக்கூடும்- தன் உயிரையும் பறிக்கக் கூடும்!.

ஆகவே:

“யார் அவர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல இயலாது. ஆனால் அவனது குணாதிசயங்களை மட்டும் சொல்ல முடியும். எவன் உலகத்தில் சிறந்தவற்றைக் கொள்கிறானோ அவனே”

போட்டுக் குழப்பி அடிக்கிறார்!! எப்படியாவது உயிர் தப்பவேண்டுமே!!

பிந்துசாரன் நொந்தான். தனக்குப் பிறகு சுசிமா அரசன் ஆவதை அவன் விரும்பி இருந்தான். ஆனால் இந்த சுசிமா என்ன யாரையும் மதிப்பதில்லையே! மந்திரிகள் எல்லாம் அவனை வெறுக்கின்றனரே! என் மகன்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனரே!

பிந்துசாரனின் 16 மனைவிகள் கிட்டத்தட்ட 100 மகன்களைப் பெற்றிருந்தனர். கணக்குத் தெரியாமல் பெண்களை மணந்தால், இப்படித்தான் கணக்குத் தெரியாத அளவுக்கு மகன்கள்..

பிந்துசாரன் உணவு உண்ண மறுத்து..வாழ்க்கை வெறுத்து.. சில தினங்களில் உயிர் துறந்தான். அவனுக்கு வயது 47!

47 வயதுக்குள் 100 மகன்கள்!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் புகழ், பணம், பெண், நிலம் என்று அலைவது இயற்கையான சமாசாரம். அதிலும் நாட்டு அரசனாவதோ மிகப் பெரிய விஷயம். மன்னன் ஆனவர் – சக்தி புகழ் மற்றும் சரித்திரத்தில் இடம் பெறுவதற்கு பெரும் வாய்ப்பு கொண்டவர். அதனால் யாருக்கும் கொலை – துரோகம் எதுவும் தவறாகத் தோன்றுவதில்லை.    

பிந்துசாரன் மறைந்த பின் இளவரசர்கள் பலர் அரசனாகத் திட்டமிட்டனர். பிந்துசாரன் மறைந்து நான்கு வருடங்கள் கடந்தது. யாரும் அரசனாக இயலவில்லை. இளவரசர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் முயற்சி செய்து வந்தனர்.  

சில சம்பவங்கள் நேரடியாகச் சரித்திரத்தில் இடம் பெறாது. ஆனால் அவை சரித்திரத்தில் இடம் பெற்று விளங்க மூல காரணமாக இருக்கும். அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இளவரசர்கள் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் – வெறுப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுசிமாவுக்கு அசோகனை அழித்தால்தான் தனக்கு வாய்ப்பு என்று தோன்றியது. அசோகனுக்கு இப்படி ஒரு புகழ்? மந்திரிகளில் ‘ராதாகுப்தா’ அசோகனுக்கு வக்காலத்து வாங்கி அவனை அரசனாக்கத் துடிக்கிறார்!

pic5


(சுசிமா)

ஒரு நாள் சுசிமாவின் ஒற்றன் :

“இளவரசர் சுசிமா! அசோகனின் முதல் மனைவி தேவி கருவுற்றிருக்கிறாள்”

சுசிமா தனது மெய்க்காவல் படைத்தலைவனை அழைத்து:

“நீ ரகசியமாகச் சென்று அசோகன் மனைவியைக் கொன்று விடு”

(அசோகனின் ராணி)

pic6

அசோகனின் தாய் ‘தர்மா தேவி’யைப் பற்றி நாம் முன்பே படித்திருக்கிறோம். சுசிமாவின் கொலைப்படையாளி அசோகன் மனைவி தேவி என்று எண்ணி அசோகனின் தாய் தர்மா தேவியைக் கொன்றான்.

 

pic7

(அசோகனின் மனைவியும் தாயும்)

 

அசோகன் ஆக்ரோஷத்தின் உச்சியை அடைந்தான். தாயைக் கொன்றவர்களைப்  பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தான். 100 சகோதரர்கள். அவர்களில் யாரை என்று சந்தேகிப்பது?

அவனது மெய்க்காவலர் மொழிந்தது:

“இளவரசர் அசோகரே! இது சுசிமாவின் கை வேலை என்பது எங்கள் சந்தேகம்”

ஒரு அரசியல் நாடகம் வடிவமைக்கப்பட்டு அரங்கேறியது.

சுசிமா உடனே ஒரு தூதுவனை விட்டு ஓலை அனுப்பினான்.:

“அசோகா… இந்தத் துயரமான சம்பவம் உன்னை விட என்னைப் பாதிக்கிறது. இதற்குக் காரணமானவனை நானே கண்டு பிடித்து ஒழிப்பேன்”

அசோகன் மந்திரி ராதகுப்தனிடம் ஆலோசனை செய்து பதில் ஓலை அனுப்பினான்.

“சுசிமா… உனது கடிதம் எனக்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது. இனியும் நமது பகை தொடர்ந்தால் – நமது மற்ற எதிரிகள் வலுப்பெற்று நம்மை அழித்து விடுவர். நாம் இருவரும் ஒன்று சேர வேண்டும். எனக்கு மௌரிய அரசாட்சி மீது நாட்டம் குறைந்து விட்டது. என் தாய் எரிந்து கொண்டிருக்கிறாள். அதன் அருகே நான் உள்ளேன். நீ அங்கு வா. நாம் அங்கு சந்திக்கலாம்”

அசோகனின் கூடாரத்தைச் சுற்றி ஒரு முழு வட்டமாக தோரணம் அமைக்கப்பட்டிருந்த்தது.

சுசிமா காலம் கடத்தவில்லை..

முகத்தில்… சோகத்தைப் பரப்பினான்.

கண்ணில் ..கண்ணீர் பெருக்கினான்.

நடிப்புக்கலை அவன் முகத்தில் தாண்டவமாடியது.

“அசோகா..” என்று குரல் தழுக்கக் கூவியபடியே தோரணங்களைத் தாண்டி ஓடி வந்தான்.

தோரணங்களைத் தாண்டியவுடன்…

தொபக்கடீர் என்று குழியில் விழுந்தான்.

கூடாரத்தைச் சுற்றிக் குழியில் தணலாகக் கரி பரப்பப்பட்டிருந்தது.

கனன்று சிவந்து எரிந்து கொண்டிருந்தது.

சுசிமா உடல் தீப்பற்றித் துடித்தான்.

அசோகன் முகம் கோபத்தில் வெகு கொடூரமாக மாறியது.

“என் தாய் உடல் எரிந்து சாம்பலாகும் முன்னே உன் உடல் கருகி ஒழிய வேண்டும்”

நெருப்புக்குப் பிணம் என்ன உயிர் உள்ள உடல் என்ன!

அது ‘நெருப்புடா”!

எரித்து சிவந்தது!

நெருப்பு முடிவில் தணிந்தது.

அசோகனின் கோபம் தணியவில்லை.

மற்ற சகோதர்கள் அனைவரையும் வளைத்துப் பிடித்துக் கொன்றான்.

99 சகோதரர்களைக் கொன்றான் என்று சில சரித்திரத் துணுக்குகள் கூறும்.

கலிகால பீமன்!

ஒரே ஒரு சகோதரனை மட்டும் கொல்லாமல் விடுத்தான்.

அது அவன் சொந்தத் தம்பி ‘விட்டசோகன்’! (கருணை!)

புத்த சரித்திரங்கள் சொல்வது:

“அசோகன் பெரும் கோபக்காரன்!
மனித உருவில் வந்த அரக்கன்!”

‘அசோகன் நரகம்’ என்று ஒரு ‘கொடுமை செய்யும் அறை’ ஒன்று அமைத்திருந்தானாம்.

அது ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘ஆபீஸ் ரூம்’.

வெளியில் பார்க்கும்போது சொர்க்கபுரிபோல் இருக்கும்.

ஆனால் உள்ளே கொடுமை ரொம்ப உக்கிரமாக இருக்குமாம்!

ஒரு வழியாக அசோகன் மௌரிய மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். சில வருடங்கள் கடந்ததும் கலிங்கத்துடன் பெரும் போர் புரிந்து –பின்னர் வருந்தி- அந்த பச்சாதாபத்தால்- புகழ் கொண்டான்.

ஒரு கருத்துப்படி – கலிங்கப் போர் அவன் மனதை மாற்றவில்லை. தமிழகமே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த கதை கேட்போம்:  

சோழ நாட்டின் எல்லையில் உள்ள செருப்பாழி என்ற இடத்தில் நடந்த
போரில் அசோகப் படைகளை இளஞ்சேட்சென்னி தோற்கடித்தான் என்று கூறப்படுகிறது. புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். இவன் மகன் கரிகாலன்-I.

சரித்திரம் படித்தவர்கள் –  சற்றுப் பொறுங்கள்!

குவிகம் ஆசிரியருக்குக் ‘குறை கடிதம்’ எழுது முன்… சற்றே மேலே படியுங்கள்!

வெண்ணிப்பறந்தலை கரிகாலன்-II மற்றும் அவன் தந்தை இளஞ்சேட்சென்னி (யவன ராணி படித்தவர் அறிவர்) வேறு . அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர்கள்.

நமது இளஞ்சேட்சென்னிக்குக் கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும்
பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும்
கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன்
கோசர்களைக் கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான்.
அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனைக் கோசர்கள் காட்டிற்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான “பாழி”யை அரணாக்கி, வலிமைப்படுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்குக் கோட்டையாக்கிக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள்  திதியனையும் படிப்படியாகத் தாக்கினர்.

ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன்
அவர்களை முறியடித்துத் துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று
பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சமயம் வரை
மௌரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில்
ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மௌரியப் பேரரசைத் தட்டி எழுப்பின.
அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து
தமிழகத்திற்கு வரும் பாதைகளைச் செப்பனிட்டனர்.

மௌரியப் படைகள் துளுவத்தில் தங்கிக் காட்டாறு போல் தமிழகத்தை வந்து
தாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி
இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளைத்
திரட்டினான். இப்போரில் மௌரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன. மௌரியர்
மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப்
படைகளும் இப்போரில் ஈடுபடுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும்,
சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களைச் சிதறடித்தனர்.

அத்துடன் இளஞ்சேட்சென்னி நின்று விடவில்லை. துளுவ நாட்டிற்குத் துரத்திச்
சென்று பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு , அக்கோட்டையை தரைமட்டமாக்கும்வரை போரிட்டான்.  தமிழகத்தைப் போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப முனைந்தான் எனக்
கருதலாம்.

இளஞ்சேட்சென்னி, மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

“எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடி கடனாகலின் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானை”

(நன்றி: http://siragu.com/?p=3184)

 

தமிழர் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்!

அசோகனையும் விரட்டி அடிக்க முடியும்!

இனி சரித்திரம் என்ன பேசப்போகிறது?

பொறுத்திருந்து பார்ப்போம்!

One response to “சரித்திரம் பேசுகிறது! –யாரோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.